151 அங்கண்
விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் -
திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.
(பொ-ள்.) அங்கண் விசும்பின்அகல் நிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும்
ஒப்பர் மன் - அழகியஇடமகன்ற வானத்தில் விரிந்த நிலவொளியைப்பரவச் செய்யும் திங்களும்
மேன்மக்களும் தம்மிற்பெரும்பாலும் ஒத்த பெருமையுடையவராவர்; திங்கள்மறு ஆற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்துதேய்வர்
ஒரு மாசு உறின்-ஆனால்; திங்கள்களங்கத்தைத் தாங்கும்; மேன்மக்கள்தமதொழுக்கத்திற் சிறிது கறையுண்டானால் அதுபொறாராய் உள்ளங்
குழம்பி அழிவர்.
(க-து.) திங்களைப்போற்சான்றோர் மறுவாற்றாராதலின், அவர் அதனினுஞ்சிறந்தவராவர்.
(வி-ம்.) ஒப்பரென்னும் முடிபுதிணைவழுவமைதி; "மூத்தோர் குழவி எனுமிவரை" என்புழிப்போல. ஒப்புஇருள் நீங்கித்
தண்ணொளிவழங்குதலிற் கொள்க. மன்: மிகுதிக்கண் வந்துஈண்டுப் பெரும்பாலுமென்னும்
பொருட்டாயிற்று;ஆதலால், அதனாற்
பெறப்படுகின்ற சிறுபான்மைவேறுபாடு, பின் இரண்டடிகளில்
விளக்கப்பட்டது.ஆற்றார்:முற்றெச்சம். வேற்றுமையணி.
152 இசையும்
எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர்; - விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ,
அரிமாப் பிழைப்பெய்த கோல்?
(பொ-ள்.) இசையும் எனினும் இசையாதெனினும் வரை தீர எண்ணுவர் சான்றோர்
-கைகூடுமெனினும் கை கூடாதெனினும் பழித்தலில்லாதவகையில் அரிய காரியங்களையே
மேன்மக்கள்எண்ணிச் செய்வர்; விசையின் நரிமா
உளம்கிழித்த அம்பினின் தீதோ அரிமாப் பிழைப்புஎய்த கோல் - விரைவோடு நரி என்னும்
விலங்கின்நெஞ்சைக் கிழித்துச் சென்ற அம்பைவிடப்பழிப்புடையதோ, சிங்கத்தினிடம் தவறுதலைப்பொருந்திய அம்பு?
(க-து.) அரிய காரியங்களையேஎண்ணிச் செய்வது மேன்மக்கள் இயல்பு.
(வி-ம்.) வசையாவது, ‘சிறியர்செயற்கரிய
செய்கலாதார்" என்பது,‘அரிமாப் பிழைப்பெய்த' என்பதற்கு, அரிமாதவறிப் போதலுக்கு ஏதுவான நிலையையடைந்த கோல்என்பது கருத்து. "கான
முயலெய்த அம்பினில் யானை,பிழைத்தவேல் ஏந்தல் இனிது" என்னுந்திருக்குறளை ஈண்டு நினைவு கூர்க.
153 நரம்பெழுந்து
நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர்
குரம்பெழுந்து குற்றங்கொ ண்டேறார்; - உரங்கவறா
உள்ளமெனும் நாரினாற் கட்டி உளவரையாற்
செய்வர் செயற்பா லவை.
(பொ-ள்.) நரம்பெழுந்துநல்கூர்ந்தா ராயினும் சான்றோர் குரம்பெழுந்துகுற்றங்கொண்டு
ஏறார் - உடம்பில் நரம்பு மேலேதோன்றும்படி வறுமையெய்தினாராயினும்மேன்மக்கள் தமது
நல்லொழுக்கத்தின் வரம்புகடந்து பிழையான வழிகளை மேற்கொண்டு அவற்றில்தொடர்ந்து
செல்லமாட்டார்; உரம் கவறாஉள்ளமெனும் நாரினால்
கட்டி - அறிவு பனைவிட்டமாகமுயற்சியென்னும் நாரினால் அத் தீய
நினைவைக்கட்டுப்படுத்தி, உளவரையால் செய்வர் செயற்பாலவை-
செய்தற்குரியநற்செயல்களைத் தமக்குள்ளபொருளளவினால் செய்து வருவர்.
(க-து.) வறுமையினால் மேன்மக்கள்,தவறிய
வழிகளிற் செல்லார்.
(வி-ம்.) குரம்பென்னுஞ் சொல்வரம்பென்னும் பொருட்டு; "குரம்புகொண் டேறி" என்றார் பிறரும். நார்
என்று வந்தமையாற் கவறுஎன்பது பனைவிட்டத்துக் காயிற்று; பிளவுள்ளபனம்பட்டை
கவறெனப்படும்; கவர் என்னுஞ்சொல்ரகர றகர வேற்றுமையின்றிக்
கவறு என வந்தது.
154 செல்வுழிக்
கண்ணொருநாட் காணினுஞ் சான்றவர்
தொல்வழிக் கேண்மையிற் றோன்றப்
புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சிலநாள் அடிப்படின்
கல்வரையும் உண்டாம் நெறி:
(பொ-ள்.) செல்வுழிக்கண் ஒருநாள்காணினும் சான்றவர் தொல்வழிக் கேண்மையின்தோன்றப்
புரிந்துயாப்பர் - வழிச்செல்லுங்காலத்தில் ஒருவரை ஒரு நாள் கண்டாலும்மேன்மக்கள்
பழைமைவழியான நேயம்போல் தோன்றஅன்புசெய்து அவரைப் பிணிப்பர்; நல்வரை நாட -உயர்ந்த மலைகளையுடைய நாடனே!. சில
நாள்அடிப்படின் கல் வரையும் உண்டாம் நெறி - சில நாள் நடந்து பழகியதாயின்
கல்லுள்ளமலையும் வழி உண்டாகப் பெறும்.
(க-து.) ஒரு நாள் பழகினும் சான்றோர் பிறருள்ளத்தைக் கவர்ந்துவிடுவர்.
(வி-ம்.) பலகாற் பழகியநேயம்போல் என்றற்குத் ‘தொல்வழிக்கேண்மையின்' எனப்பட்டது. அடிப்படின் - பயின்றால்;கால் பட்டுப் பயின்றாலென்க. பலநாட்பழகியகாரணத்தால் நட்புண்டாகப்
பெறுதலில்வியப்பொன்று மில்லையே என்றற்கு, ‘அடிப்படின்நெறியுண்டாம்'
என்றார். தூய உணர்ச்சிச் சிறப்பேநட்புக்கு ஏதுவென்பது இச்செய்யுட்
கருத்து;"உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும்" என்றதுங்
காண்க.
155 புல்லா
வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவுங் கண்ணோடி
நல்லார் வருந்தியுங் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து.
(பொ-ள்.) புல்லா எழுத்தின்பொருளில் வறுங்கோட்டி கல்லா ஒருவன் உரைப்பவும்
-பொருந்தாக் கல்வியையுடைய மெய்யுணர்வில்லாதவீணோரவையில் கல்வியறிவு
நிரம்பப்பெறாதஒருவன் உரையாடவும், கண்ணோடி நல்லார்
வருந்தியும்கேட்பர் அவன் பல்லாருள் நாணல் பரிந்து-மேன்மக்கள் கண்ணோட்டமுற்று,
உள்ளம்வருந்தியுங் கேட்டுக்கொண்டிருப்பர், தாம்கேளாதொழியின்
அவன் பலரிடையில் நாணங்கொள்ளநேர்தற்கு இரங்கியென்க.
(க-து.) மேன்மக்கள் கல்வியறிவும்மெய்யுணர்வும் வாய்ந்து அவையில்
அடக்கமுங்கண்ணோட்டமு முடையராயிருப்பர்.
(வி-ம்.) எழுத்து, ஈண்டுக்கல்வியென்னும்
பொருட்டு; "மயங்கா மரபின்எழுத்துமுறை காட்டி" என்பதும்
ஈண்டுநினைவுகூர்தற்குரியது. ‘பொருள்' என்றது மெய்ம்மை;"பொய்யுரையே யன்று பொருளுரையே" என்றார் பிறரும்; இங்கு மெய்யுணர்வு என்னும்பொருட்டு. ‘வறுங்கோட்டி' என்னுமிடத்து
வறுமைபயனின்மை: "வெள்ளைக் கோட்டியும் விரகினில்ஒழிமின்" என்புழிப் போல,
உம்மைஇரண்டனுள் முன்னது எச்சமெனவும் பின்னதுஇழிவுசிறப்பெனவுங்
கொள்க.மற்று:அசை.
156 கடித்துக்
கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே
யாகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணுங்
குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.
(பொ-ள்.) கடித்துக் கரும்பினைக்கண் தகர நூறி இடித்து நீர்
கொள்ளினும்இன்சுவைத்தேயாகும் - கரும்பினைப் பல்லினாற்கடித்தும், கணுக்கள் உடையும்படி ஆலையிலிட்டுச்சிதைத்தும்,
பிற கருவிகளால் இடித்தும் அதன்சாற்றைக் கொண்டாலும், அச் சாறு இனியசுவையுடையதேயாகும்; வடுப்பட வைது
இறந்தக்கண்ணும்குடிப்பிறந்தார் கூறார் தம் வாயின் சிதைந்து -பழியுண்டாகும்படி
தம்மைப் பிறர் பழித்து வரம்புகடந்தபோதும் மேன்மக்கள் தமதுபெருந்தன்மையிற் குறைந்து
வாயினால் தீயன கூறார்.(ஆண்டும், இனியரேயாவர் என்றபடி.)
(க-து.) பிறரால் இடுக்கணுற்றவிடத்தும் சான்றோர் இனியராகவே ஒழுகுவர்.
(வி-ம்.) கடித்தும் நூறியும்இடித்தும் என்று கொள்க. தம் வாயின் சிதைந்து, தமதுஉண்மை நிலையினின்றும் மாறி எனினுமாம், ஆவது, தம்பெருந்தன்மையினின்றுங் குறைந்து
என்க.எடுத்துக்காட்டுவமை,
157 கள்ளார், கள் ளுண்ணார், கடிவ கடிந்தொரீஇ,
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார், - தள்ளியும்
வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
சாயிற் பரிவ திலர்.
(பொ-ள்.) வடு அறு காட்சியார் -மாசு நீங்கிய தெளிவினையுடையார், கள்ளார் -பிறர் பொருளைக்கவரார்; கள் உண்ணார் - கள்அருந்தார்; கடிவ கடிந்து ஒரீஇ-
விலக்கத் தகுந்ததீயவற்றை விலக்கி அவற்றின் நீங்கித் தூயராகி,எள்ளிப்
பிறரை இகழ்ந்து உரையார் - பிறரைஅவமதித்து இகழ்ந்து உரையாடாமல் விளங்குவர்;தள்ளியும் வாயின் பொய் கூறார் - சோர்ந்தும்தம் வாயினாற் பொய் சொல்லார்,
சாயின் பரிவதுஇலர் - வினைவயத்தால் தம் செல்வாக்குக்குறையின்,
அதற்காக வருந்துவதும் இலராவர்.
(க-து.) சான்றோர்பால்இயல்பாகவே தீய குணங்கள் இல்லை.
(வி-ம்.) ஓரீஇ என்னும் எச்சத்தைஓரீஇ நிற்பர் என ஒரு தனிக் கருத்தாகக்கொள்ளலும், தள்ளியும் என்பதற்குப் பிறர் தம்மைஅவமதித்து
ஒதுக்கியும் எனலும் ஆம், காட்சியார்,பெயர்.
158 பிறர்மறை
யின்கட் செவிடாய்த் திறனறிந்
தேதிலா ரிற்கட் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.
(பொ-ள்.) பிறர் மறையின்கண்செவிடாய் - பிறருடைய மறைந்த கருத்துக்களைக்கேட்டலிற்
செவிடுடையனாய், ஏதிலார் இல்கண்குருடனாய்-அயலார்
மனைவியரைக் காமக் கருத்துடன்நோக்குதலிற் குருடுடையனாய். தீய
புறங்கூற்றின்மூகையாய்-தீயவான புறங்கூற்று மொழிகளைக் கூறுதலில்ஊமையுடையனாய்,
திறன் அறிந்து நிற்பானேல் -வாழ்க்கையில் துன்பம் உண்டாகுங்
கூறுகள்இவையென்றறிந்து ஒருவன் ஒழுகுவானாயின், யாதும்அறம்
கூறவேண்டா அவற்கு - அவனுக்குப் பிறர் வேறுயாதும் அறம் அறிவுறுக்கவேண்டா.
(க-து.) வாழ்க்கையில் துன்பம்உண்டாக்குங்கூறுகள் இவையென்றறிந்து
மேன்மக்கள்அவற்றின் நீங்கியொழுகுவர்.
(வி-ம்.) திறனறிந்து நிற்பானேல்என்க. காதிருந்தும் கண்ணிருந்தும்
வாயிருந்தும்ஒருவன் செவிடாய்க் குருடாய் ஊமையாய்நிற்கவேண்டுமிடம் இன்னவென்றது. இச்
செய்யுளில்நயமுடையது. "சொல்லும் மறையிற் செவியிலன்தீச்சொற்கண் மூங்கை" முதலிய
பிறர் வாய்மொழிகளும் நினைவு கூர்க. இம் மூவகை யறமேபோதுமென்பார் "யாதும் அறங்
கூறவேண்டா"என்றார்.
159 பன்னாளுஞ்
சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப; - என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று
விழுமியோர்
காண்டொறுஞ் செய்வர் சிறப்பு:
(பொ-ள்.) பல் நாளும்சென்றக்கால் - பலமுறையும் ஒருவர் சென்றால்,‘பண்பிலார் - நற்பண்பில்லாத கீழ் மக்கள், தம்உழை என்னானும் வேண்டுப என்று இகழ்ப - தம்மிடம்ஏதாவது உதவி வேண்டுவார்
என்று அவரை அவமதிப்பர்;விழுமியோர் - ஆனால் மேன்மக்கள்,
என்னானும்வேண்டினும் நன்று என்று - அவர் ஏதாவது உதவிவிரும்பினாலும்
நல்லது என்று கருதி, காண்டொறும்செய்வர் சிறப்பு -
அவரைப்பார்க்கும்போதெல்லாம் பெருமை செய்வர்.
(க-து.) மேன்மக்கள் பிறர்க்குஉதவி செய்தலில் விருப்பமுடையவராயிருப்பர்.
(வி-ம்.) பன்னாளென்றது, பலமுறையென்னும்
பொருட்டு. ‘பண்பிலார்' என்னுஞ் சொல்படர்க்கையாதலின். ‘சென்றக்கால்'என்னும் படர்க்கையிடத்திற்குரிய வினை வந்தது.என்னானும் வேண்டினும்
என்றற்கு எது வேண்டினாலும்என்றுரைத்தலும் ஒன்று.
160 உடைய
ரிவரென் றொருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வர் - உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட விடத்து.
(பொ-ள்.) உடையார் இவர் என்று ஒருதலையாப்பற்றிக் கடையாயார் பின் சென்றுவாழ்வர்
- பொருளுடையார் இவர் என்று உறுதியாகப்பற்றி மக்களிற் பெரும்பாலார்
கீழ்மக்கள்பின்சென்று உயிர் வாழ்வர்; உடையபிலம்தலைப்பட்டது போலாதே நல்ல குலம் தலைப்பட்டவிடத்து-சிறந்த
மேன்மக்களினத்தைச்சேரப்பெற்ற போது, அஃது உரிமையுடைய
ஒருபொருட்சுரங்கத்தைத் தலைப்பட்டதுபோ லாகாதோ?
(க-து.) மேன்மக்கள் சேர்க்கையேஎல்லா நலங்களும் பெருக அடைவதற்குரியது.
(வி-ம்.) பொருளொன்றே கருதியென்றற்கு ‘உடையார் இவர்' என்றும்,பொருளுடையராயினுங்
குணநலமில்லாதார்கீழ்ப்பட்டவரே யென்றற்கு ‘கடையாயார்' என்றுங்கூறினார்.
பற்றி-ஆதரவாகக் கொண்டு. தொங்கித்தொடரும் எளிமை, தோன்றப்
‘பின்சென்று வாழ்வர்'என்றார். மேன்மக்கள்
எஞ்ஞான்றும்பிறர்க்குரியராதலின், உரிமையுடைய பிலம்என்றற்கு
‘உடையபிலம்' எனப்பட்டது.தமக்குடைமையான பிலம் எனப்
பொருள்விரித்தலுமாம். "உடைப்பெருஞ் செல்வர்" என்றார் பிறரும். ஏகாரம் :
வினா.
0 Comments