பிறர் தமக்குக் காரணத்தினாலாவது அறியாமையினாலாவது குற்றஞ் செய்தால் தாமும் அவர்க்குக் குற்றஞ் செய்யாமற் பொறுமை யுடையராயிருத்தல்.

71 கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோ டியாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.

(பொ-ள்.) கோதை அருவிக் குளிர்வரை நல் நாட - மாலைபோல ஒழுகுகின்ற அருவிகளையுடைய குளிர்ச்சி பொருந்திய நல்ல மலைகளையுடைய நாடனே, பேதையோடு யாதும் உரையற்க - அறிவில்லாதவனோடு ஏதொன்றும் பேசவேண்டாம் ; உரைப்பின் பேதை சிதைந்து உரைக்கும் - பேசினால் அப்பேதை முறைமை தவறி எதிர் பேசுவான் ; ஒல்லும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று - கூடுமான வழிகளால் அவன் தொடர்பிலிருந்து தப்பி நீங்குதலே நல்லது.

(க-து.) தகுதியறியாதவரோடு பேசுதல் நல்லதன்று .

(வி-ம்.) யாதும் என்றார். நன்மையாவதொன்றும் என்றற்கு. பேதை சிதைந்துரைக்கும் என்று தொடர்க. சிதைதல் - இங்கு முறையினின்றுந் தவறுதல். பதமாகத் தப்பித்துக் கொள்ளுதல் என்றற்கு, ‘வழுக்கி' எனப்பட்டது ; "கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை" என்றார் பிறரும்.

72 நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற் -றோரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்.

(பொ-ள்.) நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக் கால் - தமக்குச் சமானமல்லாதவர் குணமல்லாதனவான சொற்களைச் சொன்னால், அது தாரித்து இருத்தல் தகுதி - சான்றோர் அதனைப் பொறுத்திருத்தல் தகுதியாகும்; மற்று - அங்ஙனம் பொறுத்திராமையை, ஓரும் புகழ்மை யாக் கொள்ளாது - கருதத் தகுந்த புகழ்க்குரிய குணமாகக் கொள்ளாமல் , பொங்குநீர் ஞாலம் - கடல் சூழ்ந்த இவ்வுலகம், சமழ்மையாக் கொண்டு விடும் - பழிப்புக்குரிய இழிகுணமாகக் கருதிவிடும்.

(க-து.) தமக்குச் சமானமல்லாதவர்கள் தம்மை ஒன்று சொன்னால் அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

(வி-ம்.) நேரல்லாரென்றது கீழோரை. மற்று இரண்டனுள் முன்னது அசை; பின்னது பிறிதென்னும் பொருட்டு ஒரும் : அசை; "அஞ்சுவதோரும் அறனே" என்புழிப்போல. தரித்து என்பது முதல் நீண்டது. இருத்தல் - மேன்மேலுந் தனதொழுக்கத்திலேயே நிலைத்திருத்தல் . ஞாலம்' என்றது உயர்ந்தோரை. கொண்டுவிடும் என்னும் முடிபு ஞாலம் என்னும் சொன்னிலை கருதியது. சமழ்மை என்றது இழிவு ; "கள்வன் சமழ்ப்புமுகங் காண்மின்" என்னும் பரி பாட்டினும் இப்பொருளுண்மை பெறப்படும்.

73 காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொலின் தீதாமோ - போதெலாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப !
ஆவ தறிவார்ப் பெறின்.

(பொ-ள்.) போது எலாம் மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண்சோப்ப - பேரரும்புகளிலெல்லாம் விருப்பத்தையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும் வளம் நிறைந்த கடலையுடைய குளிர்ச்சிபொருந்திய கடற்கரைத் தலைவ! ஆவது அறிவார்ப் பெறின் - தமக்கு முன்னேற்றமாவதை அறிந்து செய்வாரைப் பெற்றால், காதலால் சொல்லும் கடுசொல் - அவர்கள் உள்ளன்பினால் நன்மை கருதிச் சொல்லும் கொடிய சொல், உவந்து உரைக்கும் ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ - மனமகிழ்ந்து கூறும் அயலவர் இன்சொல்லினுந் தீதாகுமோ ? ஆகாது.

(க-து.) அன்புடையார் கூறுங் கடுஞ்சொல் அயலவர் கூறும் இன்சொல்லினும் நல்லதாகலின், அதன்மேற் பொறுமை கொள்ளவேண்டும்.

(வி-ம்.) கடுஞ் சொல்' லென்றது இங்கே செவிக் கினிமையல்லாத சொல். உவத்தல் அகமகிழ்ச்சியாதலின், ‘மனமகிழ்ந்' தென உரைக்கப்பட்டது, ஏதிலார் - அன்பும் பகைமையுமில்லாத அயலவர். எதுவுமில்லாதவரென்பது பொருள். மாதர் என்னும் அடைமொழி வண்டுகளின் விருப்ப உள்ளத்தினை உணர்த்தும். அறிவார்ப் பெறின் என்பதற்கு, அறிந்து செய்வாரைப் பெறின் என்று உரைத்துக்கொள்க. பெறுதல் அரிய தொன்றாகலின், ‘பெறின்' என்றார். அயலவர் இன்சொல்லில் தமக்கு முன்னேற்றமாவதொன்றும் இல்லாமையால், அதனையுடைய அன்புடையாரது கடுஞ்சொல் நல்லதாயிற்று. ஆதலின் பொறுத்துக் கொள்க என்பது கருத்து. அயலவர் மகிழ்ந்து பேசுதலை நல்லதென்று நினைத்தலின், அதனினுந்தீதாமோ எனப்பட்டது ; இன் சொல்லினும் என உயர்வு சிறப்பும்மை கொள்க. அயலவர் இன்சொல்லில் தீங்கில்லாமையாலும், அன்புடையார் வன்சொல் இன்சொல்லாக இருப்பது இன்னும் நல்லதாதலாலும் ஏதிலார் இன்சொல்லின் நன்றாகு' மென்னாது. ஏதிலார் இன் சொலின் தீதாமோ' என மறைமுகமாகக் கூறினார். இனி, ‘ஏதிலா' ரென்பவரைப் பகைவர்' எனக் கருதி உள்ளே பகைமை கொண்டு மேலே முகம் மகிழ்ந்து பேசும் பகைவரது இன்சொல்லைப் போலத் தீதாகுமோ என்றுரைப்பாரும் உளர் ; இது வெளிப்பாடையாகலின், இதனினும், மேலே கூறிய உரை ஒன்றோடொன்று ஒப்பிட்டுரைப்பதற் கேற்ற பெருமைவாய்ந்து நுண்ணியதாய்ச் சிறக்கின்றமை துணியப்படும்.

74 அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
உறுவ துலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.

(பொ-ள்.) அறிவது அறிந்து - நூல் வழக்கிலும் உலக வழக்கிலுந் தெரிந்து கொள்ளவேண்டுவன தெரிந்து கொண்டு, அடங்கி - அடக்கமுடையவராய், அஞ்சுவது அஞ்சி - அஞ்சத்தக்க நிலைகளுக்கு அஞ்சி, உறுவது - தமக்குத் தகுதியாகத் தாமே பொருந்துஞ் செயல்களை, உலகு உவப்பச் செய்து - உலகம் பயன்கொண்டு மகிழும்படி செய்து, பெறுவதனால் அதுகொண்டு அடைந்த ஊதியத்தினளவில், இன்புற்று வாழும் இயல்பினார் - மகிழ்ந்து வாழ்க்கை நடத்தும் தன்மையுடையவர். எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது - எந்தக் காலத்திலும் துன்பமடைந்து உயிர்வாழ்வது இல்லை.

(க-து.) அறிந்து அடங்கி அஞ்சி நேர்ந்ததைச் செய்து, கிடைத்தது கொண்டு வாழ்வோர்க்கு எப்போதுந் துன்பமில்லை.

(வி-ம்.) அறிவது அஞ்சுவது உறுவது பெறுவது என்பன சாதியொருமை. தமக்குத் தகுதியாகப் பொருந்திய தொரு செயலைப் பிறர்க்கு நலம் பயக்க வேண்டுமென்னும் எண்ணத்துடன் திருத்தமாகவும் பற்றில்லாமலுஞ் செய்து, கிடைத்த ஊதியத்தினளவில் மகிழ்ந்து, வாழ்க்கை நடத்த வேண்டுமென்று இச் செய்யுளிற் புலப்படுத்தியிருப்பது மிக்க மாட்சிமையானது. இனிய வாழ்க்கை நடத்துவதற்கு இது சிறந்த வழி . "பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி ஓம்பாது உண்டு கூம்பாது வீசி" என்னுஞ் சான்றோர் செய்யுட்கள் போல்வன இங்கு நினைவு கூரற்குரியன.

75 வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.

(பொ-ள்.) வேற்றுமையின்றிக் கலந்து இருவர் நட்டக்கால் - வேறுபாடில்லாமல் மனங் கலந்து இரண்டு பேர் நேசித்தால், தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் - தக்கதென்று பெரியோரால் தெளியப்படாது ஒதுக்கிய தகாத நடத்தை ஒருவனிடத்தில் உண்டானால், ஆற்றுந் துணையும் பொறுக்க - பொறுக்கக் கூடுமளவும் மற்றவன் பொறுத்துக்கொள்க ; பொறானாயின் - அதன்மேற் பொறுக்கக் கூடாதவனாயின், தூற்றாதே தூரவிடல் - அக் குற்றத்தைப் பலரும் அறியப் பழிக்காமல் அவன் தொடர்பை , மீண்டும் அணுகவொட்டாதபடி நெடுந் தொலைவில் விட்டு விடுக.

(க-து.) நண்பனிடத்திற் பொறுக்குமளவும் பொறுமை கொள்க. பொறுக்கக் கூடாதவிடத்து அவனுக்குத் தீங்கேதுஞ் செய்யாமல் தூர விலகிக்கொள்க.

(வி-ம்.) தகுதியென்று தெளியப்படாத ஒழுக்கம் இங்குத் தேற்றா வொழுக்கம்' எனப்பட்டது. தேற்றா' என்பது இங்கே தன்வினைக்கண்' வந்தது ; "தேற்றாய் பெரும் பொய்யே" என்புழிப் போல. தூற்றி விடுதலினின்றும் பிரித்தலின், ஏகாரம் : பிரிநிலை . தூர விடல்' என்பதற்குத் தூர்ந்துபோகும்படி மெல்ல விட்டுவிடுக என உரைத்தலும் ஒன்று. இச் செய்யுள் நண்பரிடத்துப் பொறுக்கும் முறைமை கூறிற்று.

76 இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட
விலங்கிற்கும் விள்ளல் அரிது.

(பொ-ள்.) இன்னா செயினும் - நண்பர் தனக்கு இன்னல் தருவன செய்தாலும், இனிய ஒழிக என்று - அவை இனியவாய் வந்து கழிக என்று பொறுமையாய் நடந்து கொண்டு, தன்னையே தான் நோவின் அல்லது - அதற்குக் காரணமான தனது முன் வினையை நினைந்து தன்னையே தான் நொந்துகொள்ளின் அல்லாமல் துன்னிக்கலந்தாரைக் கைவிடுதல் - நெருங்கி மனங்கலந்து பழகினவரை ஒருவன் கைவிடுதலென்பதோ, கானக நாட - காடுகள் சிறந்த நாடனே, விலங்கிற்கும் விள்ளல் அரிது - தாழ்ந்த விலங்குகளுக்கும் அங்ஙனம் விட்டுவிடுதல் அருமையாகும் ; ஆதலின் அது மக்கட்கு முகவும் அரியதொன்றாகும்.

(க-து.) நண்பர் தீங்கு செய்த காலத்தும் அதனைப் பொறுத்துக் கொள்வதன்றி அவரைக் கைவிட்டுவிடுதல் மக்கட்கு அழகன்று.

(வி-ம்.) செயினும் என்னும் உம்மை பெரும்பாலும் அவர் அங்ஙனம் செய்யாமையை உணர்த்தி நின்றமையின் எதிர்மறை. பிறர் செய்யுந் தீங்குகளும், தாம் நடந்து கொள்ளும் நன் முறைமைகளால் யார்க்கும் இனிமையாக வந்து கழியுமாதலின், ‘இனியவாய் ஒழிக என்று பொறுத்திருத்தல்' இங்குக் குறிப்பிடப்பட்டது. தன்னையே தான் நோவின் அந்நேரத்து நிலை எளிதாவதல்லது, கைவிடுதல் என்பதோ அரிது' என்பது கருத்து . கைவிடுதல் என்பது, விலங்கிற்கும் விள்ளல் அரிது என்பதனால், இசையெச்சமாகத் தனக்கும் அம் முடிபு பெற நின்றது. விலங்கிற்கும், என்பதன் உம்மை இழிவு சிறப்பு . கைவிடுதல் அரிது எனக் கொள்ளுமிடத்து அரிது' என்னுஞ் சொல் , ‘அது மக்கட் பண்பாகாது' என்னுங் கருத்துணர நின்றது.

77 பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்பஎன் றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட
நல்லசெய் வார்க்குத் தமர்.

(பொ-ள்.) பெரியார் பெருநட்புக் கோடல் - சான்றோர்களது மேன்மையாகிய நேயத்தை யாரும் விரும்பித் தேடிக் கொள்ளுதல், தாம் செய்த அரிய பொறுப்ப என்றன்றோர் தாம் செய்துவிட்ட அரிய குற்றங்களையும் அவர்கள் பொறுப்பார்கள் என்று கருதித்தானே?, ஒல் என் அருவி உயர்வரை நல் நாட - ஒல் என்று ஒலிக்கும் அருவி களையுடைய உயர்ந்த மலைகள் சிறந்த நல்ல நாட்டையுடையவனே ! , அரியரோ நல்ல செய்வார்க்குத் தமர் - பிழையில்லாத நல்ல செயல்களையே செய்யும் மேம்பாடுடையவர்க்கு நண்பராவோர் அரியரோ ? அல்லரென்றபடி.

(க-து.) தம்மோடு பழகுவார் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்வதே சிறந்த நட்பாகும்.

(வி-ம்.) பிழை பொறுப்பவர் பெரியாராகலின் அவரைப் பெரியாரென்றும், அவரது நட்டைப் பெருநட்பு' என்றும் ஆசிரியர் கூறினார். அரிய - பெருங்குற்றங்கள் ; என்றது, பொறுத்தற்கரிய குற்றங்கள் ; அருமை இங்குப் பெருமை மேல் நின்றது ; அரியவும் என்னும் உம்மை உயர்வு சிறப்பு. பிழைபொறுக்கும் பெரியார் நட்புக் கிடைப்பதுதான் அருமை ; பிழையில்லாமல் நல்லனவே செய்வார்க்கு நண்பராவோர் அங்ஙனம் அரியரல்லர் ; பலராவர் ; ஆதலின் நட்பிற் சிறந்தது, பிழைபொறுக்கும் நட்பேயாகும் என்று உணர்த்தியபடி. பொறுப்ப : பலர்பால் முற்று , இதற்கு விகுதி பகரமெனக் கொள்க : அகரமெனக் கொள்ளின் பலவின்பால் முற்றாகும். அரியரோ' வென்பதன் ஓகாரம் எதிர்மறை. உயர் வரை' யென்பதற்குப் பண்பு விரித்தலாகாது ; ‘உயர்' என்பது வினைச்சொல்லின பகுதியாய் வினைத்தன்மையில் நிற்றலின் வினைத்தொகை. எனவே. உயர்ந்த வரை' என்று உரை கொள்க. நச்சினார்க்கினியர் உயர்த்திணை' என்பதற்கு உயர்ந்த ஒழுக்கமென உரைத்து, இது காலந்தோன்ற நிற்றலில்' எனக் காரணமுங் காட்டினமை இங்கு நினைவு கூரப்படும்.

78 வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க - அற்றம்
மறைக்குந் துணையார்க் குரைப்பவே தம்மைத்
துறக்குந் துணிவிலா தார்.

(பொ-ள்.) வற்றி ஆற்றப் பசிப்பினும் - உடம்பிற் செந்நீர் சுண்டும்படி மிகப் பசித்தாலும், பண்பு இலார்க்கு - பிறர் நிலையறிந்து ஒழுகும் தன்மையில்லாதவர்களுக்கு. அற்றம் அறிய உரையற்க - தமது இல்லாமையை அவர் அறியும்படி சொல்லவேண்டாம் ; தம்மைத் துறக்குந் துணிவிலாதார் - தம்மைத் துறவு நெறியிற் செலுத்துந் தெளிவில்லாதவர், அப்படிச் சொல்ல விரும்பினால், அற்றம் மறைக்குந் துணையார்க்கு உரைப்ப - தமது இல்லாமையை நீக்கும் உதவியாளர்க்குச் சொல்லுவர்.

(க-து.) இல்லையென்று கூறிப் பெறாமல் மதிப்போடிருந்து பொருள் தேடவேண்டும்.

(வி-ம்.) வற்றியென்னுஞ் செய்தென் எச்சம் செயவென் எச்சமாகக் கொள்ளப்பட்டது. மற்று : அசை. பண்பென்றது, பிறர்பாடு அறிந்து ஒழுகுதலை. அற்றம் - யாவும் அற்ற நிலைமை ; அது, வறுமை. மறைக்குமென்பது "தம் வயிற் குற்றம் மறையாவழி " என்புழிப் போல நீக்குதலென்னும் பொருளில் வந்தது. மறைக்குந் துணையார்க்கு' என்பதை நீக்குமளவான தகுதியுடையார்க்கு' என்று உரைத்தலும் ஒன்று. துறக்குந் துணிவிலாதார் உரைப்ப என்றமையின் அத்துணுவுடையார் ஆண்டும் உரையார் என்றபடி. துறவு நெறியிற் செல்லுந் துணிவுடையார் காய் கனி சருகு முதலியன உண்டு பசி தீர்வர் ; மக்கள் அவர்களாகவே ஏதும் உதவின் உண்பர் ; தாம் அவர் பால் தமக்கு இல்லையென்று தெரிவியார். ஏனெனில் அவர் இறைவனை நம்பி அவன் அருளாகிய இயற்கையின் பாற் சென்றவர்.

79 இன்பம் பயந்தாங் கிழிவு தலவைரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட !
பழியாகா ஆறே தலை.

(பொ-ள்.) இன்பம் பயந்த ஆங்கு - இன்பம் உண்டான இடத்தில், இழிவு தலைவரினும் இன்பத்தின் பக்கம் இருந்தைக்கு - தாழ்வுகள் நேர்ந்தாலும் இன்பத்தையே எண்ணி அதன்கண் நிலைத்திருந்த நினக்கு, இன்பம் ஒழியாமை கண்டாலும் - அச் செயலில் பின்னும் பின்னும். இன்பம் இடையறாமை கண்டாலும், ஓங்கு அருவி நாட - பெருகுகின்ற அருவிகளையுடைய மலைநாடனே ! பழி ஆகா ஆறே தலை - பழித்தல் உண்டாகாத வழியே நினக்குச் சிறந்தது.

(க-து.) இன்பம் இடையறாமல் உண்டாவதாயினும் பழிப்பில்லாத நற்செயல்களே செய்யத்தக்கது.

(வி-ம்.) இன்பம் பயந்தாங்கு - இன்பம் பயந்த செயலிடத்து என்று கொள்க. உம்மை : ஆக்கம் இருந்தைக்க' என்பதன் ஈற்றில் அகரம் சாரியை ; "கடிநிலையின்றே ஆசிரியர்க்க"  என்பதிற் போல.

80 தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்உடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோ டிடைமிடைந்த சொல்.

(பொ-ள்.) தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க - ஒருவன் தான் கெடுவதாயிருந்தாலும் அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோர் கெடுதலை எண்ணாதிருக்கக்கடவன், தன் உடம்பின் ஊன் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க - தனதுடம்பின் தசை பசியால் உலர்வதாயினும் நுகரத்தகாதவரது பொருளை நுகராமலிருக்க வேண்டும் ; வான் கவிந்த வையகமெல்லாம் பெறினும் உரையற்கபொய்யோடு இடைமிடைந்த சொல் - வானத்தால் கவியப்பெற் றிருக்கும் உலகம் முழுமையும் பெறுவதாயிருந்தாலும் தனது பேச்சினிடையில் பொய்யொடு கலந்த சொற்களைச் சொல்லாம லிருப்பானாக.

(க-து.) மேலோர் கெடுதலை நினைதலும், தகாதவர் பொருளை நுகர்தலும், பொய்யுரை மொழிதலும் ஒருவனுக்கு ஆகா.

(வி-ம்.) கைத்து - பொருள் ; "கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்" என முன்னும் வந்தது. தான் கெடுதலும் பெறுதலும் பொருளல்ல ; தக்க உணர்வுகளை ஓம்புதலே பொருளாவது என்பது இச் செய்யுளால் உணர்த்தப்பட்டது.