91 இல்லா
விடத்தும் இயைந்த அளவினால்
உள்ள விடம்போற் பெரிதுவந்து
- மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய
மாந்தர்க்(கு)
அடையாவாம் ஆண்டைக் கதவு.
(பொ-ள்.) இல்லாவிடத்தும் - பொருளில்லாத காலத்திலும், இயைந்த அளவினால் - கூடிய அளவினால், உள்ள இடம்போல் பெரிது உவந்து - பொருளுள்ள காலத்தைப் போல
மிகவும் மகிழ்ந்து, மெல்லக்
கொடையொடு பட்ட குணன் உடைய மாந்தர்க்கு - ஒருவர்க்கு ஒன்று இனிமையாகக் கொடுத்தல்
தொழிலோடு பொருந்திய அருட்குணத்தையுடைய மக்களுக்கு, ஆண்டைக் கதவு அடையா - அவ்வுலகக் கதவுகள் வழியடைக்கமாட்டா.
(க-து.) ஈகைக் குணமுடையவர்கள் மறுமையின்பம் பெறுவர்.
(வி-ம்.) இடம் என்றது இங்கே காலங் குறித்து நின்றது. மெல்ல -
மென்மையாக ; உவந்து என்னும்
வினையெச்சம் பட்ட என்னும் பெயரெச்சத்தோடு இயைந்தது. அவ்வுலகமென்றது துறக்கம். ஆம்
: அசை,
அறிவு, அன்பு
முதலிய உயிர்க்குணங்களிலும், உதவுகின்ற
இயற்கையோடு கூடிய குணங்களே மாட்சிமையுற்று மறுமைப் பயனுக்கு ஏதுவாகலின், ‘கொடையொடு பட்டகுணன்' என்றார். ‘அடையாவாம்
ஆண்டைக் கதவு' என்னுங் கருத்து, மேலும் வரும். குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்.
நின்றது வாயில் திறந்து' என்றார்
பிறரும். 'கதவு அடையா' என்றது, செய்ததுபோலக் கிளத்தல்.
92 முன்னரே
சாநாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும்
நோயுள: - கொன்னே
பரவன்மின் பற்றன்மின்
பாத்துண்மின் யாதுங்
கரவுன்மின் கைத்துண்டாம்
போழ்து.
(பொ-ள்.) முன்னரே சாம் நாள் முனிதக்க மூப்பு உள - வெறுத்தற்குரிய
கிழப்பருவமும் இறக்கும் நாளும் எதிரிலேயே உள்ளன. பின்னரும் - அவையல்லாமலும், பீடு அழிக்கும் நோய் உள - வலிமையைக் குலைக்கும் நோய்களும்
வரவிருக்கின்றன, ஆதலால்; கைத்து உண்டாம் போழ்து - செல்வம் உண்டாகுங் காலத்திலேயே, கொன்னே - வீணாக, பரவன்மின் - மேலுந் தேட அலையாதிருங்கள், பற்றன்மின் - இறுக்கிப் பிடியாதிருங்கள்; பாத்து உண்மின் - பலருக்கும் பகுத்து உண்ணுங்கள்; யாதும் கரவுன்மின் - சிறிதும் ஒளியாதிருங்கள்.
(க-து.) பொருளுண்டானபோதே, மேலும்மேலும் அதனைத் தேட அலையாமல், நன்முறைகளிற் பயன் படுத்திக் கொண்டு அமைதியாக வாழ்க்கை
நடத்துதல் வேண்டும்.
(வி-ம்.) காட்சியளவையை நினைந்து, முன்னரே என்றார். முனி : முதனிலைத் தொழிற்பெயர்; அனைவரும் பொருள் தேடி மகிழ வேண்டுமாதலின் ஒருவரே மேலுமேலுந்
தேடுதல் மன்பதைக்குக் கேடும் வீணுமாமெனக் கருதிப் ‘பரவன்மின்' எனவும், சிக்கனம் பிடியாமல் முறையாகத் துய்த்தல் உடல்நலம் அறிவு
நலம் முதலியனகொள்ள ஏதுவாகலின், ‘பற்றன்மின்' எனவும், பலர்க்கும்
பகுத்தீதலின் உலகமும் நன்றாம், தமக்கும்
உயிர்ப் பண்பு வளர்ச்சி பெறுமாதலின்' ‘பாத்துண்மின்' எனவும், பொருளோடு
பற்றின்றி யொழுகும் பண்பு கைவந்து தெளிவுண்டாமாதலின். ‘கரவன்மின்' எனவுங்
கூறினார்.
93 நடுக்குற்றுத்
தற்சேர்ந்தார் துன்பந் துடையார்;
கொடுத்துத்தான்
துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
இடுக்குற்றுப் பற்றினும்
நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக்
கால்.
(பொ-ள்.) செல்வம் - பொருள், கொடுத்துத் தாம் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் -
பிறர்க்குக் கொடுத்துத் தானும் நன்றாக நுகர்ந்தாலும் திரளுதற்குரிய காலத்தில்
மேலுமேலுந் திரளும், வினை
உலந்தக்கால் - நல்வினை முடிந்துவிட்டபோது, இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது விடுக்கும் - அச்
செல்வத்தை எவ்வளவுதான் இறுக்கிப்பிடித்தாலும் அது நில்லாமல் தனது தொடர்பை நீக்கிக்
கொள்ளும்,
நடுக்குற்றுத் தன் சேர்ந்தார் துன்பம் துடையார் -
இவ்வுண்மைகளை அறியாதார், வறுமைத்
துன்பத்துக்கு அஞ்சித் தம்மை அடைந்தவர்களின் இன்னலைப் பொருள் கொடுத்துத்
தீர்க்கமாட்டார்கள்.
(க-து.) செல்வம் நிலைப்பதற்கும் நில்லாததற்கும் ஏது இறுக்கிப்
பிடித்தலும் பிறர்க்குக் கொடுத்தலும் அன்றாதலின், அவை முன்வினை காரணமாக நிகழ்வன எனக் கருதிப் பிறர்க்கு ஒன்று
கொடுத்தலை மகிழ்வோடு நெகிழாமற் செய்துவரல் வேண்டும்.
(வி-ம்.) தளர்ந்து நிலைகுலைதல் ‘நடுக்குற்று' எனப்பட்டது. தன் : ஒருமைப்பன்மை மயக்கம். ‘தற்சேர்ந்தார் துன்பந் துடைத்தலே வாழ்க்கையின் குறிக்கோளாக
இருக்க வேண்டும். அதனாலேதான் வாழ்க்கைக்கு விளக்கமுண்டாகின்றது' என்னும் உண்மை இதன்கண் விளங்கிற்று. ‘மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார், ஒற்கம் கடைப்பிடியாதார்' என்னுஞ்
சான்றோர் செய்யுட்களிலும் இம்முடிபு தீர்த்துரைக்கப்படும். தக்கவாறு
தெளிவில்லாமையினாலேயே உலகத்தில் நற்செயல்கள் நிகழாமற் போதலின் இப்பாட்டுத்
தகுமுறையிற் காரணங்காட்டுவதாயிற்று.
94 இம்மி
யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ
கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர்
வையத்து
அடாஅ அடுப்பி னவர்.
(பொ-ள்.) இம்மியரிசித் துணையானும் - ‘இம்மியரிசி எனப்படும் ஒருவகைச் சிறிய அரிசியின் அளவாவது, வைகலும் நும்மின் இயைவ கொடுத்துண்மின் - நாடோறும் உமக்குக்
கூடியன பிறர்க்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்; ஏனென்றால் குண்டு நீர் வையத்து அடா அடுப்பினவர் உம்மைக்
கொடாதவரென்பர் - கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் சமைத்தலில்லாத அடுப்பினையுடைய
வறியவர்கள் முற்பிறப்பிற் பிறர்க்கு ஒன்று உதவாதவர்கள் என்று சான்றோர் கூறுவர்.
(க-து.) இயைந்த அளவாவது பிறர்க்கு உதவுதலை மேற்கொள்ள வேண்டும்.
(வி-ம்.) ‘இம்மியரிசி' யென்பதை "மத்தங்காய்ப் புல்லரிசி" என்பர்
நச்சினார்க்கினியர் சிந்தாமணியுரையில்; மிகச் சிறியதாகலின், ‘இம்மி யரிசி' நுவலப்பட்டது. பிறர்க்குக் கொடுக்க இயலாத நாளை இன்னாத
நாளாகக் கருதுவாராகலின், ‘வைகலும்' எனப்பட்டது. உம்மை - முற்பிறப்பு, குண்டுநீர், ஆழமான
நீர்நிலை என்னும் பொருட்டாய்க் கடலை உணர்த்திற்று. மிகக் கொடிய வறுமை தோற்றுதற்கு ‘அடாஅ அடுப்பினவர்' எனப்பட்டது; இரக்கம்
என்னும் உயிர்ப்பண்பு மிகும் பொருட்டு இங்ஙனம் இப்பிறப்பில் அவர்
துன்புறுவோராயினர்.
95 மறுமையும்
இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ கொடுத்தல் -
வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும்.
(பொ-ள்.) மறுமையும் இம்மையும் நோக்கி - மறுமை இம்மை நிலைகளைக் கருதி, ஒருவற்கு உறுமாறு இயைவ கொடுத்தல் - கூடிய பொருள்களைத்
தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும்; வறுமையால் ஈதல் இசையாதெனினும் - அப்படிக் கொடுப்பது
வறுமையினால் மாட்டாதாயினும் , இரவாமை
- பிறரை இரவாமலிருப்பது, ஈதல்
இரட்டி உறும் - அவ்வறுமைக் காலத்தில் கொடுத்தலினும் இரு மடங்கு தக்கதாகும்.
(க-து.) வறுமைக் காலத்தில் தான் பிறரை இரவாதிருத்தலும், தன்னிடம் இரந்து வந்தவர்க்கு இயைந்தன கொடுத்தலும்
ஒருவனுக்குக் கடமை.
(வி-ம்.) உறுமாறு கொடுத்தல் - உள்ளமும் உரையும் செயலும் இனியனாய்த்
தருதல்;
பொருந்தும் வகையில் என்றபடி.
96 நடுவூருள்
வேதிகை சுற்றுக்கோட் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச
வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணுங்
கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.
(பொ-ள்.) பலர் நச்ச வாழ்வார் - பலரும் தம்மை விரும்பி அணுகும்படி
வள்ளன்மையுடன் வாழ்பவர்கள், நடுவூருள்
வேதிகை சுற்று கோட் புக்க படுபனை அன்னர் - ஊர் நடுவில் மேடையினால்
சூழ்ந்துகொள்ளுதலைப் பொருந்திய காய்த்தலயுடைய பெண்பனையை ஒப்பர் ; குடி கொழுத்தக்கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள் - தமது குடி செல்வமிக்க
காலத்தும் பிறர்க்கு வழங்கியுண்ணாத மாக்கள், இடுகாட்டுள் ஏற்றைப் பனை - சுடுகாட்டுள் நிற்கும்
காய்த்தலில்லாத ஆண்பனையே யாவர்.
(க-து.) பிறர்க்கு வழங்கிப் பலர் நச்ச வாழ்தல் வேண்டும்.
(வி-ம்.) படுதல், இங்குக்
காய்க்குந் தன்மையுடையதாதல், கொழுத்தக்கண்
: வினையெச்சம். ‘ஏற்றை' எனவே ஆசிரியர் தொல்காப்பியர் ஒரு பெயர் குறிப்பாராதலின், அதன் ஈற்று ஐகாரம் சாரியையெனக் கூற வேண்டுவதின்று.
97 பெயற்பால்
மழைபெய்யாக் கண்ணும் உலகம
செயற்பால செய்யா விடினும் -
கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல்
தண்சேர்ப்ப !
என்னை உலகுய்யு மாறு.
(பொ-ள்.) கயல் புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப - கயல்
மீனின் புலால் நாற்றத்தைப் புன்னை தனது மலர் மணத்தால் நீக்குகின்ற அலைமோதுங்
கடலின் குளிர்ந்த கரையினையுடைய தலைவனே, பெயல்பால் மழை பெய்யாக்கண்ணும் - பெய்தற்குரியதான மழை
பெய்யாத போதும், உலகம் செயற்பால
செய்யாவிடினும் - உயர்ந்தோர் பிறர்க்குச் செய்தற்குரிய உதவிகளைச் செய்யா
விட்டாலும், என்னை உலகு உய்யுமாறு
- உலகத்துயிர்கள் பிழைக்கும் வகை எவ்வாறு?
(க-து.) மழையைப்போலப் பெரியோர் பிறர்க்கு உதவியாயிருக்க வேண்டும்.
(வி-ம்.) காலத்திற் பெய்தல், கைம்மாறு கருதாது பெய்தல், வேறுபாடின்றிப் பெய்தல், மீண்டும் மீண்டும் பெய்தல் முதலியன மழையின் இயல்புகளாகக்
கொள்ளப்படும். "அறுகுளத் துகுத்தும் அகல்வயற் பொழிந்தும், உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும், வரையா மரபின் மாரிபோல" "கழிந்தது
பொழிந்தென வான்கண் மாறினும்" என்பவை முதலிய சான்றோர் செய்யுட்களினெலாம்
இவ்வியல்புகள் காண்க.
98 ஏற்றகைம்
மாற்றாமை என்னானுந் தாம்வரையா
தற்றாதார்க் கீவதாம்
ஆண்கடன் - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப
மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும்
பெயர்த்து.
(பொ-ள்.) மலி கடல் தண் சேர்ப்ப - வளம் நிறைந்த கடலின் குளிர்ந்த
கரையை யுடையவனே, ஆற்றின் - ஒருவர்க்கு
ஒன்று உதவுவதானால், ஏற்ற கை
மாற்றாமை என்னானும் தாம் வரையாது - இரந்த கையை மாறாமல் இயன்றது எதையேனும்
வேறுபாடின்றி, ஆற்றாதார்க்கு ஈவது
ஆம் ஆண் கடன் - கைம்மாறு செய்ய இயலாத வறிஞர்க்கு உதவுவதே ஓர் ஆண் மகனின்
கடமையாகும். மாறு ஈவார்க்கு ஈதல் பொலி கடன் என்னும் பெயர்த்து - எதிருதவி
செய்வார்க்கு ஒன்று உதவுதல் விளக்கமான கடன் என்னும் பெயருடையது.
(க-து.) எதிருதவிஏதுஞ் செய்தலியலாத வறிஞர்க்கு இயன்றதை மாறாமல்
உதவுவதே ஆண்மை யாகும்.
(வி-ம்.) "ஆற்றா மாக்கள் அரும்பசிகளைவோர், மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை" யாதலின் இங்ஙனம்
கூறினார். பொதுவான கடனிலும் விளக்கமான கடன் என்றற்குப் ‘பொலி கடன்' எனப்பட்டது
;
எல்லார்க்குந் தெரிந்த கடன் என்பது கருத்து.
"வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து"
என்பது பொய்யாமொழி.
99 இறப்பச்
சிறிதென்னா தில்லென்னா தென்றும்
அறப்பயன் யார்மாட்டுஞ்
செய்க - முறைப்புதவின்
ஐயம் புகூஉந் தவசி
கடிஞைபோல்
பைய நிறைத்து விடும்.
(பொ-ள்.) இறப்பச் சிறிது என்னாது - நம்மிடமிருப்பது மிகவுஞ் சிறியது
என்று கருதாமலும், இல்
என்னாது- இல்லை என்று மறுத்துவிடாமலும், என்றும் - எப்போதும், அறப்பயன் யார்மாட்டும் செய்க - பயனுடைய தான அறத்தை
அனைவரிடத்தும் செய்துவருக, (அச்செயல்)
முறைப்புதவின் - வாயில்கடோறும், ஐயம்
புகும் தவசிகடிஞை போல் - பிச்சையெடுக்கும் தவசியின் உண்கலத்திற்போல, பைய நிறைத்துவிடும் - மெல்ல மெல்ல அறப்பயனை
நிறைவாக்கிவிடும்.
(க-து.) சிறிய உதவியாயினும் மறாமற் செய்து வந்தால் மெல்ல மெல்லப்
புண்ணியம் நிறைந்துவிடும்.
(வி-ம்.) வேறுபாடின்றி என்றற்கு ‘யார் மாட்டும்', என்றார். ‘செய்க' என்றது ஈண்டுக் கொடுத்து வருக என்னும் பொருட்டு.
முறைப்புதவின் - முறையே வாயில்களில்; அஃதாவது வாயில்கடோறும் என்பது. ‘புதவு' வாயிலென்னும்
பொருட்டாதல், "பூரித்துப்
புதவந்தொறும்" என்னும்
சிந்தாமணியிற் காண்க. தவசியின் பிச்சைக் கலம் எடுத்துக்காட்டினமையின் புண்ணியமும்
ஆற்றலோடு நிரம்புமென்பது கொள்ளப்படும்.
100 கடிப்பிடு
கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர்
யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங்
கேட்குமே சான்றோர்
கொடுத்தா ரெனப்படுஞ் சொல்.
(பொ-ள்.) கடிப்பு இடு கண் முரசம் காதத்தோர் கேட்பர் - குறுங்கோலால்
ஒலிக்கப்படும். கண்போன்ற இடத்தையுடைய முரசினது ஒலியைக் காத எல்லைவரையிலுள்ளோர்
கேட்பர்;
இடித்துமுழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர் - இடித்து
முழங்கிய மேகத்தினொலியை ஒரு யோசனை எல்லை வரையிலுள்ளோர் கேட்பர்; சான்றோர் கொடுத்தார் எனப்படும் சொல் அடுக்கிய மூவுலகும்
கேட்கும் - தக்கோரால், ‘இவர் உதவி
செய்தவர்'
என்று மகிழ்ந்து கூறப்படும் புகழுரை அடுக்காகவுள்ள மூன்று
உலகங்களில் உள்ளாரனைவருங் கேட்டு நிற்பர்.
(க-து.) பிறர்க்கு உதவி செய்யும் வள்ளன்மையே ஒருவர்க்கு யாண்டும்
புகழ்பரப்பும்.
(வி-ம்.) கடிப்பு - முரசறையுங் கோல், காதம் - ஏழரை நாழிகை வழி யென்ப. முழங்கியதென்பது முழங்கிய
ஒலியென்னும் பொருட்டாதலின் ஈண்டுப் பெயர். சிந்தாமணியுரையில் ‘யோசனையென்பது நாற்காத எல்லை' என்பர் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். சான்றோராற்
கூறப்படுஞ் சொல் எனப்படுதலின், ஞான
ஒழுக்கங்களிற் சிறந்த அத்தகையோர்க்கு ஒன்று உதவுதலே சிறந்த ஈகையாகும் என்பது
பெறப்படும்; "நன்றாய்ந்
தடங்கினார்க்கு ஈத்துண்டல்" என்றார்
பிறரும்.
0 Comments