1. வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையும் காலை காலமொடு தோன்றும்.

2. காலம்தாமே மூன்று என மொழிப.

3. இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
மெய்ந் நிலை உடைய தோன்றலாறே.

4. குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்
உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்
அம் மூ உருபின தோன்றலாறே.

5. அவைதாம்,
அம் ஆம் எம் ஏம் என்னும் கிளவியும்
உம்மொடு வரூஉம் க ட த ற என்னும்
அந் நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும்
பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே.

6. க ட த ற என்னும்
அந் நான்கு ஊர்ந்த குன்றியலுகரமொடு
ஏன் அல் என வரூஉம் ஏழும்
தன் வினை உரைக்கும் தன்மைச் சொல்லே.

7. அவற்றுள்,
செய்கு என் கிளவி வினையொடு முடியினும்
அவ் இயல் திரியாது என்மனார் புலவர்.

8. அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும்
ஒருவர் மருங்கின் படர்க்கைச் சொல்லே.

9. அர் ஆர் ப என வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கின் படர்க்கைச் சொல்லே.

10. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியும் என்ப.

11. பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அந் நால் ஐந்தும் மூன்று தலை இட்ட
முன்னுறக் கிளந்த உயர்திணையவ்வே.

12. அவற்றுள்,
பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி
எண் இயல் மருங்கின் திரிபவை உளவே.

13. யாஅர் என்னும் வினாவின் கிளவி
அத் திணை மருங்கின் முப் பாற்கும் உரித்தே.

14. பால் அறி மரபின் அம் மூ ஈற்றும்
ஆ ஓ ஆகும் செய்யுளுள்ளே.

15. ஆய் என் கிளவியும் அவற்றொடு கொள்ளும்.

16. அதுச் சொல் வேற்றுமை உடைமையானும்
கண் என் வேற்றுமை நிலத்தினானும்
ஒப்பினானும் பண்பினானும் என்று
அப் பால் காலம் குறிப்பொடு தோன்றும்.

17. அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியும் குறிப்பே காலம்.

18. பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி உயர்திணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே.

19. அ ஆ வ என வரூஉம் இறுதி
அப் பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை.

20. ஒன்றன் படர்க்கை த ற ட ஊர்ந்த
குன்றியலுகரத்து இறுதி ஆகும்.

21. பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அம் மூ இரண்டும் அஃறிணையவ்வே.

22. அத் திணை மருங்கின் இரு பால் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவன் என் வினாவே.

23. இன்று இல உடைய என்னும் கிளவியும்
அன்று உடைத்து அல்ல என்னும் கிளவியும்
பண்பு கொள் கிளவியும் உள என் கிளவியும்
பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும்
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ
அப் பால் பத்தும் குறிப்பொடு கொள்ளும்.

24. பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி அஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே.

25. முன்னிலை வியங்கோள் வினையெஞ்சுகிளவி
இன்மை செப்பல் வேறு என் கிளவி
செய்ம்மன செய்யும் செய்த என்னும்
அம் முறை நின்ற ஆயெண் கிளவியும்
திரிபு வேறுபடூஉம் செய்திய ஆகி
இரு திணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய.

26. அவற்றுள்,
முன்னிலைக் கிளவி
இ ஐ ஆய் என வரூஉம் மூன்றும்
ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும்.

27. இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்
சொல் ஓரனைய என்மனார் புலவர்.

28. எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி
ஐம் பாற்கும் உரிய தோன்றல் ஆறே.

29. அவற்றுள்,
முன்னிலை தன்மை ஆயீர் இடத்தொடு
மன்னாது ஆகும் வியங்கோட் கிளவி.

30. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ் வயின் மூன்றும் நிகழும் காலத்துச்
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா.

31. செய்து செய்யூ செய்பு செய்தென
செய்யியர் செய்யிய செயின் செய செயற்கு என
அவ் வகை ஒன்பதும் வினையெஞ்சுகிளவி.

32. பின் முன் கால் கடை வழி இடத்து என்னும்
அன்ன மரபின் காலம் கண்ணிய
என்ன கிளவியும் அவற்று இயல்பினவே.

33. அவற்றுள்,
முதல் நிலை மூன்றும் வினைமுதல் முடிபின.

34. அம் முக் கிளவியும் சினை வினை தோன்றின்
சினையொடு முடியா முதலொடு முடியினும்
வினை ஓரனைய என்மனார் புலவர்.

35. ஏனை எச்சம் வினைமுதலானும்
ஆன் வந்து இயையும் வினைநிலையானும்
தாம் இயல் மருங்கின் முடியும் என்ப.

36. பல் முறையானும் வினையெஞ்சுகிளவி
சொல் முறை முடியாது அடுக்குந வரினும்
முன்னது முடிய முடியுமன் பொருளே.

37. நிலனும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ் அறு பொருட்கும் ஓரன்ன உரிமைய
செய்யும் செய்த என்னும் சொல்லே.

38. அவற்றொடு வரு வழி செய்யும் என் கிளவி
முதற்கண் வரைந்த மூ ஈற்றும் உரித்தே.

39. பெயரெஞ்சுகிளவியும் வினையெஞ்சுகிளவியும்
எதிர் மறுத்து மொழியினும் பொருள் நிலை திரியா.

40. தம்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின்
எச் சொல் ஆயினும் இடைநிலை வரையார்.

41. அவற்றுள்,
செய்யும் என்னும் பெயரெஞ்சுகிளவிக்கு
மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம்
அவ் இடன் அறிதல் என்மனார் புலவர்.

42. செய்து என் எச்சத்து இறந்த காலம்
எய்து இடன் உடைத்தே வாராக் காலம்.

43. முந் நிலைக் காலமும் தோன்றும் இயற்கை
எம் முறைச் சொல்லும் நிகழும் காலத்து
மெய்ந் நிலைப் பொதுச் சொல் கிளத்தல் வேண்டும்.

44. வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள என்மனார் புலவர்.

45. மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி
அப் பண்பு குறித்த வினைமுதற் கிளவி
செய்வது இல் வழி நிகழும் காலத்து
மெய் பெறத் தோன்றும் பொருட்டு ஆகும்மே.

46. இது செயல் வேண்டும் என்னும் கிளவி
இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே
தன் பாலானும் பிறன் பாலானும்.

47. வன்புற வரூஉம் வினா உடை வினைச்சொல்
எதிர் மறுத்து உணர்த்துதற்கு உரிமையும் உடைத்தே.

48. வாராக் காலத்து வினைச்சொல் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை.

49. செயப்படுபொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கு இயல் மரபே.

50. இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்
சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி.

51. ஏனைக் காலமும் மயங்குதல் வரையார்.