'மெய்ம்மை' யாவது ஒன்றன் இயற்கைத் தன்மை; ஈண்டு உலகத்தின் இயல்பு இனைத்தென்று நுவன்றபடி.

111 இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரின் குற்ற முடைத்து.

(பொ-ள்.) இசையா ஒரு பொருள் இல் என்றல் - கொடுக்க இயலாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று கூறிவிடுதல், யார்க்கும் வசை அன்று வையத்து இயற்கை - யார்க்கும் பழியாகாது, அஃது உலகத்தின் இயற்கையேயாகும்; நசை அழுங்க நின்று ஓடிப்பொய்த்தல் - ஆசையால் நையும்படி உதவுவார்போல் தோன்றிக்காலம்.

நீடிப் பின் பொய்த்துவிடுதல், நிரைதொடீ - ஒழுங்காக அமைந்த வளையல்களையணிந்த மாதே!, செய்ந்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து - ஒருவர் செய்த நன்றியை அழித்தாரது குற்றத்தை யொப்பத் தீ துடைத்தாகும்.

(க-து.) இயன்றதை உடனே உதவிடுதல் உண்மை அறம்.

(வி-ம்.) ஓடி - காலந்தாழ்த்தென்னும் பொருட்டு, தன் வினைக்கண் வந்தது, அஃது அவன் செயலாதலின்; நெடுங்காலம் நம்பி அதுகாறும் வள்ளல் நிலையில் வைத்துப் பெருமைப்படுத்தினமையின் இரப்போர் நன்றி செய்தவராகின்றனராதலின், அவரைப் பொய்த்தல் செய்ந்நன்றி கொல்லுங் குற்றத்தோடோப்பதாயிற்று ; அக்குற்றமாவது, கழுவாய் இல்லாதகுற்றம். இச்செய்யுட்பொருள், "ஒல்லுவதொல்லும் என்றலும் யாவர்க்கும், ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும், ஆள்வினை மருங்கிற் கேண்மைப்பாலே ; ஒல்லா தொல்லும் என்றலும் ஒல்லுவது இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே, இரப்போர் வாட்டலன்றியும் புரப்போர் புகழ் குறைபடூஉம் வாயில்"2 என்னும் புறச்செய்யுட்கண்ணும் கண்டுகொள்ளப்படும்.

112 தக்காரும் தக்கவ ரல்லாரும் தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர் ! - அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.

(பொ-ள்.) தக்காரும் தக்கவரல்லாரும் தம் நீர்மை எக்காலும் குன்றல் இலராவர் - சான்றோரும் சான்றோரல்லாதாரும் தத்தம் இயல்புகள் எப்பொழுதும் குறைதல் இலராவர், அக்காரம் யாவர் தின்னினும் கையாது - கருப்பங்கட்டியை யார் தின்றாலும் கைக்காது, கைக்கும் தேவரே தின்னினும் வேம்பு - தேவரே தின்றாலும் வேப்பங்காய் கசக்கும்.

(க-து.) நல்லோரும் தீயோரும் அவரவரியல்பை எந்நிலையிலுங் காட்டிக் கொண்டிருப்பர்.

(வி-ம்.) நீர்மை என்றது, இங்கே இயற்கைப் பண்பு, எக்காலுமென்றது. வறுமையிலுஞ் செம்மையிலும் தக்கார் முன்னுந் தகாதார் முன்னும் என்க. ஏகராமும் ஆம் என்பதும் அசை. தேவரே யென்னும் ஏகாரம் பிரிநிலை. யாவரே யென்றார் தேவரல்லாதாரு மென்றற்கு. தேவர்; ஈண்டு நல்லோரென்னும் பொருட்டு.

113 காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர் - ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்புடையேம் என்பார் சிலர்.

(பொ-ள்.) காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து ஆடு மீனின் பலர் ஆவர் - சாய்கால் உண்டான காலத்தில் மேலே வானத்தில் விளங்குகின்ற விண்மீன்களைப்போல நெருங்கிய உறவினர் பலராவர், ஏலா இடர் ஒருவர் உற்றக்கால் - ஒவ்வாத வறுமையை ஒருவர் அடைவராயின், ஈர் குன்ற நாட - குளிர்ந்த மலைகளையுடைய நாடனே!, தொடர்புடையேம் என்பார் சிலர் - அக்காலத்தில், நட்புடையேம் என்று உரிமை பாராட்டுவோர் சிலராவர்.

(க-து.) சாய்காலுள்ளபோது பலரும் சூழ்ந்து நின்று, வறுமை வந்தபோது அவர் பிரிந்துபோவது உலகியற்கை.

(வி-ம்.) உலகில் உண்மை நட்புடையோர் சிலர் என்றபடி - கால் ஆடு போழ்தில் - காலம் ஆக்கமாக நடைபெறுகின்ற போழ்தில் என்க; சாய்கால் என்பதன் பொருளும் அது; இலக்கணையால் ஈங்குச் செல்வாக்ககுணர்த்திற்று. விண்மீன்கள் பன்மைக்குஞ் செறிவுக்கும் உவமை. சிலராவர்' எனவும், ‘ஒருவர் காலாடு போழ்தில்' எனவும் ஒட்டிக்கொள்க. சிந்தாமணியுரையில் நச்சினார்க்கினியர் கண் ஆடி ஒன்று' என்று வருமிடத்தில் "கண் எல்லாரிடத்தும் உலாவிவென்று; கால் ஆடு போழ்தின், என்றாற் போல" என்றுரைத்து இதனை எடுத்துக் காட்டினார். இதனாற் கால்' என்பதை உடம்பின் உறுப்பாகிய கால் என்று அவர் கருதினமை பெறப்படும். இதனினுங் காலம்' என்னும் மேலுரை அதற்குச் சிறக்குமா றறிந்துகொள்க.

114 வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவண தெய்த இருதலையும் எய்தும்
நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்
தடுவது போலுந் துயர்.

(பொ-ள்.) வடு இலா வையத்து மன்னிய மூன்றில் குற்றமில்லாத உலகத்தில் இன்றியமையாதனவாய்ப் பொருந்திய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று உறுதிப் பொருள்களுள், நடுவணது எய்த இருதலையும் எய்தும் - நடுவில் நின்றதான பொருள்' என்பதை ஒருவன் அடைய அது காரணமாக அதன் இருபக்கத்தனவான அறம்' ‘இன்பம்' என்னும் இரண்டையும் அவன் அடைவான், நடுவணது எய்தாதான் - அவ்வாறு நடுவில் நின்றதான செல்வப்பொருளை அடையாதவன், எய்தும் உலைப்பெய்து அடுவதுபோலும் துயர் - கொல்லன் உலையில் இட்டு இரும்பைக் காய்ச்சுவது போலும் வறுமைத் துன்பத்தை அடைந்து நைவன்.

(க-து.) தக்கோர்க்குப் பொருள் ஏனையெல்லா அறங்களையும் நல்கும்.

(வி-ம்.) அறமுதலா உறுதிப் பொருள்களை நாடும் நல்லோரை நினைந்து வடுவிலாவையம்' எனப்பட்டது. மூன்றறங்கள் கூறினார், இவற்றின் விடுதலை வீடாகலின் மன்னியவென்னும் நிலைபேற்று மொழியாற் கூறியது; இவற்றின் பேறு பல பிறவிகளிலுந் தொடர்தலின் என்க. ஒன்றன் படர்க்கையாதலின் எய்தும் என்னுஞ் செய்யுமென் முற்று வந்தது. இச்செய்யுட்கு ஒரு விரிவுரை போலப் "பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே அம்மூன்றும், ஆராயிற் றானே அறம்பொருளின்ப மென்று, ஆரார் இவற்றின் இடையதனை எய்துவார், சீரார் இருதலையும் எய்துவர்" என நாலாயிரப்பனுவல் விளக்கிச் செல்லுதலும் இங்கு நினைவு கூரற்பாலது.

115 நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
கல்லாரே யாயினும் செல்வர்வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.

(பொ-ள்.) நல் ஆவின் கன்றாயின் நாகும் விலை பெறூஉம் - உயர் இனத்து ஆவின் கன்றாயின் இளங்கன்றும் மிக்க விலைபெறும், கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச்சொல் செல்லும் - ஆதலின் படியாதவரேயாயினும் செல்வரது வாய்ச்சொல் மதிக்கப்படும். நல்கூர்ந்தார் சொல் புல் ஈரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச் செல்லா - வறிஞரது வாய்மொழி, அவர் கற்றவரே யாயினும், சிறிது ஈரமுள்ள காலத்தில் உழுகின்ற உழவுபோல மேலளவாய்ச் சென்று உள்ளே மதிக்கப்படாதொழியும்.

(க-து.) கல்வியுடையராயினும் உலகத்திற் செல்வமும் எய்தி வாழ முயலவேண்டும்.

(வி-ம்.) நல் ஆ' என்றது செல்வரையும், ‘நாகு' என்றது அவருட் படிப்பில் இளையராயினாரையும், ‘புல் ஈரம்' என்றது செல்வமில்லாக் கல்வியாளர்பால் உலகு காட்டுஞ் சிறு மதிப்பையுங் குறிப்பால் உணர்த்தின. ஏ, ஆம் : அசை. புலவர் சொல்லேருழவ ராதலின், ஈண்டு உழவுவமை ஆற்றலுடைத்து.

116 இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார்;- தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.

(பொ-ள்.) இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் - விரிவுமிக மெய்யுணர்வு நூல்களை என்றுங் கற்பினும், அடங்காதார் என்றும் அடங்கார் - இயல்பாக அமைந்தொழுகாதவர் என்றும் அமைந்தொழுகார்; தடம் கண்ணாய் -அகன்ற கண்களையுடைய மாதே!, உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும் - உப்பொடு நெய் பால் தயிர் பெருங்காயம் இட்டுச் சமைத்தாலும், கைப்பு அறா பேய்ச் சுரையின் காய் - பேய்ச்சுரையின் காய்கள் தம் கசப்பியல்பு நீங்கா.

(க-து.) இயற்கைத் தன்மை எதனாலும் நீங்காது.

(வி-ம்.) ஞானம் : ஆகுபெயர். என்றுங் கற்பினுமெனக் கொண்டு வாழ்நாள் முழுமையும் கற்றாலும் என்று உரைத்துக்கொள்க. கண்ணாள் என்பது விளித்தலிற் கண்ணாய் என நின்றது. பொதுவாம் முதன்மை நோக்கி உப்பு ஒடுக்கொடுத்துப் பிரிக்கப்பட்டது. நெய் பால் தயிர் என்பவற்றுள் எதனை இட்டு அடினும் என்பது கருத்து.

117 தம்மை இகழ்வாரை தாமவரின் முன்னிகழ்க;
என்னை அவரொடு பட்டது?- புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப
உறற்பால யார்க்கும் உறும்.

(பொ-ள்.) தம்மை இகழ்வாரைத் தாம் அவரின் முன் இகழ்க - தம்மைப் புறக்கணிப்பவரை அவரினும் முற்படத் தாம் புறக்கணிக்க; என்னை அவரொடு பட்டது - என்ன அவரோடு உண்டான தொடர்பு!, புன்னை விறல் பூகமழ் கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப - புன்னையின் வெற்றி வாய்ந்த மலர் மணங் கமழ்கின்ற சோலைகளையுடைய கடற்கரைத் தலைவ! உறற்பால யார்க்கும் உறும் - வரற்குரிய நன்மை தீமைகள் யார்க்கும் வரும்.

(க-து.) வருவன வந்தே தீருமாதலின் அதன் பொருட்டு உலகத்தில் யாரும் தம் கண்ணியத்தைக் குறைத்துக்கொள்ளுதலாகாது.

(வி-ம்.) இகழ்தல் ஈண்டுப் புறக்கணித்தற்பொருட்டு அவரின் முன் - அவர் இகழ்தற்குமுன்பே. எதுவும் தம்பழ வினைப்படியே வருதலின், ‘என்னை அவரொடு பட்டது" என்றார். உறற்பால தீண்டா விடுதல் அரிது,‘ என்றார் முன்னும் கடலின் புலால் நாற்றத்தைக் கடிதலின் புன்னைமலர்க்கு விறல் நுவலப்பட்டது. வீங்கு நீர் - கடல்; மிக்க நீர் என்னும் பொருட்டா வந்தது. பிறர்க்குத் தாழ்ந்தொழுகுவாரை நினைந்து யா£க்கும்' என்றாரென்க.

118 ஆவே றுருவின வாயினும், ஆபயந்த
பால்வே றுருவின வல்லவாம்;- பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி, ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.

(பொ-ள்.) ஆ வேறு உருவினவாயினும் ஆ பயந்த பால் வேறு உருவினஅல்ல - ஆக்கள் வேறுவேறு நிறத்தன வாயினும் அவ்வாக்கள் உதவிய பால்கள் அவ்வாறு வேறு வேறு நிறத்தன அல்ல; பால்போல் ஒரு தன்மைத்தாகும் அறம் - பாலைப்போல் அறம் ஒரே தன்மையுடையதாகும்; நெறி ஆ போல் உருவு பல கொளல் ஈங்கு - இவ்வுலகில் அவ்வறத்தை ஆற்றும் முறைகள் ஆக்களைப் போல் பல செயல்களாக உருக்கொள்ளற்குரியது.

(க-து.) இயன்ற செயல்களின் வாயிலாக அறத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்.

(வி-ம்.) உரு, நிறத்திற்காயிற்று; ‘களங்கனியன்ன கதழ்ந்து கிளர் உருவின்என்றார் பிறரும். கொளல் என்னும் முற்று ஈண்டு உடன்பாட்டிற் படர்க்கைக்கண் வந்தது. பல செயல் முகமாகவும் அறந் தேடிக் கொள்ளுதற்குரியதாக உலகத்தின் இயல்பு அமைந்திருக்கின்றதென்பது பொருள். ஆம் : அசை.

119 யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்? - யாஅர்
இடையாக இன்னாத தெய்தாதார்? யாஅர்
கடைபோகச் செல்வம்உய்த் தார்?

(பொ-ள்.) தேருங்கால் - உலகியலை ஆராயுமிடத்து, யார் உலகத்து ஓர் சொல் இல்லார் - உலகத்தில் ஒரு பழிச் சொல் இல்லாதவர் யார்?, யார் உபாயத்தின் வாழாதார் - யாதானும் ஓர் ஏதுவினால் உலகில் வாழாதவர் யார்?, யார் இடையாக இன்னாதது எய்தாதார் - வாழ்வின் இடையே இடர் அடையாதார் யார்?, யார் கடைபோகச் செல்வம் உய்த்தார் - முடிவுவரையிற் செல்வத்தை நுகர்ந்தவர் யார்?, யாருமில்லை.

(க-து.) இன்ப துன்பங்கள் கலந்து வருவதே உலகியற்கை.

(வி-ம்.) யார் என்னும் வினா ஒருவருமிலர் என்னும் விடையை உட்கொண்டது. ஈதொப்பதை அறிபொருள் வினா' என்பர் சேனாவரையர். அறியலுறவினை அறிவுறுத்துதலின், இங்ஙனம் வினாவும் விடையாகும் என்பது. உபாயம் என்பது, பலவகைப்பட்ட தொழிலேதுக்களை உணர்த்தும். உய்த்தல் - ஆளல்; ஈண்டு நுகர்தலென்க.

120 தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்
றியாங்கணும் தேரின் பிறிதில்லை:- ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே,
கூற்றங்கொண் டோடும் பொழுது.

(பொ-ள்.) தேரின் - ஆராய்ந்தால், தாம் செய்வினையல்லால் தம்மொடு செல்வது யாங்கணும் பிறிது இல்லை - தாம் செய்த நல்வினை தீவினைகளல்லாமல் தம் உயிரோடு துணைவருவது எப்பிறவியிலும் பிறிதெதுவுமில்லை, ஆங்கு தாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயம் இன்று கூற்றம் கொண்டு ஓடும்பொழுது - கூற்றுவன் உயிரைப் பிரித்தெடுத்துக்கொண்டு செல்லும்பொழுது அதுகாறும் தாம் பாதுகாத்து அழகுகள் செய்துகொண்ட உடம்பும் அவ்வாறே பயனின்றாயிற்று.

(க-து.) செல்லுங் கதிக்கு உறுதுணையாக நல்வினைகள் செய்துகொள்ளல் வேண்டும்.

(வி-ம்.) மற்று, ஏ : அசை. ஆங்கு, பிறிதெதுவும் துணை வராததுபோல என்னும்பொருட்டு. போற்றிப் புனைந்தவென்பது, அச்செயல்களினும் புண்ணியம் ஈட்டுஞ் செயல் முதன்மையான தென்னுங் குறிப்பிற்று இது, குறிப்பெச்சமாக வருவித்து உணர்ந்து கொள்ளப்படும்.