நட்புச் செய்தற்குரியாரை அவர் கல்வியறிவு ஒழுக்க முதலியவற்றால் ஆராய்ந்து கொள்ளுதல்.

211 கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங்
குருத்திற் கரும்புதின் றற்றே;- குருத்திற்
கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
மதுர மிலாளர் தொடர்பு.

(பொ-ள்.) கருத்துணர்ந்துகற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும் குருத்தின்கரும்பு தின்றற்று - கல்வியின் பயன் தெரிந்துஉரிய நூல்களைக் கற்றுத் தெளிந்த மேலோருடையநட்பு எஞ்ஞான்றும் குருத்திலிருந்து கரும்புதின்றாற் போன்றது; குருத்திற்கு எதிர்செலத்தின்றன்ன தகைத்து என்றும் மதுரம் இலாளர்தொடர்பு - கல்வியின் இனிமையில்லாத கீழோருடையதொடர்பு என்றும் கரும்பை அதன் குருத்திற்கு நேரேசெல்லும்படி அடியிலிருந்து தின்று சென்றாற்போன்றதன்மையுடையது.

(க-து.) கற்றார் நட்பு மேன்மேலும்இன்பம் தந்து செல்லும்.

(வி-ம்.) குருத்தின் என்னும்ஐந்தனுருபு எல்லைப் பொருளது. குருத்திலிருந்து கரும்புதின்னுதல் மேன்மேலும் இன்பந் தந்துசெல்லுதற்கும், அடியிலிருந்து கரும்பு தின்னுதல்வரவர இன்பங் குறைந்து செல்லுதற்கும் உவமம்.‘எஞ்ஞான்றும்' ‘என்றும்' என்பன இடருற்றநிலையிலும் என்பதைக் குறிப்பா லுணர்த்திநின்றன. ஏகாரமும் அரோ வென்பதும் அசை.கரும்புவமைக் கேற்பக் கல்வியறிவை ஆசிரியர்இறுதியில் மதுரமெனக் கூறி மகிழ்ந்தார்.

212 இற்பிறப் பெண்ணி இடைதிரியா ரென்பதோர்
நற்புடை கொண்டமை யல்லது, - பொற்கேழ்
புனலொழுகப் புள்ளிரியும் பூங்குன்ற நாட!
மனமறியப் பட்டதொன் றன்று.

(பொ-ள்.) பொன்கேழ் புனல் ஒழுகப்புள் இரியும் பூ குன்ற நாட - பொன்னின் நிறம்அருவியிற் பொருந்தி வருதலால் பறவைகள் அஞ்சிநீங்குகின்ற பொலிவினையுடைய மலைநாடனே,இல்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்நல்புடை கொண்டமையல்லது மனம் அறியப்பட்டதொன்றன்று - குடிப்பிறப்புக் கருதி இவர் இடையில்வேறு படார் என்பதொரு சிறந்த வகையை உட்கொண்டுநட்புச் செய்ததல்லது மனம் அறிந்த உண்மைவேறொன்றனால் அன்று.

(க-து.) நட்பாராய்தற்குக்குடிப்ப்றிப்பொன்றும் சிறந்த காரணமாகும்.

(வி-ம்.) உயர்குடியிற்பிறந்தார்க்கு இயல்பாகவே பெருந்தன்மைஉண்டாகலின், ‘இற்பிறப்பெண்ணி' யென்றார்;எண்ணியென்றது, ஈண்டு நம்பியென்னுங்குறிப்புடையது.நற்புடை - நற்காரணம் என்னும் பொருட்டு. "உறுகுறைமருங்கின்" என்புழிப்போல, நட்புச்செய்தமைக்கு இற்பிறப்பென்பதல்லது வேறுமனமறிந்த காரணம் ஒன்றின்று என்பது கருத்து;இவ்வாற்றால் இற்பிறப் பொன்றும் நட்புக்குஇலக்கணமாம் என்று அதன் மேன்மைஉணர்த்தியவாறாம். கேழ் ஒழுகவென்க. ஒழுகுதல்,ஈண்டுத் தொடர்புற்று வருதல், பொற்றுகளுஞ்செந்தேனும் ஏற்று வருதலால் அருவி பொன்னின்விளக்கம் பெற்றமையின், அவ்விளக்கங் கண்டுபறவைகள் அஞ்சி நீங்கினவென்பது.

213 யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;- யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.

(பொ-ள்.) யானையனைவர் நண்பு ஒரீஇ- யானையை ஒத்த இயல்புடையாரது நேயத்தை நீக்கி,நாய் அனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் -நாயை ஒத்த இயல்புடையாரது நேயத்தைத் தழுவிக்கொள்ளுதல் வேண்டும்; ஏனென்றால், யானைஅறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் - யானைபலநாள் பழகியிருந்தும் தன்னை வளர்த்த பாகனையேகுற்றங்கண்டு கொல்லும்; எறிந்த வேல் மெய்யதாவால் குழைக்கும் நாய் - ஆனால் நாயோ தன்னைவளர்த்தவன் சினத்தால் தன்மேல் வீசிய வேல்தன் உடம்பில் உருவி நிற்க அன்பினால் அவன்பால்வால் குழைத்து நிற்கும்.

(க-து.) பிழை பாராட்டாதஇயல்புடையாரை அறிந்து நட்புச் செய்தல் வேண்டும்.

(வி-ம்.) அறிந்தறிந்தும் -நன்றாய் அறிந்திருந்தும்; பலகால் தனக்குஉதவிகள் செய்திருப்பதை நன்றாய்த்தெரிந்திருந்தும் என்க. மெய்யதா - உடம்பினதாக,வால் குழைத்தல் - வாலை வளைத்து ஆட்டுதல், ஈது அன்புபாராட்டுதற்கு அறிகுறி. நாய் உவமை அதன் உயர்ந்தபண்பினால் ஈண்டு உயர்வடையதாயிற்று."பெருமையும் சிறுமையும்" என்னும்நூற்பா உரையிற் கழியச் சிறியதாகஉவமித்ததற்குப் பேராசிரியர் இதனை எடுத்துக்காட்டினார்.

214 பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோ டொட்டார்; பலநாளும்
நீத்தா ரெனக்கை விடலுண்டோ, தந்நெஞ்சத்
தியாத்தாரோ டியாத்த தொடர்பு.

(பொ-ள்.) பலநாளும்பக்கத்தாராயினும் நெஞ்சில் சிலநாளும்ஒட்டாரோடு ஒட்டார் - பலநாளும் அருகிலிருந்துபழகினாராயினும் மனத்திற் சில நாளாயினும்நட்புப் பொருந்தாதவரோடு தெரிந்தோர்சேரமாட்டார்; பல நாளும் நீத்தார் எனக் கைவிடல்உண்டோ தம் நெஞ்சத்து யாத்தரோடு யாத்ததொடர்பு - தமது நெஞ்சத்தில் நட்புப்பொருந்தியவரோடு பிணிப்புண்ட தொடர்பு அவர்பலநாட்கள் அருகில்லாமல் நீங்கினாரென்றுகைவிடப் படுதலுண்டோ?

(க-து.) நெஞ்சுப் பிணிப்புஉடையாரோடு நட்புச் செய்தல் வேண்டும்.

(வி-ம்.) பலநாளும் சிலநாளும்என்னும் உம்மைகள் முறையே உயர்வு சிறப்பும் இழிவுசிறப்புமாம். பலநாளும் நீத்தாரென்னுமிடத்து அஃதுஅசை. சிறந்த நட்பு, அருகில் பழகுதலாலேயே ஆவதன்று;நெஞ்சம் பொருந்துதல் முதன்மை என்றபடி."புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங்கிழமை தரும்" என்பது நாயனார்அருளுரை. கோப்பெருஞ் சோழன் - பிசிராந்தையார்,அப்பூதியடிகள் - திருநாவுக்கரசர் இவர்களின்நட்பினை ஈண்டுணர்க.

215 கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி;- தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாரும் நட்பாரும் இல்.

(பொ-ள்.) கோட்டுப்பூப் போலமலர்ந்து பின் கூம்பாது வேட்டதே வேட்டதாம்நட்பாட்சி - மரங்களிற் பூக்கும் பூக்கள் முதலில்மலர்ந்து பின் தாம் உதிரும் வரையிற்குவியாமைபோலத் தலைநாளில் உள்ளம்மலர்ந்துபின் தமது முடிவு வரையிற் சுருங்காமல் விரும்பியதுவிரும்பியதாயிருப்பதே நட்புடைமையாம்;தோட்டகயப் பூப்போல் முன் மலர்ந்து பின்கூம்புவாரை - அவ்வாறின்றி அகழ்ந்தெடுத்தநீர்நிலைகளிற் பூக்கும் இதழ்மிக்க பூக்கள்போல் தலைநாளில் மகிழ்பூத்து நாளடைவில்மனஞ்சுருங்கும் இயல்பினரை, நயப்பாரும் நட்பாரும்இல் - விரும்புவாரும் நேசிப்பாரும் உலகில் இல்லை.

(க-து.) கூடிப் பின் பிரியாஇயல்பினரே நேசித்தற்குரியர்.

(வி-ம்.) வேட்டது வேட்டதேநட்பாட்சியாம் என்று மாறுக. வேட்டதென்றது ஈண்டுவிரும்பி நேசித்ததென்னும் பொருட்டு. "உயர்ந்தவேட்டத்து உயர்ந்திசினோர்" என்பதுபுறம். இதழ்மிக்க நீர்ப்பூ என்னும் குறிப்பு.முதலில் தோற்றத்தால் நேயம் பெருகித்தோன்றுதல் உணர்த்தும். மலர்தலுங்குவிதலுமென்றற்கு, நேயத்தால் உள்ளம் மலர்தலுங்குவிதலும் என்று கொள்க. நயத்தல், விரும்பிமதித்தல்; நட்டல் - அணுகி நேசித்தல் என்க.

216 கடையாயார் நட்பிற் கமுகனையர்; ஏனை
இடையாயார் தெங்கி னனையர்;- தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.

(பொ-ள்.) நட்பில் -நேயமுறைமையில், கடையாயார் கமுகு அனையர் -கீழோர் பாக்கு மரத்தின் இயல்பை ஒத்தவர்;இடையாயார் தெங்கு அனையர் - இடைத்தரமானவர்தென்னை மரத்தின் இயல்பை ஒத்தவர்; ஏனைத்தலையாயார் தொன்மையுடையார் தொடர்பு - ஏனைஉயர்ந்தோரெனப்படும் பழைமை கருதுவாரது நட்பு, எண்அரு பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே - மதிப்புமிக்க பனை மரத்தின் இயல்புபோன்று நேயம்ஊன்றிய போது ஊன்றியதேயாம்.

(க-து.) மேன்மேல் உதவிகளில்லாதபோதும் நட்புக் குறையாதவரிடமே நேயங்கொள்ளுதல்வேண்டும்.

(வி-ம்.) நெடுகக் கவனித்தலால்பாக்குமரமும், இடையிடையே கவனித்தலால் தென்னைமரமும் முதலில் விதையிட்ட அளவோடு பனைமரமும்வளர்ந்து பயன்றருவனவாதலால், அவ்வாறுகவனித்தலுடைமையால் நேயம் நிலைபெறுவார்க்குமுறையே அவை உவமமாயின. ‘நட்பில்' என்பதைஏனையோர்க்குங் கொள்க. ஏனைத் தலையாயார் எனத்தொடர்க. அருமை , ஈண்டு மிகுதிப் பொருளதே, பனைக்குவிதை ஊன்றியதன்றி இறுதிகாறும் பிறிதேதுஞ்செய்யாமையின், ‘இட்டஞான்றிட்டதே' எனப்பட்டது.நட்புக்குப் பழைமை கருதுதல் சிறந்தஇலக்கணமாதலின், தலையாயாரைத்தொன்மையுடையாரென்று மேலும் ஆசிரியர் விதந்துகூறினார். நட்பென்னும் உறுப்பினுள் பழைமைபாராட்டுதலை நாயனார் விதிமுகக் கூற்றுள்முதன்மைபெற வைத்து விளக்குதலும்,"நட்பிற்குறுப்புக் கெழுதகைமை; மற்றதற்,குப்பாதல் சான்றோர் கடன்" என்றதும்இக் கருத்தினான் என்க.

217 கழுநீருட் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் ; - விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய்.

(பொ-ள்.) கழுநீருள் கார் அடகேனும்ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் -கழுநீருட் பெய்து சமைத்த கறுத்த இலைக்கறியேனும்ஒருவன் அன்புடையதாகப் பெற்றால் அஃது அமிழ்தமாய்நன்மை தரும் ; விழுமிய குய்த் துவை ஆர்வெண்சோறேயாயினும் மேவாதார் கைத்து உண்டல்காஞ்சிரங்காய் - சிறந்த தாளிப்புப் பொருந்தியதுவைத்த கறிகளோடு கூடிய வெண்ணிறமான நெல்லரிசியுணவேயாயினும் அன்பு பொருந்தாதவர்கையிலுள்ளதாய் உண்ணுதல் எட்டிக் காய்போல்வெறுப்புத் தருவதாகும்.

(க-து.) உள்ளன்போடு உதவுவோரிடமே நட்புச் செய்தல்வேண்டும்.

(வி-ம்.) ‘கழுநீர்' என்பது அரிசிகழுவிய நீர். இலைக்கறியில் தாழ்ந்ததொன்றைக்குறித்தற்குக் ‘காரடகு ' என்றார். குறிப்பால்,முன்னைக்கீரை முதலியன ஈண்டுக் கருதப்படும். துவை,துவையலுமாம்.

218 நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கா லனையார் தொடர்பு.

(பொ-ள்.) நாய்க்கால்சிறுவிரல்போல் நன்கு அணியராயினும் ஈக்கால்துணையும் உதவாதார் நட்பு என்னாம் நாய்க்காலின்சிறிய விரல்கள் நெருக்கமாயிருப்பதுபோல் மிகநெருக்கமுடையாராயினும் ஓர் ஈக்காலினளவும் உதவிசெய்யாதவரது நட்பு என்ன பயனுடையதாகும்?;சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும்செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு -கழனி, முழுமையும் விளைக்கும் நீர்க்காலை ஒத்தஇயல்பினரது தொடர்பு தொலைவிலுள்ளதாயினும்அதனைத் தேடிச் சென்று அடைதல் வேண்டும்.

(க-து.) உதவும் இயல்பினரேநட்புச்செய்தற்குரியர்.

(வி-ம்.) நாய்க்காற் சிறுவிரல்இழிவுக்காக வந்த உவமம். ஈக்கால், ஈ என்னும்மிகச் சிறிய பறவையினது கால் ; இது சிறுமைக்குஎடுத்துக்காட்டுவதோர் அளவு. வேண்டும் என்பது ஏவல்கண்ணிய வியங்கோள் ; உம் ஈற்றான் வந்தது. வாய்க்காலின் இயல்பு. கழனியினிடமிருந்துஎஞ்ஞான்றுந் தான் ஓர் உதவி பெறுதலின்றாயினும்உற்ற நேரங்களில் தொலைவிலிருந்து தானேமுற்போந்து ஓடி வளம் உதவி அவ் வயல்முழுமையும்விளையச் செய்தல். நண்பரது இருப்பின்சேய்மை அவர் தொடர்பின்மேல் ஏற்றப்பட்டது.

219 தெளிவிலார் நட்பின் பகைநன்று ; சாதல்
விளியா அருநோயின் நன்றால் - அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல
புகழ்லின் வைதலே நன்று.

(பொ-ள்.) தெளிவிலார் நட்பின்பகை நன்று - நம்பத் தகாதவரது நட்பினும் அவரது பகைநலந்தரும் ; சாதல் விளியா அருநோயின் நன்று -தீராத கொடிய நோயினும் இறத்தல் நலமாகும் ; அளியஇகழ்தலின்கோறல் இனிது - பிறரை நெஞ்சுபுண்ணாகும்படி இகழ்தலினும் அவரைக் கொல்லுதல்நல்லது ; இல்ல புகழ்தலின் வைதலே நன்று - ஒருவரிடம்இல்லாதன கூறிப் புகழ்தலினும் அவரைப் பழித்தலேநன்மையாம்.

(க-து.) நம்பிக்கையில்லாதவரிடம் நட்புச் செய்தல் ஆகாது.

(வி-ம்.) தெளிவென்பது ஈண்டுநம்பிக்கையென்னும் பொருட்டு :"தெளிந்தார்இல் தீமை புரிந்தொழுகுவார்" என்புழிப்போல தெளிவிலார் பகையினும் நட்பில்இன்னல் மிகுதியாதலின் பகை நன்றென்றார். அவர்நட்பினால் உண்டாகும் மிக்க இன்னலை விளக்கும்பொருட்டுப் பகை நன்றென்றதல்லால்வேறில்லையாகலின், மற்று அத்தகையாரிடம்பகையுமில்லாதிருத்தலே நன்றென்க.ஏனையவற்றிற்கும் இங்ஙனங் கொள்க. அதிகாரம்நட்பாராய்தலாகலின் ஏனை மூன்றையும்முன்னதற்குஉவமமாக உதை்தலுமொன்று. ஆல், , மற்று : அசை. வைதலேஎன்பதன் தேற்றேகாரத்தைப் பகை, சாதல், கோறல்என்பவற்றிற்குங் கூட்டுதல் பொருந்தும்."பொருளே உவமம்"  என்பதனால்இதனைக்கொள்க.

220 மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇஇப் பின்னைப் பிரிவு.

(பொ-ள்.) மரீஇப் பலரோடு பலநாள்முயங்கிப் பொரீஇப் பொருள் தக்கார்க் கோடலேவேண்டும் - பல நாள் பலரோடும் சேர்ந்து ஒத்துக்கலந்து பழகிப் பொருளாகத் தக்காரையே நட்புக்கொள்ளல் வேண்டும் ; ஏனென்றால், பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா மரீஇப் பின்னைப்பிரிவு - கடித்து உயிரை அழிக்கும் பாம்போடாயினும்கூடிப் பின்பு பிரிதல் இன்னாமையாகும்.

(க-து.) பலகால் நன்காராய்ந்தபின்னரே தக்காரோடு நட்புச் செய்தல் வேண்டும்.

(வி-ம்.) "ஆயந்தாய்ந்துகொள்ளாதான் கேண்மை கடைமுறை, தான்சாந் துயரந்தரும்" என்றார் நாயனார். மருவி பொருவி,பரிந்து என்பன ஈண்டு விகாரப் பட்டு அளபெடுத்தன.பொருவுதல், ஒத்தல் ; பரிதல். அறுத்தல் :பிறவினைக்கண் வந்தது ; "எருமை கயிறுபரிந்தசைஇ" என்புழிப்போல, ஈண்டுக்கடித்தலென்னும் பொருட்டு. பொருட்டக்காரென்றது,உண்மைத் தகுதியுடையாரை யென்க. ஏகாரத்தைப்பிரித்துக் கூட்டுக. இன்னாமை யென்பது ஈறுதொகுத்தலாய் நின்றது.