81 அச்சம்
பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்காற்
கோக்கொலையால் -நிச்சலும்
கும்பிக்கே கூர்ந்த
வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார்.
(பொ-ள்.) அச்சம் பெரிதால் - உண்டாகும் அச்சம் பெரிதாதலாலும், அதற்கு இன்பம் சிற்றளவால் - அப்பேரளவான அச்சத்துக்கு ஈடாக
அடையும் இன்பம் சிறிதளவேயாதலாலும், நிச்சம்
நினையுங்கால் கோ கொலையால் - நாடோறும் நினைக்கு மிடத்து அதற்கு ஏற்ற தண்டனை
உண்மையாக அரசனது கொலைக் கட்டளை யாதலாலும், நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால் - நாடோறும் அழல்வாய்
நரகுக்கே உருவாகிய செயலாதலாலும். பிறன் தாரம் நம்பற்க நாணுடையார் - பழிபாவங்கட்கு
அஞ்சுதலுடையார் பிறன் மனைவியை விரும்பாமலிருப்பாராக !
(க-து.) பிறன் மனைவியை விரும்பி யொழுகு வார்க்கு எந்நாளும்
இருமையிலும் துன்பமே யாகும்.
(வி-ம்.) ஆல் - ஆதலால் : உம்மை விரித்துக் கொள்க. நிச்சம் -
உண்மையாக. கும்பியென்பது ‘தீச்சூளை' யாதலின் இங்கு ‘அழல்வாய் நரகம்' எனப்பட்டது. கூர்தல் - உள்ள தன்மை சிறந்து வருதல். ஆதலின், இங்கே அது ; நரகுக்கே
உருவாகிவரும் செயல் என்னும் கருத்தில் வந்தது. "நம்பும் மேவும்
நசையாகும்மே" என்பது
தொல் காப்பியமாதலின், ‘நம்பற்க' என்பதற்கு ‘விரும்பற்க' என்பது பொருளாயிற்று.
82 அறம்புகழ்
கேண்மை பெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச்
சேரா - பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி
பாவம்என்று
அச்சத்தோ டிந்நாற் பொருள்.
(பொ-ள்.) அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் - புண்ணியம் புகழ்
தக்கார் நேயம் ஆண்மை என இந் நான்கும் ; பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன் மனைவியை
விரும்புவாரிடத்திற் சேரமாட்டா ; பகை
பழி பாவம் என்று அச்சத்தோடு இந் நாற்பொருள் - பிறர் பகையும் பழியும் பாவமும்
அச்சமும் என்று இந் நான்கு பொருள்களும், பிறன் தாரம் நச்சுவார்ச் சேரும் - பிறன் மனைவியை
விரும்புவாரிடத்துச் சேரும்.
(க-து.) பிறன் மனைவியை விரும்புவார்க்குப் புண்ணியமும் புகழும்
தக்கார் கூட்டுறவும் வீரமும் உண்டாகா.
(வி-ம்.) பெருமையென்றது பெருமிதம் : ஆவது ஆண்மை. பிறிது
கூறுவாருமுளர். அறம் முதலியவற்றிற்கு நேராக ஆசிரியர். பாவம் பழி பகை அச்சம் என
நான்கும் முறையே கூறுதலின், அம்முறைமைப்படி
அச்சத்துக்கு எதிராக உரைக்குமிடத்துப் பிறருரை சிறவாமை கண்டு கொள்க. பாவம் பழி
பகையென நிற்றற்குரியவை, செய்யுளாதலின்
பகை பழி பாவமெனப் பிறழ நின்றன. அச்சத்தோடு என்பதில் ஓடு என்னும் இடைச்சொல் உம்மைப்
பொருட்டு ;
‘பாவம் என்று' என்பதிலுள்ள ‘என்று' என்பதை
‘அச்சமும் என்று இந்நாற்பொருள்' பெருமை என்று இந்நான்கும்' எனக் கூட்டிக்கொள்க. 'அகப்பொருள்' ‘புறப்பொருள்' என்றாற்போல, இங்கும்
பண்புகள் ‘பொருள்' எனப்பட்டன.
83 புக்க
விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம்
தோன்றாமற் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால்
எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்.
(பொ-ள்.) புக்கவிடத்து அச்சம் - புகும்போது அச்சம் ; போதரும்போது அச்சம் - திரும்பிவரும்போது அச்சம் ; துய்க்குமிடத்து அச்சம் - நுகரும்போது அச்சம் தோன்றாமல்
காப்பு அச்சம் - பிறர்க்குத் தெரியாமல் காத்துக் கொள்ளுதல் அச்சம் ; எக்காலும் அச்சம் தரும் - இங்ஙனம் எந்நேரமும் அச்சம் தரும் ; எவன் கொலோ உட்கான் பிறன் இல் புகல் - ஏனோ இவற்றைக் கருதானாய்
ஒருவன் பிறன் மனைவியை விரும்பியொழுகுதல்?
(க-து.) பிறன் மனைவியை விரும்பி யொழுகுதலில் முழுதும்
அச்சமேயல்லாமல் இன்பமில்லையே.
(வி-ம்.) எவன் கொலோ என்பதற்கு என்ன பயன் கருதியோ என்பது பொருள்.
கொல் : அசை; ஓ : இரக்கப் பொருளது.
உட்குதல் இங்குக் கருதுதல்; "நின்னை, உட்கிச் சிறந்தோர் அஞ்சிய" என்புழிப்போல. புகல்
விரும்புதல்; என்றது விரும்பி
யொழுகுதல் என்க.
84 காணின்
குடிப்பழியாம் ; கையுறின் கால்குறையும்;
ஆணின்மை செய்யுங்கால்
அச்சமாம்;
- நீள்நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி; நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால்
கூறு.
(பொ-ள்.) காணின் குடிப்பழியாம் - பிறர் கண்டு விட்டால்
குடிப்பழிப்பாம்; கையுறின் கால்
குறையும் - கையில் அகப்பட்டுக் கொண்டால் கால் ஒடியும், ஆண் இன்மை செய்யுங்கால் அச்சமாம் - ஆண்மை யில்லாமையாகிய இப்
பிறர்மனை புகுதலைச் செய்யுங்கால் அச்சம் நிகழும்; நீள் நிரயத் துன்பம் பயக்கும் - நெடுங்கால் நிரயத்
துன்பத்தைப் பின்பு உண்டுபண்ணும். துச்சாரி - தீயொழுக்க முடையோய் ; நீ கண்ட இன்பம் எனைத்து எனக்குக் கூறு - நீ நுகர்ந்த இன்பம்
இதில் எவ்வளவு ? எனக்குச் சொல்.
(க-து.) பிறன்மனை நயத்தலில் இடுக்கணும் இன்னலுமின்றி இன்பம்
சிறிதுமில்லை.
(வி-ம்.) பிறன்மனை புகுகின்ற தொழில் பற்றிக் "கால்
குறையு" மென்று முதன்மையாக எடுத்துக் கூறினாரேனும் இயையு பற்றிப் பிற
உறுப்புகள் குறைதலுங் கொள்ளப்படும். "பிறன்மனை நோக்காத பேராண்மை"
என்றாராகலின், பிறன்மனை நோக்குதல் இங்கு ‘ஆணின்மை' யெனப்பட்டது.
ஆல் : அசை.
85 சம்மையொன்
றின்றிச் சிறியா ரினத்தராய்க்
கொம்மை வரிமுலையாள்
தோள்மரீஇ - உம்மை
வலியாற் பிறர்மனைமேற்
சென்றாரே,
இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.
(பொ-ள்.) செம்மை ஒன்று இன்றி - நடுவுநிலைமை என்னும் குணம்
சிறிதுமில்லாமல், சிறியார் இனத்தராய் -
கீழ்மக்கள் கூட்டத்தோடு கூடியவராய், கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ - திரட்சி பொருந்திய கோல
மெழுதிய மார்புகளையுடைய பெண்மகளின் தோள்களைச் சேர விரும்பி, உம்மை - முற்பிறப்பில், வலியால் பிறர் மனைமேல் சென்றாரே - தமக்குள்ள இடம் பொருள்
ஏவல் என்னும் வலிமைகளால் அயலார் மனைவியர்பாற் சென்றவரே, இம்மை - இப்பிறப்பில், அலியாகி ஆடி உண்பார் - அலித்தன்மையுடையவராய்க் கூத்தாடி
வயிறு பிழைப்பவராவர்.
(க-து.) முற்பிறப்பிற் பிறர்மனைவியரைக் கூடியவரே இப் பிறப்பில்
கூத்தாடி இரந்து உண்பவர்.
(வி-ம்.) செம்மையென்பது நடுவுநிலைமைக்கே சிறப்பாக வழங்கும் பெயர்.
திருவள்ளுவரும் இதனைச் ‘செப்பம்' என்பர். ஒன்று -
சிறிதென்னும் பொருட்டு. சிறியாரினம் என்றது, ‘வறுமொழியாளர் வம்பப்பரத்தர்' முதலாயினோர். பொதுவாகப் பெண்ணென்னும் பொருட்டுக் ‘கொம்மை வரிமுலையாள்' என்றார். ‘பெண்ணின்
சேர்க்கையை விரும்பி' என்பது
கருத்து. மரீஇ - விரும்பியென்னும் பொருட்டு. அலி, ஆண் தன்மையிழந்த பிறவி ; பெண்ணின் நலத்தைத் துய்க்க இயலாத பிறவி. ஆடியுண்பாரென்றது, தெருக்களிற் பிறர் நகைக்கக் கூத்தாடிப் பிச்சையேற்று வயிறு
பிழைத்தலை யுணர்த்திற்று. முற்பிறப்பில் ஆண் தன்மையும் வளம் முதலிய வலிமையும்
உடையவராய்ப் பிறர் மதிக்க வாழ்ந்திருந்தவர், அவ் வாண்டன்மையையும் வலிமையையும் அப்போது தவறாகச்
செலுத்தினமையின், இப் பிறப்பில்
அவ்விரண்டையும் முற்றுமிழந்து பிறர் அருவருக்க வருந்துவரென்றற்கு, ‘அலியாகி' எனவும், ‘ஆடியுண்பர்' எனவுங்
கிளந்து கூறினார். ‘சென்றாரே' யென்னும் ஏகாரம் பிரிநிலை.
86 பல்லா
ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணஞ் செய்து கடிப்புக்க
- மெல்லியற்
காதன் மனையாளும் இல்லாளா
என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு.
(பொ-ள்.) நாள் கேட்டு - நல்ல நாள் கேட்டறிந்து பல்லார் அறியப் பறை
அறைந்து - அந்நன்னாளிற் பலரும் அறியும்படி மணமுரசு கொட்டி, கல்யாணம் செய்து கடிபுக்க மெல் இயல் காதல் மனையாளும்
இல்லாளா - திருமணம் செய்து தன் காவலிற் புகுந்த மென்றன்மை வாய்ந்த அன்புடைய
மனையாட்டியும் தன் இல்லத்தில் இருப்பவளாக, என் ஒருவன் ஏதில் மனையாளை நோக்கு - ஏன் ஒருவன் அயலான்
மனைவியைக் கருதுதல் ?
(க-து.) தன் மனைவி இல்லத்திலிருக்க ஒருவன் அயலான் மனைவியைக்
கருதுவது எதற்கு?
(வி-ம்.) தனக்கு அழகும் அன்பும் உடைய, மனைவியிருந்தும் பிறன் மனைவியைக் கருதும் ஒருவனது பெருங்காம
மயக்கத்தை இது கண்டித்தபடி. மகளிர்க்கு அழகு என்பது மென்றன்மை யென்றற்கு ' மெல்லியல்' என்றார்.
நல்ல ஒழுக்கமுடையவன் போலப் பலரும் அறியத் திருமணஞ் செய்ததன் பயன் என்னாயிற்று
என்றற்கு முதலிரண்டு வரிகள் கூறப்பட்டன. இதனால் அவன் ஒரு நெறிமுறைமையில் நில்லாமை
கண்டிக்கப்பட்டது. பறை, இங்கே
மணப்பறை ;
அறைதல் - பிறர்க்கு அறிவிக்கும் பொருட்டுக் கொட்டுதல் .
காவல் என்பது தனக்கே உரிமையை உணர்த்தி நின்றது. மனையாள் இல்லாத போதே பிறன்மனை
புகுதல் பிழையாயிருக்க, மனையாளும்
இருக்கும்போது அது கருதுதல் எத்தனை பெரும்பிழை என முன் எஞ்சியதை உணர்த்துதலின்
உம்மை எச்சமாகும். இல்லாளாக என நிற்கவேண்டுவது ‘இல்லாளா' என
ஈறுகெட்டு நின்றது. ‘நோக்கு' இங்கு மனத்தாற் கருதுதல்.
87 அம்பல்
அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
வம்பலன் பெண்மரீஇ
மைந்துற்று - நம்பும்
நிலைமைஇல் நெஞ்சத்தான்
துப்புரவு ; பாம்பின்
தலைநக்கி யன்ன துடைத்து.
(பொ-ள்.) அம்பல் அயல் எடுப்ப - அயலார் பழித்தல் செய்ய, அஞ்சித் தமர் பரீஇ - அதனால் தன்னைத் தடுப்பரென்று அஞ்சித்
தம் உறவினரினின்றும் நீங்கி வம்பலன் பெண் மரீஇ மைந்து உற்று - அயலான் மனைவியைச்
சேர்ந்து களிப்படைந்து, நம்பும்
நிலைமை இல்நெஞ்சத்தான் துப்புரவு - எவராலும் நம்புதற்குரிய நிலைமையில்லாத
நெஞ்சத்தையுடையானது அக் காமநுகர்ச்சி, பாம்பின் தலை நக்கியன்னது உடைத்து - பாம்பின் மழமழப்பான
தலையை நாவினால் தடவி இன்புற்றத்தைப் போன்ற தன்மையையுடையது.
(க-து.) பிறர் மனைவியர்பால் நிகழ்த்துங் காம வொழுக்கம் எப்போதும்
இடரானது.
(வி-ம்.) அம்பல் - வாயோடு முணுமுணுப்பது. பரிதல் , இங்கு நீங்குதலென்னும் பொருட்டு, வம்பலன் என்பதில் அல் எதிர்மறையன்று ; சாரியை; ‘வம்பன்' என்பதே சொல் ; புதியவன் ; அஃதாவது
அயலான் என்பது அதற்குப் பொருள். "மனக்கினியாற்கு நீ மகளாயதூஉம்" 2 என்புழிப் போலப் ‘பெண்' என்பது இங்கு ‘மனைவி' யென்னும் பொருளில் வந்தது. உவமை உயிர்க்கு இறுதி தரும் இடரை
உணர்த்தி நின்றது.
88 பரவா, வெளிப்படா, பல்லோர்கண்
தங்கா ;
உரவோர்கண் காமநோய் ஓ ! ஓ !
கொடிதே ;
விரவாருள் நாணுப் படல்அஞ்சி
யாதும்
உரையாதுஉள் ஆறி விடும்.
(பொ-ள்.) பரவா - அறிஞர்களிடத்திற் காமநினைவுகள் பரவமாட்டா ; வெளிப்படா - ஒரோவொருகாற் பரவினாலும் அவை வெளிப்படமாட்டா ; பல்லோர்கண் தங்கா - அப்படி வெளிப்பட்டாலும் அவர்களுக்கு
உரிமை மனைவியரிடத்தன்றி அயல் மாதர் பலரிடத்துஞ் சென்று நில்லா ; உரவோர்கண் காமநோய் ஓ. கொடிது - அறிவுடையவர்களிடம் காமநோய் ஓ, கொடிது - அறிவுடையவர்களிடம் காமநோய் ஓ, கொடுமையுடையது!, விரலாருள் நாணுப்படல் அஞ்சி - அங்ஙனம் அவர்கள்
மனைவியரிடத்தே சென்று தங்கினாலும் அம் மனைவியர் அந்நினைவு கலவாதவராயிருப்பின், அப்போது அவ்வறிஞர்கள் நாணப்படுவதற்குப் பின்னிடைந்து, யாதும் உரையாது உள் ஆறிவிடும் - சிறிதும் வெளிப்படாமல்
உள்ளேயே தணிந்துவிடும்.
(க-து.) அறிவுடையோர் காம நினைவுக்கு இடங்கொடார்.
(வி-ம்.) ‘உரவோர்கண்
காமநோய்ஓ கொடிதே' யென்றது. இடையே
பொதுவாக ஆசிரியர்க்கு அச்சத்தினால் தோன்றியதொடர் ; அவர் ‘உரன்
என்னுந்தோட்டியான் ஓரைந்துங் காப்பவ' ராதலின். மற்றவை, எடுத்த பொருள்மேற் செல்லுந் தொடர்கள். பொறுத்தற்குரிய
பொறுப்புக் கருதி ‘ஓ கொடிதே' என்றார். ‘யாதும்
உரையாது'
என்பது சிறிதும் வெளிப்படாமை சுட்டுங் குறிப்புமொழி.
அறிஞர்கள் காம நுகர்வை மென்மையாக ஆளுந்திறமும் இப்பாட்டிற் புலப்படும்.
89 அம்பும்
அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும்
புறஞ்சுடும்; - வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப் படும்.
(பொ-ள்.) அம்பும் அழலும் அவிர் கதிர் ஞாயிறும் - வில்லம்பும், தீயும், ஒளிர்கின்ற
கதிர்களையுடைய சூரியனும், வெம்பிச்
சுடினும் புறம் சுடும் - வெதும்பிச் சுட்டாலும், வெளிப்பொருளையே சுடும், வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால் காமம் அவற்றினும்
அஞ்சப்படும் - அழன்று கவலைப்படுத்தி உள்ளத்தைச் சுடுவதனால் காமம் என்பது அவற்றைப்
பார்க்கிலும் அஞ்சப்படும்.
(க-து.) காமம் என்பது உள்ளத்தை வெதுப்புங் கொடுமையுடையது.
(வி-ம்.) அம்பு பெரும்பான்மைக்கு உரிய ‘சுடும்' என்னும்
வினையை ஏற்றது. நன்றாய்ச் சுடுகின்றபோது வெம்பிச் சுடவேண்டுதலின், அவ்வியல்புபற்றி அச்சொல் இரண்டிடங்களிலுங் கூறப்பட்டது.
புறம் என்றது, "பைம்புறப்
படுகிளி" என்புழிப்போல
உடம்பை ;
உடம்பைச் சுடுதலினும் உள்ளத்தைச் சுடுதல் கொடுமையாதலின், அவற்றினும் அஞ்சப்படும் என்றார். உள்ளம் சுடப்பட்டால், அதனால் உடம்பும் உயிரும் வாடுதல் ஒருதலையாகலின், அது கொடுமையுடையதாயிற்று. மேலும் ஆறாத முறையிற் சுடுதல்
தோன்றக் கவற்றிச் சுடும் எனவுங் கூறப்பட்டது.
90 ஊருள்
எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள்
குளிப்பினும் காமம்
சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும்.
(பொ-ள்.) ஊருள் எழுந்த உரு கெழு செந்தீக்கு ஊர்நடுவில் பற்றிக்கொண்ட
ஓங்கிய அச்சம் மிக்க செந்தழலுக்கு, நீருள்
குளித்தும் உயலாகும் - அருகிலிருக்கும் நீருள் மூழ்கியும் பிழைத்தல் கூடும்; ஆனால், நீருள்
குளிப்பினும் காமம் சுடும் குன்று ஏறி ஒளிப்பினும் காமம் சுடும் - நீருள்
மூழ்கினாலும் காமம் எரிக்கும்; மலை
ஏறி ஒளித்தாலும் காமம் எரிக்கும்.
(க-து.) காமம், தீயினுங்
கொடியது.
(வி-ம்.) ஊருள் என்பதில் ‘உள்' நடுவென்னும்
பொருட்டு. எழுந்த, மேலே
ஓங்கிய ;
உரு - அச்சம் ; "உரு உட்காகும்" என்பது தொல்காப்பியம். கொடுமை போன்றப்
பெருந் தீ என்றற்குச் ‘செந்தீ' எனப்பட்டது. நீருள் என்றது, நீர்நிலையுள் குளித்தும் என்னும் உம்மை எளிமையைச்
சிறப்பித்தமையின் சிறப்பும்மை. இச் செய்யுட் பொருள் "காமத்தீ நீருட்புகினுஞ்
சுடும்" என்னுங் கலித்தொகை பகுதியிலும் வந்துள்ளது. ஏகாரம். தேற்றம்; மற்றொன்றுக்கும் ஒட்டுக. காமம் இரண்டிடத்தும் வந்தது, சொற்பின் வருநிலை.
0 Comments