இன்பத்தின் இயல்பு நுவலும் அதிகாரம்' என்பது பொருள்; இன்பமாவது, பொருள்களின் வாயிலாகப் புலன்களால் நுகர்வதோர் உணர்வு. அதன்கண், ஒருகாலத் தொருபொருளால் ஐம்புலனும் ஒருங்கு நுகருங்காமவின்பம் சிறத்தலின், அதுவே இன்ப' மென் றெடுத்துக்கொள்ளப்பட்டது. அஃது, ஒத்த தலைவனுந் தலைவியும் இயற்கையன்பினால் ஒருவரையொருவர் இன்றியமையாராய்த் தம்முட் கூடுங்கால், அவருள்ளத்துணர்வாய்த் தோன்றுவதோ ருணர்வுநிலை. அந்நிலை மாட்சிமைப்பட்டன்றி அதனினுஞ் சிறந்ததொன்று கைவாராமையின், அது மாட்சிமைப்படும் வாயில்கள் இவ் வதிகாரத்தா னுவலப்படும்.

391 முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.

(பொ-ள்.) முயங்காக்கால் பாயும் பசலை - தலைவியை மருவாவிடின் அவளுடம்பிற் பசலைநிறம். பரவும்; மற்று ஊடி உயங்காக்கால் உப்பு இன்றாம் காமம் - ஆனால் அவள் இடையிடையே ஊடல்கொண்டு உள்ளம் மெலியாவிடின் காமவுணர்வு சுவையில்லாததாகும்; வயங்கு ஓதம் நில்லாதத் திரை அலைக்கும் நீள் கழித் தண்சேர்ப்ப புல்லாப் புலப்பதோர் ஆறு - ஆதலால் விளங்குகின்ற கடலானது ஒரு படியிலும் நில்லாத தன் அலைகளால் அலைத்தெதிர்கின்ற நீண்ட கழியினையுடைய குளிர்ந்த துறைவனே! காமத்திற்கு ஊடிப் புணர்வது ஓர் இனிய நெறியாகும்.

(க-து.) ஊடலுங் கூடலும் காமம் மாட்சிமைப்படுதற்கு ஏது.

(வி-ம்.) பசலையென்றது ஈண்டு ஒளிமழுக்கம். உப்பு. சுவையென்னும் பொருட்டு ஆகுபெயர்; சற்றே குறையினுங் கூடினுஞ் சுவை கெட்டு மற்றளவி னிற்கச் சுவை பயப்பதொரு பொருளாகலின், அவ் வியல்பினரான ஊடற் சுவைக்கு ஈதுரைக்கப்படும். "உப்பமைந் தற்றாற் புலவி" என்றார் நாயனாரும்; பிறரும் "உப்பமை காமம்" என்பர். அலை எதிர்தலாற் கழிநீர் நிறைந்து உப்புமிக்கு மாட்சிமைப்படுதலின், தலைவன்பாற் குறைகண்டு அதனால் ஒருநிலையினு நில்லாது கடலலைபோற் கொந்தளிக்கும் உள்ளமுடையளான தலைவி, தன்கண் வந்து கூடுகின்ற தலைவனைத் தனதூடலால் எதிர்த்து அவனுணர்வை நீர்மையுஞ் சுவையு மிகுவித்து மாட்சிமைப்படுத்துவ ளென்பது நில்லாத் திரையலைக்கும் நீள்கழி' என்னும் அடைமொழியின் கருத்தாம். ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம், கூடி முயங்கப் பெறின்' என்னும் உண்மை இச் செய்யுளான் உணர்த்தப்பட்டது. புலவாப்புல்லுவதோராறு' என்று மாற்றி எதிர் நிரனிறையாகக் கொள்க. தலை மகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகற்கு, முன்னம் வாயில் நேர்ந்த தோழி உவகை மிக்குக் கூறியது. இதனாற் காமம் மாட்சிமைப் படுவதோ ராறு நுவலப்பட்டது.

392 தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்குந் துணையில்லார்க் - கிம்மெனப்
பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

(பொ-ள்.) தம் அமர் காதலர் தார் சூழ் அணி அகலம் விம்ம முயங்கும் துணை இல்லார்க்கு - தம்மால் அன்பு செய்யப்படுங் காதலரது மலர்மாலை யணிந்த அழகிய அகன்ற ஆகத்தைக் கொங்கைகள் பூரிக்க மருவியின்புறுமோர் ஆதரவில்லாத எம்போலும் பிரிந்த மகளிர்க்கு, இம் எனப் பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம் நெய்தல் அறைந்தன்ன நீர்த்து - இம்மென்று மழை பொழிய மேகம் இடித்தொலிக்குந் திசையெல்லாம் சாப்பறை அறைந்தாற் போன்ற தன்மையுடையது.

(க-து.) பிரிவின்கண் அன்புசெய்து இரங்குவார்க்குக் காமம் மாட்சிமைப்படும்.

(வி-ம்.) காதலர்' என்றமையால் தலைவர் தம் மாட்டு அன்பு செய்தலும் பெறப்பட்டது. துணை' யென்றாள், தலைவன் றொடர் பொன்றே தம் வாழ்க்கைக்குத் துணையல்லது பிறிதன்றென்றற்கு. இம்மென வென்பது ஒலிக்குறிப்பு; அதனை ஈண்டுக் கிளர்ந்தோதினார், பருவங்கருதினமையின். அஃதொன்றன்றி வேறியாதும் அவள் செவியகம் புகாமையின். "முடங்கிறைச் சொரிதரு மாத்திரள் அருவி, இன்பல் இமிழ்இசை ஓர்ப்பனள் கிடந்தோள், அஞ்செவி" யென்றார் பிறரும். எல்லாமென்பது தொறுப்பொருளதாகலின் ஒருமையின் முடிந்தது. சாதலன்ன பிரிவென்பவாகலின்2 ‘நெய்த லறைந்தன்ன' வென்றார். இது, பருவங்கண்டு ஆற்றாளாய்த் தலைவி தன்னுட்கலுழ்ந்து கூறியது.

393 கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

(பொ-ள்.) கம்மம் செய் மாக்கள் கருவி ஒடுக்கிய மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள். - கம்மத்தொழில் செய்கின்ற மக்கள் தொழிலை நிறுத்தித்தம் கருவிகளை ஏறக்கட்டிச் சென்ற மயங்கஞ் செய்யும் இம் மாலைப்போதில் மலர்களை ஆராய்ந்து மாலை தொடுப்பவள், கைம்மாலை இட்டுக்கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு இம் மாலை என்செய்வதென்று - நின் பிரிவு கேட்டுத் தனது கையிலிருந்த மாலையை நழுவவிட்டுத் தலைவராகிய துணையைப் பிரிந்த மகளிர்க்கு இந்த மலர்மாலை என்ன பயன் தருவதென்று சொல்லி அழுவாளாயினள்.

(க-து.) பிரிவினாற் காதலருள்ளம் மென்மையடையும்.

(வி-ம்.) கம்மமென்பது தொழில். வேலை நிறுத்தினாரென்றற்குக் கருவி யொடுக்கினா றென்றார். கம்மியருந் தந்தொழில் விடுத்துத் தம் இல்லஞ் செல்லும் மாலையென்றமையால், தலைவனுந் தான் வினைமேற் சேறலை விடுத்து இல்லந் தங்குதல் வேண்டுமென்னுங் குறிப்புப் பெறப்பட்டது. காதலர்க்கு மயக்கஞ் செய்யும் மாலையாகலின், ‘மம்மர்கொள் மாலை' யெனப்பட்டது. என்று சொல்லியது தானே கூறிக்கொண்டது. இது, தலைமகள் செலவு உடன்படாமையைத் தலைமகற்குத் தோழி கூறியது.

394 செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து.

(பொ-ள்.) செல் சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்ட நீர் மெல் விரல் ஊழ் தெறியா விம்மி - கதிரவன் மறையும் மாலைப்போது நோக்கிச் சிதறிய செவ்வரி பரந்த கண்கள் ஆற்றாமையால் நிறைத்த நீரைத் தனது மெல்லிய விரலால் முறையே எடுத்தெறிந்துகொண்டு அழுது, மெல்விரலின் நாள் வைத்து நம் குற்றம் எண்ணுங்கொல் அந்தோ தன் தோள் வைத்து அணைமேல் கிடந்து - தன்கையே தலையணையாகப் படுக்கையின்மேல் ஒருக்கணித்துக் கிடந்து மெலிந்துபோன தன் விரல்களினால் பிரிந்த நாளைக் கணக்கிட்டுக் காலத்தில் இல்லஞ் சேராத நமது குற்றத்தை நினைத்து, , இந்நேரம் நம் துணைவி வருந்துமோ?

(க-து.) பிரிவு அருளிரக்கத்தை உண்டாக்கும்.

(வி-ம்.) செல்சுடர் அன்மொழித் தொகையாய் மாலைப் போதாயிற்று, கண்ணிறைநீர், இடையிட்டுத் துளி கொள்ளலால், ‘ஊழ் தெறியா' என்றார். சுடர் நோக்கிக் கிடந்து தெரியா விம்மி நாள்வைத்து எண்ணுங்கொல்' என்று கொள்க. இது வினை முற்றி மீளுந் தலைமகன் இரங்கித் தன்னுள் கூறியது. "நாள் எண் நீர்மையின் நிலனுங் குழியும், விரலிட்டறவே"1 என்றதனால், பிரிந்த மகளிர் நாளெண்ணி வருந்துதல் பெறப்படும்.

395 கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; -பின்சென்றும்
ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
கோட்டிய வில்வாக் கறிந்து.

(பொ-ள்.) கண்கயல் என்னும் கருத்தினால் காதலி பின்சென்றது அம்ம சிறுசிரல் - கண்களைக் கயல்மீன் என்று கருதிய கருத்தினால் அதனைக் குத்தித் தின்னும் பொருட்டு ஆ! நம் காதலியின் பின்னே சென்றது சிச்சிலி என்னுஞ் சிறிய மீன்குத்திப் பறவை; பின்சென்று ஊக்கியெழுந்தும் எறிகல்லா ஒண் புருவம் கோட்டிய வில்வாக்கு அறிந்து - ஆனால், அவ்வாறு பின்சென்றும் குத்துதற்கு முனைந்தும் குத்தாதாயிற்று அவளது ஒள்ளிய புருவம் வளைந்த வில்லின் வளை வென்றறிந் தென்க.

(க-து.) நலம் பாராட்டும் அன்பினால் காமம் மாடசிமைப்படும்.

(வி-ம்.) தலைவியின் விழியால் அழிவுற்று மயங்கினனாதலின் இங்ஙனம் விழி நினைந்து நலம் பாராட்டினான். அம்ம : வியப்பு, ஊக்கியெழுதல்: ஒரு சொல். எறிகலா வென்பது செய்யுளின்ப நோக்கி ஒற்று மிக்கது. இது, தலைமகன் தன் தலைவியின் நலத்தைப் பாங்கற்கு வியந்து கூறியது.

396 அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ, -அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப்பின் வாங்கும் அடி.

(பொ-ள்.) அரக்கு ஆம்பல் நாறும் வாய் அம்மருங்கிற்கு - செந்நிறம் பொருந்திய ஆம்பல் மலரைப்போல நறுமணத்தோடு விளங்கும் வாயையும் அழகிய இடையையுமுடைய நம் புதல்விக்கு, அன்னோ - ஆ, அரக்கு ஆர்ந்த பஞ்சிகொண்டு ஊட்டினும் பையென பையென என்று அஞ்சிப் பின்வாங்கும் அடி பரல் கானம் ஆற்றின கொல்லோ - அழகுக்காகச் செந்நிற மிக்க செம்பஞ்சிக் குழம்பைத் தடவினாலும் மெதுவாக, மெதுவாக' வென்று அஞ்சிக் கூறிப் பின் இழுத்துக்கொள்ளும் அத்துணை மெல்லிய பாதங்கள் தலைவனோடு உடன்போக்கிற் பிரிந்த இப்போது பரற்கற்களையுடைய கானத்திற் செல்லப் பொறுத்தனவோ?

(க-து.) எத்துணை இன்னலையுந் தலைவனுடன் தாங்குதலாற் காதல் பின்னும் மாட்சிமைப்படும்.

(வி-ம்.) அரக்காம்பல், செவ்வாம்பல்; நாறு மென்றதனால் மணமுங் கொள்க. "ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத் , தாமரைச் செவ்வாய்" யென்றார் பிறரும். மருங்கு; ஆகுபெயர். 2‘மருங்கிற்கு அடி கானம் ஆற்றினவோ' என்க. செல்லவென ஒரு சொல் வருவிக்க. இது, செவிலித்தாய் தன் மகள் உடன்போக்கிற் பிரிந்து சென்ற சுரத்தருமை நினைந்து இரங்கியது.

397 ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட் டழுதாள் வனமுலைமேற்
கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து.

(பொ-ள்.) ஓலைக் கணக்கர் ஒலி அடங்குபுன் செக்கர் மாலைப்பொழுதில் மணந்தார் பிரிவு உள்ளி - ஏடுகளிற் கணக்கெழுதுங் கணக்கரது அலுவல் தொடர்பான ஆரவாரம் அடங்குகின்ற புல்லிய சிவந்த அந்திப்பொழுதில், தலைவி தன்னை மணந்த கணவரது பிரிவை நினைந்து, மாலைபரிந்திட்டு அழுதாள் வன முலைமேல் கோலம்செய் சாந்தம் திமிர்ந்து - தான் சூடியிருந்த மலர் மாலையை அறுத்தெறிந்து தன் அழகிய கொங்கையின்மேல் தொய்யிலெழுதி அழகு செய்திருந்த சந்தனத்தையும் கலைத்துதிர்த்து அழுவாளாயினள்.

(க-து.) பிரிவுள்ளி இரங்கும் அன்பினால் உடலும் உயிருங் குழைந்து பயனுறுதலையுடைய செவ்வியைப்பெறும்.

(வி-ம்.) ஒலி, கணக்குத் தீர்த்தலும் அதுபற்றிப் பேசுதலுமான ஆரவாரம். ஒலியடங்குதல், வேலையோய்தல், இக்கருத்து முன்னும் வந்தது. செக்கரென்றது, அந்திவானத்தின் செவ்வொளியை நினைந்து, கோலஞ் செய்து
மாலை சூடியிருந்தமையால் பிரிவு மேல் நிகழ விருப்பதெனக் கொள்க. திமிர்தல், ஈண்டுத் தேய்த்துதிர்த்தல், பிரிவாற்றாத தலைமகளின் நிலைமையைத் தோழி, தலைமகன் கேட்பத் தன்னுள் இரங்கிக் கூறியது.

398 கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி ; - சுடர்த்தொடீஇ!
பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.

(பொ-ள்.) கடக்க அரு கானத்துக் காளை பின் நாளை நடக்கவும் வல்லையோ என்றி - வன்மையுடையாருங் கடந்து செல்லுதற் கருமையான காட்டின்கண் காளையாகிய தலைவன் பின்னே நாளை நீ உடன்போக்கில் நடந்து போகவும் வல்லமையுடையையோ என்று கூறுகின்றனை; சுடர்த் தொடீஇ - ஒளி மிக்க வளைய லணிந்த தோழி!, பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே கற்றான் அஃது ஊரும் ஆறு - பெருமையிற் சிறந்த குதிரையொன்றினைப் பெற்றா னொருவன் அப்பொழுதே அதனை ஏறி ஊரு நெறியைக் கற்றவனாவன்.

(க-து.) ஒருமைப்பட்ட காதலன்பினால் உள்ளம் ஆழ்ந்து ஆற்றலுடைய தாகின்றது.

(வி-ம்.) வல்லையோ என்றது, தலைவியின் மென்மை கருதி. உவமையால், கருத்துடையானொருவன் ஒரு நிலையை எய்தினால் அதற்கான ஆற்றல்கள் அவன்கண் உடனே சென்றடையும் என்பது பெறப்படும். தலைவி தனது மெய்யன்பினை இவ்வாறு புலப்படுத்தினாள். தெளிவுபற்றிக் கற்றான் என இறந்த காலத்தான் நின்றது; இதனை "இயற்கையுந் தெளிவுங் கிளக்குங்காலை" யென்பதனாற் கொள்க. இஃது, உடன்போக்கிற் கிசைந்த தலைவி தோழிக்குக் கூறியது.

399 முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
தீம்பாவை செய்த குறி.

(பொ-ள்.) முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும் இலக்கணம் யாதும் அறியேன் - நேற்று என்மகள் தன்னுடைய முலைக்காம்பும் முத்துவடமும் அழுந்தும்படி என் உடம்பு முழுமையும் அணைத்துக்கொண்ட உண்மையை யான் சிறிதும் அறியாமற் போனேன்; கலைக்கணம் வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும் என் தீம்பாவை செய்த குறி - மான்கூட்டங்கள் வேங்கைக்கு அஞசிச்சிதறுங்காட்டு நெறியில் இன்று பிரிந்து செல்லுதற்குப் போலும் அழகிய பாவை போல்வாளான என்மகள் அவ்வாறு செய்த அடையாளம்!

(க-து.) தாயினன்பினையும் மறக்கும் ஆழ்ந்த காதலன்பினால் காமம் இன்பப்பேறுடைய தாகின்றது.

(வி-ம்.) முத்து: ஆகுபெயர், இலக்கணம், ஈண்டு இயல்பினையென்னும் பொருட்டு. தன்மாட்டு வைத்த அன்பினால் மகள் இவ்வாறு குறிசெய்த இயல்பினையென்க. இவ்வாறு இயல்பினை நுவலலின் அறிந்திலேன் எனற்பாலது, அறியேன் என நிகழ்வினின்றது. "இயற்கையுந் தெளிவு" மென்புழி இயற்கை' யென்பதனால்1 இது கொள்ளப்படும். கலை, மானென்னும் பொதுமையின் வந்தது. செலிய : எச்சம் . இது, மகட்போக்கிய தாய் வருந்திக் கூறியது.

400 கண்மூன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற்
பாங்கனார் சென்ற நெறி.

(பொ-ள்.) கண் மூன்று உடையானும் காக்கையும் பைஅரவும் என் ஈன்ற யாயும் பிழைத்தது என் - கண்கள் மூன்றுடைய சிவபிரானும் காக்கையும் படத்தையுடைய இராகுவென்னும் பாம்பும் என்னை ஈன்று வளர்த்த தாயும் என்மாட்டுப் பிழைசெய்தது யாதிருக்கின்றது; பொன் ஈன்றகோங்கு அரும்பு அன்ன முலையாய் - பொன் போலும் சுணங்கினை மேலெழச் செய்த கோங்கின் அரும்பு போன்ற கொங்கைகளையுடைய தோழீ!, பொருள் வயின் பாங்கனார் சென்ற நெறி - என் கவற்சிக்கு ஏது, பொருள் காரணமாக நந் தலைவர் பிரிந்து சென்ற கொடிய காட்டு நெறியினது கடுமையேயாகும்.

(க-து.) ஆழ்ந்த காதலுணர்வு பிறர்நலம் உள்ளுதற்கிடஞ்செய்யும்.

(வி-ம்.) பிரிவாற்றது தலைவி வருந்துவதறிந்து தோழி, தலைமகன் கூட்டம் விரும்பி வருந்துவதாக உட்கொண்டு வேறு கூற, தலைவி அதனை மறுத்துச் சுரத்தின்கண் அவன் எய்தும் இடர் நினைந்துவருந்துதல் தெரித்தாள். தன்னலங் கருதாது தலைவன் நலங்கருதுதல் புலப்படுத்திற்று இச் செய்யுள். "மரையா மரல் கவர" வென்னுங்கலியினும் இது வரும். தோழி, காம வேட்கையை மிகுவிங்குங் காமனையும் குயிலையும் நிலவையும் பெண் பிறவியையும் வெறுத்துக் காமனை மீண்டும் உயிர்ப்பித்த சிவபிரானயும், குயில் முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரித்து வளர்த்து விட்ட காக்கையையும், விழுங்கிய நிலவை மீண்டும் உமிழ்ந்த அரவையும், ஈன்று வளர்த்த தாயையும் பழித்துக் கூறினமையின் தலைவி, ‘பிழைத்ததென்?' என்றாள். என்' னென்றது கற்றதனா லாய பயனென்கொல்' என்புழிப் போல யாதுமின்மை யுணர்த்திற்று. இது, தலைவன் சென்ற சுரத் தருமை நினைந்து தலைவி வருந்தியது. இவை ஒன்பது பாட்டானும், காமம் பிரிந்துள்ளும் முறைகளால் மாட்சிமைப்படும் இயல்பு விளங்கிற்று.