நட்பிற் பிழைபொறுத்தல்
நட்பினரிடத்துக் குற்றம்உண்டாயின், அஃது அறியாமையானதல் அல்லதுஊழினானதால் உண்டாதலன்றி வேறின்றாகலின்பழைமை கருதி அதனைப் பொறுத்து, அவர் நட்பினையேபாராட்டி யொழுகுதல்.

221 நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

(பொ-ள்.) நல்லார் எனத் தாம்நனி விரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும்அடக்கிக் கொளல் வேண்டும் - நல்லவர் என்று தாம்பலகால் ஆராய்ந்து மிகவும் நேசித்துக்கொண்டவரைப் பின்பு ஒருகால் அவர்நல்லவரல்லாராய் பிழைபட்டாரெனினும் அதனைப்பொறுத்து அவரைத் தம்மிடமே இணக்கிக்கொள்ளல்வேண்டும் ; நெல்லுக்கு உமி உண்டு நீர்க்கு நுரை உண்டுபுல் இதழ் பூவிற்கும் உண்டு - ஏனென்றால்,பயன்படுதலுடைய, நென்மணிக்கு அதிலிருந்துநீக்குதற்குரிய உமியுண்டு, அவ்வாறே நீர்க்குநுரையுண்டு, பூவிற்கும் புறவிதழ் உண்டு.

(க-து.) உலகத்திற் குற்றமிருத்தல்இயற்கையாகலின், நண்பரிடத்து அதனைப்பாராட்டுதலாகாது.

(வி ம்.) நல்லார், உயர்ந்தஇயல்பினர்; நனிவிரும்பிக் கொள்ளல் - அணுக்கமாகநேசித்துக் கொள்ளுதல்; அல்லாரென்றது, ஈண்டுப்பிழைபட்டாரென்னும் பொருட்டு. நெல் நீர் பூவெனவந்த உவமம், மக்கள் முதன்மையாகக் கருதி உண்ணுவனபருகுவன அணிவனவான பொருள்களிலும் குறைகள்உண்டெனப் புலப்படுத்தி நின்றது. புல்லிதழ்,புன்மையுடைய இதழ் : புன்மையாவது, மணமும்நிறமுமில்லாச் சிறுமை, பூவிற்கும் என்னும் உம்மைஉயர்வொடு எச்சம்; "செஞ்சொல்லாயிற்பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்" என்றமையின், உம்மையேற்ற சொல் இறுதியில்நின்றது.

222 செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார்.
மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.

(பொ-ள்.) செறுத்தோறுஉடைப்பினும் செம்புனலோடு ஊடார் மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர் - நீரின் நன்மையைவிரும்பி வாழ்வோர் வயலில் அதனைக்கட்டுந்தோறும் அஃது உடைத்துடைத்துச் செல்லும்இயல்பினதாயினும் அப் புதுப்புனலோடு சினத்தல்செய்யாராய் மீண்டுமீண்டும் அதனை மடைகட்டிப்பயன்படுவர்; வெறுப்ப வெறுப்பச் செயினும்பொறுப்பரே தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு -உயர்ந்தவரென்று தாம் முன்னர் விரும்பிநட்புச்செய்து கொண்டவரது தொடர்பினைப் பின்புஅவர் வெறுத்தற்குரிய பிழைகளை வெறுப்புண்டாகும்படிசெய்தாலும் அவற்றைப் பொறுத்து மேற்கொள்வர்.

(க-து.) சிறந்த நண்பர்கள்தம்மிடம் பலகாற் குற்றஞ் செய்ய நேர்ந்தாலும்,அவர் தம் உயர்வு கருதி அவர்கள் தொடர்பினைமேற்கோடல் வேண்டும்.

(வி-ம்.) செறுத்தோரென்னும்பயில்வுப் பொருளால் மறுத்து மென்பதற்கு அடுக்குப்பொருளுரைக்கப்பட்டது. செறுத்தல், ஈண்டு மடைகட்டுதல். ஊடாமைக்கு நீரினா லுண்டாங்கிளர்ச்சியும் ஓர் ஏதுவாகவின், புதுப்புனல்நுவலப்பட்டது. செம்மை, புதுமைமேற்று; "புதுநாற்றம்செய்கின்றே செம்பூம் புனல்" என்புழிப்போல. வெறுப்ப வெறுப்ப என்பவற்றில் முன்னதுபெயர். "தாம் வேண்டிக் கொண்டார்"என்றார், அவர் தம் உயர்வால் தமது உள்ளம்பிணிப் புண்டமை தோன்ற. தொடர்பு என்னும் முடிபாற்'பொறுப்ப' ரென்பதற்குப் பொறுத்துமேற்கொள்வரென்று பொருளுரைத்துக் கொள்க.

223 இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
பொறுத்தல் தகுவதொன் றன்றோ ; - நிறக்கோங்கு
உருவவண் டார்க்கு முயர்வரை நாட !
ஒருவர் பொறையிருவர் நட்பு.

(பொ-ள்.) இறப்பவே தீய செயினும்தம் நட்டார் பொறுத்தல் தகுவ தொன்றன்றோ -தம்மோடு நட்புக் கொண்டவர் மிகவுந் தீங்குகள்செய்தாலும் அவற்றைப் பொறுத்தொழுகுதல் தகுதியானதொன்றன்றோ!, நிறக்கோங்கு உருவ வண்டு ஆர்க்கும்உயர்வரை நாட - நிறமான கோங்கமலரில் அழகியவண்டுகள் சென்று ஒலிக்கின்ற உயர்ந்தமலைகளையுடைய நாடன!, ஒருவர் பொறை இருவர் நட்பு -ஒருவரது பொறை இருவர் நட்புக்கு இடம்.

(க-து.) பொறுத்தலால் நட்புவளர்தலாலும், அஃதொரு பெருந்தன்மையாதலாலும்நட்பிற் பிழை பொறுத்தல் வேண்டும்.

(வி-ம்.) நிறம், பொன்னிறம்.உருவென்பது, உருவமென ஈறுதிரிந்து வந்தது. ஒருவர்பொறுத்தலால் இருவர்க்கு நலமுண்டாதலின்ஆக்கமானதை மேற்கொள்க வென்றற்கு, "ஒருவர்பொறை இருவர் நட்"   பென்றார்.

224 மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தங்
கடுவிசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப !
விடுதற் கரியா ரியல்பிலரேல் நெஞ்சஞ்
சுடுதற்கு மூட்டிய தீ.

(பொ-ள்.) மடி திரை தந்திட்டவான்கதிர் முத்தம் கடுவிசை நாவாய் கரைஅலைக்கும் சேர்ப்ப - மிக்க விசையோடு வருகின்றமரக்கலங்கள் மடிந்துவிழுகின்ற அலைகள் கொழித்தவெள்ளிய கதிர்களையுடைய முத்துக்களைக் கரையிற்சிதறச்செய்யுந் துறையை யுடையாய்!, விடுதற்குஅரியார் இயல்பு இலரேல் நெஞ்சம் சுடுதற்கு மூட்டியதீ - நட்புவிடுதற்குக் கூடாதவர் இடையேநல்லியல்பில்லாதவராயின் அத்தகையோர்தமதுள்ளம் புண்படுதற்கு மூட்டியதீயாவர்.

(க-து.) கூடிப் பின்பிரியலாகாமையின், ஒருவரால் ஒருவர் உள்ளம்புண்படுமாறு நடந்து கொள்ளலாகாது.

(வி-ம்.) தந்திட்ட - தந்த ; விடுதற்கரியாரென்றார், பின் பிரியலாகாமையின்."நட்டபின் வீடில்லை;" என்றார்திருவள்ளுவரும். ‘நெஞ்சஞ் சுடுதற்கு மூட்டிய தீ'என்றமையின், நட்புச் செய்யப்படுவாரும்பிழைபடாமற் கருத்தாய் ஒழுகவேண்டுமென்பதுபெறப்படும்.

225 இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் ; பொன்னொடு
நல்லிற் சிதைத்ததீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.

(பொ-ள்.) இன்னாசெயினும்விடற்பால ரல்லாரைப் பொன்னாகப் போற்றிக்கொளல் வேண்டும் - இடையே தீயன செய்தாலும்நட்புவிடுந் தன்மையரல்லாரைப் பொன்னைப்போல்மதித்துக் காத்துக்கொள்ளுதல் வேண்டும்;பொன்னொடு நல் இல் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம் இல்லத்தில் ஆக்குதலால் - ஏனென்றால்,பொன்முதலிய பொருள்களோடு சிறந்த வீட்டையும்எரித்தழிக்கும் இயல்பு வாய்ந்த தீயை நாடோறும்விரும்பித் தமது இல்லத்தில் வளர்த்தலால் என்க.

(க-து.) நண்பர் குறைகளைத் தமதுபெருங்குணத்தால் தணிவாக வைத்துக் கொண்டு அவரைப்போற்றி யொழுகல் வேண்டும்.

(வி-ம்.) பொன்னாக வென்றமையின்,மதிப்புப் பெறப்பட்டது. சிதைக்கும் இயல்புமுன்னரே உண்மையின், தெளிவு பற்றிச் ‘சிதைத்த'வென இறந்த காலத்தான் நின்றது.

226 இன்னா செயினும் விடுதற் கரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப ! களைபவோ
கண்குத்திற் றென்றுதங் கை.

(பொ-ள்.) துன் அரு சீர் விண் குத்துநீள் வரை வெற்ப - அணுகுதற்கரிய சிறப்பினையுடைய,வானத்தைக் குத்தும் நீண்ட மூங்கில்களையுடையமலைநாடனே!, கண் குத்திற்றென்று தம் கை களைபவோ -தவறுதலால் தம் கண்ணைக் குத்திற்றென்று தமது கையைமக்கள் தறித்து நீக்கி விடுவார்களோ?, இன்னாசெயினும் விடுதற்கு அரியாரைத் துன்னாத் துறத்தல்தகுவதோ - ஆதலால், அறியாமையால் தீமைகள்செய்தாலும் நீக்குதற்குக் கூடாத நட்பினரைநெருங்காமற் கைவிட்டுவிடுதல் தகுந்ததாகுமோ!ஆகாதென்க.

(க-து.) தம்மைச் சேர்ந்தோர்ஒருகால் தீமைகள் செய்யினும் அவரை உடனேகைவிட்டுவிடாமல் அணைத்துக் கொள்ளல்வேண்டும்.

(வி-ம்.) ‘துன்னாமல்' என்பதுஈறுதொக்கு நின்றது. ‘துன்னருஞ்சீர்' என்பதைமலைநாடனுக்குக் கொள்க. விண் குத்தும் வெற்பென்க.கை நட்புக்கு உவமமாதல் "உடுக்கை யிழந்தவன்கைபோல்" என்னுஞ் சான்றோர்மொழிகளிற் காண்க.

227 இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர் ; கலந்தபின்
தீமை எடுத்துரைக்குந் திண்ணறி வில்லாதார்
தாமும் அவரிற் கடை.

(பொ-ள்.) இலங்கு நீர்த்தண்சேர்ப்ப - விளங்குகின்ற நீரினையுடைய கடலின்குளிர்ந்த துறைவனே! . இன்னா செயினும் கலந்துபழிகாணர் சான்றோர் - நட்புச் செய்தபின்நண்பர் கொடுமைகள் செய்தாலும் சான்றோர்அவர்பாற் குற்றங் காணார் ; கலந்தபின் தீமைஎடுத்துரைக்கும் திண் அறிவு இல்லாதார் தாமும்அவரின் கடை - நட்புச் செய்தபின் நண்பருடையகுற்றங்களை எடுத்துப் பேசுகின்ற, உறுதிவாய்ந்தஅறிவில்லாதவர் தாமும் அந்நண்பரைப்போற்கடைப்பட்டவரேயாவர்.

(க-து.) நண்பர்பாற்குறைகாண்போர் தாமுங் குறையுடையவரேயாவர்.

(வி-ம்.) ‘திண்ணறிவில்லாதார்'என்றார். பொறுமையிழத்தலின். குற்றஞ் செய்யும்நண்பரைவிடத் தாம் குற்றமில்லாதவ ரென்பதற்குஅடையாளங் காணாமையின் ‘தாமும் அவரிற் கடை'என்றார்.

228 ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்
நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால்! - காதல்
கழுமியார் செய்த கறங்கவி நாட!
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.

(பொ-ள்.) ஏதிலார் செய்ததுஇறப்பவே தீது எனினும் நோதக்கது என் உண்டாம்நோக்குங்கால் - நண்பரல்லாத அயலார் செய்ததுமிகவுந் தீங்குடைய தென்றாலும் அதன் காரணத்தைஆராயுமிடத்து ஒன்று அறியாமையான் அல்லதுஉரிமையான் அல்லது ஊழினான் என்று பெறப்படுதலின்அதன்கண் மனம் வருந்தத்தக்கது யாதுண்டு?, கறங்குஅருவி நாட - ஆதலால், ஒலிக்கின்றமலையருவிகளையுடைய நாடனே, காதல் கழுமியார் செய்தவிழுமிதாம் நெஞ்சத்துள் நின்று - அன்புமிகப்பொருந்திய நண்பர் செய்துவிட்ட தீங்குஎவ்வாற்றானும் மனம் வருந்தத்தக்கதாகாமல்நெஞ்சத்தில் ஆராய்ந்து நோக்க அன்பின்சிறப்புடையதேயாகும் என்க.

(க-து.) அயலார் செய்தபெருந்தீங்கிற்கே மனம் வருந்துதற்கிடமில்லையென்றால், நண்பர்செய்தது இனியதாகுமன்றிஇன்னாததாகல் யாங்ஙனம் என்பது.

(வி-ம்.) ‘கழுமுதல்' மிகப்பொருந்துத லென்னும் பொருட்டு: "கழுமிற்றுக்காதல்" என்பதன் நச். உரை காண்க.செய்தது என்னும் ஈறு தொக்கு நின்றது. நெஞ்சத்துள்நின்று என்றார், நெஞ்சத்துள் நினைய என்னும்பொருட்டு. நிற்க வென்னும் எச்சம் நின்று எனத்திரிந்து வந்தது. நண்பர் செய்தது தீங்கேயாயினும்அவர் முன் செய்த நன்மைகளை நினைய நினையத்தீங்கும் இனியதாய் மாறித் தோன்றுமாகலின்,‘நெஞ்சத்துள் நின்று விழுமிதாம்' எனப்பட்டது.இதனால், நட்பிற் பிழை பொறுக்கும் முறைஇன்னதென்பது பெறப்படும்.

229 தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தா ராயின், அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல்.

(பொ-ள்.) தமர் என்று தாம்கொள்ளப்பட்டவர் தம்மைத் தமரன்மை தாம்அறிந்தாராயின் - நண்பர் என்று தாம் நட்புக்கொண்டவரிடத்து இடையே நண்பராகாத் தன்மையைத்தாம் அறிந்தால், அவரைத் தமரினும் நன்குமதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக்கொளல் -அவரை நண்பரினும் மிகுதியாகப் போற்றி அவரதுநண்பரல்லாத நிலையைப் புறத்தே தூற்றாமல்தமக்குள் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.

(க-து.) நட்பிற் பிழைபடுவாரைத்தமது போற்றுதலால் நல்லராமாறு காத்துக்கொள்ளுதல் வேண்டும்.

(வி-ம்.) ‘கொள்ளப்பட்டவர்தம்மை' என்பதற்கு ஏழாவதன் பொருள் கொள்க.தமரினும் நன்கு மதித்தல், அவர் நன்னினைவு பெறும்பொருட்டு. தம்முள் அடக்கிக் கொளல், அவர்பிழைநினைவு மிகாமைப் பொருட்டு தமர், தம்மவர் ;ஈண்டுத் தம்மவ ரென்னும் உரிமைக்குரியநண்பரென்பது.

230 குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான்
மறைமகாவா விட்டவன் செல்வுழிச் செல்க,
அறைகடல்சூழ் வையம் நக.

(பொ-ள்.) குற்றமும் ஏனைக் குணமும்ஒருவனை நட்டபின் நாடித் திரிவேனல் - குற்றமும்மற்றைக் குணமும் ஒருவனை நட்புச் செய்தபின்அவனிடம் தேடிக் கொண்டு திரிவேனாயின், நட்டான்மறை காவாவிட்டவன் செல்வுழிச் செல்க - நட்புக்கொண்டவனுடைய மறைகளைத் தன்னுட்பொதிந்துவையாமல் வெளியிட்டுவிட்ட தீயோன்செல்லும் தீக்கதிக்கு நான் செல்வேனாக ; அறைகடல்சூழ் வையம் நக - அன்றியும் ஒலிக்குங் கடல் சூழ்ந்தஉலகம் என்னை இகழ்வதாக.

(க-து.) நண்பரிடங் குற்றங்காண்டல் பெரும் பிழையாகும்.

(வி-ம்.) குணத்தோடு ஒப்பிட்டுக்குற்றங் காண்டலின், குணமுங் கூறப்பட்டது. நட்பின்அருமை யறிந்தோன் வஞ்சினங் கூறு முறையில் இச்செய்யுள் இயற்றப்பட்டிருக்கின்றது."அருமறைகாவாத நட்பைப்" பிறரும்இகழ்ந்தனர். காவாமல் என்பது ஈறுதொகுத்தலாய்நின்றது. நட்பிற் பிழைகாணுங் கொடுமையின் மிகுதி,ஏனைப் பெருங்குற்றங்களோடு ஒப்புமை கூறிவிளக்கப்பட்டது.