381 அரும்பெறற்
கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் -
விரும்பிப்
பெறுநசையாற் பின்னிற்பா ரின்மையே
பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை.
(பொ-ள்.) அரும்பெறல் கற்பின்அயிராணி அன்ன பெரும் பெயர்ப்
பெண்டிர்எனினும்-பெறற்கரிய கற்பொழுக்கமுடைய அயிராணிஎன்னுந் தேவர்கோன் மனைவிபோல்
வாழ்க்கையிற்பெரிய புகழ்வாய்ந்த மகளிராயினும், விரும்பிப்பெறு நசையால் பின் நிற்பார் இன்மையே பேணும்நறுநுதலாள்
நன்மைத்துணை - அவருள், உணவு முதலியபொருள்களை விரும்பி அவற்றை
அடையும் வேட்கையால்தன் பின்னே இரந்து நிற்கும் இரவலர்இல்லாமையையே தனது இல்லற
வொழுக்கத்தாற்காத்தொழுகும் இயற்கை மணங் கமழு நெற்றியையுடையபெண்ணே அவ் வில்லறத்தின்
பயன்களாகியமேன்மேல் நன்மைகட்குத் துணையாவாள்.
(க-து.) கற்புடை மகளிர்க்கு விருந்துபுறத்தரும் இயல்பு இன்றியமையாதது.
(வி-ம்.) கற்பாவது, கணவன்பால்ஆழ்ந்த
அன்புணர்வுடைமை. அயிராணியின் கற்புக்கூறவே இவரது கற்பும் பெறப்பட்டது. படவே,பின்னிற்பாரென்றது இரவலர்க்காயிற்று. அயிராணிகூறப்பட்டமையின், கற்பொழுக்கத்தோடு திரு உருமுதலிய ஏனைப் படைப்புக்களும்
பெறப்பட்டன.இல்லறவொழுக்கமாவது, அறவோர்க்களித்தல்முதலியன;
அவற்றுள்ளும் விருந்து புறந்தருதல் மிகஇன்றியமையாததாதலின், ‘பின்னிற்பாரின்மையேபேணும் நறுநுதலாள் துணை' யெனப்பட்டது,"இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மைசெய்தற் பொருட்" டென்றார்
நாயனாரும்.வீடுபயக்கும் அருணெறிக்கு ஏதுவாய்ப் பொருள்களிற்பற்றின்றி நின்று உலகில்
அறம் வளர்க்கும்பயிற்சியே இல்லறத்தின்கண்நடைபெறுதற்குரியதாகலின், ஒரு பயனுங் கருதாதுஆருயிர்களை ஓம்புதலாகிய விருந்து
புறந்தருதலின்இன்றியமையாமை இவ்வாறுணர்த்தப்பட்டது. இல்லம்போதுவார் குறிப்பறிந்து,
அவரை இரவலராக்காதுஉடனே விருந்தாக ஏற்றொழுகுக வென்பார்,பின்னிற்பா ரின்மையே பேணும்' என்றார்.ஏகாராம்;
தேற்றம். நன்மையென்றது, தவம் முதலியதுறவற
நிலைகளை.
382 குடநீரட்
டுண்ணும் இடுக்கட் பொழுதுங்
கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும்
கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.
(பொ-ள்.) குடம் நீர் அட்டுஉண்ணும் இடுக்கண் பொழுதும் கடல் நீர் அற
உண்ணும்கேளிர் வரினும் - குடத்திலுள்ள நீரையேகாய்ச்சிப் பருகிப் பசியாறும்
இன்னாக்காலத்தும் கடல் நீர் முழுமையும் உண்டுபசியாறுதற்குரிய அத்தனை உறவினர்
ஒருங்குவிருந்தாக வந்தாலும், கடன் நீர்மை கை
ஆறாக்கொள்ளும் மடமொழி மாதர் - அந்நேரத்தில், தன்கடமையாகிய
விரும்தோம்புமியல்பைச்செயன்முறையாக மேற்கொள்கின்ற மென்மையானசொற்களையுடைய பெண்ணே,
மனை மாட்சியாள் - இல்லறவாழ்க்கைக்குரிய மாட்சிமையுடையவளாவாள்.
(க-து.) எந்நிலையிலும்விருந்தோம்பும் இயல்பே மனை மாட்சியாகும்.
(வி-ம்.) நீரையேனும் நிரம்ப உண்டுபசியாறுதல் கருதிக் ‘குடம்நீ' ரென்னப்பட்டது."விருந்துகண்டொளிக்குந்
திருந்தாவாழ்க்கைப், பொறிப்புணர்உடம்பிற்றோன்றிஎன், அறிவுகெட நின்றநல்கூர்மை" என்றதூஉங் காண்க.உறவினர்க்கு விருந்தோம்பல்
இயலாத நிலையேஇல்லறத்தார்க்கு இடுக்க ணென்பதாகலின் வறுமைப்பொழுதை ‘இடுக்கட்பொழு'
தென்று விதந்தார்.‘கடனீரறவுண்ணு' மென்றது
கேளிரின் பன்மையுணர்த்திநின்றது. வரினும் என்னும் உம்மை எதிர்மறையாய்வருதலின்
அருமையுணர்த்திற்று. கடன் கீழ்ச்செய்யுளிற் கூறப்பட்டது. மனைமாட்சியாள்
என்னும்ஒருமையால் மாதர், குற்றுகரப் போலியென்று கொள்க.
383 நாலாறும்
ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.
(பொ-ள்.) நால் ஆறும் ஆறாய், நனிசிறிதாய், எப்புறனும் மேல் ஆறு மேல்உறை சோரினும்- வீடு நாலாபக்கமும் இடிந்து
வழியுடையதாய்; மிகவுஞ்சிறியதாய், எந்தப்
பக்கமும் கூரை கலனாகிமேல்வழியாய்த் தன்மேல் மழை ஒழுகுவதாய் அத்துணைவறிய நிலையிலிருப்பினும்,
மேலாயவல்லாளாய்வாழும் ஊர் தன் புகழும் மாண்கற்பின் இல்லாள்அமர்ந்ததே
இல் - உயர்ந்தஇல்லறவொழுக்கங்களில் திறமையுடையவளாய் அதனால்தான் வாழும் ஊரவர்
தன்னைப் புகழ்ந்தேத்துகின்றமாட்சிமையான கற்பு நிலையுடைய மனைவிஅமர்ந்திருக்கும்
வீடே வீடெனப்படும்.
(க-து.) செல்வம் முதலியவற்றைவிடஇல்லக்கிழத்தியின் நற்குணமே
இல்வாழ்க்கைக்குமுதன்மையானது.
(வி-ம்.) மேலாய: பெயர். வறியநிலையிலும் இன்சொல் முதலிய நலங்களுடன் மனம்அமைய
விருந்தோம்புதல் செய்தலின், ‘வல்லாளாய்'என்றார். தற்புகழும் இல்லாள் என்க.இல்லறவொழுக்கமுடையது இல்லம்
எனப்படுமல்லதுஏனைச் செல்வச் சிறப்புடையன அஃதாகாவென்பதுகருத்து. இவை
மூன்றுபாட்டானுங் கற்புடை மகளிர்க்குமுதன்மையாவன விருந்து புறந்தரல் முதலிய
இல்லறக்கடமைகளென்பது விளக்கப்பட்டது."உள்ளதுதவச்சிறிதாயினும் மிகப்பல
ரென்னாள் நீள்நெடும் பந்தர் ஊன்முறை யூட்டும் இற்பொலிமகடூஉ" என்றதூஉங் காண்க.
384 கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், - உட்கி
இடனறிந் தூடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.
(பொ-ள்.) கட்கு இனியாள் காதலன்காதல் வகை புனைவாள் - பார்வைக்கு
இனியஇயற்கையழகுடைய வளாய்த் தன் காதலன் விருப்பப்படிசெயற்கைக் கோலங்கள் செய்து
கொள்வாளும், உட்குஉடையாள் ஊர்நாண் இயல்பினாள்
- தனதுகற்பொழுக்கச் சீரினாற் கண்டாரெவரும் அஞ்சும்மதிப்புடையவளாய்த் தான் வாழும்
ஊரிலுள்ளமகளிரெல்லாரும் தன்னுடைய இல்லறச் செய்கைகளின்திறமைக்கு வியந்து
நாண்கொள்ளற்குரியமாட்சிமையுடையாளும், உட்கு இடன் அறிந்து
ஊடிஇனிதின் உணரும் மடமொழி மாதராள் - தன்கணவன்பால் உள்மதிப்புக்கொண்டு
செவ்வியறிந்துஊடியும் அஃது இனிதாம்படி அவ்வூடல் நீங்கியும்இன்பம் விளைக்கும்
மென்மையான மொழிகளையுடையபெண்ணே, பெண் - இல்வாழ்க்கைக்குரிய
வாழ்க்கைத்துணையாவள்.
(க-து.) தோற்றமும் ஒழுக்கமும்காதலுமுடைய மாது சிறந்த வாழ்க்கைத் துணையாவாள்.
(வி-ம்.) இல்லக் கிழத்தியின்அறுவகை நலங்களை மூவிரு முகமாக இச்
செய்யுள்வகுத்தோதிற்று. இனியாள் புனைவாள் ஓரிரு ஓவகையும்,உடையாள் இயல்பினாள் மற்றோரிருவகையும், ஊடுவாள்ஊடலுணர்வாள் பிறிதோரிரு வகையுமாயின. இறுதிப்பகுதி ஊடி உணருமென்று
வந்தமையான், ஏனைப்பகுதிகளும்அவ்வாறே எச்சமும் முடிவுமாய்
உரைக்கப்பட்டன.தனக்கென்றொரு புனைவின்மையின் ‘காதலன் காதல்வகை புனைவா' ளென்றார். கணவன் பிரிவிற் கண்ணகிவாடிய மேனி வருத்தத்தோடு இருந்தமை ஈண்டுநினைவுகூரப்படும். உணர்தல். தெளிதல்
: ஊடல் சிறிதுநீட்டிப்பினும் இன்பங்கெடுமாகலின் அளவறிந்துணர்தல் தோன்ற, ‘இனிதினுணரு' மென்றார்;கணவன்மாட்டு
உட்கின்றி இஃதியலாமையின் ‘உட்கிஊடி உணரும்' எனப்பட்டது.
இதனாற் கற்புடைமகளிரின்நலங்கள் தொகுத்துரைக்கப்பட்டன.
385 எஞ்ஞான்றும்
எங்கணவர் எந்தோள்மேற் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ
பொருள்நசையாற்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.
(பொ-ள்.) எஞ்ஞான்றும் எம் கணவர்எம் தோள் மேல் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்றுகண்டேம்போல் நாணுதும் - எம் கணவர் எந்நாளும்எம் தோள்மேல் முயங்கியெழுந்தாலும்
தலைநாளிற்கண்டேம்போல் அவர் பால் யாம்நாணமுடையமாயிருக்கின்றேம்; எஞ்ஞான்றும் பொருள்நசையாற் பன் மார்பு
சேர்ந்தொழுகுவார் என்னைகெழீஇயினர் கொல்லோ - அவ்வாறிருக்க, பொருள்வேட்கையால்
எந்நாளும் ஆடவர்பலர் மார்புகளைச்சற்றும் நாணின்றிக் கூடியொழுகும் பரத்தையர்தமதுள்ளத்தில்
என்னதான்உடையராயிருக்கின்றனரோ;
(க-து.) கற்புடை மகளிர்க்கு நாணமுதலிய பெண்மை யியல்புகள் அணிகளாகும்.
(வி-ம்.) எம் என்னும் பன்மைஉயர்வு கருதிற்று. தோள் இன்பந்துய்த்தற்கு இலக்கணை.
ஆலுங் கொல்லும் அசை.பொருள் நசையால் என்றது இயல்பு உணர்த்தியபடி.பொருணசையாற்
சேர்ந்தொழுகலின் காதலுமின்றிப்பன்மார்பு சேர்ந்தொழுகலின் கற்பும்
நாணுமின்றிஅவம்படுதலின், அவரெல்லாந்
தமதுயிரில்என்னைகெழீஇயினரோ என்று குலமகள் ஒருத்திதனக்குள் வியந்து கூறுவாளாயினள்.
உயிரினுஞ்சிறந்ததாய் நாணும் நாணினுஞ் சிறந்ததாய்க்கற்புமிருத்தலின், அவை யிரண்டு மில்லாதஉயிர் யாதுமில்லாத தாயிற்று. ஆதலின்கெழீஇயினரோவென்னும்
வினா ஈண்டு எதிர்மறைப்பொருளது. முதன்மைபற்றி நாண் கூறினமையின், அச்சம்மடம் பயிர்ப்பென்னும் ஏனைப்பெண்மையியல்புகளுங் கொள்ளப்படும்.
386 உள்ளத்
துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; -தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.
(பொ-ள்.) உள்ளத்து உணர்வுடையான்ஓதிய நூல் அற்று - உள்ளத்தில்
இயற்கைநுண்ணுணர்வுடையதா னொருவன் கற்ற கல்வியறிவையொத்த தாயும், வள்ளன்மை பூண்டான்கண்ஒண்பொருள் அற்று - இயற்கையிற்
கொடைக்குணம்உடையானொருவனிடத்து மாட்சிமைப்படுகின்ற ஒள்ளியசெல்வத்தை ஒத்ததாயும்,
தெள்ளிய ஆண் மகன்கையில் அயில்வாள் அனைத்து -
வாட்பயிற்சியில்தெளிவடைந்த வீரமிக்க ஆடவனொருவன் கையில்விளங்கும் கூரிய வாட்படையை
ஒத்ததாயும்இருக்கின்றது, நாண் உடையாள் பெற்ற நலம் -
நாணம்முதலிய பெண்ணீர்மைகளுடைய கற்புடைப்பெண்ணொருத்தி பெற்ற அழகு முதலிய
நலங்களென்க.
(க-து.) மகளிர்க்கு நாண முதலியபெண்மைப் பண்புகளிருப்பின், அவர்க்கு ஏனைநலங்களுஞ் சிறக்கும்.
(வி-ம்.) அற்றென்பதைஒண்பொருட்குங் கொள்க. உவமைகளால் அறிவும்கொடையும்
வீரமுமாகிய ஆடவரியல்புகள் பெறப்பட்டன; அனைத்தே மகளிர்க்கு நாண் என்பது கருத்து. குறித்த ஆணியல்புகளின்றேற்
கல்வியும் பொருளும் கருவியும் மாட்சிமைப் படாமைபோல, நாண்
முதலிய பெண்ணீர்மைகளின்றேல் எவ்வகை நலனும் பயனில்லன வென்பதாம். நலமென்றது, அழகு முதலிய பலவகை நன்மைகளை, இவை யிரண்டு பாட்டானும்
கற்புடை மகளிர்க்குரிய நாணினது நன்மை கூறப்பட்டது.
387 கருஞ்கொள்ளுஞ்
செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன்; -ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன்
நீராடாது
என்னையுந் தோய வரும்.
(பொ-ள்.) கருங்கொள்ளும்செங்கொள்ளும் தூணிப்பதக்கு என்று ஒருங்கு
ஒப்பக்கொண்டானாம் ஊரன் - மருதநிலத்து ஊரில்இருந்துகொண்டே அவ்வூரானொருவன்
தாழ்ந்தகருங்கொள்ளையும் உயர்ந்த செங்கொள்ளையும் ஒரேவிலைக்குத் தூணிப்பதக்கு என்று
ஒரே அளவாகஒன்றாய் வாங்கினானாம்; ஒருங்கு ஒவ்வாநல்நுதலார்த்
தோய்ந்த வரைமார்பன் நீராடாதுஎன்னையும் தோயவரும் - அதுபோலப்பெண்மையியல்பில் என்னோடு
ஒருங்கு ஒவ்வாத நல்லநெற்றியையுடைய பரத்தையரை மருவிய மலைபோலும்பெரிய மார்பினையுடைய
என் கணவன் நீராடுதலுஞ்செய்யாது என்னையும் மருவ வருகின்றனன். (ஈதென்னமுறை)
(க-து.) கற்புடை மகளிர் தூயர்.
(வி-ம்.) தூணி யென்பது நான்குமரக்காலும் பதக்கென்பது இரண்டு
மரக்காலுமாய்த்தூணிப் பதக்கென்பது ஆறு மரக்காலளவையுணர்த்திற்று. ஆம் என்பது
இகழ்வின் மேற்று.உருவில் மட்டும் ஒத்து அழகியராய் உள்ளத்தால்ஒவ்வாரான
பரத்தையரென்றற்கு ‘நன்னுதலா'ரென்றும்.
‘ஒருங்கொவ்வா' வென்றுங் கூறினார். மேன்மாசினும்மனமாசு தீயதாய் மேற்புறத்தைப்
பின்னுந்தீதாக்கி ஊறுவிளைத்தலின், தலைவிபெரிதஞ்சினாள். "மனத்துக்கண்மாசிலனாதல் அனைத்தறம்" என்றதூஉம்இக்கருத்தின் மேற்று.
‘நீராடா' தென்னுங்குறிப்பால் இவ்வச்சமும், பரத்தையர்இழிவுடையராய்த் தன்னோடொவ்வாமையும் ஆனால்தலைமகன் ஒப்புக்
கருதினமையும், கணவர் எத்துணைத்தவறுடையராயினும் கற்புடை
மகளிர் அவரது திருத்தம்விரும்புவரல்லது வெறுத்து வேறாவரல்ல ரென்பதும்,பிறவும் பெறப்படும். இது, பரத்தையர்
மாட்டுப்பிரிந்து வந்த தலைமகனோடு ஊடிய தலைமகள் தன்னுட்கூறியது.
388 கொடியவை
கூறாதி பாண! நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று -
துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற் கதனால்
வலக்கண் அனையார்க் குரை.
(பொ-ள்.) கொடியவை கூறாதி பாண -பாண! கேட்க இன்னாதனவான தலைவனைப் பற்றியநயவுரைகளை
எம் மிடங் கூறாதே; நீ கூறின் -
நீகூறுவதானால், துடியின் இடக்கண் அனையம் யாம் ஊரற்குஅதனால் -
ஊரனான எம் தலைவனுக்கு யாம் உடுக்கையின்இடப்பக்கத்தை ஒத்துப்
பயன்படாமலிருக்கின்றேமாதலால், அடி பைய இட்டு ஒதுங்கிச்
சென்று வலக்கண்அனையார்க்கு உரை - மெல்ல அடியிட்டு நீங்கிப்போய் அவ்வுடுக்கையின்
வலப்பக்கம்போற்பயன்படுதலுடைய பரத்தையர்க்குக் கூறு.
(க-து.) கற்புடை மகளிர் தமதூடுதலாற்கணவரது திருத்தத்தை நாடுதற்குரியர்.
(வி-ம்.) பரத்தையிற்பிரிந்துவந்த தலைமகனைப் பற்றி நயவுரைகள்கூறிக்கொண்டு பாணன்
வாயில்வேண்டத் தலைவிமறுத்தமை கூறியது. இது புலவியாற்சினக்குறிப்போடிருந்தமையால்
நயவுரைகள் கொடியவையாயின. பாணன் தலைவனுக்குத் தூதாக வந்தவன்;அஞ்சிப் பதுங்கி யொதுங்கிச் செல்லும்அவனதிழிந்த
நடையியல்பு கூறி இகழ்வாள், ‘அடி பையஇட்டொதுங்கிச் சென்று'
என்றாள். துடிக்குக்கண்ணென்றது அதன்கண் ஒலியெழுப்பும் இடம்.
உவமைபயன்படாமையும் பயன்படுத்தலுங் காட்ட எழுந்தது.யாம் என்னும் பன்மை
உயர்வினின்றது. ஊரன்,மருதநிலத்துத் தலைவன்; ஊடல் மருதத்தின்உரிப்பொருளாகலின் இவ்வாறு கூறுதல் மரபு.இச் செய்யுட்
கருத்து இவ் வதிகாரத்தின் இறுதிச்செய்யுளினும் வரும்.
389 சாய்ப்பறிக்க
நீர்திகழுந் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன், - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம்
நோக்கி யிருந்தேனும் யான்.
(பொ-ள்.) சாய் பறிக்க நீர்திகழும் தண்வயல் ஊரன்மீது ஈப் பறக்கநொந்தேனும்
யானேமன் - கோரைகளைப்பறித்துவிடுதலால் நீர் நன்கு விளங்கித்தெரிகின்ற குளிர்ந்த
வயல்களையுடைய ஊரனாகிய என்தலைவன் மேல் முன்னெல்லாம் ஓர் ஈ வந்து உட்காரஅதுபொறாமல்
வருந்தியவளும் யானே; தீப்பறக்கத்தாக்கி
முலை பொருத தண் சாந்து அணி அகலம்நோக்கி இருந்தேனும் யான் - தீப்பொறி
பறக்கப்பரத்தையர் தம் கொங்கைகளால் ஞெமுக்கிக்கலவிசெய்த, குளிர்ந்த
சந்தனமணிந்த அவனது அகன்றமார்பினை இப்போது பார்த்துப்பொறுத்திருந்தவளும் யானே காண்.
(க-து.) கற்புடைய மகளிர்க்குத் தங்கணவர் மாட்டு அன்பு எந்நிலையிலும்
குன்றாது.
(வி-ம்.) களைகளாகிய கோரைகளைப்பறித்துவிட நீர் நன்கு விளங்கித் தெரிதல்போல,பரத்தையிற் பிரிவென்னுந்தலைவனதுகுறையொன்றனைக்
கருதாதுவிட அவன் நலங்கள் நன்குவிளங்கிக் பெரிதும் இன்பஞ் செய்கின்றனவாதலின்,
அந்நலங்களால் யான் கவரப்பட்டுப்பொறுப்பேனாயினே னென்பது தலைவியின்
விடை..புலவாது நின்றனை யென்ற தோழிக்குத் தலைவி கூறியதுஇது. "ஊடியிருப்பினும்
ஊரன் நறுமேனி கூடலினிதாம்எனக்கு" ஐந்திணையைம்பதினும்
இது வரும்.முன்னே பொறாதிருந்தே னென்றமையின், மன்
கழிவுப்பொருளினின்றது. ‘தண்சாந் தணியகல' மென்னுங்குறிப்பால்
தலைவன் நலங்கள் பைய வெளிப்படும்.பின் வந்த யான் என்பதற்கும் ஏகாரங் கொள்க.
390 அரும்பவிழ்
தாரினான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்
இடைக்கண் அனையார்க் குரை.
(பொ-ள்.) அரும்பு அவிழ் தாரினான்எம் அருளும் என்று பெரும்பொய் உரையாதி பாண
-அரும்புகள் போதாகி மலரும் மாலையை யணிந்த எம்தலைவன் எமக்குத் தலையளி செய்ய
வருகின்றனன்என்று பெரியதொரு பொய்ம்மொழியை, பாண!எம்மிடம் மொழியாதே கரும்பின் கடைக்கண்அனையம் நாம் ஊரற்கு அதனால்
இடைக்கண்அனையார்க்கு உரை - ஊரனாகிய எம் தலைவர்க்கு யாம்கரும்பின் நுனிக் கணுக்கள்
போலச் சுவையிலேமாயிருக்கின்றனமாதலின் அதன் நடுக் கணுக்களையொப்ப அவற்குச் சுவை மிக
உடையரானபரத்தையரிடம் அதனைச் சொல்.
(க-து.) கற்புடை மகளிர், கணவன்வருகையில்
அன்புடையராயிருப்பர்.
(வி-ம்.) தலைவன் வருகை தனக்குப்பொய்யெனவே பாரத்தையர்க்கு
மெய்யாதல்பெறப்படுதலின், ‘இடைக்கண்ணனையார்க்குரை'யென்றாள். ‘பொய்யுரையாதி' யென்னுங் குறிப்பால்,அவன் அருளுதல் மெய்யாதல் வேண்டுமென்னும்தலைவியின் வேட்கை பெறப்படும்.
கண்ணென்றது கணு.கரும்பின் நுனி இடைப்பகுதிகளின் சுவையியல்புமுன்னும் வந்தது. இவை
நான்கு பாட்டானும்கணவன் தவறுடையானாயினும் தாம் பொறுமையுடையராய்அன்பின் நீங்காது
தமது புலத்தலால்அவனைத்திருத்தி ஏற்றுக்கோடலாகிய கற்புடைமகளிரது மற்றொரு கடமையும்
நுவலப்பட்டது.
0 Comments