பொருந்தாத நட்பினியல்பை விளக்குவது.

231 செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
இறைத்துநீர் ஏற்றம் கிடப்பார், - கறைக்குன்றம்
பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட!
தங்கரும முற்றுந் துணை.

(பொ-ள்.) கறைக் குன்றம் பொங்குஅருவி தாழும் புனல்வரை நல் நாட - கரிய மலைகள்பொங்கும் அருவிநீர் ஒழுகப்பெறுகின்றநீரெல்லையையுடைய சிறந்த நாடனே! செறிப்பு இல்பழங்கூரை சேறு அணையாக இறைத்து நீர் ஏற்றும்கிடப்பர் தம் கருமம் முற்றுந்துணை - கட்டுக்கோப்புப் பிரிந்த பழங்கூரையைடைய வீட்டிற்சேற்றையே அணையாகக் கொண்டு, ஒழுகும் நீரைஇறைத்தும் தம்மேல் ஏற்றும் தமது காரியம்முடியுமளவும் மக்கள் வருந்திக் கிடப்பர், (அதுபோற்பொறுக்க முடியாத குற்றங்களையுடைய பொருந்தாநண்பரிடம் தம் காரியம் நிறைவேறுமளவு மட்டும்நல்லோர் மிக்க இடர்களோடு தொடர்புகொண்டிருப்பர்.)

(க-து.) கூடாநட்பினரை அகங்கலந்தநேயத்துக்கு உரியராக்காது விலக்குதல் வேண்டும்.

(வி-ம்.) கூரை, கூரை வீடு.கிடப்பரென்னும் குறிப்பு,இடர்ப்பாட்டோடிருத்தல் உணர்த்தும். ‘கறை'நிறம் உணர்த்துதல், "கறைமிட றணியிலும்" என்பதனுரையிற் காண்க. உவமம் பிறிது பொருள்புலப்படுத்தி நின்றமையின் இது, ‘பிறிது மொழித'லென்னும் அணி.

232 சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி
வறந்தக்காற் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்காற் சீரிலார் நட்பு.

(பொ-ள்.) வால் அருவி நாட -வெண்ணிறமான மலையருவிகளையுடைய நாடனே!, சீரியார்கேண்மை சிறந்த சிறப்பிற்றாய் மாரிபோல்மாண்ட பயத்ததாம் - தக்கோர் நட்பு மிக்கமேம்பாடுடையதாய் மழைபெய்தாற் போற் சிறந்தபயன் உடையதாயிருக்கும் ; மாரி வறந்தக்காற்போலும் சிறந்தக்கால் சீரிலார் நட்பு.தகுதியில்லாதார் நட்பு மிகுந்தால் மழைபொய்யாதொழிந்தாற்போல் வாழ்க்கைவெறித்திருக்கும்.

(க-து.) கூடா நட்பினாற் பயன்சிறிதுமிராது.

(வி-ம்.) மழைபெய்யாவிடின் வளம்இல்லாமையோடு வெயிலும் உறுத்து நிற்றல்போல்,கூடாநட்பினாற் பயனில்லாமையோடு இன்னலும்மிகுதியா யிருக்குமெனக்கொள்க. தக்கார் உதவிக்குமாரியை உவமை கூறினார். அது கைம்மாறறியாக்கடப்பாடுடையதாகலின். "மாரியன்ன வண்மையிற்சொரிந்து" என்றார் பிறரும். கூடாநட்பினரது நேயம் பலரது நேயமாய்ப்பெருகினாலென்றற்குச் ‘சிறந்தக்கால்'எனப்பட்டது.

233 நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றல் - நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்து ளொன்று.

(பொ-ள்.) நுண்ணுணர்வினாரொடு கூடிநுகர்வுடைமை விண்ணுலகே ஒக்கும் விழைவிற்று - நுட்பஉணர்வுடையாரோடு கலந்து பழகி யின்புறுதல்விண்ணுலகத்தின் இன்பமே போலும் விரும்பப்படும்மேன்மையினையுடையது ; நுண் நூல் உணர்விலராகியஊதியமில்லார்ப் புணர்தல் நிரயத்துள் ஒன்று -நுண்ணிய நூலுணர்வு மில்லாதவராகிய பயனிலாரொடுநேயங்கொள்ளுதல் நரகத்திற் சேர்தலை ஒக்கும்.

(க-து.) கல்வியும் அறிவுமில்லாதகூடாநட்பினரோடு சேர்தலாகாது.

(வி-ம்.) நுண்ணுணர்வென்றுஒன்றிலும் நுண்ணூலுணர்வென்று மற்றொன்றிலும்விதந்தமையால், ஈரிடத்தும் இரண்டுங் கொள்க.என்னை? இரண்டும் இயைந்தன்றி மாட்சியுறாமையின்என்க. நூலுணர்வுமிலராகிய வென இழிவு சிறப்பும்மைதொக்கு நின்றது, கல்வியும் அறிவுமுடையாரை விண்ணுலகின்பம் உடையராகவே கருதுமியல்பு, இந்நூலுள்முன்னும்" வந்தது. "தேவ ரனையர்புலவர்" என்றார் பிறரும். ஆல் : அசை.

234 பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும் - அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட !
பந்தமி லாளர் தொடர்பு .

(பொ-ள்.) அருகெல்லாம் சந்தனநீள்சோலைச சாரல் மலைநாட -பக்கங்களிலெல்லாம் நீண்ட சந்தனச்சோலைகளின் சாரலையுடைய மலைநாடனே!, பந்தம்இலாளர் தொடர்பு பெருகுவது போலத் தோன்றிவைத்தீப்போல ஒரு பொழுதும் செல்லாதே நந்தும் -பிணிப்பான நட்பில்லாதவரது தொடர்புவைக்கோலிற் பற்றிய தீப்போல் முதலிற்பெறுகுவதுபோலத் தோன்றிப் பின்பு சிறிது நேரமும்நிலைத்திராமற் கெடும்.

(க-து.) கூடா நட்பினரது நேயம்உள்ளப் பிணிப் பற்றதாகலின் விரைவில்நிலையாமற் கெடும்.

(வி-ம்.) போலியாகலின்பெருகுவதுபோலத் தோன்றிற்று. ஒரு பொழுது மென்றது,ஈண்டுச் சிறிது நேரமும் என்னும் பொருட்டு. சாரல்தண்ணிய நீர்த்துளிகளோடு கூடிய இனிய தென்றல்.

235 செய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனைச்
செய்யாது தாழ்த்துக் கொண் டோட்டலும் - மெய்யாக
இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறூஉம் பெற்றி தரும்.

(பொ-ள்.) செய்யாத செய்தும் நாம்என்றலும் - பிறர் செய்யாத செயல்களை யாம் செய்துமுடிப்பேம் என்று வீறு கூறுதலும், செய்தவனைச்செய்யாது தாழ்த்துக்கொண் டோட்டலும் - தன்னாற்செய்தற்குரியதை உடனே செய்து முடிக்காமற் காலந்தாழ்த்துக்கொண்டு நாளை ஓட்டுதலும், மெய்யாகஇன்புறும் பெற்றி இகழ்ந்தார்க்கு - உண்மையில்இன்பம் உறுதற்குரிய இயல்புகளைப் பொருள்செய்யாதிருத்தலும் உடையார்க்கு, அந்நிலையேதுன்புறும் பெற்றி தரும் - அம் மனப்பாங்கே அவர்துன்புறுதற்குரிய நிலைமைகளை வருவிக்கும்.

(க-து.) வீம்பு பேசுதல், சோம்பல்கொள்ளுதல், பொருள் செய்யாதிருத்தல் என்பனதுன்பந்தருதலின், அப் பண்புகளைத் தமக்கியல்பாகஉடைய கூடா நட்பினரோடு கூடாதிருத்தல் வேண்டும்.

(வி-ம்.) செய்யாத, பிறராற்செய்ய முடியாதன : பெயர். செயல் தாழ்ந்து நாள்ஓடுதலின், ஓட்டலுமெனப் பட்டது. பொருளல் லவற்றைப்பொருளென் றுணரும் மருளை  மறுத்தற்கு‘மெய்யாக' என்றார். அந்நிலையே என்றார், துனபம்உறுவித்தற்குப் பிற வேண்டா என்றற்கு.

236 ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர்க் குவளையை ஆம்பலொக் கல்லா
பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார்
கருமங்கள் வேறு படும்.

(பொ-ள்.) ஒரு நீர்ப் பிறந்துஒருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையைஆம்பல் ஒக்கல்லா - ஒரு குளத்து நீரில் தோன்றிஒன்றாய் வளர்ந்தாலும் மணம்வீசும் இயல்புடையகுவளைமலர்களை ஆம்பல் மலர்கள் ஒவ்வா ;பெருநீரார் கேண்மை கொளினும் நீர் அல்லார்கருமங்கள் வேறுபடும் அதுபோலப் பெருந்தன்மையுடையாரது நட்பைப் பெறினும் அத்தன்மையில்லாதாருடைய செயல்கள் வேறாகவே நிகழும்.

(க-து.) கூடா நட்பினர் எவ்வளவுபழகினாலுந் தஞ் சிறுமைகளை விடாராகலின்அத்தகையவரோடு நேயங்கொள்ளலாகாது.

(வி-ம்.) குவளையென்றது, ஈண்டுநறுமணங்கமழுஞ் செங்கமழுநிர் மலர்."கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ்குவளை" யென்றார் பிறரும். வேறுபடும்என்றது, தாழ்வாகவே நிகழுமென்னும் பொருட்டு.

237 முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.

(பொ-ள்.) சிறுமந்தி முற்பட்டதந்தையை நெற்றுக் கண்டன்ன விரலால் குற்றிஞெமிர்த்திட்டு முற்றல் பறிக்கும் மலைநாட -இளங்குரங்கு, பயற்றங்காயின் நெற்றைக்கண்டாற்போன்ற தன் விரல்களால் தன் எதிர்வந்ததந்தையின் கையைக் குத்தி விரியச்செய்து அதுவைத்திருந்த கனியைப் பறித்துக் கொள்கின்றமலைகளையுடைய நாடனே!, ஒற்றுமை கொள்ளாதார் நட்புஇன்னாது - அகங்கலந்த நேயங்கொள்ளாதாரது நட்புதுன்பமுடையதாகும்.

(க-து.) உள்ளம் ஒன்றுபடாதகூடாநட்பினரோடு நேயங்கொள்ளலாகாது.

(வி-ம்.) முற்றல் - செங்காய் -சிறுமந்தியென்றது ஈண்டுக் குரங்கின் குட்டியை ;மந்தி, பெட்டையை உணர்த்தாமற் பொதுவினின்றது.தந்தை : பொதுப்பெயர். ஞெமிர்தல் புறத்தில்மட்டுங் கலந்து அகங்கலவாத வேறு பாட்டியல்பைப்புலப்படுத்தும் பொருட்டு ‘ஒற்றுமை கொள்ளாதா'ரென்றார். பரத்தலாதலின் ஈண்டு விரித்தலெனப்பட்டது. "வான் ஞெமிர்ந்து"என்பது மதுரைக் காஞ்சி.

238 முட்டுற்ற போழ்தின் முடுகியென் னாருயிரை
நட்டா னொருவன்கை நீட்டேனேல் - நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க
நெடுமொழி வையம் நக.

(பொ-ள்.) முட்டுற்ற போழ்தில்முடுகி என் ஆர் உயிரை நட்டான் ஒருவன் கைநீட்டேனேல் - நண்பனுக்கு இடுக்கண் உண்டானகாலத்தில் விரைந்து எனது பெறற்கரிய உயிரைநட்புச் செய்த அவ்வொருவன் கையில் நான்ஒப்படைக்கேனானால், நட்டான் கடிமனை கட்டுஅழித்தான் செல்வுழிச் செல்க - தன் நண்பனின்காவலிலுள்ள மனைவியின் கற்புறுதியை நிலைகுலைத்ததீயோன் செல்லுந் தீக்கதிக்கு யான் செல்வேனாக ;நெடுமொழி வையம் நக - அன்றியும் நிலைத்தபுகழினையுடைய உலகம் என்னை இகழ்வதாக.

(க-து.) பொருந்திய நண்பெனின்,உற்ற நேரத்தில் தன் நண்பர்க்கு உயிரையும்வழங்கல் வேண்டும்.

(வி-ம்.) முடுகி யென்றது முற்போந்தென்னுங் கருத்தினின்றது. இழந்தால் மீண்டும்பெறற்கருமை நோக்கி ஆருயிரெனப்பட்டது.நீட்டேனேல் என்றது, அவற்குரியதாக இதுகாறுந்தன்பால் வைத்திருந்ததை அவரிடம் உடனேஒப்படைக்கேனாயின் என்னுங் குறிப்பில் நின்றது.கற்பு, ஈண்டு ‘கட்டு' எனப்பட்டது; நாயனாருங்"கற்பென்னுந் திண்மை"  என்றதுகாண்க.

239 ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ ;- தேம்படு
நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்பு.

(பொ-ள்.) தேன் படு நல்வரை நாட -தேன் உண்டாகின்ற உயர்ந்த மலைகளையுடைய நாடனே!நயம் உணர்வார் நண்பு ஒரீஇப் புல் அறிவினாரோடுநட்பு - இனியதறியும் பேரறிஞரது நண்பினின்றும்நீங்கிச் சிற்றறிவினாரோடு செய்யும் நட்பு, ஆன்படு நெய் பெய்கலனுள் அது களைந்து வேம்பு அடு நெய்பெய் தனைத்து - ஆனிடத்தில் உண்டாகும் நெய்யைப்பெய்திருந்த கலத்தில் அந்நெய்யை நீக்கிவேம்பின் விதையைக் காய்ச்சியெடுத்தவேப்பெண்ணெயைப் பெய்து வைத்தாற்போன்றதன்மையதாகும்.

(க-து.) இனிதறியாதபுல்லறிவினாரான கூடா நட்பினருடன் நேயஞ்செய்தலாகாது.

(வி-ம்.) ‘தேம்படு' என்னும்புணர்ச்சி முடிபு, "தேனென் கிளவி""மெல்லெழுத்து மிகினும்" என்பவற்றான்முடிந்தது. அரோ : அசை. நயமுணர்வாரென்றார், இனியராயொழுகும் இயல்பறிவாரென்றற்குசிற்றறிவினார்க்கு அத்திறம் வாயாமையின்புல்லறிவினா ரென்று விதந்தார். ‘நட்பொரீஇ'யென்று வலித்தல் பெறாமையின், தன்வினைப்பொருள் உரைக்கப்பட்டது.

240 உருவிற் சுமைந்தான்கண் ஊராண்மை யின்மை
பருகற் கமைந்தபால் நீரளா யற்றே
தெரிவுடையார் தீயினத்தா ராகுதல் நாகம்
விரிபெடையோ டாடிவிட் டற்று.

(பொ-ள்.) உருவிற்கு அமைந்தான் கண் ஊராண்மை இன்மை பருகற்கு அமைந்த பால் நீர் அளாய் அற்று - காட்சிக்கு இனியனாய் உருவமைந்த ஒருவனிடம் ஒப்புரவில்லாமை, பருகுதற்கு அமைந்த பாலில் நீர் கலந்திருந்தாற்போன்ற தன்மையதாகும். தெரிவு உடையார் தீ இனத்தா ராகுதல் நாகம் விரிபெடையோடு ஆடிவிட்டற்று - ஞானமுடையோர் தீய சார்புடையரோடு நட்புச் செய்தொழுகுதல் நாகப்பாம்பு பெட்டை விரியனோடு தவறாக இழைத்துவிட்டாற் போன்ற தன்மையுடையதாகும்.

(க-து.) ஒப்புரவும் மெய்யுணர்வுமில்லாத கூடா நட்பினருடன் கூடுதலாகாது.

(வி-ம்.) ஊரவற்கு உதவியா யொழுகுமியல்பு ஊராண்மை யெனப்பட்டது. தெரிவு, இடருற்ற நேரங்களில் ஆழ்ந்து மெய்ம்மை தெரிந்தொழுகும் அறிவு. விரியனோடு கூடிய நாகம் தன்னியல்பு மாறித் தீயதாய்க் கெடுதலின், அஃதுவமையாயிற்று. விரியனோடு நாகங் கூடினால் இறக்கும் என்ப.