331 கொலைஞர்
உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப
ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.
(பொ-ள்.) கொலை வல் பெரு கூற்றம்கோள் பார்ப்ப ஈண்டை வலையகத்துச்செம்மாப்பார்
மாண்பு - கொல்லுந் தொழிலில்வல்லமையுடையோனாகிய ஆற்றலிற் பெரிய கூற்றுவன்தம்
உயிர்கொள்ளுதலை எதிர்நோக்கிக்கொண்டிருக்க இவ் வுலகப் பற்றாகியவலையிற்கிடந்து
அதன்கட் களித்திருப்பாரதுஏழைமையியல்பு, கொலைஞர் உலை ஏற்றித் தீ மடுப்பஆமை நிலையறியாது. அந்நீர் படிந்தாடி யற்று
-தன்னைக் கொல்லுங் கொலைஞர் தன்னை உலையில்இட்டு அடுப்பிலேற்றித் தீக்கொளுவ
ஆமைநிலையறியாது அவ்வுலை நீரில் மூழ்கி விளையாடிமகிழ்ந்தாற்போன்றது.
(க-து.) பேதைமை தனக்கு வரும்இடுக்கணையறியாது களித்திருக்கும் இயல்புடையது.
(வி-ம்.) தீமடுப்ப, தீச்செறிப்பவென்க.
பெருங்கூற்றமென்றது, எதிர்ப்பாரையற்றபேராற்றல் வாய்நத
கூற்றம்; மாற்றருங் கூற்றம் கோள் பெயர்; இவ்வுலக வலையென்றற்கு, ‘ஈண்டை வலை'யெனப்பட்டது; பற்றின் கட்டுக்கருதிவலையெனப்பட்டது.
கிடந்தென ஒருசொல் வருவிக்க.மாண்பென்னும் நன்மொழியாற் கூறியது, மிக்கஇழிவை யுணர்த்திற்று. மேற் செய்யுளில் வருதற்கும்இங்ஙனங் கொள்க.
இடுக்கண் அறியாமை ஈண்டுப்பேதைமையாயிற்று.
332 பெருங்கட
லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.
(பொ-ள்.) இல்செய் குறைவினைநீக்கி அறவினை மற்றறிவாம் என்றிருப்பார்மாண்பு-
குடும்பத்துக்குச் செய்யவேண்டிய குறைகளைச்செய்து தீர்த்து அறச்செயல்களைப்
பின்புகருதுவோம் என்று காலத்தை எதிர்நோக்கியிருப்பாரது இழிதகைமை, பெருங்கடல் ஆடியசென்றார் ஒருங்கு உடன் ஓசை அவிந்தபின்
ஆடுதும்என்றற்று - பெரிய கடலில் நீராடுதற்குச்சென்றவர், முழுதும்
ஒருசேர அலையொலி அடங்கியபின்நீராடுவோம் என்று கருதினாற் போன்றது.
(க-து.) நடவாத தொன்றை நினைவதுபேதைமையின் இயல்பு.
(வி-ம்.) ஆடிய : செய்யிய வென்னும்எச்சம். ஒருங்கு - எல்லா அலைகளும்; உடன்,சேரவென்க. ஓசையென்றது,
இலக்கணையால் அலையின்மோதுதலையுணர்த்தும். ஆல் : அசை. குறைவினை,யென்பதில், இன்சாரியை; குறைவினை,
அறவினை என்றது,செய்யுளோசையின் இன்பங்
கருதிற்று, குறைவாகியசெயலென்றுரைப்பின்
அவ்வின்பத்திற்காகஆசிரியர் செய்த விரகு புலப்படாது போமாதலின், அதுசிறவாது மற்று என்றது, இங்குப் பின்
என்னும்பொருட்டு : "மற்றறிவாம் நல்வினையாம்இளையம்"
என்புழிப்போல.
333 குலந்தவங்
கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் -
நலஞ்சான்ற
மையறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.
(பொ-ள்.) குலம் தவம் கல்வி குடிமைமூப்பு ஐந்தும் விலங்காமல் எய்தியக்கண்ணும்
-நல்லிணக்கம் தவவொழுக்கம் கல்வியறிவு குடிவளம்ஆண்டில் மூத்தோராதல் என்னும்
ஐந்தும்தடையின்றிப் பெற்றவிடத்தும்; நலம் சான்ற மைஅறுதொல்சீர் உலகம் அறியாமை நெய் இலாப்பால்சோற்றின்
நேர்-இன்பம் நிரம்பிய தீதற்றதொன்மையாகிய இயல்பினையுடைய வீட்டுலகவொழுக்கம்
அறியானாயிருத்தல் நெய் இல்லாதபாலடிசிலுக்கு ஒப்பாகும்.
(க-து.) உறுதிப்பொரு ளறியாமைபேதைமையின் இயல்பு.
(வி-ம்.) குடிமையென்பதிற்குடிப்பிறப்பும் அடங்குதலின் குலம்
என்றதுசார்பென்னும் பொருளையும், மூப்பு என்பதில்உலகியலறிவும்
அடங்குதலின் உலகமென்பதுவீட்டுலகமென்னும் பொருளையும் உணர்த்தும்.விலங்குதல்
குறுக்கிடுதலாகலின்விலங்காமலென்றதற்குத் தடையின்றியென்றுரைக்கப்பட்டது. நலஞ்சான்ற
மையறுதொல்சீர்' என்னும் அடைமொழிகளின்
பெருமைகருத்திருத்தற்பாலது; இதனால் இன்பம் நிரம்பியமாசில்லாத
இயற்கை யொழுங்கோடு கூடிய ஒழுக்கமேஅந்நிலையினை உய்க்கும் என்றறிந்து
கொள்ளல்வேண்டும். முன்னும் இஃது ‘இயல்நெறி' என்றுணர்த்தப்பட்டமை
காண்க. பாற்சோறாயினும்நெய்யின்றி மாட்சிமைப்படாமைபோல எத்துணைச்சிறந்த வாழ்க்கை
நலங்களும் இயற்கைஅருளொழுக்கமின்றி நலப்படாவென்பது இதனாற்பெறப்பட்டது.
334 கன்னனி
நல்ல கடையாய மாக்களின்;
சொன்னனி தாமுணரா வாயினும் - இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல்
இயங்குதலென்
றுற்றவர்க்குத் தாமுதவ லான்.
(பொ-ள்.) கல் நனி நல்ல கடையாயமாக்களின் - மக்களிற் கடைப்பட்டவரானபேதையரைவிடக்
கற்பாறைகள் மிக நல்லனவாம்;(ஏனெனில்) தாம் சொல்
நனி உணராவாயினும்உற்றவர்க்கு இன்னினியே நிற்றல் இருத்தல்கிடத்தல் இயங்குதல் என்று
உதவலான் - அவை இக்கடைப்பட்டவர்களைப்போற் சான்றோர்உறுதிமொழிகளை முற்றும்
உணரமாட்டாவாயினும்தம்மை அடைந்தவர்க்கு உடனே நின்று கொள்ளல்இருந்து கொள்ளல்
சாய்ந்து கொள்ளல் நடந்துகொள்ளல் என்று பலவற்றிற்கும் இடம் உதவுதலான்என்க.
(க-து.) சொல்வதுணராமையும்தாமேயுஞ் செய்யாமையும் பேதையோர் இயல்பாகும்.
(வி-ம்.) இன்னினியே, உடனேஎன்னும் பொருட்டு,
உணராததொன்று.அந்நிலைமைக்கு வேறான உதவுதலைச் செய்தலாகத்தானெடுத்து
மொழிதலால் ‘தாம் உணராவாயினும்'‘தாம் உதவலான்' என இருமுறை ‘தாம்' என்னும்பெயர்ச்சுட்டுக் கொடுத்து
விதந்தார்.பலவற்றிற்குமென ஒரு சொல் வருவிக்க.கற்பாறைக்கும் பேதைக்கும் உணராமை
பொதுவாயினும்கற்பாறையால் உதவியுண்டென்று ஒரு வேறுபாடு காட்டிஏதுவின் நிறுத்துக்
கல் நனி நல்ல வென்றாரென்பது.நனி நல்லவென்றார், நினைத்த
வண்ணமெல்லாம்உதவுதலாலும், அவ்வுதவுதல் சிறந்த
அறமாதலானுமென்க.
335 பெறுவதொன்
றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் -
கறுவினால்
கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல சுனைத்து.
(பொ-ள்.) பெறுவதொன்று இன்றியும்பெற்றானே போலக் கறுவுகொண்டு - தனது
சினத்துக்குஏதுவாகப் பெறுங் காரணம் ஒன்று இல்லாதிருந்தும்அக் காரணம் பெற்றவனேபோலக்
கோபித்தலைமேற்கொண்டு, ஏலாதார் மாட்டும்
கறுவினால்கோத்து இன்னா கூறி உரையாக்கால் - தனது சினம்சென்று தாக்குதலில்லாத
உயர்ந்தோரிடத்தும்கோபத்தால் இன்னாச் சொற்களைத்தொடுத்துரைத்துப் பேசாவிட்டால்,
பேதைக்கு நல்லசுனைத்து நாத்தின்னும் - பேதைகளுக்கு மிக்க தினவுநாவை
அரித்துவிடுவது போலிருக்கும்.
(க-து.) பேதை மாக்கள்காரணமில்லாமலே பிறரைப் பகைத்தும் பழித்தும்நாத் தினவாற்
சும்மா பேசியபடியேயிருப்பர்.
(வி-ம்.) கறுவென்றது மனத்தின்நிகழுஞ் செற்றம். கோத்து என்றார், காரணத்தோடுஅறிஞர் தொடுப்பது போற் போலியாக
முறைப்படுத்தியென்றற்கு. கூறியென்றதன் மேலும்உரையாக்காலென்றார், விளக்கங்கூறுவது போல வாளாபன்னிப்பன்னிப் பேசுதலினென்க. அதற்குக்
காரணம்தினவேயல்லது வேறில்லாமையின், அதன் மிகுதிதோன்ற
‘நாத்தின்னும் நல்ல சுனைத்து' என்றார்;இஃது,
‘உண்டற்குரிய வல்லாப் பொருளை உண்டனபோலக் கூறும்' ஒரு மரபு.
336 தங்கண்
மரபில்லார் பின்சென்று தாமவரை
எங்கண் வணக்குதும் என்பவர் -
புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங்
கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.
(பொ-ள்.) நல் தளிர்ப் புன்னைமலரும் கடல் சேர்ப்ப - அழகிய
தளிர்களையுடையபுன்னைமரங்கள் மலர்களைப் பூக்கின்றகடற்கரையாய்!, தங்கண் மரபு இல்லார் பின் சென்றுதாம் அவரை எங்கண்
வணக்குதும் என்பவர்புன்கேண்மை - தம்மிடத்தில் மதிப்பில்லாதவர்வழிச்சென்று ‘அவரை
எம்மிடம் அடங்கும்படிசெய்வோம்' என்று சொல்லுவோர் கருதும்
அச்சிறியோர் தொடர்பு. கல் கிள்ளிக் கை இழந்தற்று- கருங்கல்லைக் கிள்ள முயன்று
ஒருவன் கைவிரலைஇழந்ததனோடு ஒக்கும்.
(க-து.) திருந்தா இயல்புடையதுபேதைமையாகும்.
(வி-ம்.) மரபென்பது ஈண்டுநன்மதிப்பு. புன் கேண்மையென்றார், அப்பேதையர்தொடர்பை. கல்லையுங் கிள்ளமுடியாது
தாமுங்கைவிரலிழந்தாற்போல அப் பேதையோரையுந்திருத்த முடியாமல் தாமும் அவரால்
தீங்குறப்பெறுவரென்பது; "கற்கிள்ளிக் கையுய்ந்தார்
இல்" என்றார் பிறரும். "நிலத்தறைந்தான்கைபிழையாதற்று" என்றதூஉங்
காண்க.
337 ஆகா
தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதுங்
கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.
(பொ-ள்.) ஆகாது எனினும் அகத்து நெய் உண்டாகில் போகாது எறும்பு புறம் சுற்றும்
- தமக்கு உண்ண வாய்க்காதெனினும் குடத்தினுள் நெய் இருக்குமாகில் எறும்புகள்
போகாமல் அக் குடத்தைச் சூழச் சுற்றிக் கொண்டிருக்கும்; யாதும் கொடாரெனினும் உடையாரைப் பற்றி விடார்
உலகத்தவர் - அதுபோல, ஒன்றும் உதவமாட்டா ரென்றாலும்
பொருளுடையோரைச் சூழ்ந்து கொண்டு பேதைமாக்கள் விடமாட்டார்கள்.
(க-து.) பேதைமை யென்பது, அறியாமையும்
வீண்முயற்சியுமுடையது.
(வி-ம்.) இஃது எடுத்துக்காட் டுவமை. உடையார் என்றது பொருளுடையாரை; "உடைப் பெருஞ் செல்வர்" என்றார் புறத்தினும்.
உலகத்தவரென்றது, ஈண்டுப் பேதையரைக் கருதிற்று. முடிவறியாது
வீண்முயற்சி செய்யும் பேதைமையின் பெற்றி இதன்கண் நுவலப்பட்டது.
338 நல்லவை
நாடொறும் எய்தார், அறஞ்செய்யார்
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார், - எல்லாம்
இனியார்தோள் சேரார், இசைபட வாழார்,
முனியார்கொல் தாம்வாழும் நாள்.
(பொ-ள்.) நல்அவை நாடோறும் எய்தார், அறம் செய்யார், இல்லாதார்க்கு யாதொன்றும் ஈகலார்,
எல்லாம் இனியார் தோள்சேரார் இசைபட வாழார் - உயர்ந்தோர் அவைக்களத்தை
நாடொறுஞ் சென்றடைந்து கேள்விப் பயன் பெறாமலும், நற்செயல்கள்
செய்யாமலும், இல்லாத வறியோர்க்கு யாதொன்றும் உதவாமலும்,
எல்லா வகையாலும் இனியரா யிருக்கும் தம் மனைவியர் தோளை மருவாமலும்,
கல்வி முதலியவற்றால் உலகிற் புகழுண்டாக வாழாமலுமிருக்கும்
பேதைமாந்தர், முனியார்கொல் தாம் வாழும் நாள் - உயிர்வாழும்
தம் வெற்று வாழ்நாட்களை வெறாரோ!
(க-து.) பேதையர் வாழ்நாள் வறிதே கழித்தொழியும்.
(வி-ம்.) நாடொறுமென்னும் குறிப்பால் நல் அவை எனப் பிரித்துரைக்க.
இனியராயிருந்தும் தம் துணைவியர் தோள் சேராரெனவே பேதையர் பிற மாதர் நினைவினரென்பது
பெறப்படும். 'பிறன்பொருளாட் பெட்டொழுகும்
பேதைமை' என்றார் பொய்யில் புலவரும், ஒரு
பயனுமில்லாது கழியுந் தம் வாழ்நாளில் வெறுப்புத்தோன்றாதோ வென்றற்கு, ‘முனியார் கொல்' எனப்பட்டது.
339 விழைந்தொருவர்
தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்குங் கேண்மை, - தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும்
இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு.
(பொ-ள்.) விழைந்து ஒருவர் தம்மைவியப்ப ஒருவர் விழைந்திலேமென்றிருக்கும்
ஆய்நலமில்லாதார் மாட்டுக்கேண்மை - ஒருவர் தம்மைவிரும்பி மதித்து அளவளாவ ஒருவர்.
அவரைவிரும்பிலேம் என்று புறக்கணித்திருக்கும்இத்தகைய
நுண்ணுணர்வில்லாப்பேதையரிடத்துண்டாகுந் தொடர்பு, தழங்கு குரல்பாய் திரைசூழ் வையம் பயப்பபினும் இன்னாது -ஒலிக்குங் குரலோடு
பாய்ந்திழியும் அலைகளையுடையகடல் சூழ்ந்த உலகத்தைப் பயப்பதாயினும் இனியதொன்றன்று.
(க-து.) பொருள் செய்ய வேண்டுவதைப்புறக்கணித்துக் கிடப்பது பேதைமையின் இயல்பு.
(வி-ம்.) வியப்ப வென்றது,வியந்தளவளாவ வென்க.
‘தம்முள் ஒருவர் விழையஒருவர் விழைந்திலேமென்றிருக்கும்
ஆய்நலமில்லாதார்மாட்டுக்கேண்மை இன்னாது' என்பது.விழைவோரையும்
ஆய்நலமில்லாதாரென்றது, அறியாதுவிழைதலின். ஆய்நலமாவது,
ஈண்டு நுண்ணுணர்வு :"ஆய்தல் ............. உள்ளதன்
நுணுக்கம்"என்பது தொல்காப்பியம். பிறவி தொறும் இன்பம்பெருக்கும் அறவொளியைக்
கெடுத்தலின் அவர்கேண்மை வையம் பயப்பினும் இன்னாதாயிற்று.
340 கற்றனவும்
கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.
(பொ-ள்.) கற்றனவும் கண் அகன்றசாயலும் இல் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப்பாடு
எய்தும் - தான் கற்ற கல்விகளும், காட்சிபரந்த தன்
சாயலும், தனது உயர் குடிப் பிறப்பும்அயலவர் பாராட்டப்
பெருமையடையும்; தான்உரைப்பின் - அவ்வாறன்றித் தான்
புகழ்ந்தால்,மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தன்என்று
எள்ளப்படும் - தனக்கு முகமன் மொழிந்துவிளையாடுவோர் மிகப் பெருகி அதனால்,மருந்தினால் தெளியாத பித்தன் இவன் என்றுஉலகத்தவரால் இகழப்படும் நிலையை
ஒருவன்அடைவான்.
(க-து.) பேதைமை, பிறர்கருத்தறியாது
அவர் முகமனுக்கு மகிழும் பித்துத்தன்மையுடையது.
(வி-ம்.) கற்றனவும் என்றமையால்அறிவும், சாயலும் என்றமையால் அழகும்,இற்பிறப்பும் என்றமையால்
இவ்விரண்டிற்கும்ஏதுவான இயற்கைச்சார்புங் கொள்க. தான்உரைத்தலால், பிறர், தன் மகிழ்ச்சிக்குரியதுஇச்சை
பேசுதலென்றறிந்து அதுவே பேசுவாராய்ப்பல்க, அதனால் தன் அறிவு
நிலை திரிந்துபித்துடையதாகு மென்பது பின் வரிகளின் கருத்து.மைத்துனரென்னுங்
குறிப்பால், அவ்விச்சை பேசுதலும்பகடி செய்யுங்
கருத்தானென்பது பெறப்படும்."மைந்தனை மகிழ்வ கூறி மைத்துனத்
தோழன்என்றான்" என்பதும் அதன்உரையுங்காண்க.
0 Comments