உலக நீதி புராணத்தை யுரைக்கவே
கலைக ளாய்வருங் கரிமுகன் காப்பு.
பாடல்
1. ஓதாம லொருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
2. நெஞ்சாரப்
பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
3. மனம்போன
போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
வனந்தேடுங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
4. குற்றமொன்றும்
பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம்
கற்றவரை யொருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோ டெதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரிற்குடி யிருக்க வேண்டாம்
மற்றுநிக ரில்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
5. வாழாமற்
பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றமொன்றுஞ் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரிற் புறங்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
6. வார்த்தை
சொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க
வேண்டாம்
முன்கோபக் காரரோ டிணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியைவைத் திருக்க
வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோ டிணங்க வேண்டாம்
சேர்த்தபுக ழாளனொரு வள்ளி பங்கன்
திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே
7. கருதாமற்
கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை யொருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்திற் போக
வேண்டாம்
பொது நிலத்தி லொருநாளும் இருக்க வேண்டாம்
இருதார மொருநாளுந் தேடவேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே
8. சேராத
இடந்தனிலே சேர வேண்டாம்
செய்தநன்றி யொருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடுங் குண்டுணியாய்த் திரிய
வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைப்பட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
9. மண்ணின்று
மண்ணோரஞ் சொல்ல வேண்டாம்
மனஞ்சலித்துச் சிலுக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைதனைச் சொல்ல
வேண்டாம்
புறஞ்சொல்லித் திரிவாரோ டிணங்க வேண்டாம்
மண்ணளந்தான் தங்கையுமை மைந்தன்
எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய்
நெஞ்சே
10. மறம்பேசித்
திரிவாரோ டிணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத்
திரியவேண்டாம்
தெய்வத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல
வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே
11. அஞ்சுபேர்க்
கூலியைக்கைக் கொள்ள வேண்டாம்
அதுவேதிங் கென்னின்நீ சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்றன் கூலி
சகலகலை யோதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சி கூலி
மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்றன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் றானே
12. கூறாக்கி
யொருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேற் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய
வேண்டாம்
துர்ச்சனராய்த் திரிவாரோ டிணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை யிகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
13. ஆதரித்துப்
பலவகையாற் பொருளுந் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோருங் கேட்ட பேரும்
கருத்துடனே நாடோறுங் களிப்பி னோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழுந் தேடிப்
பூலோக முள்ளளவும் வாழ்வர் தாமே
-
உலகநாதன்
0 Comments