மானக்குறைவுக்கேதுவான இரத்தலுக்கு அஞ்சியொழுகுதல்

301 நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று - தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவி னவர்.

(பொ-ள்.) நம்மாலே ஆவர் இநல்கூர்ந்தார் - இவ் வறுமையாளர் நம்உதவியினாலேயே வாழ்வு பெறுதற்குரியர்;எஞ்ஞான்றும் தம்மால் ஆம் ஆக்கம் இலர் - எந்தநாளிலும் தம் வல்லமையால் உண்டாகப்பெறும் வாழ்வுஇல்லாதவர், என்று தம்மை மருண்ட மனத்தார் பின்என்று செருக்கித் தம்மை உயர்ந்தோராக மயங்கிப்பெருமிதங்கொள்ளும் மனப்பான்மையுடையார்பின்னே, தெருண்ட அறிவினர்தாமும் செல்பவோ -தெளிந்த மெய்யறிவினையுடைய மேலோரும் இரந்துசெல்வரோ? செல்லார்.

(க-து.) பிறரை எளியராகவுந்தம்மைப் பெரியராகவுங் கருதும்உள்ளமுடையோர்பால் இரத்தற்கு அஞ்சுதல் வேண்டும்.

(வி-ம்.) ஆதல், ஈண்டு வாழ்வுபெறுதல்; ஆக்கம் என்றதும் அது. தம்மால் என்றார்,தமது முயற்சி வல்லமையால் என்றற்கு. தக்கோர்க்குஉதவி செய்தே தாம் பெரியராதல்வேண்டுமென்றறியாமையின்மருண்ட' என்றும்,வாழ்க்கையின் பயனாகிய தெளிவு பொருளினாலேயேவருவதன்று என்றறிந்தொழுகுதலின் ‘தெருண்ட' என்றுங்கூறினார். ‘மருண்ட மன' மென்றும் ‘தெருண்ட அறி'வென்றுங் கூறிய வேறுபாடும் அறிதற்குரியது.

302 இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு.

(பொ-ள்.) இழித்தக்க செய்துஒருவன் ஆர உணலின் பழித்தக்க செய்யான்பசித்தல் தவறோ - இழிக்கத்தக்க மானக்குறைவானசெயல்களைச் செய்து ஒருவன் வயிறார உண்ணுதலைவிடஉலகம் பழிக்கத்தக்க அச்செயல்களைச்செய்யானாய் வறுமையாற் பசியோடிருத்தல்தவறாகுமோ?, ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்புவிழித்து இமைக்கும் மாத்திரையன்றோ-ஏனென்றால்,அழிக்கப்பட்டு ஒருவன் பிறக்கும் பிறப்புஇமைத்துப் பின்கண் திறக்கும்நொடிப்பொழுதாமன்றோ?

(க-து.) நொடிப்பொழுதில்மாய்தற்குரிய இப்பிறவியின் பொருட்டுமானக்குறைவான இரத்தல் செயலைச் செய்து உயிர்பிழைத்தல் ஆகாது.

(வி-ம்.) இழி பழி என்பன ஈறுகுறைந்து நின்றன. இழித்தக்க, பழித்தக்க என்பவை,பெயர்கள். இழிவுடைய செயல்கள்பழிப்புடையனவாகலின், ‘இழிக்கத்தக்க'‘பழிக்கத்தக்க' எனக் காரண காரியமாகவேறுபடுத்திக் கூறப்பட்டன. அழித்துப் பிறக்கும்என்றதற்கேற்ப, இமைத்து விழிக்கும் என்றுமாற்றிக்கொள்க. ‘பிறந்தவர் சாதலும் இறந்தவர்பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றதுண்மையின்’ இங்ஙனம் கூறினார். உயிரின்பெருங்குண விளக்கமே பிறவியெடுத்தலால் ஒருவன்அடைய வேண்டும் பயனாகலின், அப்பெருங் குணம்அழியப் பிறவியை ஓம்புதல் வீண் என்றபடி.பிறாண்டும் ஏற்றவற்றிற் கிங்ஙனம்உரைத்துக்கொள்க.

303 இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
செல்லாரும் அல்லர் சிறுநெறி - புல்லா
அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான்
முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?

(பொ-ள்.) இல்லாமை கந்தா இரவுதுணிந்து ஒருவர் செல்லாரும் அல்லர் சிறுநெறி -வறுமை காரணமாக இரத்தலுக்குத் துணிந்து அச்சிறுவழியில் ஒருவர் செல்லுங் கட்டாயமுடையராதலுங்கூடும்; ஆனால், புல்லா அகம் புகுமின் உண்ணுமின்என்பவர் மாட்டு அல்லால் முகம் புகுதல் ஆற்றுமோமேல் - தாம் செல்லுமுன்பே தம்மை முன்போந்து தழுவி,வீட்டுக்கு வாருங்கள், உண்ணுங்கள் என்றுவரவேற்பாரிடத்தன்றி மேன்மக்கள் ஏனையோரிடம்தலைகாட்டுதல் செய்வரோ? தலைகாட்டாரென்க.

(க-து.) தம்மை வரவேற்காதவரிடம்வறுமை காரணமாகவும் இரத்தற்கு மேலோர் அஞ்சுவர்.

(வி-ம்.) கந்தென்றது, ஈண்டுக்காரணமென்னும் பொருட்டு. "பழைமைகந்ததாக," "காதன்மை கந்தா" என்புழிப்போல. இரத்தல், ‘சிறு நெறி'எனப்பட்டமை கருத்திற் பதிக்கற்பாலது. புல்லா:உடன்பாடு. பிறர்குறிப்பிற்கேற்றவாறு தமது முகத்தைநொடித்துக் கொண்டு நுழையும் இரவின் இழிவுதோன்றத் தலைகாட்டுதல் ஈண்டு ‘முகம்புகுத'லெனப்பட்டது. இவ்விழிவு மேற் செய்யுளிலும் வருதல்காண்க.

304 திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோடு டுயர்வுள்ளி னல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்
றெருத்திறைஞ்சி நில்லாதா மேல்.

(பொ-ள்.) திரு தன்னை நீப்பினும்தெய்வம் செறினும் உருத்த மனத்தோடு உயர்வுஉள்ளினல்லால் - திருமகள் தன்னைத் துறந்தாலும்ஊழ் உருத்தெழுந்தாலும் தாம் மேலும் ‘ஊக்கமுற்றஉள்ளத்தோடு உயர்ந்த செய்கைகளைக் கருதியொழுகுதலல்லால், அருத்தம் செறிக்கும் அறிவிலார்பின் சென்று எருத்து இறைஞ்சி நில்லாதாம் மேல் -செல்வத்தை இறுக்கிப் பிடிக்கும்மெய்யறிவில்லாக் கீழ்மக்கள் பின்னேபோய்மேலோர் தலைவளைந்து இரந்து நில்லார்

(க-து.) திரு நீங்கினும் ஊழ்கறுவினுங்கூட மேலோர் இரத்தற்கு அஞ்சுவர்.

(வி-ம்.) திருபொருளன்று பொருள்பெறுதற்குரிய பேறு. "திருவினும் நிலையிலாப்பொருள்" என்பதன்கண் இவ்வேறுபாடுபுலப்படும். தெய்வமென்றது, அறக்கடவுள்; ஆவது, ஊழ்;"தெய்வப் புணர்ச்சி" என்பதிற்போல, உருத்த - உருக்கொண்ட ; முனைந்தவென்க. எருத்து - கழுத்து; எருத்திறைஞ்சி நிற்றல்இரத்தலின் இழிவு காட்டிற்று. மேல், மேலோர்க்குஆகு பெயர்; நில்லா தென்னும் அஃறிணை முடிபு மேல்என்னுஞ் சொல் கருதிற்று. இவ்வாறு முற்செய்யுளினும்வந்ததை நினைவு கூர்க.

305 கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை; -இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.

(பொ-ள்.) கரவாத திண் அன்பின்கண் அன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம்வாழ்க்கை - தமக்கொன்று ஒளியாத உறுதியானமெய்யன்பின்னையுடைய கண்போன்றஅன்பர்களிடத்தும் யாதும் இரத்தல் செய்யாதுவாழ்வது வாழ்க்கையாகும்; இரவினை உள்ளுங்கால்உள்ளம் உருகும் - இரத்தலாகிய செயலைநினைக்கும்பொழுதே உள்ளம் கரைந்து அழிகின்றது;கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு என் கொலோ -அவ்வாறானால், பிறரிடம் ஒன்று ஏற்குங்காலத்தில்அங்ஙனம் ஏற்பவரது கருத்துத்தான் எவ்வாறு நையாநிற்கும்!

(க-து.) அன்பர்களிடத்தும்இரக்குந்தொழில் உயிராற்றலை ஒடுக்கும்.

(வி-ம்.) அன்பின் அன்னாரென்க.ஆலுங்கொல்லும் அசை. குறிப்பு என்றார், அவர்கருத்து அந்நேரத்தில், இடுவார் கருத்தின்வழியெல்லாம் இயங்கி ஒன்று பெறுதலில் முனைந்துநிற்றலின், அன்பரிடத்தும் இரத்தல்அஞ்சுகவென்பது இச் செய்யுளிற் பெறப்பட்டது."கரவாது உவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும்,இரவாமை கோடி யுறும்." "இரவுள்ளம் உள்ளம்உருகும்" என்னும் நாயனார் திருமொழிகள் இங்குஒப்பு நோக்கற்பாலன.

306 இன்னா இயைக இனிய ஒழிகென்று
தன்னையே தானிரப்பத் தீர்வதற் - கென்னைகொல்
காதல் கவற்றும் வனத்தினாற் கண்பாழ்பட்
டேதி லவரை இரவு.

(பொ-ள்.) இன்னா இயைக இனிய ஒழிகஎன்று தன்னையே தான் இரப்பத் தீர்வதற்கு - தூயமெய்யுணர்வு உண்டாதற்கு உலகத் துன்பங்களேஏதுவாயிருத்தலின். அத்துன்பங்கள் வந்துபொருந்துக,இன்பந் தருவன நீங்குக என்று தன் உள்ளத்தையே தான்வேண்டித் தெளிவு செய்துகொள்ள அதனால்தம்மைவிட்டு நீங்கிவிடுதற்குரிய பொருள்முடைக்காக; காதல் கவற்றும் மனத்தினால் கண்பாழ்பட்டு ஏதிலவரை இரவு என்னைக்கொல்-அதற்குமாறாய், அப் பொருளின்மேற் கொள்ளும் அவாவருத்துகின்ற மனத்தினால் அறிவு பாழாகிய அயலாரைஒன்று இரத்தல் ஏன்?

(க-து.) பொருளால் வருந் துன்பத்தைநோக்கி அதனைத் துறக்குந்தெளிவுடையோர்,அப்பொருளுக்காகப் பிறரை இரக்க அஞ்சுவர்.

(வி-ம்.) தீர்வது, பெயர்:நான்கனுருபு பொருட்டுப் பொருளது. கண் என்றது அறிவு."பெரியோர்ப் பிழைப்பதோர்கண்ணிலியாகும்" என்பதனானுங் காண்க.அவாவால் அறிவு மறைக்கப்படுதலின், ‘காதல் கவற்றுமனத்தினாற் கண் பாழ்பட்'டென்றார். இரவாழிதற்கு இச்செய்யுளிற் கருவி கூறப்பட்டது.

307 என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்
தென்று மவனே பிறக்கலான் - குன்றின்
பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட!
இரப்பாரை எள்ளா மகன்.

(பொ-ள்.) குன்றின் பரப்பெலாம்பொன் ஒழுகும் பாய் அருவி நாட - மலையின் பரந்தஇடமெல்லாம் பொன் பரவுதற்கு ஏதுவான பாயும்மலையருவிகளையுடைய நாடனே!. என்றும் இவ்வுலகத்துப்புதியார் பிறப்பினும் - இந்த உலகத்தில் என்றும்புதிக மக்கள் பிறந்தாலும், என்றும் அவனேபிறக்கலான் - என்றும் அவனொருவனே உண்மையிற்பிறத்தலுடையான்; அவன் யாரெனில்: இரப்பாரைஎள்ளா மகன் - இரந்துண்ணும் எளியோரை இகழாதொழுகும் மகனெனத் தக்கான் என்க; (ஏனையோர்பிறந்தும் பிறவாதவராவர்.)

(க-து.) இரப்பாரை இகழாதவனேமகனெனப் பாராட்டப்பட்டுப் பிறப்பின்பயனெய்துவோனாவன்.

(வி-ம்.) புதியாரென்றது, புதியவடிவினையுடைய மக்கள்; அவனே என்று முதலிற்சுட்டினால் உணர்த்திப்பின் விளக்கினார், இதுசெய்யுளாகலானும் உலகத்தில் அவனொருவனே பலரானும்மனிதனாக மதிக்கப்பட்டு பிறவியின் பயனுடையனாய்,பாரிவள்ளல் போன்று, ஏனையோரினும் மேம்பட்டுவிளங்குதல் வெளிப்படையாகலானுமென்க. அவன் என்றதுஇனவொருமை. பிறக்கலான் என்பதில் அல்தொழிற்பெய ரீறு.

308 புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின்.

(பொ-ள்.) புறத்துத் தன் இன்மைநலிய - புறத்தே உடம்பைத் தனது வறுமை வருத்தஅதனால், அகத்துத் தன் நல்ஞானம் நீக்கிநிறீஇ-உள்ளத்தில் தனது நல்லறிவை ஒதுக்கிமனந்துணிந்து, ஒருவனை ஈயாய் எனக்கு என்றுஇரப்பானேல் - பொருளாளனொருவனை எனக்கு யாதானும்இடு என்று மானமுடையோன் இரந்து நிற்பானாயின்,மாற்றிவிடின் அந்நிலையே மாயானோ - அவன் இல்லைஎன்று மறுத்துவிட்டால் அந் நொடியே அம்மானிஉயிரழிவானன்றோ? (ஆதலால், இரத்தல்எந்நிலையிலும் அஞ்சுதற்குரிய தென்க.)

(க-து.) மானிகள் இரந்துகருத்தழிதலினும் இரவாது நலிதலே நன்று.

(வி-ம்.) புறத்து என்றார்,உடம்பையும் உலகத்தையும் நினைந்து; நன்ஞானம்என்பதன் குறிப்பானும், ‘நிறீஇ' என்னுங்குறிப்பானும் இரப்பான் என்றது, ஈண்டுமானமுடையோனை யென்க. உள்ளத்தை ஒருவழிநிறுத்தியென்றற்கு நிறீஇ யென்றார்.உயர்ந்தோர், தாழ்ந்தோர்க்கு இடுகின்றதொழில் ஈதலெனப்படுமாகலின், இவ்விழிவுதோன்ற ‘ஈயாய்' எனப்பட்டது. மாய்தலென்றது,சாதலொத்த துன்பமடைதல்; "இரப்பவர்சொல்லாடைப் போஒம் உயிர்" என்றார்திருவள்ளுவரும்.

309 ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
வழிபடுதல் வல்லுத லல்லால், - பரிசழிந்து
செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே
பையத்தான் செல்லும் நெறி?

(பொ-ள்.) ஒருவர் ஒருவரைச்சார்ந்தொழுகல் ஆற்றி வழிபடுதல் வல்லுதலல்லால்- வறுமையாளரொருவர் செல்வரொருவரைச் சார்ந்துஇருந்துகொள்ளுதல் செய்து அவரைப் பின்பற்றியொழுகுதல் கூடுவதன்றி; பரிசு அழிந்து என்னானும்செய்யீரோ என்னுஞ்சொற்குப்பையைத்தான்செல்லுநெறிஇன்னாதே - தமது இயல்பாகிய மானம்அழிந்து ஏதானும் ஈயீரோ என்றிரக்கும்இரப்புரைக்கு, அடக்கமாகத் தான் ஒழுகிக்கொள்ளும்அம்முறைமை தீதாமோ? (அது, இதனினும் மேல் என்க.)

(க-து.) தொழுதுணடு வாழ்தலினும்இரந்துண்டு வாழ்தல் அஞ்சுக.

(வி-ம்.) ஆற்றி என்றார்,அஃதருமையாதலின். மானமே உயிரினியல்பாய்விளங்குதலின், அதனை வாளாபரிசெனவே விதந்தார்.பொறுமையோடு அடங்கி நடத்தல், ‘பையச் செல்லும்'எனப்பட்டது. தொழுதுண்டு வாழ்தல் வறுமையினுஞ் சற்றுவலிவுடைத்தாதல் பற்றி, ‘வல்லுதல், என்னுஞ் சொல்பெய்துரைக்கப்பட்டதென்க. ஏகராம்: வினா.

310 பழமைகந் தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதனுஞ் செய்க: கிழமை
பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்
தறாஅச் சுடுவதோர் நீ.

(பொ-ள்.) பழமை கந்தாகப் பசைந்தவழியே கிழமைதான் யாதானும் செய்க - பழமையாகியநட்பே பற்றுக்கோடாக நண்பர்பால் ஒன்று பெறுதற்குஉள்ளம் விரும்பியவிடத்து உரிமையால் அவ்வாறுஏதேனுஞ் செய்து கொள்க; கிழமை பொறார்அவரென்னின் பொத்தித் தம் நெஞ்சத்து அறாச்சுடுவதோர் தீ - ஆனால், அங்ஙனம் செய்யும் உரிமைச்செயலை அந் நண்பர் பொறாரென்றால், தமதுநெஞ்சத்தில் மூட்டப்பட்டு அம் மானக் குறைவால்உண்டான வேதனை யென்னும் ஒரு தீ என்றும் நீங்காதுசுடுவதாகும். (ஆதலால், உரிமை கருதியும் இரத்தல்அஞ்சப்படுமென்பது. )

(க-து.) பழமை கருதியவிடத்தும்இரத்தலுக்கு அஞ்சுக.

(வி-ம்.) தடுக்கும் அறிவைப்பிற்படுத்தி உள்ளம் இரத்தற்கு மீதூர்ந்துவிழைந்தவழி யென்றற்குப், பசைந்தவழியேயெனப்பட்டது. "பசைஇப் பசந்தன்றுநுதல்" என்றார் பிறரும். இரத்தல்செய்க என்றற்கு உள்ளங்கூசுதலின், ‘யாதானுஞ்செய்க' என்று வேண்டா வகையாய்க் கூறினார்.அங்ஙனம் மனம் பொறுத்து அது செய்தும் அதனை அந்நண்பர் கருதாது கைவிடுவரென்றால், பின்பு, நினையநினையக் கனைந்தெழும் வேதனைத் தீ உள்ளத்தேஅறாது மூண்டுவிடுமாகலின், அந்நிலையினும் இரத்தல்பெரிதஞ்சப்படும் என்பது பின் வரிகளால்உணர்த்தப்பட்டது.