271 நட்டார்க்கும்
நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்;- அட்டது
அடைத்திருந் துண்டொழுகும் ஆவதின்
மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு.
(பொ-ள்.) நட்டார்க்கும்நள்ளாதவர்க்கும் உளவரையால் அட்டது பாத்துஉண்டல் அட்டு
உண்டல் - சமைத்துண்ணுதலென்பது,தமக்குள்ள
பொருளளவினால் தம்மிடம் உறவுகொண்டோர்க்கும் கொள்ளாத விருந்தினர்க்கும்தாம்
சமைத்ததைப் பகுத்துதவிப் பின் தாம்உண்ணுதலாகும்; அட்டது
அடைத்திருந்து உண்டொழுகும்ஆவது இல் மாக்கட்கு அடைக்குமாம் ஆண்டைக் கதவு
-அவ்வாறன்றித் தாம் சமைத்ததைத் தமது வீட்டின்கதவையடைத்துக் கொண்டு தனியாயிருந்து
தாமே உண்டுஉயிர் வாழ்கின்ற மறுமைப் பயனற்ற கீழ்மக்கட்குமேலுலகக் கதவு மூடப்படும்.
(க-து.) இம்மையிற்பிறர்க்கொன்று ஈயாதவர்க்கு மறுமையில்துறக்கவுலகின்பம்
இல்லை.
(வி-ம்.) "கொடையொடுபட்டகுணனுடை மாந்தர்க்கு அடையாவாம் ஆண்டைக் கதவு"
என்றார் முன்னும் . ஈயப்படும் பொருள்களில்உணவு முதன்மை யானதாகலின், அதனை ஈண்டுக் கூறினார்.அட்டுண்டல் என்பது, இல்லறம் நடத்துதலென்னும்பொருட்டு : இல்லிருந்து அட்டுண்டு
ஒருவன்இல்வாழ்க்கை நடத்துதலாவது, பாத்துண்டலேயாம்என்பது
பொருள், "தொல்லோர் சிறப்பின்விருந்தெதிர் கோடலும்"
என்றார்பிறரும். ஆவது, மேன்மேற் பிறவியாக்கம் ; மக்கட்பிறவியின் பயனெய்தாமையின் ‘மாக்கள்'என்றார்.
272 எத்துணை
யானும் இயைந்த அளவினால்
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர்;- மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால்
பின்னறிதும் என்பார்
அழிந்தார் பழிகடலத் துள்.
(பொ-ள்.) எத்துணையானும் இயைந்தஅளவினால் சிற்றறம் செய்தார் தலைப்படுவர்
-எவ்வளவு குறைந்த தாயினும் தமக்கிசைந்த அளவினால்சிறிய ஈதலறத்தைச் செய்தார்
பிறவிப்பயனில்முற்படுவர்; மற்றைப் பெருஞ்
செல்வம்எய்தியக்கால் பின் அறிதும் என்பார் அழிந்தார்பழிகடலத்துள் - மற்றுப்.
பெருஞ்செல்வம்எய்தினால் அறம் என்பதைப் பின்பு கருதுவோம்என்றிருப்போர் பிறர்
பழிக்கின்ற துன்பக்கடலில் வீழ்ந்து அழிந்தவராவர்.
(க-து.) அறஞ் செய்யாதவர் இன்னற்கடலில் அழுந்தியவராவர்.
(வி-ம்.) ‘எத்துணையானு' மெனவும்,‘இயைந்த அளவினா' லெனவும், ‘சிற்றறம்'
எனவும்சிறுமைப் பொருள் தோன்றப் பலவுங் கூறியது, மிகச்சிறிதாயினும் என்றற்பொருட்டு. மற்று :வினைமாற்று. ‘கடலத்துள்'
என்றார், நிறைந்த துன்பவாழ்க்கையில் என்றற்கு.
லகர ஈற்றுப் பெயர்அத்துச்சாரியை ஏற்று முடிந்தமை புறனடையாற் கொள்ளப்படும், மீண்டும் தலையெடாமையின்‘அழிந்தா' ரெனப்பட்டது.
273 துய்த்துக்
கழியான் துறவோர்க்கொன்றீ கலான்
வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும்.
(பொ-ள்.) துய்த்துக் கழியான்துறவோர்க்கு ஒன்று ஈகலான் வைத்துக் கழியும்மடவோனை
- தான் துய்த்துச் செலவழிக்காமலும்துறவடைந்த உள்ளத்தார்க்கு ஒன்று
கொடாமலும்செல்வத்தை வாளாதொகுத்து வைத்து உயிர் நீங்கியொழியும் அறிவிலாதானை, வைத்த பொருளும் அவனைநகும் உலகத்து அருளும் அவனை நகும்
- அவன் அவ்வாறுதொகுத்து வைத்த பொருளும் அவன் அறியாமை கண்டுஉலகத்தில் அவனை
நகையாடும், அவன் அப் பிறவியில்தொகுக்காத அருளும் அவனை
நகையாடும்.
(க-து.) ஈயாத குணமுடையோர்க்குப்பொருட் பயனுமில்லை; அருட்பயனுமில்லை.
(வி-ம்.) கழியான் என்பதற்குக்காலங் கழியான் எனலும் ஆம்.
உறவோர்முதலியோர்க்கீதல் முன் வந்த மையின், ஈண்டுத்துறவோர்க்கீதல் நுவலப்பட்டது. "நன்றாய்ந்தடங்கினோர்க்கு
ஈத்துண்டல்" என்றார்பிறரும். "துறவோர்க்கு எதிர்தலும்." எனஇளங்கோவடிகளும்
அருளுதல் காண்க. ஒரு பயனுமின்றிஅவன் பொருண் முயற்சி வீணானமையின், ‘மடவோன்'என்றார். இம்மைப் பயனாகிய
பொருட்பயனையும்மறுமைப்பயனாகிய அருட் பயனையும்ஒருங்கிழந்தமையின் இரண்டும் அவனை
நகும்என்றார். அவனது ஏழைமை புலப்படுத்தும் பொருட்டுநகுமெனப் பட்டது. அவனை என
வேண்டாது விதந்தார்,அப்பழிக்கு அவனே உரியனாதலி னென்க.
274 கொடுத்துலுந்
துய்த்தலுந் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம்
இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப்
பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும்.
(பொ-ள்.) கொடுத்தலும்துய்த்தலும் தேற்றா இடுக்கு உடை உள்ளத்தான்பெற்ற
பெருஞ்செல்வம் - தக்கார்க்கு ஈதலையும்தான் துய்த்தலையுந் தெளியாத இடுக்குப்
பிடித்தஉள்ளமுடையோன் அடைந்த பெருஞ்செல்வமானது,இல்லத்து
உரு உடைக்கன்னியரைப்போலப்பருவத்தால் ஏதிலான் துய்க்கப்படும் - தன் குடியிற்பிறந்து
வளர்ந்த அழகுடைய கன்னிப் பெண்களைப்பருவகாலத்திற் பிறர் அடைந்து நுகர்தல் போலஉரிய
காலத்தில் அயலவரால் துய்க்கப்படும்.
(க-து.) ஈயாதார் செல்வம்கடைசியில் ஏதிலரால் நுகரப்படும்.
(வி-ம்.) தேற்றா : தன்வினைக்கண்வந்தது; "வாயினால் பேசல் தேற்றேன்" என்புழிப்போல. இடுக்குடையுள்ளம், சுருங்குதலுடையஉள்ளம்; என்றது, இவறன்மையுடைய உள்ளம்; உருவுடையென்றார். செல்வமும்
நன்கு திரண்டு வருங்காலத்தில் என்பது தோன்ற. பருவத்தால் என்னும்ஆலுருபு,
"காலத்தினாற் செய்த நன்றி" யென்புழிப்போல ஏழாவதன்
பொருளில்மயங்கிவந்தது. இவனுக்குத் துய்க்கும்இயைபின்மையின் அவ்வியைபுடைய பிறர்
துய்ப்பரென்றபடி.
275 எறிநீர்ப்
பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற் றூறல்பார்த்
துண்பர்
மறுமை யறியாதா ராக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
(பொ-ள்.) எறிநீர்ப் பெருங்கடல்எய்தியிருந்தும் அறுநீர்ச் சிறுகிணற்று
ஊறல்பார்த்து உண்பர் - அலை வீசுகின்றநீர்ப்பெருக்கினையுடைய பெரிய
கடலைஅடுத்திருந்தும், அதன் நீர்
பயன்படாமையால்அடிக்கடி நீர் வற்றுகின்ற சிறிய கிணற்றின்ஊற்றையே மக்கள் தேடிக்கண்டு
உண்பர்; மறுமைஅறியாதார் ஆக்கத்தின் சான்றோர் கழி நல்குரவேதலை
- ஆதலால் மறுமைப் பயனறியாதொழுகும்புல்லியோர் செல்வத்தினும் குணநிறைந்தபெரியோரது
மிக்க வறுமையே மேலானதாகும்.
(க-து.) ஈயாதார் பெருஞ்செல்வராயிருப்பினும் அவரால் நன்மையில்லை.
(வி-ம்.) சான்றோரது சிறியஉதவியும் சற்றும் தீங்கற்றதாய் இருமை
நலங்களும்பயப்பிக்குமாகலின், தலையென்றார். கீழ் 27ஆம்அதிகாரத்திலும் இச்செய்யுளின் உவமைவந்திருத்தலின், அதன் உரையையும் ஈண்டுநினைவுகூர்க.
276 எனதென
தென்றிருக்கும் ஏழை பொருளை
எனதென தென்றிருப்பன் யானும்;- தனதாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்;
யானும் அதனை அது.
(பொ-ள்.) எனது எனது என்று இருக்கும்ஏழை பொருளை எனது எனது என்று இருப்பன்
யானும் -என்னுடையது என்னுடையது என்றுஎண்ணிக்கொண்டிருக்கும் அறிவிலானது
செல்வத்தைநானும் என்னுடையது என்னுடையது என்றுஎண்ணிக்கொண்டிருப்பேன்! ஏனென்றால், தனதாயின்தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான் யானும்
அதனைஅது - அச்செல்வம் அவனுடையதாயின் அதற்கறிகுறியாகஅவன் அதனைப் பிறர்க்குதவாமலும்
அதன் பயனைத்துய்க்காமலும் இருக்கின்றனன்; யானும்அச்செல்வத்தை
அது செய்யாமலிருக்கின்றேன்.[இருவர்க்கும் அதனிடத்தில் வேறுபாடு யாதும்இல்லையாகலின்
என்க.]
(க-து.) பிறர்க்கீயாத பொருள்,அதனை உடையானுக்கும்
உரிமையுடையதன்று.
(வி-ம்.) இச்செய்யுள்பிறனொருவன் கூற்றாகக் கூறப்பட்டது.ஏழையென்றார், செல்வத்தைப் பயன்படுத்திஇன்புறலறியாமையின். ‘அது '
வென்றது வழங்குதலுந்துய்த்தலுஞ் செய்யாமையை
ஈண்டுப்பெயர்ப்பயனிலையாய் நின்றது ; "பெயர்
கொளவருதல்" என்பதனாற் கொள்க. இச்செய்யுள் நகைச்சுவையுடையதாய் நின்றது.
277 வழங்காத
செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார் ;
இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும்
உய்ந்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல.
(பொ-ள்.) வழங்காத செல்வரின்நல்கூர்ந்தார் உய்ந்தார் - பிறர்க்கொன்றுஉதவாத
செல்வர்களைவிட அச்செல்வமில்லாதவறுமையாளர்களே பிழைத்துக்கொண்டவர்கள்;ஏனென்றால், இழந்தார் எனப்படுதல்
உய்ந்தார் -பொருளை வீணே தொகுத்து வைத்துப் பின் ஒருங்கேஇழந்து போனார் என்று
உலகவராற் பழிக்கப்படுதலினின்று அவர்கள் பிழைத்துக் கொண்டனர்;உழந்ததனைக்
காப்பு உய்ந்தார் - வருந்தித் தேடியபொருளைப் பின் காத்தலினின்றுந் தப்பினர்;கல்லுதலும் உய்ந்தார் - அதனைப் புதைத்து வைக்கும்பொருட்டுக் குழி
தோண்டுதலுந் தப்பினர்; தம் கைநோவ யாப்பு உய்ந்தார் -
தம்முடைய கைகள்நோவும்படி அதனைக் கட்டிச் சேமித்தலுந்தப்பினர்; உய்ந்த பல - இன்னும் இவ்வாறு அவர்கள்தப்பிக்கொண்ட வகைகள் பலவாகுமாதலின்
என்க.
(க-து.) ஈயாத செல்வர்க்கு இன்னல்பல உண்டு.
(வி-ம்.) ஈயாமையாற்பயனில்லாமையோடு இன்னலும் பல வுண்மையால்,செல்வத்தின் இன்னலை யெய்தாவறியவர் அவ்வீயாதவரினும்
உய்ந்தவராவரென்றார்.உய்ந்தாரென்று பலமுறை வந்தது வற்புறுத்தல்நோக்கியென்க. உய்ந்த
: வினைப்பெயர்க் கிளவி.
278 தனதாகத்
தான்கொடான் ; தாயத் தவருந்
தமதாய போழ்தே கொடாஅர் ; - தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார், தான்கடியான்
பின்னை அவர்கொடுக்கும் போழ்து.
(பொ-ள்.) தனதாகத் தான் கொடான்- பொருள் தன்னுடையதாக அந்நிலையிலும்
தான்பிறர்க்கு வழங்கான்; தாயத்தவரும் தமதாய
போழ்துகொடார் - அவனுக்குப்பின் அவன் தாயத்தவரும்அப்பொருள் தம்முடையதான காலத்திலும்
வழங்கார்;தனதாக முன்னே கொடுப்பின் அவர் கடியார் -அப்பொருள்
முன்னே தன்னுடையதாயிருக்கஅந்நிலையில் அவன் பிறர்க்கு ஒன்று வழங்கின்அத்தாயத்தவர்
அதனை நீக்கார்; தான் கடியான்பின்னை அவர் கொடுக்கும் போழ்து
-தன்னுரிமைக்குப் பின் அத்தாயத்தவர் பிறர்க்குயாதேனும் வழங்குங்காலத்தில் தானும்
அதனைநீக்கான்; அவ்வாறிருக்கும் போது,உரிமையுள்ளபோதே
பிறர்க்குதவியாய் வாழ்ந்துபயன் பெறாமைக்குத்தான் காரணம் யாதோ?
(க-து.) தனக்குரிமையுள்ளபோதேஈந்து பயன் பெறுதல் நன்று.
(வி-ம்.) ஈயாது தன் தாயத்தவர்க்குவைத்தலால் அவரும் பயன் பெறுதலில்லாமையின்,பின்னுள்ளோர்க்கு வேண்டுமென்று இவறன்மை
செய்துவைத்தலிலும் பயனில்லையென்றும்,தனக்குரிமையுமிருந்து
பிறரால் தடையுமில்லாதகாலத்திற் பொருட்பயனை யடைதலே இனிதென்றும்விளக்கியபடியாகும்.
தலைமுறை தலைமுறையாகப் பொருட்பயனிழக்குங் கீழ்மக்களின் இயல்பு கூறி, இந்நிலைஎத்துணை இரங்கத்தக்கதென ஈயாமையின் இழிவுஇதனாற்
புலப்படுத்தப்பட்டது.
279 இரவலர்
கன்றாக ஈவார்ஆ வாக
விரகிற் சுரப்பதாம் வண்மை;- விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ்.
(பொ-ள்.) இரவலர் கன்றாக ஈவார்ஆவாக விரகின் சுரப்பதாம் வண்மை -
இரப்போர்கன்றுகளை ஒப்பக்கொடுப்போர் ஆன்களைஒப்பப்பூரிப்புடன்
குறையாதளிப்பதேகொடையெனப்படும், விரகு இன்றி, வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய் வைத்துக் கொல்லச் சுரப்பதாங்கீழ் -
அவ்வுயிர்க் கிளர்ச்சியின்றி, கறக்கவல்லவர் தம் விரல்களை
அழுத்தி நோவுண்டாக்க அதுபொறாது பாலை ஒழுகச்செய்யும் ஆன்களைப்போற்சூழ்ச்சியுடையார்
பல வாயில் கள் வைத்து வருத்தக்கீழ்மக்கள் அதனால் தம்பொருளைச்சொட்டுவோராவர்.
(க-து.) மனமகிழ்ச்சியில்லாமற்கொடுப்பதும் ஈயாமையை ஒக்கும்.
(வி-ம்.) விரகென்றது, கிளர்ச்சி;"வெண்குடை விரகுளிகவிப்ப" என்புழிப்போல. ‘சுரப்பதென்றார், ஈவோர்செல்வம் அறாது பெருகி வருதலின், பின்
உவமையில்வடித்தல் கூறினமையானும் கீழ்மக்கள் இயல்பு கூறுதலானும், சுரப்பதாங் கீழ்' என்னுமிடத்துச் சுரப்பதென்பதற்குச்
சொட்டுவரென்றுரைத்துக் கொள்க. கீழ் என்றதற்கேற்பச் சுரப்பதென்பதும் அஃறிணை
முடிபில் நின்றது. வாய்வைத்தல், சூழ்ச்சிகள் செய்தலென்னும்
பொருட்டு.
280 ஈட்டலுந்
துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் -
காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம்
துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.
(பொ-ள்.) ஈட்டலும் துன்பம் -பொருள் திரட்டு தலுந் துன்பம்; ஈட்டியஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்
-திரட்டிய சிறந்த பொருளைப் பாதுகாத்தலும்அவ்வாறே மிக்க துன்பமாகும்; காத்தல் குறைபடின்துன்பம் - அங்ஙனம் பாதுகாத்த முறையில் பொருள்தன் அளவிற்
குறைந்துபோகுமாயின் துன்பமே, கெடின்துன்பம் - இயற்கை
நிகழ்ச்சிகளால் முற்றும்அழிந்துபோகுமானால் பின்னும் துன்பம்; துன்பக்குஉறைபதி பொருள் - ஆதலால், பொருள்துன்பங்களெல்லாவற்றிற்குந்
தங்குமிடமென்க.
(க-து.) துன்பங்களுக்குஉறைவிடமாயுள்ள பொருளைப் பயன்படுத்துமுறை
யறிந்துவழங்குதலே அறிவுடைமையாகும்.
(வி-ம்.) முறையறிந்துபயன்படுத்தினால் அப்போது அஃது இன்பமும் அறமும்பயந்து
தன்னையுடையானை விளக்கமுறச் செய்தலின்,‘ஒண்பொருள்' என்றார், மற்ற
இரண்டனுள் முன்னதுவினைமாற்று; பின்னது அசை, காத்தல் குறைபடின்என்னுமிடத்துக் காத்தலிற் குறைபடின் என உருபுவிரித்துக்
கொள்க. துன்பக்கு என்பதில் அத்துச்சாரியை தொக்கு நின்றது. துன்பம்
என்பதைமனத்தளர்ச்சி என்றுரைத்தார்சிலப்பதிகார அரும்பத உரைகாரர். பிறர்க்குவழங்கி
ஈதலறம் புரிதலால் இத்துன்பங்களெல்லாந்தோன்றாதொழிந்து இன்பமும் உண்டாகுமாயின்,
அதுவன்றோ செயற்பாலதென்பது கருத்து.
0 Comments