241 பகைவர்
பணிவிடம் நோக்கித் தகவுடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராது
அணங்கருந் துப்பின் அரா.
(பொ-ள்.) இளம் பிறை ஆயக்கால்திங்களைச் சேராது அணங்கு அரு துப்பின் அரா
-பிறிதொன்றினால் வருத்துதலில்லாதவலிமையினையுடைய இராகுவென்னும் பாம்பு, மதியத்தைஅஃது இளைய பிறை நிலாவாய் மாறின் சேராது,
பகைவர்பணிவிடம் நோக்கித் தகவுடையார் தாமேயும்நாணித் தலைச்செல்லார்
காணாய் - அது போலப்,பகைவரின் தளர்வுநிலை கருதித்
தகுதியானஅறிவுடையோர் தாமாகவே உள்ளமொடுங்கி அவர்மேற்செல்லுதலில்லாதவராவர்.
(க-து.) பகைவரேயாயினும் அவர் நிலைதளரின் அவர்க்கு இரக்கங்காட்டுதல்
தகுதியானஅறிவுடைமையாகும்.
(வி-ம்.) பணிவு இங்ஙனந்தாழ்ச்சிப் பொருட்டாதல் "பணிவில்ஆண்மை" என்பதனானுங்
காண்க. தகவு, ஈண்டுமேதக்க அறிவுடைமை. உம்மை :
அசை.மேற்செல்லலென்பது, போர்மேற் சேறல்.பிறையென்றதோடமையாது
இளம்பிறை யென மேலும்விதந்தார், சிறுமையோடு மெலிவுந் தோன்ற
வென்க.காணாய் : முன்னிலை அசை, எடுத்துக்காட்டுவமை.
242 நளிகடற்
றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்
கணிகல மாவ தடக்கம் - பணிவில்சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரங் கூறப் படும்.
(பொ-ள்.) நளிகடல் தண் சேர்ப்ப -பெரிய கடலின் குளிர்ந்த துறைவனே, நல்கூர்ந்தமக்கட்கு அணிகலமாவது அடக்கம்
-வறுமையுற்றமாந்தர்க்கு அணிகலம் போற் சிறப்பதுஅடக்கமுடைமையாகும் ; பணிவில் சீர்மாத்திரையின்றி நடக்குமேல் வாழும் ஊர்கோத்திரம் கூறப்படும் -
பணிதலில்லாதுஉயர்ந்தொழுகுதலில் ஒரு வரம்பில்லாமல்நடப்பாரானால் தாம் வாழும் ஊரவரால்
தமது குடிப்பிறப்புப் பற்றி பழிக்கப்படுவர்.
(க-து.) பணிவோடிருத்தல்அறிவுடைமையாகும்,
(வி-ம்.) பின்னும் இன்றியமையாமைபற்றி ‘நல்கூர்ந்த மக்கட்' கென்றார். அறிவாகியஅழகை மேலும் விளங்கச் செய்தலின்,
அடக்கம்அணிகலம் எனப்பட்டது. சீர், ஈண்டு,
உயர்வு ;‘சுருக்கத்து வேண்டும் உயர்வு'
என்பவாகலின்.அஃதும் அளவு கடத்தலாகாதென்றற்கு,‘மாத்திரையின்றி
நடக்குமேல்' எனப்பட்டது.கூறப்படும் ஐயுற்றுப் பேசப்படும் ;
நடக்கும்கூறப்படும் என்பன, "தெய்வத்துள்வைக்கப்படும்"
என்புழிப்போல உயர்திணைக்கண் நின்றன.
243 எந்நிலத்து
வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகாது
எந்நாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால் ;
தன்னாற்றா னாகும் மறுமை ; வடதிசையுங்
கொன்னாளர் சாலப் பலர்
(பொ-ள்.) எந்நிலத்து வித்துஇடினும் காஞ்சிரங்காழ் தெங்கு ஆகாது -
எந்தநிலத்தில் விதையை இட்டாலும் எட்டி விதை தென்னைமரமாக வளராது ; எந்நாட்டவரும் சுவர்க்கம்புகுதலால் தன் ஆற்றான் ஆகும்
மறுமை - ஆதலால், எந்தநாட்டின்கண் வாழ்வோரும் தமது
நல்வினையினால்தேவருலகம் செல்லுதலால், ஒருவற்குத் தன்
முயற்சிவகையினாலேயே மறுமைப் பேறு உண்டாதல் கூடுமன்றிஇடத்தின் சார்பினாலன்று:
வடதிசையும்கொன்னாளர் சாலப் பலர் - போக உலகிருக்கும்வடநாட்டின் கண்ணும் வறிது
வாழ்நாட் கழித்து நரகுபுகுவோர் மிகப் பலராவர்,
(க-து.) இடம் முதலிய சார்பினையேபெரிதாகக் கருதாமல் தமது புண்ணியப்
பேற்றில்முயற்சியுடையராய் ஒழுகுதலே அறிவுடைமையாகும்.
(வி-ம்.) உம்மை, உயர்வு.கொன்னாளர்,
பயனிவாளர்; "நம்மருளாக்கொன்னாளர்" என்றார்
பிறரும். அவரவர்அறிவின் முயற்சியே அவரவர்க்கு உய்திகூட்டுமென்பது பொருள்.
244 வேம்பின்
இலையுட் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது.
(பொ-ள்.) வேம்பின் இலையுட்கனியினும் வாழை தன் தீஞ்சுவை யாதும் திரியாது
-வேம்பின் இலையுள் இருந்து பழுத்தாலும் வாழைப்பழம்தனது இன்சுவையிற் சிறிதும்
வேறுபடாது; ஆங்கே இனம்தீது எனினும் இயல்புடையார் கேண்மை மனம்
தீது ஆம்பக்கம் அரிது அதுபோலவே, தமக்கு நேர்ந்த
சார்புதீயதெனினும் இயற்கையறிவுடையாரது நட்புமனந்தீயதாய்மாறும் வகை
அரிதாயிருக்கும்.
(க-து.) தம் இயல்பில் அறிவுடைமைதீய சார்பினின்று காக்கும்.
(வி-ம்.) சார்பினால் இயல்புதிரியாமை கூறினமையின், இயற்கை யறிவுடைமைபெறப்பட்டது. ஆம் : அசை.
பெரும்பான்மையுந்தீதாதல் இன்மையின், ‘அரிது' என்றார்; "இன்மையரிதே வெளிறு" என்பதிற் போல.
245 கடல்சார்ந்தும்
இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
உப்பீண் டுவரி பிறத்தலால்; தத்தம்
இனத்தனைய ரல்லர் எறிகடற்றண் சேர்ப்ப
மனத்தனையர் மக்களென் பார்.
(பொ-ள்.) எறிகடல் தண் சேர்ப்ப -அலைகள் வீசுகின்ற கடலின்
குளிர்ந்தகரையையுடையவனே!, கடல் சார்ந்தும் இன்
நீர்பிறக்கும் மலைசார்ந்தும் உப்பு ஈண்டு உவரிபிறத்தலால் - கடலை யடுத்தும் இன்சுவை
மிக்கஊற்றுநீர் தோன்றுதலுண்டு, மலையை யடுத்தும்உவர்ப்பு
மிக்க உப்புநீர் உண்டாதலால்; மக்கள்என்பார் இனத்தனையர் அல்லர்
மனத்தனையர் -பகுத்தறிவுடைய மக்களென்று சிறப்பிக்கப்படுவோர்தமது சார்போடொத்த
இயல்பினரல்லர்; தத்தம்இயற்கையறிவோடொத்த நிலையினராவர்.
(க-து.) மக்கள் தத்தம்இயற்கையறிவிற்கேற்பவே ஒழுகுவராதலின்,அவ்வறிவினை அவர் தகுதியாகப் பெற்றிருத்தல்நன்று.
(வி-ம்.) உப்பு, உவர்ப்புச்சுவைஉணர்த்திற்று.
உவரி, உவர்ப்புடைய நீர்."வல்லூற் றுவரி தோண்டி" என்றார்பிறரும்.
பிறக்கும். பிறக்கும் ஆதலால் என்றுபிரித திசைத்துக் கொள்க. மனமென்றது, ஈண்டுஇயற்கையறிவோடொத்த மனப்பான்மையென்க.
246 பராஅரைப்
புன்னை படுகடற் றண்சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ? நல்ல
மரூஉச்செய் தியார்மாட்டுந் தங்கு
மனத்தார்
விராஅஅய்ச் செய்யாமை நன்று.
(பொ-ள்.) பரு அரைப் புன்னை படுகடல்தண் சேர்ப்ப - பருமனான அடிமரத்தையுடைய
புன்னைமரங்கள் உண்டாகின்ற கடலின் குளிர்ந்தகரையையுடையவனே! ஒராலும் ஒட்டலும்
செய்பவோ -நண்பரை ஒருகாற் பிரிதலும் மற்றொருகாற் கூடுதலும்உலகத்திற் செய்யத்
தக்கனவோ?, நல்ல மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார்
விராய்ச்செய்யாமை நன்று - சிறந்த நட்புச் செய்துஎத்தகையோரிடத்தும்
நிலைத்தொழுகும்மனப்பான்மை யுடையோர் முதலிலேயே யாவரோடும்மனங்கலந்து நட்புச்
செய்துகொள்ளாமை அதனினும்நன்றாகும்.
(க-து.) கூடுதலும் பிரிதலுமின்றியொழுகுதல் அறிவுடைமையாகும்.
(வி-ம்.) செய்ப : ஈண்டு அஃறிணைப்பன்மை. மரூஉ, பெயர் இரண்டும் ஒரே பொருளன. யார்மாட்டுமென்றார், நேரல்லாரையும்
அடக்கி.ஒருவரோடு கூடுதலும் பிரிதலும் செய்துகொண்டிருத்தலினுங் கூடாமையே
நன்றென்றபடி, நல்லமரூஉச் செய்து யார்மாட்டுந் தங்கு
மனத்தாரென்றது,தக்கோரெனற் பொருட்டு, அம்
மனத்தார் பின்பிரிதலாற் பெருந் துன்பமுறுவாதலின், அவ்வாறுவிதந்தார்.
247 உணர
உணரும் உணர்வுடை யாரைப்
புணரிற் புணருமாம் இன்பம் - புணரின்;
தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.
(பொ-ள்.) புணரின் - நட்புச்செய்தால், உணர உணரும் உணர்வுடையாரைப் புணரின்இன்பம் புணரும் - நாம் ஒன்றை உள்ளத்தால்
உணரஅதனைக் குறிப்பால் உணர்ந்தொழுகுங்கூருணர்வுடையாரை நட்புச் செய்யின்
இன்பம்பொருந்தும்; தெரியத் தெரியும் தெரிவு இலா
தாரைப்பிரியப் பிரியும் நோய் - நம் கருத்துக்கள்வெளிப்படையாகத் தெரிய
அந்நிலையிலும் அவற்றைஅறிந்தொழுகும் அறிவிலாதாரை நட்புச் செய்யாமற்பிரிந்திருக்கத்
துன்பங்களும் நம்மைச் சேராமற்பிரிந்திருக்கும்.
(க-து.) குறிப்பறிந்தொழுகும்கூரறிவாற்றலால் இன்பம் விளையும்.
(வி-ம்.) ‘குறிப்பிற் குறிப்புணர்வாரை உறுப்பினுள், யாது கொடுத்துங் கொள்' லென்பவாகலின்,இங்ஙனங் கூறினார். ஆம் இரண்டும் அசைநிலை.‘ஒருகால் தெரியத் தெரியுந்
தெரிவிலா தாரைத்தவறாகப் புணரின் அவரைப் பிரிய நோய் பிரியும்'என்றும்
உரைக்கலாமேனும், எந்நிலைக்கண்ணும்பிரிதலென்பது கூடாமைமேல்
நிறுத்தப்பட்டமையின்அது பொருந்தாது. ‘பிரியப் பிரியுமாம் நோய்'என்றது. முற்கருத்தை எதிர்மறையானும்விளக்கியபடியாம்.
248 நன்னிலைக்கண்
தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும்
நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.
(பொ-ள்.) நல் நிலைக்கண் தன்னைநிறுப்பானும் - சிறந்த நிலையில்
தன்னைநிலைநிறுத்திக் கொள்வோனும், தன்னைநிலைகலக்கி கீழ்
இடுவானும் -தனது முன் நிலையையுங்குலையச் செய்து தன்னைக்
கீழ்நிலைக்கண்தாழ்த்திக்கொள்வோனும், மேன்மேல்
உயர்த்துநிறுப்பானும் - தான் முன் நிறுத்திக்கொண்டசிறந்த நிலையினும் மேன்மேல்
உயர்ந்த நிலையில்தன்னை மேம்படுத்தி நிலை செய்து கொள்வோனும்,தன்னைத்
தலையாகச் செய்வானும் - தன்னைஅனைவரினுந் தலைமையுடையோனாகச் செய்துகொள்வோனும்,
தான் - தானேயாவன்.
(க-து.) ஒருவனுக்குத் தன் அறிவுமுயற்சியே எல்லாவற்றிற்குந் துணை.
(வி-ம்.) "தத்தம் கருமமேகட்டளைக் கல்" லாதலின் இங்ஙனங்கூறினார்.
நிலையினும் என்னும் உம்மை உயர்வு,உயர்த்து வானுமென்னாது
உயர்த்துநிறுப்பானுமென்றார். உயர்நிலையை வருவித்துக்கொள்ளுதலோடு அவ்வுயர்
நிலைக்கண் தன்னைவல்லமையாய் நிலைநிறுத்திக்கொள்வோனுமென்றற்கு; தன்னை என்பதை இதன்கண்ணும் ஒட்டிக்கொள்க.
249 கரும
வரிசையாற் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாருஞ் சேறல் - அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடற் றண்சேர்ப்ப!
பேதைமை யன்ற தறிவு.
(பொ-ள்.) அரு மரபின் ஓதம்அரற்றும் ஒலிகடல் தண் சேர்ப்ப - அரியதன்மையையுடைய
அலைகள் முழங்கும் முழக்கமிக்ககடலின் குளிர்ந்த துறைவனே!, கரும வரிசையால் -தொழில் முறைமையினால், கல்லாதார் பின்னும்பெருமையுடையாரும் சேறல் பேதைமையன்று அது அறிவு
-கல்வியறிவில்லாத மூடரை யடுத்தும் கல்விப்பெருமையுடைய அறிஞரும் ஒழுகுதல், அறியாமை யன்று; அதுகாலம் இடம் முதலியவற்றிற்கேற்ப
ஒழுகும்அறிவுடைமையாகும்,
(க-து.) கல்லர்தவரிடமும்காரியநிமித்தம் அளவாக ஒழுகிக்
கொள்ளுதல்அறிவுடைமையாகும்.
(வி-ம்.) கரும வரிசையால் என்றது,காரணங்
கூறியபடி. உம்மைகள் இரண்டனுள் முன்னது,இழிபிலும் பின்னது
உயர்விலும் வந்தன. ‘அருமரபின்கடல்' என்க, ஆழமும் அகலமும் வாய்ந்து உப்பு முத்துமுதலிய அரும்பொருள்களுடைமையானும்
உலகவொழுக்கத்துக்கு மழை முதலிய கொடைகளால்ஏதுவாயிருத்தலானும் கடலின் அருமரபு
பெறப்படும்:"மகர வாரிவளம்" என்றார்
பிறரும்.
250 கருமமு
முட்படாப் போகமுந் துவ்வாத்
தருமமுந் தக்கார்க்கே செய்யா -
ஒருநிலையே
முட்டின்றி மூன்று முடியுமேல் அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்.
(பொ-ள்.) கருமமும் உட்படாபோகமும் துவ்வா தருமமும் தக்கார்க்கே செய்யா -பொருள்
வரவுக் கேதுவான தொழின் முயற்சியினும்ஈடுபட்டு அதனால் இம்மைப் பயனாகத் தான்
போகமுந்துய்த்து மறுமைப் பயனாகத் தகுதியுடையார்க்கேஅறமுஞ் செய்து, ஒரு நிலையே முட்டின்றி மூன்றும்முடியுமேல் -
இம்மூன்றும் ஒரு தன்மையாகவே பிறவியிற்கடைசிவரையிற் றடையின்றி நிறைவேறுமாயின்,
அஃதுபட்டினம் பெற்ற கலம் என்ப - அப் பேறு, தன்பட்டினத்தை
மீண்டு வந்தடைந்த வாணிகக் கப்பலைஒக்கும் என்று அறிஞர் கூறுவர்.
(க-து.) முயற்சியும் போகமும்அறமுமுடையனாய் வாழ்தலே அறிவுடைமையாகும்.
(வி-ம்.) உட்படாமுதலிய வினைகள்உடன்பாட்டின் கண் வந்தன. தக்கார் , கல்வியறிவுஒழுக்கங்களாகிய தகுதியுடையோர், மூன்றும்ஒன்றுபோல் நடைபெற வேண்டுமென்றற்கு ‘ஒருநிலையே'யென்றும், இடையில் ஊறுபடாமல் நடைபெறவேண்டுமென்றற்கு
‘முட்டின்றி' யென்றுங் கூறினார்.‘இடையிருள் யாமத்து
எறிதிரைப் பெருங்கடல்உடைகலப் பட்டாங் கொழிந்தோர்' பலராகலின்,
உவமை, அருமை புலப்படுத்தி நின்றது.
0 Comments