பெரியாரை அவமதித்து நடவாமை

161 பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது.

(பொ-ள்.) பொறுப்பர் என்றுஎண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பனசெய்யாமை வேண்டும் - பொறுத்துக் கொள்வார் என்றுநினைத்து மாசுநீங்கிய பெரியோரிடத்திலும் அவர்வருந்தத்தக்க பிழைகளைச் செய்யாதிருத்தல்வேண்டும்; வெறுத்தபின் - அவர் உள்ளம் அதனால்வருந்தியபின், ஆர்க்கும் அருவி அணி மலை நல் நாட -ஆரவாரித்தொலிக்கும் அருவிகளையுடைய அழகியமலைகள் பொருந்திய சிறந்த நாடனே; பேர்க்குதல்யார்க்கும் அரிது - அவ் வருத்தத்தால் உண்டாகுந்தீங்கை நீக்கிக் கொள்ளுதல் எத்தகையவர்க்கும்இயலாது.

(க-து.) பெரியோரைஅவமதித்தொழுகினால் தீர்வில்லாததீங்குண்டாகும்.

(வி-ம்.) பெரியோர்பொறுத்தற்குரியோராயினும் அவர் உள்ளத்துக்குஆகாதன அவரொழுகலாற்றிற்கு ஊறு பயக்குமாதலின்‘வெறுப்பன செய்யாமை வேண்டும்' எனவும், இவைபொருந்தாதன என்று அவர் கருதுதலே ஈண்டுவருந்தியதாகுமாதலின் ‘வெறுத்தபின்' எனவும்.எத்தகைய ஆற்றல் படைத்தவர்க்கும் அதனால்விளையுந்தீங்குகளை நீக்கிக்கொள்ளுதல்அரிதாகுமாதலின் ‘யார்க்கும்' எனவுங் கூறினார்."பூவுட்கும் கண்ணாய் பொறுப்பரெனக் கருதியாவர்க்கேயாயினும் இன்னா செயல் வேண்டா" என்றார் பிறரும். புரை தீர்ந்தார் மாட்டும்என்னும் உம்மை உயர்வொடு எச்சம்.

162 பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.

(பொ-ள்.) பொன்னே கொடுத்தும்புணர்தற்கு அரியாரை - பொன்னையே விலையாகக்கொடுத்தும் நட்புச் செய்தற்கு அரியரானபெரியோர்களை, கொன்னே தலைக்கூடப்பெற்றிருந்தும் - பொருட் செலவில்லாமலே அவரைநட்புச் செய்து கொள்ளும் நிலை பெற்றிருந்தும்.நல்ல நயம் இல் அறிவினவர் அன்னோ பயனில்பொழுதாக் கழிப்பரே - சிறந்த பண்புடைமையில்லாதஅறிவினையுடைய பேதையர் ஆ, தம்முடையவாழ்நாட்களைப் பயன் இல்லாத வீண் காலமாகக்கழிக்கின்றனரே!

(க-து.) பெரியார் இணக்கம்வாழ்க்கை யின்பம் மிகுத்து அதனைப்பயனுடையதாக்கும்.

(வி-ம்.) பொன்னே என்பதன்ஏகாரம் தேற்றமும், கழிப்பரே என்பதன் ஏகாரம்ஈற்றசையுமாம். அன்னோவென்னும் இடைச்சொல்இரக்கப்பொருள் குறித்தது. சான்றவர் மேன்மையில்மரீஇ இன்புறும் நயமின்மை கருதி; ‘நயமில்அறிவினவ' ரென்றார்; பயனில் பொழுது கழிக்கும்வீணரை நயமில் அறிவினவரென விதந்தது, மிக்கநயமுடைத்து. "நயனிலனென்பது சொல்லும் பயனில,பாரித்துரைக்கும் உரை" என்பதுதிருக்குறள்.

163 அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான் மதிக்கற் பால; -நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.

(பொ-ள்.) அவமதிப்பும் ஆன்றமதிப்பும் இரண்டும் மிகைமக்களான் மதிக்கற்பால-மதிப்பின்மையும் மிக்க மதிப்புமாகிய இரண்டும்மேன்மக்களாகிய பெரியோர்களால்மதித்தற்குரியனவாகும்; நயம் உணராக்கையறியாமாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் -நன்மையை உணர்தலில்லாத ஒழுக்கமறியாக்கீழ்மக்களின் இழிப்புரையும் உயர்த்தும்ஏத்துரையும், வடித்த நூலார் வையார் - தெளிந்தநூலறிவினையுடையோர் ஒரு பொருளாகமனத்துட்கொள்ளமாட்டார்கள்.

(க-து.) மேன்மக்கள்பால்மதிப்புப்பெற முயலுதல் வேண்டும்.

(வி-ம்.) ஆன்ற மதிப்பென்றது,நன்கு மதித்தலை உட்கொண்டு நின்றது. மிகைமக்கள்- மக்களில் மேம்பட்ட நன்மக்கள்;பொதுமக்களினும் மேம்பட்டோரென்று கொள்க.மாக்களென்போர் அப்பொதுமக்களினுங்கீழ்ப்பட்டோர். கை, ஈண்டு ஒழுக்கமென்னும்பொருட்டு, உணரா அறியா மக்கள் என்க; "மூவா முதலாவுலகம்" என்புழிப்போல.சான்றோராயின், உலகில் நிகழுந் தகுதிகளைத்தம்உள்ளத்துமதித்து மகிழ்வர்; நிகழ்வனதகுதியற்றனவாயின் அவற்றை மதியாமல்வாளாவிடுப்பரல்லது தூற்றார். நயமுணராக்கையறியாமக்களாயின், இழித்தலாயினும் அன்றிஏத்துதலாயினும் தம் வாய்விட்டுக் கூறுவர்.இவ்வியல்பு புலப்படுத்துவார், ‘இழிப்பும்எடுத்தேத்து' மென்று அவரது வாயுரைக்கண் வைத்துஆசிரியர் விளக்கின ரென்க.

164 விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.

(பொ-ள்.) விரிநிற நாகம் விடர்உளதேனும் உருமின் கடு சினம் சேண் நின்றும் உட்கும்- படம் விரித்தலையுடைய நாகப்பாம்பு நிலத்தின்வெடிப்பினுள்ளே உள்ளதானாலும் இடியின் கொடியஒலிச்சீற்றமானது தொலைவில் இருந்தும் அதற்குஅஞ்சும், அதுபோல; அருமையுடைய அரண் சேர்ந்தும்பெருமையுடையார் செறின் உய்யார் - அருமைப்பாடுடையபாதுகாப்பிடத்தைச் சேர்ந்திருந்தாலும்,மேன்மையுடைய பெரியோர் சீறுவாராயின், ஏனைச்சிறியோர் அதற்குத் தப்பமாட்டார்.

(க-து.) பெரியோர்க்குப் பிழைசெய்து பின் அதிலிருந்து தப்புதல் இயலாது.

(வி-ம்.) விடரென்பது பிளப்பு:"விடர் முகையடுக்கம்" என்பது அகநானூறு.இடி முழக்கத்தின் மேன் மேற் கடுமைசினமெனப்பட்டது. "அரண்சேர்ந்தும்'என்றதனால், என்றதனால், பெருமையுடையாரது சினம்அவ்வரண் முதலியவற்றையுங் கெடுக்குமென்பது பெறுதும்.பெருமையுடையார் செறின் என்றமையின் ஏனைச்சிறியோர் உய்யார் என, வினை முதல் தானேபெறப்பட்டது.

165 எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று: - தம்மை
அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்.

(பொ-ள்.) எம்மை அறிந்திலிர்எம்போல்வார் இல் என்று தம்மைத்தாம் கொள்வதுகோள் அன்று - ‘எமது தகுதியை நீவிர்அறிந்தீரில்லை; எம்மைப்போன்ற தகுதியுடையார்பிறர் ஈண்டு இல்லை' என்று தம்மைத் தாமேபெருமைப்படுத்திக் கொள்வது சிறந்த மதிப்பாகாது;தம்மை அரியரா நோக்கி அறன் அறியுஞ் சான்றோர்பெரியராக் கொள்வது கோள்-தம்மைஅருமையுடையராகக் கருதி, அறமுணருஞ் சான்றோர்பெரியரென்று மதித்தேற்றுக் கொள்ளுதலேபெருமையாகும்.

(க-து.) தம்மைச் சான்றோர்பெரியரென மதித்தேற்குமாறு தாம் செய்கையில்ஒழுகுதலன்றித், தம்மைத் தாமே பெரியரென -வாயுரையாப் புலப்படுத்திக் கொள்ளுதல்மதிப்புடைமையாகாது.

(வி-ம்.) "வியவற்கஎஞ்ஞான்றுந் தன்னை" என்றார் பிறரும்.‘அரியரா, பெரியரா' ஈறு தொகுத்தல்.தக்கோரென்னும் பொருட்டு, அறனறியுஞ்சான்றோரென்றார். அறிதலாவது ஈண்டுஅறிந்தொழுகுதல்.

166 நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழற் போல
விளியுஞ் சிறியவர் கேண்மை: - விளிவின்றி
அல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே
தொல்புக ழாளர் தொடர்பு.

(பொ-ள்.) நளி கடல் தண் சேர்ப்ப- பெரிய கடலின் குளிர்ந்த துறையையுடையவனே!சிறியவர் கேண்மை நாள் நிழல்போலவிளியும்-சிறியோர் நட்புக் காலை நேரத்தின்நிழல்போலக் குறைந்து கெடும்; விளிவுஇன்றி-அவ்வாறு குறைந்து கெடுதலில்லாமல், அல்குநிழல்போல் - மாலை நேரத்தின் நிழல்போல,தொல்புகழாளர் தொடர்பு அகன்று அகன்று ஓடும்-பழைமை தொட்டு வரும் புகழினையுடையரான பெரியோர்நட்பு வளர்ந்து பெருகும்.

(க-து.) இருக்க இருக்கப் பெருகும் நேயமாட்சிக் குரியபெரியோரிடம் பிழைத்தலின்றி யொழுகி நலம்பெறல் வேண்டும்.

(வி-ம்.) நாள், நாளின்தோற்றநேரமாகிய காலைப் பொழுதை யுணர்த்திற்று,அல்கு, என்பது முதலிலைத் தொழிற்பெயர்: சுருங்குதல்என்பது பொருள்: பொழுது சுருங்குதலையுடைய நேரம்என்னுங் கருத்தில் ஆகுபெயராய் இங்கு அது மாலைக்காலத்தை உணர்த்தி நின்றது. மாலையென்றது ஈண்டுப்பிற்பகல். அடுக்கு மிகுதிப் பொருளது.தொல்புகழாளர் என்றார். புகழுக்குரியநல்லியல்பும் பழக்கமும் இயற்கையாகவும்செயற்கையாவும் நெடுங்காலமாக உடையரென்னும்பொருட்டு.

167 மன்னர் திருவும் மகளிர் எழினலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கட் சென்றார்க் கொருங்கு.

(பொ-ள்.) மன்னர் திருவும் மகளிர்எழில் நலமும் - அரசர் வளமும் மகளிரின்எழுச்சியழகும், துன்னியார் துய்ப்பர் - அவர்களுடன்நெருங்கிக் கலந்திருப்பவர் நுகர்வர்: தகல்வேண்டா-நேயம் என்னும் அந் நெருக்கமல்லதுஅதற்குத் தகுதியுடைமை வேண்டா: துன்னிக்குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரமெல்லாம் -நெருங்கத் தழைகள் பொருந்தித் தாழ்ந்துள்ளகுளிர்ச்சியான மரங்களெல்லாம், உழை தங்கட்சென்றார்க்கு ஒருங்கு - தம்மிடம் வந்தடைந்தாரனைவர்க்கும் வேறுபாடின்றி நிழலிடமாகும்.

(க-து.) ஆதலால், நேயத்தால் தம்மைஅடைந்தவரிடம் தகுதி வேறுபாடுகள் கருதாமல்,பெரியோர் அளவளாவியிருந்து அவரை மகிழ்விப்பரென்க.

(வி-ம்.) உவமைகள் மூன்றும்இருவகையாகப் பெரியோர் மாட்சிமை யுணர்த்தினசிறப்பாக நேய நெருக்கமுடையோர் துய்த்தற்குமுதலிரண்டு உவமைகளும், தகுதி வேறுபாடு கருதாமைக்குப்பின் ஓர் உவமையும் வந்தன வென்க. இதனாற்பெரியோரது திருநலம் விளங்கிற்று. தகல்:தொழிற்பெயர். துன்னியென்பதற்குக் கிளைகள்நெருங்கியென உரைத்தலுமாம். குளிர் மரமாதலின்குழை கொண்டு தாழ்ந்தவெனக் கூறப்பட்டது. உழை -இடம்; ஈண்டு நிழல் பயக்கும் இடமென்க. ஒருங்குஎன்றார், வேறுபாடு கருதாமைப் பொருட்டு.

168 தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மாட்டும்
கலவாமை கோடி யுறும்.

(பொ-ள்.) தெரியத் தெரியும்தெரிவிலார் கண்ணும் நூற்பொருள்களை விளங்கத்தெளியும் தெளிவில்லாதவரிடத்தும், பிரியப்பெரும்படர் நோய் செய்யும் - அவரைப் பிரிய அப்பிரிவு பெரிய நினைவுத் துன்பம் உண்டாக்கும்;பெரிய உலவா இரு கழிச் சேர்ப்ப-வளங்கெடாதகருநிறமான பெரிய கழிக்கரையை யுடையோனே, யார்மாட்டும் கலவாமை கோடி உறும் - ஆதலால்,பெரியோரிடத்தன்றிப்பிறர் யாரிடத்திலும்நேயங்கொள்ளாமை கோடிப்பங்கு நன்மையாகும்.

(க-து.) ஆராய்ந்து பெரியோரிடமேநேயங்கொள்ளுதல் வேண்டும்.

(வி-ம்.) பிரிய அப் பிரிவு நோய்செய்யும் என்று கொள்க. படர்-நினைவு "படரேஉள்ளல்" என்பது தொல்காப்பியம்; படர்நோய்-நினைதலாலுண்டாகும் வருத்தம். நெய்தல்நிலம் கார் காலத்தில் நெல்விளைத்தும் வேனிற்காலத்தில் உப்பு விளைத்தும் என்றும்வளங்கொடாதிருத்தலின் "உலவாக் கழி"எனப்பட்டது. ‘வானம் வேண்டா உழவின் எம் கானலஞ்சிறுகுடி' என்பதும் நினைவு கூர்க.

169 கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும், - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.

(பொ-ள்.) கல்லாது போகிய நாளும் -கற்றற்குரிய நூல்களைக் கல்லாமற் கழிந்தநாட்களும், பெரியவர்கண் செல்லாது வைகியவைகலும்-கேள்வியின் பொருட்டுப் பெரியோர்பாற்செல்லாது நின்ற நாட்களும், ஒல்வகொடாது ஒழிந்தபகலும் - இயன்ற பொருள்களை உரியவர்களுக்குஉதவாமல் நீங்கிய நாட்களும், உரைப்பின் -சொல்லுமிடத்து, பண்புடையார்கண்படா-நல்லியல்புடைய பெரியோர்களிடம்உண்டாகமாட்டா.

(க-து.) கல்வி கேள்விகளும்ஒப்புரவும் என்றும் பெரியோர் உடையராயிருப்பர்.

(வி-ம்.) சாந்துணையுங் கற்றலும், செவிக்குணவில்லாத போழ்து வயிற்றுக்கு ஈதலும்,‘ இரவரலர்க்கு அருங்கலம் வீசி வாழ்தல் வேண்டும்இவண் வரைந்த வைக' லெனக் கருதலும், நல்லோர் இயல்பாகலின், இங்ஙனம் கூறினார். ஒல்வ: வினையாலணையும் பெயர். அளபெடைகள் செய்யுளோசைநிறைத்து நின்றன. ஆம்: அசை.

170 பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்
குரியா ருரிமை யடக்கம்; - தெரியுங்கால்,
செல்வ முடையாருஞ் செல்வரே, தற்சேர்ந்தார்
அல்லல் களைப வெனின்.

(பொ-ள்.) பெரியார் பெருமை சிறுதகைமை - கல்வி கேள்விகளிற் பெரியாருடையபெருமைக் குணமாவது யாண்டுந்தாழ்வுடைமையாயிருத்தல்; ஒன்றிற்கு உரியார்உரிமை அடக்கம் - வீடுபேற்றிற்கு உரியரானமெய்யுணர்வாளர்க்கு உரிமையான பண்பாவாதுமனமொழி மெய்கள் அடக்கமாயிருத்தல்;தெரியுங்கால் - ஆராயுமிடத்து, செல்வமுடையாரும்செல்வரே தற் சேர்ந்தார் அல்லல் களைப எனின் -தம்மை அடைந்தவர்களுடைய வறுமைத் துன்பங்களைநீக்குவார்களாயின் செல்வம் படைத்தவர்களும்செல்வரேயாவர்.

(க-து.) செல்வமும் கல்வியும்மெய்யுணர்வுமுடைய பெரியோர், யாண்டும் உதவியும்பணிவும் அடக்கமு முடையராயிருப்பர்.

(வி-ம்.) சிறியதன்மையுடையார்போல் தாழ்வுடையராயிருத்தலின்அப் பணிவுடைமையை ஈண்டுச் சிறு தகைமையென்றார்.சிறப்பு நோக்கி வீடுபேறு, ஒன்றெனப்பட்டது.தற்சேர்ந்தார், ஒருமை பன்மை மயக்கம்."தற்சேர்ந்தார் ஒற்கம் கடைப்பிடியாதார்" என்றார் பிறரும். பெரியாராயினார்இத்தகையினராதலின் இது தெரிந்து இந்நிலைகட்கேற்ப அவர்பாற் பிழைபடா தொழுகிக்கொள்க வென்பது கருத்து. இவ்வதிகாரத்தில்பெரியாரியல் புரைப்பனவாய் வந்திருக்கும் இதுபோன்ற செய்யுள்கட்கும் இவ்வாறுரைத்துக் கொள்க.