என்றது, குற்றம் ஒருவனிடத்து உண்டானபோதும் சினமில்லாமையை உணர்த்துவது

61 மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.

(பொ-ள்.) மதித்து இறப்பாரும் இறக்க - தம்மைப் பொருள் செய்து நடப்பாரும் நடக்கட்டும் ; மதியா மிதித்து இறப்பாரும் இறக்க - அங்ஙனம் மதியாமல் கீழ்ப்படுத்தி நடப்பாரும் நடக்கட்டும், மிதித்து ஏறி ஈயும் தலைமேல் இருத்தலால் - ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் இருத்தலினால், அஃது அறிவார் -அந் நிலைமையைத் தெரிந்து சிந்திக்குஞ் சான்றோர், காயும் கதம் இன்மை நன்று - எரிந்து விழுஞ் சினமிலராயிருப்பது நல்லது.

(க-து.) பிறர் மதித்தாலும் மதிக்காவிட்டாலும் சான்றோர் சினம் கொள்ளலாகாது.

(வி-ம்.) இறத்தல் இங்கே ஒழுகுதல் என்னும் பொருட்டு. மதியா : ஈறு கெட்டு நின்றது. உம்மைகள், எச்சம். தாழ்ந்ததென்று கூறும்பொருட்டு ஈயைக் கூறினார். "ஈச்சிறகு அன்னதோர் தோல் அறினும்" என முன்னும் வந்தது. கதம் இன்மை கதம் உடையராகாமை .

62 தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.

(பொ-ள்.) மண்டி அடிபெயராது ஆற்ற இளிவந்த போழ்தின் - அடர்ந்து அடிதவறாமல் அடுக்கி மிக்க இழிவு நேர்ந்த காலங்களில், முடிகிற்கும் உள்ளத்தவர் - தாம் மேற்கொண்ட காரியங்களை முடிக்கும் ஊக்கமுடைய நல்லோர், தண்டாச் சிறப்பின் தம் இன் உயிரை - அழியாச் சிறப்பினையுடைய தமது இனிய உயிரை, தங்காது கண்டுழியெல்லாம் துறப்பவோ - சிறிதே இடர் கண்ட நேரங்களிலெல்லாம் பொறுத்துத் தாங்கிக்கொண்டிராமல், சினந்து விட்டு விடுவார்களோ?

(க-து.) இடர்கள் கண்டு சினத்தால் உயிரை விடுதல் ஆகாது.

(வி-ம்.) கண்டதற்கெல்லாம் உயிரை இழக்குமளவுக்குச் சினம் மிகுவாரை நோக்கிற்று இச்செய்யுள். வீடுபேறடையும் அழியாத பேரின்பச் சிறப்புக்குரிய இனிய உயிராதலின் தண்டாச் சிறப்பின் இன் உயிர்' எனப்பட்டது. ஓ : வினா. அடிபெயராதென்றதனால், அடுக்கி வருதல் உணர்த்தினார். முடிகிற்கும் என்பதிற் கில்' ஆற்றலுணர்த்துவதோர் இடைநிலையாகலின், இடத்திற்கேற்ப அது பயன்படுத்தப்பட்டது. தெளிவு பெறுதற்குத் தோன்றிய, பிறவியை அந்நோக்கத்துக்கு மாறாக வீணே இழந்து விடுலாகாமையின், இச்செய்யுள் அந்நோக்கத்தையும் எடுத்துக்காட்டி அவ்வுள்ளத்தவர் துறப்பரோ என அறிவுறுத்திற்று.

63 காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாத தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

(பொ-ள்.) காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் - அடக்காமல் சினத்தினால் ஒருவன் தன் வாய்விட்டுச் சொல்லியே சினச்சொல், ஓவாது தனனைச் சுடுதலால் - என்றைக்குமே தன்னை வருத்துதலால், ஓவாதே ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் - இடைவிடாமல் ஆராய்ந்து பண்பட்ட கேள்வி ஞானத்தையுடையவர்கள், எஞ்ஞான்றும் - எப்பொழுதும், காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து - மனம் வெதும்புதலால் அமைந்த சுடுமொழிகளைச் சினந்து சொல்லமாட்டார்கள்.

(க-து.) சினப்பது தன்னையே சுடுமாதலால், பண்பட்ட உள்ளமுடையோர் சினங்கொள்ளார்.

(வி-ம்.) உள்ளடங்காது வெளிவருதல் தோன்ற வாய் திறந்து ' எனப்பட்டது. ஏகாரங்கள் இரண்டனுள் முன்னது தேற்றம் ; மற்றது அசை . வருத்துதலின் மிகுதி தோன்றச் சுடும்' என்றார் ஆய்ந்தமைந்த ' என்பது கேள்விக்கு அடைமொழி. ஓவாதே உடையார் எனக் கொள்க. ஆய்தல் - நூலான் வந்த அறிவைத் தம் பழக்கத்தால் உணர்ந்து முடிவு செய்தல். அமைதல் - அம் முடிவின் வழிப் பண்படுதல். காய்ந்தமைந்த' என்னுமிடத்துக் காய்ந்து ' காரணப்பொருட்டும், ‘அமைந்த' அமைந்த சொற்கள் என்னும் பொருட்டுமாம். கறுத்தல்' : உரிச் சொல் அடியாகப் பிறந்த சொல். சினமில்லாமலித்ததற்குப் பண்பட்ட கேள்வி ஞானம் இன்றியமையாததென்னும் உண்மையும் இச்செய்யுட்கண் அறிவுறுத்தப்பட்டமை கண்டு கொள்க.

64 நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்தனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.

(பொ-ள்.) நேர்த்து நிகரல்லார் - சமானமில்லாதவர்கள் தம்மைச் சமானாமாகக் கருதிக்கொண்டு, நீரல்ல சொல்லியக்கால் - தகைமையல்லாத சொற்களைச் சொன்னால், வேர்த்து வெகுளார் விழுமியோர் - சிறந்தவர்கள் மனம் புழுங்கிச் சினந்து கொள்ளமாட்டார்கள் ; ஆனால் ; கீழ் - கீழ்மக்கள், ஓர்த்து அதனை உள்ளத்தான் உள்ளி - ஆராய்ந்து அத் தகைமையற்ற சொல்லை மனத்தாற் பலகாலும் நினைத்து, உரைத்து உராய் ஊர் கேட்ப - ஊரிலுள்ளவர்கள் கேட்கும்படி அங்கங்கும் சொல்லித் திரிந்து, துளளித் தூண்முட்டும் - அதனால் மேன்மேலும் பெருகுங் கோபத்தினால் உடம்பு துடித்து அருகிலிருக்குந் தூணில் மோதிக் கொள்வார்கள்.

(க-து.) தகுதியல்லாதவர்கள் சொல்லும் சொற்களுக்குச் சான்றோர் சினந்து கொள்ளமாட்டார்கள்.

(வி-ம்.) நிகரல்லார் சொல்லியக்கால் வெகுளாரெனவே, நிகருள்ளோரும் மிக்கோரும் தக்கவை சொல்லின் அவற்றின் வழி விரும்பித் திருந்துவர் என்பது அருத்தாபத்தியாற் பெறப்படும். வேர்த்து வெகுளா ரென்றதனோடு அச்சொல்லை அறிவான் ஓரார் ; உள்ளத்தான் உள்ளார் ; பிறர்பாற் சென்று கூறார் ; இழிதகைமையாகத் துள்ளி முட்டிக் கொள்ளார் என்பனவும் ஏனையோர் செயலாகக் கூறியவற்றினின்று எதிர்முகமாகக் கூட்டிக்கொள்க. ஓர்த்தல், அறிவினால் அதன் தகைமையின்மையை ஆராய்ந்து பகைமை கொள்ளுதல் ; பின்பு உள்ளல் என்றது, அப்பகைமையை மேலுமேலும், நினைந்து நெடுங்காலம் உள்ளத்து நிகழச்செய்தல். "இகலொடு செற்றம்" என்பதன் உரை இங்கு நினைவுகூரற்பாலது. உராய் - உலாவி, திரிந்தென்னும் பொருட்டு. சினத்தை அடக்கமாட்டாத எளிமை மிகவுந் தோன்றத் துள்ளித் தூண் முட்டுமாங் கீழ்,' என்றார். ஆம் : அசை.

65 இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.

(பொ-ள்.) இளையான் அடக்கம் அடக்கம் - இளமைப் பருவமுடையவனது புலனடக்கமே அடக்கமெனப்படும், கிளைபொருளில்லான் கொடையே கொடைப்பயன் - கிளைக்கும் பொருளில்லாதவனது ஈகையே பயனெனப்படும் ஈகையாம் (அவைபோல) எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடையாளன் பொறுக்கும் பொறையே பொறை - எதனையும் அழிக்க வல்ல வலிமையறிவினை யுடையோன் பொறுத்துச் சினம் ஆறும் பொறுமையே பொறுமை யெனப்படும்.

(க-து.) தமது சினம் செல்லக்கூடிய இடங்களிற் பொறுத்துக் கொள்ளுதலே சிறந்த பொறுமையாகும்.

(வி-ம்.) அடக்கம் என்னுமிடத்தில் பிரிநிலை ஏகாரங் கூட்டுக. கிளைக்கும் பொருளென்றது பலமுகமாக மேன்மேற பெருகுஞ் செல்வத்தை. பொருளாலாம் பயன் கொடையாதலின், கொடைப் பயன் எனப்பட்டது. எல்லாம் என்றது, எத்தகையதனையும் என்னும் பொருட்டு. ஒறுத்தல் - இங்கு அழித்தல். எல்லாம் ஒறுக்கும்' என்ற குறிப்பால், உரனுடையாளன் என்றது, தவமுடையானை. வலிமை மிக்க அறிவு தவ அறிவேயாதலின், மதுகையுர மெனச் சிறப்பிக்கப்பட்டது. அதிகாரம் நோக்கி, முன்னிரண்டு கருத்துக்களை ஏனையதற்கு உவமமாகக்கொள்க. இங்கே காட்டிய அடக்கம் முதலியனவே உள்ளமாட்சிமைக் காவன வென உரைத்தபடி.

66 கல்லெறிந் தன்ன கயர்வாய் இன்னாச்சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.

(பொ-ள்.) ஒல்லை இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் - மந்திரித்து இட்ட திருநீற்றால் உடனே படம் சுருங்கிச் சினம் ஒடுங்கிய நல்ல பாம்பைப்போல, தத்தம் குடிமையான் வாதிக்கப்பட்டு - தங்கள் உயர்குல ஒழுக்கத்தால் தடை செய்யப்பட்டு, கல் எறிந்தன்ன கயவர் வாய் இன்னாச் சொல் - கற்களை வீசினாற் போன்ற கீழ்மக்கள் வாயிற்றோன்றிய துனபச் சொற்களை, எல்லாரும் காணப் பொறுத்து உய்ப்பர் - அனைவரும் அறியப் பெரியோர் பொறுத்துக் கொண்டு தமது மேற்கோளை நடத்திச் செல்வர்.

(க-து.) தமது உயர்நிலை கருதிச் சான்றோர், கீழ் மக்கள் சொற்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

(வி-ம்.) எறிந்தன்ன இன்னாச்சொல்,' என்க. கயவர்' என்பதற்குக் "குணங்கள் யாவும் இலராய கீழோர்" 1 என்று உரை கூறுவார் பரிமேலழகர். பொறுப்பதினும், பலரெதிரிற் பொறுத்துக் கொள்வது அரியதொன்றாதலின், ‘எல்லாருங் காணப்பொறுப்பர்' என்றார். ஒல்லை, உடனே பை - படம் ; அவிந்த - அவிந்து ஒடுங்கிய. தத்தம் என்னும் அடுக்குப் பன்மை. உயர்குலம் என்றது, நல்லோர் கூட்டம் ; அவரிணக்கத்தால் உண்டாகும் பெருந்தன்மையான ஒழுக்கமே உயர்குலவொழுக்கம் எனப்பட்டது. குடிமை யென்றது அது ; அஃதாவது, பெருந்தன்மை. கயவர் என வந்தமையின், பொறுத்துய்ப்பவர் பெரியோர் எனப்பட்டது. மேற்கோளை என்றது, தம் நற்கொள்கைகளை, ‘கல்லெறிந்தன்ன' என்றமையால் இன்னாச் சொல்லால் உண்டாகுஞ் சுறுக்கென்ற துன்பமும், ‘பையவிந்த நாகம்' என்றமையாற் சீற்றந் தணிதலும் பெறப்படும்.

67 மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம் அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.

(பொ-ள்.) மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு - தமக்குப் பகைவராயிருநது அப் பகைமையைப் பாராட்டுகின்றவர் பொருட்டு, ஏலாமை ஆற்றாமை என்னார் அறிவுடையோர் - தாமும் அப்பகைமையைப் பெரியோர்கள் மேற்கொள்ளாமையை அறிவுடையோர் மாட்டாத தன்மை என்று சொல்லி இகழமாட்டார்கள் ; ஆற்றாமை நேர்த்து இன்னா மற்று அவர் செய்தக்கால் - தம்முடைய தீய தன்மைகளை அடக்கிக் கொள்ளமாட்டாமல் எதிர்த்து அப்பகைவர் துன்பங்கள் செய்தால், தாம் அவரைப் பேர்த்து இன்னா செய்யாமை நன்று - தாம் அவர்களுக்குத் திருப்பித் துன்பங்கள் செய்யாமை நல்லது.

(க-து.) தமக்குத் துன்பஞ் செய்தவர்களுக்குத் தாமுந் துன்பஞ் செய்வது ஆற்றலன்று ; துன்பஞ் செய்யாமையே ஆற்றலாவது.

(வி-ம்.) அவரை என்றது உருபு மயக்கம்.1 நான்கனுருபு : பொருட்டு. ஏலாமை ஆற்றாமையன்று ; மாறு ஏற்றலே ஆற்றாமை என்பது போன்ற, ஈரிடத்தும் ஆற்றாமை ' யென்னுஞ் சொல் வந்தது. இன்னா - இனிமையல்லாமை. மற்று ; அசை . முன்னிரண்டடிகள் மனத்தளவாய் மாறுகொள்ளலும் பின்னிரண்டடிகள் அப்பகைமையைச் செயலிற் காட்டுதலுமாக விளக்கப்பட்டன.

68 நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.

(பொ-ள்.) நெடுங் காலம் ஓடினும் - நீண்ட காலம் சென்றாலும், நீசர் வெகுளி - கீழ்மக்கள் கோபம், கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - தணியுங்காலம் இல்லாமலே பெருகிக்கொண்டு போகும் ; ஆனால், அடுங் காலை நீர் கொண்ட வெப்பம்போல் - காய்ச்சுங் காலத்தில் தண்ணீர் அடைந்த வெப்பத்தைப்போல, தானே தணியும் சீர் கொண்ட சான்றோர் சினம் - பெருமை மிக்க சான்றோரது கோபம் தானே தணிந்துவிடும்..

(க-து.) கோபம் விரைவில் தணிந்துவிட வேண்டும்.

(வி-ம்.) கெடுங்காலம் - கோபம் தணிகின்ற காலம். இயல்பாகத் தண்மையாயிருக்கும் நீர், காய்ச்சும்போது சூடேறிப் பின்பு தானே தணிந்து முன்போல் தண்ணீராய் விடுகின்றது; அதுபோலச் சான்றோரும் இயல்பாகவே குளிர்ந்த மனமுடையவராயிருப்பர்; பிறர் துன்புறுத்தும் போது மனவருத்தத்தால் சினம் எழுந்தாலும், விரைவில் அது தானே தணிந்துவிடும். அவரும் முன்போற் குளிர்ச்சியுடையவராகவே யிருப்பர்; ஆற்றலுள்ளவர்க்குச் சினம் எழுவது இயல்பு; அவ்வாற்றலோடு சான்றாண்மையும் உள்ளவரானால் அவர் அதனைப் பரக்கவிடாமல் தணித்துக் கொள்வர். காய்ச்சும் வரையில் நீர் வெப்பமாயிருந்து பின் தணிந்து விடுவது போலப் பிறர் துன்புறுத்தும் வரையில், சான்றோருள்ளம் கொதிப்பாயிருந்தாலும் பின் அறவே தணிந்துவிடும்; இது, ‘நீர் கொண்ட வெப்பம்' என்னும் உவமையாற் பெறப்படும். தானே தணியும் ' என்றமையால், துன்பஞ் செய்தவர்களைத் திரும்ப ஒறுப்பதில்லாமல் தானே தணிந்துவிடும் என்பது கொள்ளப்படும். "நீரிற் கிழித்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம் ', என்னும் வாக்கை ஈண்டு நினைவு கூர்க.

69 உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.

(பொ-ள்.) உபகாரம் செய்ததனை ஓராது - தாம் முன்பு உதவி செய்ததை நினையாமல், தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் பிறர் தம்மிடம் தீமைகளை மிகுதியாகச் செய்தாலும், உபகாரம் தாம் செய்வதல்லால் - அவருக்குத் தாம் திரும்பவும் உதவி செய்வதல்லாமல், தவற்றினால் தீங்கு ஊக்கல் - அவர் குற்றங் காரணமாக அவருக்குத் தீங்கு செய்யமுயலுதல், வான் தோய் குடிப்பிறந்தார்க்கு இல் - உயர்குலத்தில் தோன்றிய மேலோர்களுக்கு இல்லை.

(க-து.) தாம் நன்மை செய்தும் தமக்குத் தீமை செய்வோர்க்கு மேலுமேலும் நன்மை செய்வதல்லாமல், தீங்கு செய்ய முயலார் சான்றோர்.

(வி-ம்.) பிறர்பால் உண்டாகும் தீய நினைவை அவருக்கு நன்மை செய்து செய்தே மாற்றுதல் இயலும் என்பதனாலும், தமக்கும் அம் மனப்பான்மை மேன்மேலும் ஞான விளக்கத்துக்கு இடஞ் செய்யுமென்பதனாலும் இங்ஙனங் கூறப்பட்டது. உயர்வை நன்கு புலப்படுத்தும் பொருட்டு, ‘வான் தோய் குடி' என்றார் ; "வானுயர் தோற்றம்" என்புழிப்போல. இதனை இலக்கணை' என்ப.

70 கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.

(பொ-ள்.) கூர்த்து நாய்கௌவிக் கொளக் கண்டும் - சினம் மிகுந்து நாய் தமதுடம்பை வாயினால் கடித்துத் தசையைப் பிடுங்குதலைப் பார்த்து, தம் வாயால் பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை - அதற்கு எதிராகத் தமது வாயினால் திருப்பி நாயைக் கடித்தவர் இவ்வுலகத்தில் இல்லை ; அதுபோல ; நீர்த்து அன்றிக் கீழ் மக்கள் கீழாய சொல்லியக்கால் - தகுதியான சொல் அல்லாமல் கீழ்மக்கள் தாழ்வான சொற்களைச் சொன்னால், சொல்பவோ மேன்மக்கள் தம் வாயால் மீட்டு - மேன்மக்கள் தம் வாயினால் திருப்பி அத் தாழ்வான சொற்களையே சொல்வார்களோ ?

(க-து.) கீழ்மக்களுக்கு எதிராக மேன்மக்கள் ஒருகாலும் தாழ்வான சொற்களைத் திருப்பிச் சொல்ல மாட்டார்கள்.

(வி-ம்.) இப்பா எடுத்துக் காட்டுவமையணியாம். திரும்ப வாயாற் கடிப்பது இல்லாமை போலத் திரும்பித் தாழ்வான சொற்களால் பேசமாட்டாரென்பது ஒப்புமை. கூர்த்து - மிகுத்து ; சினத்தை மிகுத்து . நீர்த்து - நீர்மையுடையது ; தகுதியான சொல் சுருக்கமாகவும் தாழ்வான சொல் பலவாகவும் வருதலின் நீர்த்து' என ஒருமையாகவும் கீழாய' எனப் பன்மையாகவும் சுட்டப்பட்டன. "எதிர்மறை யெச்சம் எதிர்மறை முடிபின"  வாதலின், சொல்பவோ என நிறுத்தினார் ; சொல்லார் என எதிர் மறை முடிபு உரைத்துக் கொள்க.