121 துக்கத்துள்
தூங்கித் துறவின்கட் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு -
தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும்
காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு.
(பொ-ள்.) சுடுகாடு துக்கத்துள் தூங்கித் துறவின் கண் சேர்கலா மக்கள்
பிணத்த - உலகத்திலுள்ள சுடுகாடுகள், வாழ்க்கைத் துன்பங்களிற் கிடந்தழுந்தி, அவற்றினின்று நீங்குதற்குரிய துறவற நெறியிற் சார்ந்தொழுகாத
கீழ்மக்களின் பிணங்களையுடையன; புலன்
கெட்ட புல்லறிவாளர் வயிறு - ஆனால் நல்லறிவு கெட்ட புல்லறிவாளரின் வயிறுகளோ, தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடு- தொகுதியான
விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இடுகாடுகளாயிருக்கின்றன.
(க-து.) பிற உயிர்களைக் கொன்றுண்ணுந் தீ வினைக்கு அஞ்சுதல்
வேண்டும்.
(வி-ம்.) அருளொழுக்கமுடைய சான்றோர் நோய்கொண்டு மறையாமல், செயற்கருஞ் செயல்கள் செய்து தூயராய் மறைதலால்
அவர்கள் மறையும் இடம் புனிதமாகப் போற்றப்படுதலின், ‘சுடுகாடுகள் கீழ்மக்கள் பிணங்களையுடையன' எனப்பட்டது. அக்கீழ்மக்களினும் இழிந்தனவான சிற்றுயிர்களின்
பிணங்களையுடையன புல்லறிவாளர் வயிறுகள் என்க. பல காலுந் தின்று உள்ளே செலுத்துதலின்
‘தொக்க' எனவும், நல்லோர் கூறும் அறவுரைகளையேனுங் கேட்டொழுகுதலில்லாமையின் ‘புல்லறிவாளர்' எனவும் உரைக்கப்பட்டன, ஏகாரம், ஈற்றசை.
122 இரும்பார்க்குங்
காலராய் ஏதிலார்க் காளாய்க்
கரும்பார் கழனியுட் சேர்வர்
- சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும்
குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப்
பார்.
(பொ-ள்.) சுரும்பு ஆர்க்கும் காட்டுளாய் வாழும் சிவலும்
குறும்பூழும் கூட்டுளாய்க் கொண்டு வைப்பார் - வண்டுகள் ஆரவாரிக்கும் இனிய காட்டில்
இருந்து உயிர் வாழும் கவுதாரியையும் காடையையும் கூட்டில் இருந்து வருந்தும்படி
பிடித்துக்கொண்டு வந்து சிறை வைப்பவர். இரும்பு ஆர்க்கும் காலராய் ஏதிலார்க்கு
ஆளாய் கரும்பார் கழனியுள் சேர்வர் - இருப்பு விலங்குகளாற் பூட்டப்பட்ட
கால்களையுடையராகவேனும் அயலார்க்கு அடிமைப்பட்டவர்களாகவேனும் கட்டுப்பட்டு வலிய
பார்நிலத்திலாதல் விளைநிலத்திலாதல் போய்த் தொழில் செய்து உழல்வர்.
(க-து.) சிற்றுயிர்களைச் சிறைப்படுத்துந் தீவினைக்கும் அஞ்சுதல்
வேண்டும்.
(வி-ம்.) "பூவைகிளி தோகைபுணர் அன்னமொடு பன்மா, யாவையவை தங்கிளையின் நீங்கி அழவாங்கிக், காவல் செய்து வைத்தவர்கள் தங்கிளையின் நீங்கிப் போவர்புகழ்
நம்பி இது பொற்பிலது கண்டாய்" என்றார் பிறரும். காலராய்க் கரும்பார் சேர்வர், ஆளாய்க் கழனியுட் சேர்வர் என நிரனிறையாகக் கொள்க. கரும்பார்
சேர்தல் சிறைச்சாலைகளுட் செய்யுந்தொழில். இரும்பு : ஆகுபெயர். சிவலும்
குறும்பூழுமென்றது, இலக்கணையாற்
பிற சிற்றுயிர்களையும் உணர்த்தும். பின் அடிகளில் வரும் ஆய் இரண்டனுள் முன்னது
செய்தெனெச்சமும் பின்னது செயவெனெச்சமுமாகக் கொள்க.
123 அக்கேபோல்
அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே -
அக்கால்
அலவனைக் காதலித்துக்
கான்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்.
(பொ-ள்.) அக்கால் அலவனைக் காதலித்துக் கால் முரித்துத் தின்ற பழவினை
வந்தடைந்தக்கால் - முற்பிறப்பில் நண்டின் ஊனை விரும்பி அதன் கால்களை ஒடித்துத்
தின்ற பழவினை இப்போது வந்தடைந்தால், அக்குபோல் அங்கை ஒழிய விரல் அழுகித் துக்கத் தொழிநோய் எழுப
- சங்கு மணிபோல வெண்ணிறமாய் உள்ளங்கைகள் மட்டும் இருக்க ஏனை விரல்களெல்லாம்
அழுகிக் குறைந்து துன்பத்திற்கேதுவான தொழுநோய் உண்டாகப் பெறுவர்.
(க-து.) ஊனுண்ணுந் தீவினைக்கு அஞ்சி அதனைவிடல் வேண்டும்.
(வி-ம்.) ஏகாரங்கள் அசைநிலை, ‘அங்கை' யென்பது
"அகமென் கிளவிக்கு" என்னும் விதிப்படி ‘அகங்கை' என
நின்றது. ‘எழுப' வென்பது
ஈண்டு உயர் திணை யீறு. அக்கால் கால் முரித்த விரல் இக்கால் அழுகிக் குறைந்த
தென்பது.
124 நெருப்பழல்
சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவவநோய்
ஆக்கும் - பரப்பக்
கொடுவினைய ராகுவர் கோடாருங்
கோடிக்
கடுவினைய ராகியார்ச்
சார்ந்து.
(பொ-ள்.) நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய்போல்வதும் எரிப்பச்
சுட்டு எவ்வம் நோய் ஆக்கும் - உடம்புக்கு நன்மை செய்யும் நெய்யும் நெருப்பின்
அழற்சியைப் பொருந்தினால், எரிந்து
தீயும்படி சுட்டு மிக்க வருத்தந்தரும் நோயை உண்டாக்கும்; கோடாரும் கடுவினைய ராகியார்ச்சார்ந்து கோடிப் பரப்பக்
கொடுவினையராகுவர் - நெறிகோணாத நல்லோரும் தீவினையாயினாரைச் சார்ந்து அதனால்
நெறிகோணி மிக்க கொடுந்தொழிலுடையராவர்.
(க-து.) தீச்செயலாளரோடு சேர்தற்கு அஞ்சுதல் வேண்டும்.
(வி-ம்.) ‘போல்வது' மென்பது ஒப்பில்போலி. சார்ந்து என்னும் எச்சம் காரணப்பொருட்டு. இயல்பில்
நல்லோரும் தீய சேர்க்கையால் திண்ணமாய்த் தீயோராக மாறி விடுவர் என்று அவ்வகையில்
ஐயமின்மையை இச்செய்யுள் உணர்த்திற்று.
125 பெரியவர்
கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் -
வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும்
தேயுமே
தானே சிறியார் தொடர்பு.
(பொ-ள்.) பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும் -
சான்றோர் நட்பு பிறைத்திங்களைப் போல ஒவ்வொரு நாளும் முறைமுறையே வளரும்; சிறியார் தொடர்பு வான் ஊர் மதியம்போல் வைகலும் வரிசையால்
தானே தேயும் - கீழோர் உறவு வானத்தில் தவழுகின்ற முழுத் திங்களைப்போல ஒவ்வொரு
நாளும் முறையாகத் தானே தேய்ந்தொழியும்.
(க-து.) சிற்றினத்தாரோடு சேர்தற்கு அஞ்சுதல் வேண்டும்.
(வி-ம்.) முழுத்திங்கட்கு ‘மதி' எனவும், குறைத்திங்கட்குப் ‘பிறை' எனவும்
வரும் சொல் வழக்குக் கருத்திருத்துதற்குரியது. தானே என்பதை முன்னும் கூட்டலாம். ‘வரிசை வரிசையா' என்னும் அடுக்கு உவகைப்பொருட்டு. வான் ஊர்தல் பிறைக்கும்
உரியதேனுஞ் சிறப்பு நோக்கி மதியத்துக்கு அடைமொழியாக வந்தது. இச் செய்யுளின்
உவமமும் பொருளும் "நிறைநீர நீரவர்கேண்மைபிறை மதிப், பின்னீர பேதையார் நட்பு" என்னுந்
திருக்குறளில் உள்ளவாறே உள்ளன.
126 சான்றோ
ரெனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண்
இல்லாயின் சார்ந்தாய்கேள்
சாந்தகத் துண்டென்று
செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட
துடைத்து.
(பொ-ள்.) சான்றோர் என மதித்துச் சார்ந்தாய்மன் - நீ சிலரைக்
குணநிறைந்தவர் எனமதித்து மிகுதியும் உறவு கொள்கின்றனை; சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின்
-அவ்வாறு உறவு கொள்ளும் நினக்கு நீ சார்வோரிடத்தில் குணநிறைவு காணப்படாதாயின், சார்ந்தாய் கேள் - ஆராயாமல் உறவுகொள்வோனே, கேட்பாய்; சாந்து
அகத்து உண்டு என்று செப்புத் திறந்து ஒருவன் பாம்பு அகத்துக் கண்டது உடைத்து -
அச்செயல்,
சந்தனம் உள்ளே இருக்கின்றதென்று கருதிச் சிமிழைத் திறந்து , ஒருவன், பாம்பை
அதனுள் கண்டாற்போன்ற தன்மையுடையது.
(க-து.) எவரோடும் ஆராயாமல் நட்புக்கொள்வதற்கு அஞ்சுதல் வேண்டும்.
(வி-ம்.) இச் செய்யுள் மனத்தை விளித்துக் கூறியபடி; மன் : மிகுதிப்பொருட்டு. நிகழ்கால வினைகள் மனத்தின் விரைவு
நோக்கி இறந்தகால வினைகளாக வந்தன. உவமையிற்
பாம்பென்றது பொருளில் தீக்குணங்களை. கருதி என ஒரு சொல் வருவிக்க.
127 யாஅர்
ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் -
சாரல்
கனமணி நின்றிமைக்கும்
நாட!கேள்;
மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.
(பொ-ள்.) யார் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் துணைமை உடையவர் -
எவரொருவர்,
ஒருவரது உள்ளத்தைத்தேர்ந்து துணியும் ஆற்றலுடையவர்?, சாரல் கன மணி நின்று இமைக்கும் நாட கேள் - மலைச்சாரலில்
பெரிய மாணிக்க மணிகள் கிடந்து ஒளிவிடும் நாடனே கேள்; மக்கள் மனம் வேறு செய்கையும் வேறு - உலகத்தில் மக்களின்
உள்ளமும் வேறு செய்கையும் வேறாயிருக்கின்றனவே!
(க-து.) நட்பாராய்தலிலும் பலகால் பலவழியால் ஆராய்ந்து துணிதல்
வேண்டும்.
(வி-ம்.) நற்செயல் கண்டவுடன் உள்ளமும் அத்தகையதென்று உடனே துணிந்துவிடலாகாதென்பது
பொருள். ‘யாரொருவர் உடையவர்' என்னும் வினா, அரிதாதல் நோக்கி எழுந்தது. துணைமை, துணையால் உண்டாம் ஆற்றல் கருதி அப்பொருட்டாயிற்று.
128 உள்ளத்தான்
நள்ளா துறுதித் தொழிலராய்க்
கள்ளத்தான் நட்டார்
கழிகேண்மை -தெள்ளிப்
புனற்செதும்பு
நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
மனத்துக்கண் மாசாய் விடும்.
(பொ-ள்.) உள்ளத்தான் நள்ளாது உறுதித் தொழிலராய்க் கள்ளத்தான்
நட்டார் கழிகேண்மை அகத்தால் நேயங்கொள்ளாது, ஆனால் உறுதியான நேயத்துக்குரிய செய்கைகளை மேலே உடையவராய்க், கரவினால் நேயஞ் செய்தவரது மிக்க நட்பு! புனல் தெள்ளிநின்று
செதும்பு அலைக்கும் பூ குன்ற நாட - நீர் தெளிவுடைய தாய் ஒழுகிச் சேற்றை
அலைத்தொதுக்கும் அழகிய மலைகள் விளங்குகின்ற நாட்டையுடையவனே!, மனத்துக்கண் மாசாய்விடும் - என்றும் மனத்தில் வேதனை தருங்
குற்றமாய் முடியும்.
(க-து.) மேலோடு செய்யும் நட்புக்கு அஞ்சுதல் வேண்டும்.
(வி-ம்.) உன்ளத்தானென்றது ஈண்டு அகத்தன்பினால் என்னும்பொருட்டு; கழிகேண்மையென்றார் அத்தகைய நட்புக்கு முதலில், அவ்வாறு மிக நெருக்கமாயிருப்பதும் ஓர் அறிகுறியாதலின். ‘அல்வழியெல்லாம் உறழென மொழிப' வாதலின் எதுகை நோக்கிப் ‘புனற்செதும்பு' எனத் திரிபேற்றது.
129 ஓக்கிய
ஒள்வாள்தான் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம்
மெய்யாகும் - ஆக்கம்
இருமையுஞ் சென்று சுடுதலால்
நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு.
(பொ-ள்.) ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கைப்பட்டக்கால் ஊக்கம்
அழிப்பதூஉம் மெய்யாகும் - ஓங்கிய தனது ஒளிமிக்க வாள் தன் பகைவர் கையில் அகப்பட்டு
விட்டால். அது தனது மனவலிமையைக் கெடுப்பதும் திண்ணமாகும்; ஆக்கம் - அவ்வாறே தீயோர் கைப்பட்ட தனது செல்வம் இருமையும்
சென்று சுடுதலால் - இம்மை மறுமை என்னும் தன் இருமைப் பயன்களையும் தொடர்ந்து
கெடுத்தலால், நல்ல கருமமே
கல்லார்கண் தீர்வு - அத்தகைய மூடர்களிடத்தினின்று நட்பு நீங்குதல் அறச்செய்கையேயாகும்.
(க-து.) கல்லாத முடர் சேர்க்கையினின்று அஞ்சி விலகுதல் வேண்டும்.
(வி-ம்.) ‘ஊக்கம்
அழிப்பதும்' என்னும் உம்மை ‘மேல் உயிரை அழிப்பதும்' என்னும் எதிரது தழீஇயது. ‘கைப்பட்டக்கால்' என்பதை ஆக்கம் என்பதற்கும், ‘ஆகும்' என்பதைக்
கருமமே என்பதற்குங் கொள்க. தனது பொருள் கல்லாத மூடர்வழியாகப் பலர்க்குந் தனக்குந்
தீங்கு விளைத்தலாலும், இம்மையிற்
செய்த வினைகள் மறுமையிலுந் தொடர்தலாலுந் ‘இருமையுஞ் சென்று சுடுதல்' நுவலப்பட்டது.
130 மனைப்பாசம்
கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே
- எனைத்தும்
சிறுவரையே யாயினும்
செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு.
(பொ-ள்.) மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென்று ஏங்கி - மக்கட்கு
நல்வாழ்க்கை அமையும் பொருட்டு மனம் ஏங்கி வாழ்க்கைப்பற்றை இன்னும் விடமாட்டாய்; எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே - நெஞ்சமே, அதற்காக நீ எத்தனை ஊழி வாழவிருக்கின்றனையோ? எனைத்தும் சிறுவரையேயாயினும் செய்தநன்றல்லால் உறுபயனோ இல்லை
உயிர்க்கு - சிற்றளவாயினும் செய்த அறச் செயலன்றி உயிர்க்கு அடையும் பயன் வேறு
சிறிதும் இல்லை.
(க-து.) செய்யும் நல்வினைகளே உயிரோடு தொடர்ந்து வரும்.
(வி-ம்.) "வாழச் செய்த நல்வினை யல்லது, ஆழுங் காலைப்புணைபிறி தில்லை" என்றார் பிறரும். வாழ்நாள் சிறிதாதலை நினைந்து ‘எனைத்தூழி வாழ்தியோ' எனப்பட்டது. எனைத்தும் இல்லை என்று கூட்டுக : ‘உயிர்க்கு' என்ற¬யிமயன் மறுமை பெறப்படும்.
0 Comments