கற்றற்குரிய நூல்களைக் கற்றல், பொருளைத் தேடுதற்கும் தேடிய பொருளைப் பயன்படுத்துதற்கும் கல்வி காரணமாதலின் இதுபொருட்பாலின்கண் அமைந்தது.

131 குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

(பொ-ள்.) குஞ்சி அழகும் கொடுதானைக் கோடு அழகும் மஞ்சள் அழகும் அழகு அல்ல -மயிர்முடியின் அழகும் வளைத்து உடுக்கப்படும்ஆடையின் கரையழகும் மஞ்சட் பூச்சின் அழகும்மக்கட்கு முடிந்த அழகுகள் அல்ல; நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால் கல்வி அழகே அழகு -நாம் நல்லமாக ஒழுகுகின்றோம் என்று தம் மனம்அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால்மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகாகும்.

(க-து.) நல்லொழுக்கம் பயக்கும்கல்வியே மக்கட்கு உயர்வான அழகாகும்.

(வி-ம்.) குஞ்சி, ஆடவர் தலைமயிர்முடி; மஞ்சள், சிறப்பாக மகளிர் பூசிக்கொள்ளும் மஞ்சள் நிறமான மணப்பூச்சு; தானைஇருபாலார் ஆடைக்கும் ஒக்கும்; ஆதலின்,இச்செய்யுள் பொதுவாக மக்கட்குரிய கல்வியழகைஉணர்த்திற்றென்க. "நடை வனப்பும் நாணின்வனப்பும் வனப்பல்ல, எண்ணோ டெழுத்தின் வனப்பவனப்பு" எனப் பெண்பாலாரையும்உட்கொண்டு பிறரும் அறிவுறுப்பர்.

குஞ்சி' முதலியன இலக்கணையால்பிற அழகுகளையும் உட்கொண்டன. நெஞ்சத்து என்றார்,மனமறிய என்றற்கு; நடுநிலைமையா லென்றார்.உண்மையாக உணரும் என்றற்கு. ‘யாம் நல்லம்' என்றது,தலைமைபற்றி வந்த தன்மைப் பன்மை.

132 இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.

(பொ-ள்.) இம்மை பயக்கும் -நல்வாழ்க்கையாகிய இம்மைப்பயனை விளைவிக்கும்;ஈயக் குறைவு இன்று - பிறர்க்குக் கற்பித்தலால்குறைவுபடுதல் இல்லை; தம்மை விளக்கும் - தம்மைஅறிவாலும் புகழாலும் விளங்கச் செய்யும்; தாம்உளராக் கேடு இன்று ஆல் - தாம் இருக்க அது கெடுதல்இல்லை ஆதலால், எம்மை உலகத்தும் யாம் காணேம்கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து -எப்பிறவியின் உலகத்திலும் கல்விபோல்அறியாமை மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தை யாம்காண்கின்றிலேம்.

(க-து.) கல்வியே, எல்லா வாழ்க்கையின்னல்கட்குங் காரணமான அறியாமையாகியமயக்கத்தைத் தீர்க்கும்.

(வி-ம்.) ஆல் காரணப் பொருட்டால்ஒவ்வொன்றனோடும் வந்தது. ஈதல் - ஈண்டுக்கற்பித்தல், மக்கள் பல நாள் உள்ளவராகச்செல்வம் அதற்கு முன்னரே கெட்டொழிதலும்உண்டாதல் போலக் கல்வி கெடுதல்இல்லையென்றற்குத் ‘தாம் உளராக் கேடு இன்று'எனப்பட்டது. தேவருலகத்து அமிழ்தமும் உடற் பிணியைநீக்குமன்றி உயிர்ப்பிணியாகிய மருட்சியைத்தீர்க்காதாதலின் ‘எம்மை யுலகத்துங் காணேம்'என்றார். அறத்தீர்க்கும் என்றற்கு அறுக்கும் எனவந்தது; "துயரங்கள் அண்டா வண்ணம்அறுப்பான்"1 என்புழிப்போல.

133 களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;
கடைநிலத்தோ ராயினுங் கற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்.

(பொ-ள்.) களர் நிலத்துப் பிறந்தஉப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின்விழுமிதாக் கொள்வர்-உவர் நிலத்தில் தோன்றியஉப்பைப் பெரியோர் விளைநிலத்தில் உண்டாகும்நெல்லினும் மிக்க பயனுடையதாகப் பயன்படுத்துவர்;கடைநிலத்தோராயினும் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும் - ஆதலால், கீழ்க்குடியிற்பிறந்தோராயினும் கற்றறிந்தோரைமேற்குடியாரினும் மேலிடத்து வைத்து மதித்தல்உண்டாகும்.

(க-து.) கல்வி, மாந்தரைஉயர்வகுப்பாரினும் மேலவராக மதிக்க வைக்கும்.

(வி-ம்.) "கீழ்ப்பாலொருவன்கற்பின் மேற்பாலொருவனும் அவன்கட் படுமே"என்றார் பிறரும். தேவராகக் கருதச் செய்யும்என்றபடி, தேவர்க்குப் புலவரென ஒரு பெயருண்மையானும்."தேவரனையர் கயவர்" என்னுங்குறிப்பால் ‘தேவரனையர் புலவர்' என்னும்அதன் மறை புலப்படுதலானும் இவ்வுண்மை தேறப்படும்.பயன் தெரிவோர் என்னுங் கருத்தால் ‘சான்றோர்'என உயர்த்துக் கூறப்பட்டது. கடைநிலம்என்றவிடத்து, நிலம், பிறந்த விடத்தைஉணர்த்திற்று, ‘கற்றறிந்தோரை வைக்கப்படும்'என்னும் முடிவு "வஞ்சரை அஞ்சப்படும்" என்றாற்போல நின்றது.

134 வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச்செய்வன
விச்சைமற் றல்ல பிற;

(பொ-ள்.) வைப்புழிக்கோட்படா -வைத்த இடத்திலிருந்து பிறரால் கரவிற்கொள்ளப்படாது; வாய்த்து ஈயின் கேடு இல்லை -நன்மாணாக்கர் வாய்த்து அவர்க்குக் கற்பிக்கநேருமானால் அதனால் அழிதல் இல்லை; மிக்கசிறப்பின் அரசர் செறின் வவ்வார் - தம்மினும்மிக்க செல்வாக்கினால் அரசர் வெகுளல் நேரினும்கவர இயலாதவராவர்; எச்சம் என ஒருவன் மக்கட்குச்செய்வன விச்சை மற்று அல்லபிற - ஆதலால்; வைப்புஎன ஒருவன் தன் மக்கட்குத் தேடி வைக்கத்தக்கவைகல்வியே, பிற அல்ல.

(க-து.) கல்வியே மக்கட்குத் தேடிவைக்கத் தக்க அழியாத செல்வம்.

(வி-ம்.) "கேடில்விழுச்செல்வங் கல்வி"  யாதலின்இங்ஙனங் கூறினார். வாய்த்து என்றார். வாய்ப்பதுஅருமையாதலாலும், தக்கோர்க்கு ஈயின் அவர்வாயிலாகத் தமக்கும் வேறு பிறர்க்கும்பெருகுதலுண்டாதலாலுமென்க. மற்று : அசை; பிற என்னுங்குறிப்புச் செல்வத்தின்மேற்று.

135 கல்வி கரையில! கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

(பொ-ள்.) கல்வி கரை இல -கல்விகள் அளவில்லாதன; கற்பவர் நாள் சில -ஆனால், கற்பவர் வாழ்நாட்களோ சிலவாகும்; மெல்லநினைக்கின் பிணி பல - சற்று அமைதியாகநினைத்துப்பார்த்தால் அச் சில வாழ்நாட்களில்பிணிகள் பலவாயிருக்கின்றன; தெள்ளிதின்ஆராய்ந்து அமைவுடைய கற்ப நீர் ஒழியப் பால்உண்குருகின் தெரிந்து - நீர் நீங்கப் பாலைஉண்ணும் பறவையைப்போல அறிஞர்கள் பொருத்தமுடையநூல்களைத்தெரிந்து அவற்றைத் தெளிவுகொள்ளஆராய்ந்து கற்பார்கள்.

(க-து.) தக்க மெய்ந்நூல்களையேதெரிந்து தெளிவாகக் கற்றல் வேண்டும்.

(வி-ம்.) மேலும்1 இக் கருத்துவரும். கல்வியென்றது ஈண்டுக் கலை நூல்களும் பலதலையான சமய நூல்களுமாகும். பாலுண்குருகு, நீரைஉண்ணுதலொடு அமைதியடையும் பல பறவைகள்போலன்றிப் பாலுண்ணுதலில் மகிழ்வு மிகுதியுமுடையபறவையாகும்; அதனை அன்னப்புள் என்பது வழக்கு.அமைவென்றது, ஈண்டுத் தகுதி; அது மெய்யுணர்வைஉணர்த்தும். தெரிந்து ஆராய்ந்து கற்ப என்க.

136 தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.

(பொ-ள்.) தோணி இயக்குவான்தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்றுஇகழார் அவன் துணையா ஆறுபோயற்று - படகுசெலுத்துவோன் பழைமையான சாதிகளில்,நினைக்குமிடத்துக் கடைப்பட்ட சாதியைச்சேர்ந்தவனென்று புறக்கணியாராய் அவன் துணையாகஆற்றைக் கடந்துபோன தன்மையை ஒக்கும்; நூல்கற்றமகன் துணையா நல்ல கொளல் - அறிவு நூல்கள் கற்றபெருமகனொருவன் துணையாக மெய்ப்பொருள்களைஅறிந்து கொள்ளுதல் என்க.

(க-து.) கல்விக்கு முன் பிறப்பின்உயர்வு தாழ்வு கருதத்தக்கன அல்ல.

(வி-ம்.) ‘நல்ல கொளல் ஆறுபோ யற்று' என்க;தோணியியக்குந் தொழில் இந்நாட்டிற் பழைமையானதென்பது தோன்றத் ‘தொல்லை வருணத்து' எனவும்,பிறப்பின் உயர்வு தாழ்வு கருதுதல் இயல்பன்று,என்பது தோன்றக் ‘காணின்' எனவும், எக்குடிபிறப்பினுங் கல்வி கேள்விகளுடையோரே மக்கள் எனமதிக்கற்பாலரென்பது தோன்ற ‘மகன்' எனவுங்கூறப்பட்டன. இகழார்; முற்றெச்சம்; காணாய்:முன்னிலை அசை. ஆறு கடத்த லென்னுங் குறிப்பால்,வாழ்க்கையாற்றைக் கடந்து கரை சேர்தற்குக்கற்றோர் துணை இன்றியமையாததென்பது பெறப்படும்.

137 தவலருந் தொல்கேள்வித் தன்மையுடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்(து)
உம்ப ருறைவார் பதி.

(பொ-ள்.) தவல் அரு தொல்கேள்வித் தன்மையுடையார் இகல் இலர் எஃகுஉடையார் தம்முள் குழீஇ நகலின்இனிதாயின்-அழிதலில்லாத பழைமையான நூற்கேள்விப் பேறுடையராய் முரணிலராய்க்கூரறிவுடையராய் விளங்குங் கற்றோருட் சேர்ந்துஅளவளாவி மகிழ்தலினும் இனிமையுடையதாயின்,காண்பாம் அகல்வானத்து உம்பர் உறைவார் பதி-அகன்ற விண்ணின் மேலிடத்தில்உறையுந்தேவர்களின் திருநகரைக் காண முயல்வோம்.

(க-து.) துறக்க வின்பத்தினுங்கல்வியின்பமே உயர்ந்தது.

(வி-ம்.) இஃது, அறிவு பொருளாகத்தோன்றும் உவகை; தொன்றுதொட்டுஆசிரியமரபினாற் கேட்கப்பட்டு வரும் நூற்கேள்வியென அதன் சிறப்பியல்பு தோன்றும்பொருட்டுத் ‘தொல் கேள்வி' யென்றதோடு,அவ்வகைத் தன்மையுடையா ரெனவுங்கிளந்தோதப்பட்டது. இகலென்றது ஈண்டு, நூல் நெறிஉலக நெறியென்னும் இருவகை வழக்கோடும் முரண் என்க.இனி தாகாதென்றற்கு இனிதாயிற் காண்பாம்எனப்பட்டது. காண்பாமென்றது, பாராமுகமான சொல்,மேலிடம். என்றது, துறக்க வுலகை. பதி, அமராவதியென்ப: கல்வியைப் போலத் துறக்கவுலகம் பேதமைகெடுத்து நிலையான அறிவொளியின்பம்நல்காதாகலின், இவ்வாறு நுவலப்பட்டது.

138 கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே1 - நுனிநீக்கித்
தூரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர்

(பொ-ள்.) கனைகடல் தண்சேர்ப்ப -ஒலிக்கும் கடலின் குளிர்ந்த துறைவ!.கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்பு தின்றற்று- கற்று மெய்ப்பொருள் அறிந்தொழுகுவாரது நேயம்கரும்பை அதன் நுனியிலிருந்து தின்று சுவைப்பதைப்போன்றது; நுனி நீக்கித் தூரின் தின்றன்ன தகைத்துபண்பு இலா ஈரம் இலாளர் தொடர்பு - நுனியை விடுத்துஅடிப்பகுதியிலிருந்து அதனைத் தின்றாற் போன்றதன்மையையுடையது அக் கல்விப் பண்பும் அன்பும்இல்லாதவரது நேயம்.

(க-து.) கற்றோர் தொடர்பு வரவரவளர்ந்து இனிக்குந் தன்மையது.

(வி-ம்.) கல்வியறிவு ஈண்டுப் பண்புஎனப்பட்டது. அதனால் இயற்கையறிவுசெம்மைப்படுதலின். கல்வி பெறாதோரது நிலையைநன்கு விளக்குவார் ‘பண்பு இலா ஈரம் இலாளர்'என்றார். கரும்பை நுனியிலிருந்து தின்னல்மேன்மேற் சுவைத்தற்கு உவமை; தூரென்றது"வேருந்தூருங் காயும்" என்புழிப்போலஈண்டுக் கரும்பின் அடிப்பகுதியை யுணர்த்தும்.

139 கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.

(பொ-ள்.) கல்லாரேயாயினும்கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும்தலைப்படுவர் - தாம் கல்லாதவரே யாயினும்கற்றாரைச் சேர்ந்து பழகினால் பண்பட்டமெய்யறிவு வரவர உண்டாகப்பெறுவர்; தொல்சிறப்பின் ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால்புது ஒடு தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு -இயற்கைமணச் சிறப்பினையுடைய விளக்கமான நிறம்அமைந்த பாதிரிமலரைச் சேர்தலால் புதியமட்பாண்டம் தன்கண் உள்ள தண்ணீர்க்குத் தான்அம்மணத்தைத் தந்தாற்போல வென்க.

(க-து.) கல்வி பயிலும்பேறில்லாதார் கற்றாரோடு சேர்ந்து பழகுதலாவதுமேற்கொள்ள வேண்டும்.

(வி-ம்.) முறைமுறையே என்றற்கு‘நாளும்' எனவும், இயற்கை மணச்சிறப்பென்றற்குத்‘தொல்சிறப்' பெனவும் வந்தன. ஓடு : ஆகுபெயர்; புதியமட்பாண்டத்தில் முதலில் பாதிரி மலர்களைப்பெய்துவைத்துப் பின்பு அதில் நீரூற்றி நீர்க்குநறுமணங் கூட்டுதல் மரபாதலின், ‘பாண்டம் மணத்தைஏற்றுப் பின் நீர்க்குத் தரும் என்றற்குத் தான்பயந்தாங்கு' எனப்பட்டது. ஈண்டுத் ‘தான்' என்பதுபொருள் பயந்து நின்றது. உவமையணி.

140 அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)
உலகநூ லோதுவ தெல்லாங் - கலகல
கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்
போஒந் துணையறிவா ரில்.

(பொ-ள்.) அலகுசால் கற்பின்அறிவுநூல் கல்லாது உலகநூல் ஒதுவதெல்லாம் -அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல்களைக்கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரியவாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக்கொண்டிருப்பது, கலகல கூம் துணையல்லால்- கலகல என்றுஇரையும் அவ்வளவேயல்லால், கொண்டு தடுமாற்றம்போம் துணை அறிவார் இல்-அவ் வுலக நூலறிவு கொண்டுபிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையைஅறிகின்றவர் யாண்டும் இல்லை.

(க-து.) கருவிக் கல்வி கொண்டுமெய்யுணர்வுக் கல்வி பெறுதலே, நோக்கமாதல்வேண்டும்.

(வி-ம்.) உலக நூலென்றது முன்,"சத்தமும் சோதிடமும் என்றாங்கிவை" எனப்பட்டவை. கலகலவென்பது இரட்டைக் கிளவி;பிரிந்திசையா எல்லாம் என்றது, என்றும்அவற்றையே ஓதுங் குறிப்பின்மேற்று. கூவும் போவும்என்பன கூம்போம் என நின்றன.