361 மழைதிளைக்கு
மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்றமைப்பின் என்னாம்? -விழைதக்க
மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோர் காடு.
(பொ-ள்.) மழை திளைக்கும்மாடமாய் மாண்பு அமைந்த காப்பாய் இழை விளங்குநின்று
இமைப்பின் என்னாம் - மேகங்கள் தவழும்உயர்ந்த மாளிகையாய்ச்
சிறப்பமைந்தபாதுகாப்புடையதாய்மணிகளால் இழைக்கப்பட்டவிளக்குகள் அங்கங்கும் இருந்து
ஒளிவிடினும் என்னபயனாகும்?, விழைதக்க மாண்ட
மனையாளையில்லாதான்இல்லகம் காண்டற்கு அரியதோர் காடு - மாட்சிமைவாய்ந்த
விரும்பத்தக்க இல்லக்கிழத்தியையில்லாதவனது வீடு கண்கொண்டுபார்த்தற்கியலாததொரு
கொடிய காடாகும்.
(க-து.) மனையாள் இல்லாத வீடுவீடன்று.
(வி-ம்.) திளைத்தல், இடைவிடாதுபயிலுதல்;
பெருமையும் காப்பும்ஒளியுமுடையதாயிருத்தாலும் வீட்டுக்கு
உணர்வுவிளக்காகிய மனையாள் இன்றியமையாதவ ளென்பதுகருத்து; "மனைக்கு விளக்காகிய வாணுதல்" என்றார் பிறரும்; மாண்ட
விழைதக்க மனையாளென்க.மனைமாட்சி மனைக்கு மங்கலமாகலின் இல்லாள் இல்லாத இல்லம்,
அறவோர் துறவோர்அந்தணர் விருந்து உறவோர் நண்பர் குழந்தைகள்பெரியோர்
உலவுதலற்றுக் காண்டற்கரியதொருகாடாயிருக்கும் எனப்பட்டது.
362 வழுக்கெனைத்து
மில்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின், இழுக்கெனைத்துஞ்
செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.
(பொ-ள்.) வழுக்கு எனைத்தும்இல்லாத வாள்வாய்க்கிடந்தும் இழுக்கினைத்
தாம்பெறுவராயின் - சோர்வு சிறிதுமில்லாத வாளின்காவலில் இருந்தும் மகளிர்
ஒழுக்கந்தவறுதலைத்தாம் உறுவராயின், இழுக்கு எனைத்தும்
செய்குறாப்பாணி சிறிதே அச் சின்மொழியார் கையுறாப் பாணிபெரிது - குளிர்ந்த
மொழிகளைப் பேசும் அம்மகளிர் தமது வாழ்நாளிற் குற்றம் சிறிதுஞ்செய்யாத காலம் சிறிதே;
மற்றுத் தம் கணவர்க்குவயப்பட்டொழுகாக் காலம் பெரிதென்க.
(க-து.) மகளிர்க்கு நிறை காக்குங்காப்பே தலை.
(வி-ம்.) வாள் என்றது, வாள்வீரரின் காவல்;
ஆகுபெயர். கிடத்தல்,கட்டுப்பட்டிருத்தல்.
காவலினும் இழுக்குப்பெறுவராயின் நிறை சிறிதுமில்லாதவர் அம்மகளிரென்பது
பெறப்படுதலின், அவர் தம் வாழ்நாளில்இழுக்கெனைத்துஞ்
செய்குறாப் பாணி சிறிதே யெனப்பட்டது. பாணி என்றது காலம். ‘எம் சொல்லற் பாணிநின்றன
னாக" என்புழிப்போல. எனைத்துஞ்செய்குறாப்
பாணி யென்றார் ஏதானும்வழுக்குடையராகவே
யிருப்ப ரென்றற்கு. கையுறாமை,இங்கு வயமாயிராமை.
363 எறியென்
றெதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை
உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய்; - இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.
(பொ-ள்.) எறி என்றுஎதிர்நிற்பாள் கூற்றம் - தன் கணவற்குச் சினத்தைமூட்டி ‘அடி' என்று எதிரில் அடங்காது நிற்கும்மனைவி அவனுக்குக்
கூற்றுவனாவாள்; சிறு காலை அட்டில்புகாதாள் அரும்பிணி - காலை
நேரத்தில்அடுக்களையிற் சென்று உணவு சமைக்காதவள் தன்கணவனுக்குக் கொடிய நோயாவாள்,
அட்டதனை உண்டிஉதவாதாள் இல்வாழ் பேய் - சமைத்ததை அவனுக்குரியஉணவாக
இடமால் உண்பவள் இல்லத்தில் வாழும்பேயாவாள், இ மூவர்
கொண்டானைக் கொல்லும் படை -இம் மூவகையியல்புடைய மாதரும் தம்மை மணந்துகொண்டகணவன்மாரை
உயிரோடு வருத்தும் கருவிகளாவர்.
(க-து.) இல்வாழ் பெண்டிர்அடக்கமும் சுறுசுறுப்பும்
அன்புமுடையவராய்விளங்கவேண்டும்.
(வி-ம்.) சினத்தை மேலுமேலும்மூளச்செய்து கணவற்கு இறுதியுண்டாக்குதலின் ‘கூற்ற'மெனவும், காலத்தில் உணவு
கிட்டாமற் செய்தலால்நோயுண்டாதலின் ‘பிணி' எனவும், பெரும்பசி கொண்டுமுன் உண்ணுதலின் பேய்' எனவுங்
கூறினார்.சிறுகாலையென்றது காலை நேரத்தின் முற்பகுதியிலுந்தொடக்க நேரத்தைக் குறித்தது.
பிணிக்குஅருமையாவது, என்றும் இவ்வாறே நடந்து
தீராநேயாதல்.அட்டதனை உதவாதாள் என்றதன் மேலும் உண்டியென்றது,அட்டது
தன் கணவற்குரிய உண்டியொன்று கருதாதவளாய்என்னும் பொருட்டு. பேய்க்குப்
பெரும்பசிஇயல்பாதல் "பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் " என்பதனானும்
பெறப்படும்.
364 கடியெனக்
கேட்டுங் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான், - பேர்த்துமோர்
இற்கொண் டினிதிரூஉம் ஏமுறுதல் என்பவே,
கற்கொண் டெறியுந் தவறு.
(பொ-ள்.) கடி எனக் கேட்டும்கடியான் - இனி மணவாழ்க்கையை முனிந்துவிடு
என்றுதக்கோ ரறிவுரைகள் கேட்டும் முனியானாய், வெடிபடஆர்ப்பது கேட்டும் அது தெளியான் - தலைவெடிக்கும்படி உலகிற்
சாப்பறைகள் முழங்குவதுகேட்டும் அத் துறவியல்பைத் தெளியானாய்;பேர்த்தும்
ஓர் இல்கொண்டு இனிது இரூஉம் ஏமுறுதல்கல்கொண்டு எறியும் தவறு என்ப - மீண்டும்
இரண்டாமுறையாக ஓர் இல்லக்கிழத்தியைமணம்புரிந்துகொண்டு
இன்புற்றிருக்கும்மயக்கத்தையடைதல் தன்னையே தான்கற்கொண்டெறிந்துகொள்ளும் தவறென்று
சான்றோர்கூறுவர்.
(க-து.) இரண்டாம் முறையாகவும்மனைவாழ்க்கையிற் புகாமல் மக்கள்
துறவுடையராய்உலகப் பெரும்பணிகள் செய்து விளங்குதல் வேண்டும்.
(வி-ம்.) கடியான் முதலியனமுற்றெச்சம். இனி தென்றது, உடல் நலங் கருத்திற்று.ஏமுறுதல், ஈண்டு மயக்கமுறுதல் ; "தலைப்பட்டார்தீரத்
துறந்தார் மயங்கி, வலைப்பட்டார்மற்றையவர்" என்னும்
நாயனார்திருமொழியை இங்கு நினைவு கூர்க.
365 தலையே
தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்
கிடையே இனியார்கட் டங்கல், - கடையே
புணராதென் றெண்ணிப் பொருள்நசையால்
தம்மை
உணரார்பின் சென்று நிலை.
(பொ-ள்.) தலையே தவம் முயன்றுவாழ்தல் ஒருவர்க்கு - மக்கட்பிறவியில்
வந்தஒருவர்க்கு, தம் வாழ்க்கையில்தவமுயற்சியுடையராய்
வாழ்தல் தலையானதாகும்;இடையே இனியார்கண் தங்கல் -
தமக்குஇனியராயிருக்கும் மனைவி மக்கள் முதலியஉறவினரிடத்து மனந்தங்கி
அவாவோடொழுகுதல்இடைத்தரமான வாழ்வாகும்; கடையே புணராது
என்றுஎண்ணிப் பொருள் நசையால் தம்மை உணரார்பின்சென்று நிலை - மேற் கூறிய இருவகை வாழ்வின்முயற்சியும்
தமக்குக் கைகூடாதென்று நினைந்து வெறும்பொருள் விருப்பத்தால் தம் குடிப்பிறப்பு
கல்விமுதலிய தகுதிகளையுங் கருதிப்பாராது நடத்துஞ்செல்வர்களின் பின் சென்று
நிற்கும் அடிமைநிலைகடைப்பட்ட வாழ்வாகும்.
(க-து.) வாழ்க்கையிற் பற்றின்றியொழுகும் அறப் பணியாளர்
தலையானமுயற்சியுடையோராவர்.
(வி-ம்.) ஒருவர்க்கு என்பதைப்பிறவற்றிற்குங் கூட்டுக. தலை, இடை, கடையென ஈண்டுக்கூறிய
வாழ்வுமுறையே அருள் வாழ்வும், அன்பு வாழ்வும்,அடிமை வாழ்வுமாகும். பிறர்பால் அடிமைத் தொழில்பூண்டிருப்போர் முறையாக
மனையறம் நடத்துதல்இயலாதாகலின் அதனை வேறுபிரித்துக்கடையாக்கினார். பொருண் முயற்சி
இம்மூன்றற்கும்பொதுவெனக்கொள்க. பொருள் ஈட்டிப் பலர்க்கும்உதவியாய் வாழ்தலும்,
தமக்கினியார்க்கு மட்டுமேஉதவியாய் வாழ்தலும், தமக்கு
இனிமையின்றி உயிர்வாழ்தலும் கருதினமையின், முறையே இவை
தலைஇடைகடையாயின. பொருணசை யாலென்றார், கண்டதுபயனன்று நசையே
யென்றற்கு. பின் நிற்றலாவதுஈண்டுத் தொழுதுண்டு வாழ்தல்
பின்நின்றேவல்செய்கின்றேன்" என்ப திருவாசகத்தினும்.
366 கல்லாக்
கழிப்பர் தலையாயார்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.
(பொ-ள்.) கல்லாக் கழிப்பர்தலையாயார் - மக்களில் உயர்ந்தோர்,நற்கருத்துக்களை ஆழ்ந்து அறிந்து தெளிவு
பெறுதலைமேற்கொண்டு அம்முறையில் தம் வாழ்நாட்களைக்கழிப்பர்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள் -இடைத்தர மக்கள், இனிய
பண்டங்களைஐம்புலன்களானும் நுகர்ந்தின்புறுதலை மேற்கொண்டுஅம் முறைமையில் வாழ்நாள்
கழிப்பர்; கடைகள்இனிது உண்ணேம் ஆரப்பெறேம் யாம்
என்னும்முனிவினால் கண்பாடு இலர் - கடைத்தர மக்கள்,‘யாம்
பண்டங்களை இன்பமாய் நுகரப் பெற்றிலேம்,நிறையப் பெற்றிலேம்'
என்னும் வெறுப்பினால்இரவிலும் உறக்கமில்லாதவராவர்.
(க-து.) உலகப் பொருள்களின்வாயிலாகத் தம்மைத் தெளிவுடையராக்கிக்கொள்ளும்
மக்களே உயர்ந்தோராவர்.
(வி-ம்.) கற்றல், ஆழ்ந்துணர்ந்துதெளிவுபெறுதல்.
ஒரு பொருளைக் காணநேர்ந்தால்அதுகொண்டு தலையானவர் தமதறிவைத் தெளிவு
செய்யமுயல்வரெனவும், இடைப்பட்டவர் புலன்களால்நுகர்ந்தின்புற
முயல்வரெனவும், கடைப்பட்டவர்ஏதும் பெறாராய் ஆற்றாமை
மட்டுங்கொண்டுஅமைதியின்றி மெலிவர் எனவும் உணர்த்திற்று இச்செய்யுள்; நாயனார் கடைப்பட்டவர் நிலையைஒதுக்கிப் பேறுடையாரிருவரியற்கையைமட்டு
மெடுத்து,"இருவேறுலகத்தியற்கை திருவேறு, தெள்ளியராதலும்வேறு” என்றருளிச் செய்தார். கண்படுதல்,உறக்கங்கொள்ளுதல்.
367 செந்நெல்லா
லாய செழுமுளை மற்றுமச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வயனிறையக் காய்க்கும் வளவய லூர!
மகனறிவு தந்தை யறிவு.
(பொ-ள்.) செந்நெல்லாலாயசெழுமுளை மற்றும் அச் செந்நெல்லேயாகி விளைதலால்- சாலி
என்னும் உயர்ந்த செந்நெல்லின்விதையினால் உண்டான செழுவியமுளை பின்னும் அச்செந்நெற்
பயிராகவே தோன்றி விளைதலால்,அந்நெல் வயல் நிறையக்
காய்க்கும் வளவயல் ஊரமகனறிவு தந்தை யறிவு - அச் செந்நெல் வயல் நிறையவிளைந்து
கிடக்கும் வளமான கழனிகளையுடைய ஊரனே!புதல்வன் அறிவு அவன் தந்தையின் அறிவு
வகையைஒத்ததாகும்.
(க-து.) புதல்வனுடைய அறிவுஒழுக்கங்களை விரும்புந் தந்தை, தான் நல்லறிவுநல்லொழுக்கமுடையவனாய் விளங்குதல்
வேண்டும்.
(வி-ம்.) செந்நெல், நெல்லின்உயர்ந்த
இனத்தைச் சேர்ந்தது. காய்க்கும் என்றது,ஒரு வழுவமைதி. ஊரன்,
மருத நிலத்துத் தலைவன். இச்செய்யுள், ஒருவன்
அறிவு செயல் முதலியவை அவன்மரபினரையுஞ் சாருமென் றறிவுறுத்துமுகத்தால், அவனைநன்னிலையில் நிறுத்த விரும்பிற்று.
368 உடைப்பெருஞ்
செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும்
பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக்
குடைக்கால்போற்
கீழ்மேலாய் நிற்கும் உலகு.
(பொ-ள்.) உடைப்பெருஞ் செல்வரும்சான்றோரும் கெட்டுப் புடைப்பெண்டிர்
மக்களும்கீழும் பெருகி தமது பொருளைப் பலர்க்கும் வழங்கும்அன்புரிமையுடைய பெரிய
செல்வ வளம் வாய்ந்தஇல்லறத்தாரும் ஏனைத் துறவாசிரியரும் வறியராய்நிலைசுருக்கிச்
சார்ப்பெண்டிராகிய வேசையரின்மக்களும் ஏனைக் கயவர்களும்
செல்வமுடையவர்களாய்நிலைபெருகி, கடைக்கால் தலைக்
கண்ணதாகிக்குடைக்கால்போல் கீழ்மேலாய் நிற்கும் உலகு -அவ்வாற்றால், குடையினது தண்டு கீழ்மேலாகநிற்பதுபோல் இவ்வுலகம் தலைகீழாய்
நிற்கும்இயல்புடையதாயிருக்கின்றது.
(க-து.) உலகநிலை கொண்டு மக்களைமதித்தலாகாது.
(வி-ம்.) செல்வம், பிறர்க்குவழங்குவார்க்கே
பயன்றந்து உடைமையாதலின்,அவ்வன்புரிமையுடையாரது செல்வம்
‘உடைப்பெருஞ்செல்வ' மெனப்பட்டது அவ்வாற்றால், அறவோர்முதலியோரைப் புறந்தருவாராதல்பற்றி அவர்இல்லறத்தாரெனப்பட்டனர்.
"படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும் உடைப் பெருஞ்செல்வர்" எனப்
புறத்தில் வருதலும்அறிக. புடைப்பெண்டிர், பொருள் தருவார்
பக்கல்சாரும் பெண்டிர்; இக் குறிப்பினாலும் முன்னர்க்கூறிய
செல்வர் இல்லறத் தோன்றல்கள் என்பதுபெறப்படும். இஃது உலகியற்கை
கூறுமுகத்தான்மெய்ப்பொருளொன்று அறிவுறீ இயது.
369 இனியார்தம்
நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார், - மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று.
(பொ-ள்.) மணி வரன்றி வீழும்அருவி விறல் மலை நல் நாட - மணிகளை
வாரிக்கொண்டுவீழ்கின்ற அருவிகளையுடைய வென்றிமிக்கமலைகளமைந்த சிறந்த நாடனே!.
இனியார் தம்நெஞ்சத்து நோய் உரைப்ப அந்நோய் தணியாதஉள்ளம் உடையார் - தமக்கு
இனியராயிருப்போர் தமதுஉள்ளத்திலுள்ள கவலையைத் தாமே ஆற்றிக்கொள்ளவியலாது எடுத்துச்
சொல்ல அக் கவலைக்கு ஏதுவானகுறையைத் தீர்த்து அதனைத் தணிவிக்காதஇரக்கமற்ற
வன்னெஞ்சுடையார், வாழ்வின் வரைபாய்தல் நன்று -
இவ்வுலகில் உயிர் வாழ்தலினும்ஒரு மலையின்மேல் ஏறி வீழ்ந்து உயிர்
மாய்த்துக்கொள்ளுதல் நலமாகும்.
(க-து.) பிறர்க்குஉதவியாயிராதவர் இருப்பதும் இறப்பதும் ஒன்றே.
(வி-ம்.) இனியாரென்றது, உறவினர்நண்பர்
முதலியோர், நோய் தணித்தலாவது,நோய்க்கு
ஏதுவானதைத் தணித்தலென்க.ஒப்புரவறியாதவர் உலக நடையறியாதவராகலின்உலகில் அவர்
இருத்தலும் இல்லாமையும்ஒன்றேயாயின. "ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்மற்றையான்,
செத்தாருள் வைக்கப் படும்" என்றார் நாயனாரும். வரை பாய்தலால்
அவ்விழிவுபெறப்படாமை நோக்கி நன்றென்றார். "மிக்கமிகுபுகழ் தாங்குபவோ
தற்சேர்ந்தார் ஒற்கம்கடைப்பிடியா தார்" என்றார்.
370 புதுப்புனலும்
பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்பற நாடின்வே றல்ல; - புதுப்புனலும்
மாரி அறவே அறுமே, அவரன்பும்
வாரி அறவே அறும்.
(பொ-ள்.) புதுப் புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும் விதுப்பு அற நாடின்
வேறுஅல்ல - புதுநீர்ப் பெருக்கும் அழகிய தோடணிந்தவேசையரின் றொடர்பும் விரை
தலின்றிஆராய்ந்தால் அவை தம் தன்மையில் வேறு வேறு அல்ல;புதுப் புனலும் மாரி அறவே அறும் அவர் அன்பும் வாரிஅறவே
அறும்-புது வெள்ளமும் மழை நிற்க நின்றுவிடும்;அவ் விலைமகளிர்
அன்பும் பொருள் வருவாய் நீங்கநீங்கிவிடும்.
(க-து.) பொருட் பெண்டிர்,பொருளைமட்டுங் கொண்டு
பொருள் கொடுப்பாரைக்கொள்ளாதவராகலின், அவர்
தொடர்புகொள்ளத்தக்கதன்று.
(வி-ம்.) விதுப்பென்றது, உள்ளத்துடிப்பு ;
ஈண்டு விரைவுக்காயிற்று; "விதுப்புறுவிருப்பொடு"
என்புழிப் போல. முன்உம்மைகள் இரண்டும் எண் : பின் உம்மைகள்இரண்டும் ஒன்றையொன்று
தழுவிய எச்சங்கள்.பொருள் நிலையற்றதாகலின் அப்பொருணோக்கமாகஇனியராயொழுகுவாரது
அன்பும் நிலையற்றதாய்இன்னாமை பயக்குமென்று ஏதுவின் நிறீஇயினார்.
0 Comments