முயற்சியுடைமை உணர்த்துவது.

191 கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறுந்
தாளாளர்க் குண்டோ தவறு.

(பொ-ள்.) கோள் ஆற்றக்கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல் -நீர்கொள்ளுதலை நிரம்பக் கொள்ளாத ஏரியின்கீழுள்ள பயிரைப்போல், கேள் ஈவது உண்டு கிளைகளோதுஞ்சுப - தமக்கு உறவினர் கொடுப்பதை உண்டுசுற்றங்கள் சோம்பிக் கிடந்து பின் அவர்வறுமைப்பட்டபோது தாமும் வருந்தியிறப்பர்; வாள்ஆடு கூத்தியர் கண்போல் தடுமாறும் தாளாளர்க்குஉண்டோ தவறு - வாட்கூத்து ஆடுகின்ற கூத்துப்பெண்டிருடைய கண்களைப்போல் உழலும்முயற்சியுடையார்க்கு இப் பிழைபட்ட வாழ்வுஉண்டோ?

(க-து.) ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையில்முயற்சியுடையரா யிருக்க வேண்டும்.

(வி-ம்.) உவமங்களின்கருத்துக்கள் பொருள்களின் விளக்கங்களில்வந்திருக்கின்றன. நீரை மிகுதியாகக் கொள்ளாதகுளம் முயற்சியுடைய கேளிர்க்கு உவமமாக வந்தது,அக்கேளிரின் சுற்றங்கள் சோம்பிக்கிடத்தலால் அவருக்க வருவாய் மிகுதியாகஅமையாமையின் என்க. துஞ்சுப : தொழிலின்றியிருந்துபின் இறப்பரென்னும் பொருட்டு. "உலகுதொழிலுவந்து நாஞ்சில் துஞ்சி" "நிலமிசைத் துஞ்சினார்" என்பனகாண்க. வாளாடு கூத்தியர் - வாட்களை இரு கைகளிலும்பிடித்து விரையச் சுழற்றித் தாமுஞ் சுழன்றுகூத்தாடும் இள மகளிர்; ஆடுமகளிருள் இவர் ஒருவகையார்; இவர் கண்கள் அஞ்ஞான்றும் மிகமுயற்சியுடையவனாய் வாள் முனைகள்மேல் விரையத்திரிந்து திரிந்து பிறழ்ந்துழலும். அவ்வாறு கருமமேகண்ணாயிருக்கும், பேரூக்கமாகிய முயற்சியுடைமைக்குஅவர் கண்கள் உவமமாகக் கூறப்பட்டன. தடுமாறுதல் -ஈண்டு, உழன்று முயலுதல்.

192 ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்;
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.

(பொ-ள்.) ஆடு கோடு ஆகி அதரிடைநின்றதும் காழ் கொண்ட கண்ணே களிறு அணைக்கும்கந்து ஆகும். துவள்கின்ற இளங்கொம்பாகிவழியிடையே நின்ற சிறு மரமும் உள்வயிரங் கொண்டுமுற்றிய காலத்தில் ஆண் யானைகளைக் கட்டுதற்குரியகட்டுத்தறியாக உதவும்; வாழ்தலும் அன்ன தகைத்தேஒருவன் தாழ்வின்றித் தன்னைச் செயின் - ஒருவன்முயற்சியால் தன்னை ஆற்றலிற் குறைவில்லாமற்செய்து கொள்ளுவானாயின் அவன் தனது வாழ்க்கையிற்பெருமை கொள்ளுதலும் அது போன்ற தன்மையதேயாம்.

(க-து.) எளிய நிலையிலுள்ளோரும்முயற்சியால் தம்மை ஆற்றலுடையவராகச்செய்துகொள்ளல்வேண்டும்.

(வி-ம்.) வழியில் வரும் யானையைப்பாகர் அங்கே வலியதாய் நிற்பதொரு மரத்திற்கட்டுவராதலின், ‘அதரிடை' யென்றார். ‘அதரிடை ஆடுகோடாகி நின்றதும்' என்று கொள்க. இழிவுசிறப்பும்மை : கோடாகி நின்றதற்கு வந்தது.கண்ணென்றது ஈண்டுக் காலப் பொருட்டு. அணைக்கும்என்றார், அதனாற் கந்து பெருமைப்படுதலின்.தாழ்வின்றித் தன்னைச் செய்து கொள்ளலாவது,"தொல் சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை" யென மேற்கூறப்படுபவற்றில் தன்னைக் குறைவிலனாகச்செய்துகொள்ளலென்க.

193 உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியுந் தின்னும்; - அறிவினால்
காற்றொழில் என்று கருதற்க கையினால்
மேற்றொழிலும் ஆங்கே மிகும்.

(பொ-ள்.) உறுபுலி ஊன்இரைஇன்றிஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும் - வலிமைமிக்க புலி தனக்கேற்ற இறைச்சியுணவில்லாமல்ஒரோவொருகால் சிறிய தவளையைப் பிடித்துந்தின்னும்; அறிவினால் கால் தொழில் என்று கருதற்க- ஆதலால், தமக்குரிய அறிவு மேம்பாட்டினால்,எதனையும் காலால் செய்தற்குரிய சிறுதொழிலென்றுயாரும் கருதாதிருப்பராக; கையினால்மேல் தொழிலும் ஆங்கே மிகும் - அச்சிறுதொழிலையும் பொருள் செய்தொழுகும்முயற்சியினால் உயர்ந்த தொழிலும் அதிலிருந்தேபெருகிவரும்.

(க-து.) சிறு தொழிலையும்முயற்சியோடு திருத்தமாகச் செய்ய வேண்டும்.

(வி-ம்.) உவமத்திற் புலிக்குஉடம்பு வலிமை கூறப்பட்டமையின், பொருளிலும் அறிவுவலிமை காட்டுதற்கு ‘அறிவினால்' என்றார்.ஊனிரையின்றி யென்றமையின், தேரையின் ஊன்சிறுமை பெறப்பட்டது. தேரை தின்று பசியாறிய ஒருசிறு தணிவிலிருந்து பேரிரை பற்றும் வன்மைபுலிக்குண்டாதலின், சிறு தொழிலையும் பொருள்செய்தொழுகும் முயற்சியிலிருந்தே மக்கட்குஉயர்தொழிலும் பெருகிவருமென்பது கருத்து. கையினால்முயற்சி யொழுக்கத்தாலென்க.

194 இசையா தெனினும் இயற்றியோ ராற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
கண்டல் திரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப!
பெண்டிரும் வாழாரோ மற்று.

(பொ-ள்.) கண்டல் திரை அலைக்கும்கானல் தண்சேர்ப்ப - தாழையை அலைகள்சிதைக்கின்ற கடற்கரைச் சோலையையுடையகுளிர்ந்த துறைவனே!, இசையாது எனினும் - மேற்கொண்டகாரியம் ஊழ்வினையினால் எளிதிற் கூடிவராதாயினும், இயற்றி ஓர் ஆற்றால் - அவ்வூழ்இப்பிறவியில் வழி செய்துவிட்ட ஒரு வகையினால்,அசையாது நிற்பதாம் ஆண்மை - தளராமல் நின்றுமுயல்வதே ஆடவர்க்குரிய ஆண்மைப் பண்பாகும்;இசையுங்கால் பெண்டிரும் வாழாரோ மற்று - மற்று, ஊழ்கூட்டுதலால் ஒன்று எளிதிற் கூடி வருமாயின்பெண்மக்களும் அதனை முடித்துப் பெருமையடையாரோ!

(க-து.) ஊழ் கூட்டாதவிடத்தும்,அரிய காரியங்களைச்செய்தலில்தளர்வின்றியிருந்து முயலும் ஆண்மையேதாளாண்மையாகும்.

(வி-ம்.) இயற்றிய வென்னும் அகரம்தொக்கது; ஊழ் இயற்றித் தந்த என்பது பொருள்;இயன்ற ஒரு வகையினால் என்பதன் கருத்தும் இது.நிற்பது - நின்று முயல்வது; இசையுங்கால் :வினையெச்சம். வாழாரோ என்பது ஈண்டு முயன்றுபெருமையடையாரோ வென்னுங் கருத்தினின்றது; இஃதுஅறி பொருள் வினா.  ஊழ்கூட்டுங்காற் சிறிதுமுயன்று ஒன்று நிறைவேறப்பெறுதல் பெண்டிர்க்கும்இயலுமென்றமையின், அஃதன்று தாளாண்மை யென்னும்ஆடவர் பண்பு என்பது இவ்வாற்றாற் பெறப்படும்,மற்று : வினைமாற்றென்க.

195 நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லள வல்லாற் பொருளில்லை; - தொல்சிறப்பின்
ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்.

(பொ-ள்.) நல்ல குலமென்றும் தீயகுலமென்றும் சொல் அளவு அல்லால் பொருள் இல்லை -நல்ல குலமென்றும் கெட்ட குலமென்றும் உலகத்திற்பிறப்பின் மேலேற்றிச் சொல்வது வெறுஞ்சொல்லளவே யல்லால் அதற்குப் பொருளில்லை.தொல் சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை என்று இவற்றான் ஆகும் குலம் - குலம்என்பது, தொன்று தொட்டுவரும் மேன்மையினையுடையசெல்வத்தால் மட்டுமன்று, தவம், கல்வி, முயற்சி எனஇவை தம்மாலெல்லாம் உண்டாவதாகும்.

(க-து.) தவம் கல்வி ஆள்வினைமுதலியவற்றில் முயற்சியுடையாரே பிறரால்நேயங்கொள்ளுதற்குரிய உயர்குலத்தோராவர்.

(வி-ம்.) சொல்வது என ஒரு சொல்வருவிக்க. தொல் சிறப்பின் என்பதைத் தவம்முதலியவற்றிற்குங் கொள்க. பிறப்புப்பற்றியகுடியினும், தவவுணர்வு கல்வியறிவு ஆள்வினையியல்புபொருளாக்கம் என்பன நெடுங்காலமாக விளங்கி உரைபயின்றுவரும் பழம் பெருஞ் சிறப்பினவாகலின்,தொல் சிறப்பின் என்னும் அடையடுத்து வந்தன.பொருளுக்கு ஒண்மை, நல்வழியான் ஈட்டப் பட்டமை.உயர்குலத்துக்கு முதன்மையான காரணங்கள் தவமுங்கல்வியும் ஆள்வினையுமாகலின், ‘இவற்றான் ஆகுங்குலம்' என்று உம்மை கொடாது முடித்ததுமன்றிப்பொருளை ஒன்றோவென்னும் இடைச்சொற் கொடுத்தும்வேறு பிரித்தார். "தத்தங் குறப்பிற்பொருள்செய்குநவும்" என்பதனால்ஈதுணரப்படும். குலம் என்றது. குழு ; உள்ளமேம்பாடுடையோர் குழுவென்க.

196 ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார்
குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.

(பொ-ள்.) ஆற்றுந் துணையும்அறிவினை உள் அடக்கி ஊக்கம் உரையார்உணர்வுடையார் - நுண்ணுணர் வுடையோர் ஓர்அருஞ்செயலைச் செய்து முடிக்குமளவும் தமதுஅறிவின்றிறத்தை மனத்தில் அடக்கித் தம்முயற்சிகளைப் பிறர்க்குச் சொல்லார்; ஊக்கம்உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார் - மேலும்அவர், தமது ஆற்றலைத் தம்கண் முதலியஉறுப்புக்களாற் பிறர் ஆராய்ந்து தெரிந்துகொள்ளுதற்கேற்ற அறிவு விளக்க முடையவர்;குறிப்பின் கீழ்ப்பட்டது உலகு - உலகம் அத்தகையதிறமையான தாளாண்மை யுடையாரின் குறிப்பின்வழிப்பட்டது.

(க-து.) முயற்சிகள்உள்ளுணர்வோடும் அறிவு விளக்கத்தோடும்நடைபெறுதல் வேண்டும்.

(வி-ம்.) அறிவென்றது திறமைப்பொருட்டு, "வழிபடுவோரை வல்லறி தீயே" என்றதும் அது, ஊக்கம் இரண்டனுள், முன்னதுமுயற்சியையும் பின்னது அம்முயற்சியின்வீற்றினையும் உணர்த்தும். எடுத்த காரியத்தில்வேறின்றி நிற்பவரென்றற்கு ‘உணர்வுடையா'ரென்றார். ‘ஊக்கம் உறுப்பினால் ஆராயும்ஒண்மையுடையார்' என்றற்குப் பிறர் முயற்சிகளைமட்டும் அவர்தம் செய்கைக் கூறுகளாலும் முகத்தின்உறுப்புக்களாலும் ஆராய்ந்து தெரிந்து கொள்ளும்அறிவு மாட்சிமை யுடையாரெனவும் பொருளுரைத்து அதனைஇரட்டுற மொழிதலாகக் கொள்க. உலகம்அத்தகையோர் கருத்தின்வழி இயங்கிக் காரியம்எளிதில் நிறைவேறப்பெறுதலின்,அவ்வொண்மையுடையார் குறிப்பின் கீழ்ப்பட்டதுஉலகு என்றார்.

197 சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.

(பொ-ள்.) சிதலை தினப்பட்டஆலமரத்தை - கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை,மதலையாய் அதன் வீழ் ஊன்றியாங்கு - அதன் விழுதுஅதனைத் தாங்கும் வன்மையுடையதாய் ஊன்றிநின்றாற்போல, குதலைமை தந்தை கண் தோன்றில் -தன் தந்தையினிடத்தில் தளர்ச்சி தோன்றினால்,தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும் - அவன்பெற்றெடுத்த புதல்வன் பாதுகாக்க அது நீங்கும்.

(க-து.) தந்தையின் தளர்ச்சியைக்காத்தற்கு மைந்தன் முயற்சியுடையனா யிருத்தல்வேண்டும்.

(வி-ம்.) சிதலை யென்பதற்கு உருபுவிரித்துக் கொள்க. மதலை - வன்மையுடையதென்னும்பொருளது. மற்று : அசை. மறைப்ப என்றார்,முயற்சியாலுண்டாகும் நன்மக்கள். ‘தந்தையின்தளர்ச்சியை அவர்க்குத் தோன்றாதபடி செய்துமகிழ்வித்தலின் "தூங்குசிறை வாவலுறைதொன்மரங்க ளென்ன, ஓங்கு குலம் நையஅத னுட்பிறந்தவீரர், தாங்கல்கட னாகும்"  என்றார்பிறரும்.

198 ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானந் தலைவருவ செய்பவோ? - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை யவர்.

(பொ-ள்.) யானை வரிமுகம்பண்படுக்கும் வள் உகிர் நோன் தாள் அரிமாமதுகையவர் - யானையினறு புள்ளிகளையுடைய முகத்தைப்புண்படுத்தவல்ல கூரிய நகங்கள் பொருந்திய வலியகால்களையுடைய சிங்கத்தைப் போன்ற முயற்சிவலிமை யுடையோர், ஈனமாய் இல் இருந்து இன்றிவிளியினும் - நிலை குறைவாகி வீட்டில் அலுவலில்லாதுதங்கி வருவாயின்றி இறக்க நேரினும், மானம்தலைவருவ செய்பவோ - குற்றம் உண்டாகக்கூடியசெயல்களைச் செய்வார்களோ?

(க-து.) முயற்சியுடையார்க்குஎந்நிலையிலும் பழிப்புக்குரிய தீச்செயல்கள்செய்யும்படி நேராது.

(வி-ம்.) தலைவருவ : பெயர், மதுகை,ஈண்டு-முயற்சி வலிமை. ‘வள்ளுகிர் நோன்றாள்'என்னும் உவமைக்கேற்பப் பொருளிற் கூரறிவும் தக்கசெயல்வாய்ப்புமுடைய மதுகையவர் எனவும், பொருளில்‘இல்லிருந்து இன்றி விளியினும்' என்றதற்கேற்பஉவமையிற் குகையில் தங்கி உணவின்றி இறக்கினும்எனவும் உரைத்துக்கொள்க. "தோல்வற்றிச்சாயினும் சான்றாண்மை குன்றாமை" பெறப்பட்டது.

199 தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு - ஓங்கும்
உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை.

(பொ-ள்.) தீம் கரும்பு ஈன்றதிரள் கால்உளை அலரி தேன் கமழ் நாற்றம்இழந்தாங்கு - இனிப்பாகிய கருப்பங் கழி தோற்றியதிரண்ட தாளையுடைய பிடரிமயிர் போன்ற மலர்தேனோடுகூடி மணக்கும் நறுமணத்தை இழந்தாற்போல்,பெயர் பொறிக்கும் பேராண்மை இல்லாக்கடை - தன்புகழைச் சான்றோர் எழுதி நிலைநிறுத்துதற்குரியஅரிய முயற்சித்திறம் இல்லாவிட்டால், ஓங்கும்உயர்குடியுட் பிறப்பின் என் ஆம் - மிக்கஉயர்குடியுட் பிறத்தலால். மட்டும் யாது பயனுண்டு?

(க-து.) அரிய முயற்சித்திறம்இல்லாதபோது உயர் குடிப் பிறப்பும் இனியதோற்றமும் இருத்தலால் மட்டும் பயனில்லை.

(வி-ம்.) உளையென்றது ஈண்டுக்குதிரை சிங்கம் முதலியவற்றின்பிடரிமயிர்போல் மென்மையும் செறிவுமுடையகுஞ்சம் என்றற்கு. இதனாற் சாயலுடைய தோற்றம்பெறப்பட்டது. அலரி "முல்லை அரும்பவிழ்அலரி" என்புழிப்போலப் பொதுவாகமலரென்னும் பொருட்டு, ‘தேங்கமழ் நாற்றம்'என்பதில் தேன் பெயர்க்கும் நாற்றம்ஆண்மைக்கும் ஒக்கும். ‘கரும்பு ஈன்ற' என்றார்,உயர்குடியுட் பிறந்தும் என்றற்கு. ‘நாற்றம்இழந்தாங்கு ஆண்மையிலாக்கடை' யென்க.பொறித்தல், நூலிலுங் கல்லிலுமாம்.

200 பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்.

(பொ-ள்.) பெருமுத்தரையர் பெரிதுஉவந்து ஈயும் கருனைச் சோறு ஆர்வர் கயவர் -முயற்சியில்லாத கீழ் மக்கள், பெருமுத்தரையர்என்பார் மிக மகிழ்ந்து அளிக்குங் கறிகளோடு கூடியஉணவை உண்டு வாழ்நாட் கழிப்பர்; கருனையைப் பேரும்அறியார் நனிவிரும்பும் - கறிகளைப் பேர்தானும்அறியாத முயற்சியாளர்கள் மிகவும் விரும்புகின்ற,தாளாண்மை நீரும் - தம் முயற்சியுடைமையாற்கிடைத்த நீருணவும், அமிழ்தாய் விடும் -அவர்க்கத் தேவருணவாக மாறி மெய்யின்பந் தருதல்உறுதி.

(க-து.) தன்முயற்சியால் உண்டானதுநீருணவேயாயினும், அஃது அமிழ்த ஆற்றல் உடையதாய்நலம் பயக்கும்.

(வி-ம்.) பெருமுத்தரைய ரென்போர்,இச் சிறப்புப் பெயருடன் இச்செய்யுளியற்றியஆசிரியர் காலத்தில் ஈகையும் செல்வமும் வாய்ந்துபுகழுற்று விளங்கிய ஒருசார் உயர்குடும்பத்தினராவர். "நல்கூர்ந்தக் கண்ணும்பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவாதார்"என்று இந்நூலில் மேலும் இவரது மாட்சிகூறப்படுகின்றது. பிறர் தரும் சோறு ஆர்வார் கயவர்என்றபடி. இடைவிடாத முயற்சியினால் நல்ல உணவும்உண்பதற்கு நேரம் வாயாதவ ரென்றும் கருமமேகண்ணாயினார் உயர் உணவிற் கருத்திருத்தாரென்றும் உணர்த்துதற்குக் ‘கருனையைப் பேரும்அறியார்' என்று முயற்சியாளரைக் குறித்தார். அவர்நனி விரும்பும் தாளாண்மை நீரும் என்க. உம்மை :இழிவு சிறப்பு. நீரென்றது புல்லரிசிச் சோற்றில்ஊறிய நீர். விடும் : துணிவுப் பெருளுணர்த்திற்று.