உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்.

171 அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு.

(பொ-ள்.) அறியாப் பருவத்துஅடங்காரோடு ஒன்றி நெறியல்ல செய்தொழுகியவும் -அறிய வேண்டுவன அறியாத சிறுபருவத்தில்அடங்கியொழுகாத தீயோருடன் சேர்ந்துமுறையல்லாதவற்றைச் செய்தொழுகிய தீயகுணங்களும்,வெயில் முறுகப் புல் பனிப்பற்றுவிட்டாங்கு-வெயில் கடுகுதலால் புல்நுனியைப்பனியின் பற்றுதல் விட்டாற்போல, நெறியறிந்தநற்சார்வு சாரக் கெடும் - நன்னெறிதெரிந்தொழுகும் உயர்ந்த பெரியோர் சார்பைச்சார்ந்து பழகுதலால் கெடும்.

(க-து.) தீய குணங்கள் நீங்கும்பொருட்டு நல்லாரினத்திற் சார்ந்து பழகுதல்வேண்டும்.

(வி-ம்.) அடங்கார்:வினையாலணையும் பெயர்: செய்தொழுகி யவ்வும்என்பதில் வகரம் விரிந்தது: உம்மை நல்லோர்சேர்க்கையால் நல்லன பெறுதலோடு என்னுங்கருத்துணர்த்துதலின் எச்சம்.

172 அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்:
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.

(பொ-ள்.) அறிமின் அறநெறி - கடமையொழுங்கை அறிந்தொழுகுங்கள்; அஞ்சுமின் கூற்றம் -நமன் வருதற்கு அஞ்சி யொழுகுங்கள்; பொறுமின்பிறர் கடுஞ்சொல்-பிறர் கூறும் வன்சொற்களைப்பொறுத்துக் கொள்ளுங்கள்; போற்றுமின் வஞ்சம் -வஞ்சித்தொழுகுதலைக் காத்துக் கொள்ளுங்கள்;வெறுமின் வினை தீயார் கேண்மை - செய்கை தீயவரதுநட்பை வெறுத்தொதுக்குங்கள்; எஞ்ஞான்றும்பெறுமின் பெரியார்வாய்ச் சொல் -எக்காலத்திலும் பெரியார் வாயிலிருந்து வரும்நன்மொழிகளை ஏற்று ஒழுகுங்கள்.

(க-து.) நல்லாரினத்தைச் சார்ந்துபழகி அதனால் அறநெறியறிதல் முதலிய நலன்களைப்பெறுதல் வேண்டும்.

(வி-ம்.) இச்செய்யுள் நல்லினம்சார்தற்குரியாரை நோக்கிற்று, அறிமின் முதலியன,அறிந்து அந்நெறி நிற்றலை யுணர்த்தா நின்றன.கூற்றம் அஞ்சுதலாவது அருள்வழி நின்றொழுகுதல்.‘வஞ்சம் போற்றுமின்' என்றது, தம்மைச் சாராதவாறுகாத்துக்கொள்ளுதலென்க. "புறஞ் சொற்போற்றுமின்" என்றார் பிறரும். வினைதீயார் - தீய செயலுடையார். பெரியார் வாய்ச்சொல் பெறுதற்கு அறநெறி யறிந் தொழுகுதல் முதலியனஇன்றியமையாதன வாதலின், அவற்றை முறையேமுற்கூறினார்.
ஒரோவொருகாற் பிற நெறிகள் தவறினும் பெரியார்வாய்ச்சொல் பெறுதல் ஒருபோதுந் தவறலாகாதென்றற்கு, எஞ்ஞான்றும் என்னுஞ் சொல்அதனையடுத்து நின்றது.

173 அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை
உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.

(பொ-ள்.) அடைந்தார்ப் பிரிவும்அரு பிணியும் கேடும்- இயற்கையாகவும்செயற்கையாகவுஞ் சார்ந்தவரான உறவினர் நண்பர்முதலியோரைப் பிரிந்து நிற்றலும், தீர்தற்கரியநோயும், இறப்பும், உடங்கு உடம்பு கொண்டார்க்குஉறலால் -பிறவியெடுத்தவர்க்கு ஒருங்கேபொருந்துதலால், தொடங்கி - ஆராயத் தொடங்கி,பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை -பிறப்புத் துன்பந் தருவது என்றுணர்ந்துபற்றற்றொழுகும் பெரிய அறிவினரான ஞானியரை,உறப் புணர்க என் நெஞ்சு - என் உள்ளம் மிகக் கூடுக.

(க-து.) துன்பந் தரும் பிறப்பைஅதன் இயல் பறிந்து பற்று நீங்கி யொழுகும்ஞானியரான நல்லாரினத்தைச் சார்ந்தொழுகுதல்வேண்டும்.

(வி-ம்.) ‘உற்றோர்முதலியோரைப் பிரிந்து நிற்க நேர்ந்தால்,அப்போது இவ்வுடம்புக்குப் பற்பல வசதிகள் குறைந்துதுன்பங்கிளைத்தலால் அவையெலாம் ‘அடைந்தார்ப்பிரிவும்' என்பதில் அடங்கும். உடங்கு உறலால்என்க. உடம்பு இலக்கணையாற் பிறவியைஉணர்த்திற்று. இத்துன்பப்பிறவியை மகிழ்தல்அறிவுடைமையாகாமையின் இன்னாதென்றுணர்தல்பேரறிவுடைமையாயிற்று. "இளமை மகிழ்ந்தாரே ......இன்னாங் கெழுந்திருப்பார்" என்றார்முன்னும். அம்மா:அசை. நல்லினம் என்பது சிறப்பாகஞானியரினம் என்பது இச்செய்யுட் கருத்து.

174 இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்
பிறப்பினை யாரும் முனியார்; - பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டேஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.

(பொ-ள்.) பிறப்பினுள் - தாம்பிறந்த பிறப்பில், பண்பு ஆற்றும்நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும் நண்பு ஆற்றிநட்கப்பெறின் - பிறர்க்கு உதவிசெய்யும்நெஞ்சமுடையவர்களான பெரியார்களோடு எப்போதும்நேயஞ்செய்து அணுகியிருக்கப் பெற்றால், இறப்பநினையுங்கால் இன்னாது எனினும் பிறப்பினை யாரும்முனியார் - மிக ஆராயுமிடத்துத்துன்பந்தருவதென்றாலும் அப்பிறப்பினை யாரும்வெறுக்கமாட்டார்கள்.

(க-து.) பிறவி துன்பந் தருவதாயினும்நல்லாரினத்தோடு நேயங் கொண்டிருக்கப் பெறின்அதனை யாரும் வெறார்.

(வி-ம்.) பிறவி நன்முறையிற்செல்லுதலின் வெறுக்கப்படாதாயிற்று. பிறப்பினுள்நட்கப்பெறின் அப்பிறப்பினை, இன்னாதெனினும்யாரும் முனியாரென்று கொள்க. பண்பென்பதுபாடறிந்தொழுக லாதலின், ஈண்டு உதவியெனப்பட்டது. அது, நல்லார் இலக்கணம்இன்னதென்பதுணர்த்தும் பொருட்டு நின்றது.

175 ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓருங்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.

(பொ-ள்.) ஊர் அங்கண் நீர்உரவுநீர் சேர்ந்தக்கால் - ஊரின் சாக்கடை நீர்கடலைச் சேர்ந்தால், பேரும் பிறிதாகித்தீர்த்தம் ஆம் - பேரும் கடல் நீர் என்று வேறாகிஅருள் நீராகும், ஒரும் குலமாட்சி இல்லாரும் -மதிக்கத்தக்க நற்குலப் பெருமையில்லாதகீழோரும், குன்றுபோல்
நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து -குணப்பெருமை வாய்ந்த நல்லாரைச் சார்ந்து அவர்நற்றன்மையில் மலைபோல் அசைதலின்றி நிலைத்துவிளங்குவர்.

(க-து.) கீழோரும் மேலோரைச்சேர்ந்தால், மேலோரேயாவர்.

(வி-ம்.) உரவுநீர், வலிமையுடையநீரென்னுங் கருத்திற் கடல் நீருக்கு வந்தது.தீவினைகளைத் தீர்க்கும் அருளியல்பு வாய்ந்தநீர் தீர்த்தம் என்பபடுவதாயிற்று. குலம் -நல்லோர் சூழல், நலம், ஈண்டுப் பண்பு, குன்று போல்நிற்பரென்றார். பின் அந்நிலையினின்றும்வழாரென்றற்கு.

176 ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால் ஓங்கிய
அங்கண் விசும்பின் முயலும் தொழுப்படூஉம்;
குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,
குன்றன்னார் கேண்மை கொளின்.

(பொ-ள்.) ஒள் கதிர் வாள்மதியம் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின்முயலும் தொழப்படும் - இனிய கதிர்களையுடைய ஒள்ளியதிங்களைச் சேர்தலால் அழகிய இடமகன்றவானத்தின்கண் முயலும் மாந்தரால் வணங்கப்படும்;குன்றிய சீர்மையராயினும் சீர்பெறுவர்குன்றன்னார் கேண்மை கொளின் - ஆதலால், குறைந்தநிலைமையுடையராயினும் மக்கள் மலைபோன்றபெருமையுடைய நல்லாரது நேயத்தை யடைந்தால்நிறைந்த சிறப்பினைப் பெறுவர்.

(க-து.) மக்கள், நல்லார்நேயத்தராயிருப்பின் சிறப்புறுவர்.

(வி-ம்.) வான்மதியம் என அடுத்துவருதலின் கதிர்க்கு ஒண்மையாவது இனிமையென்றுகொள்க. ஒண்மைக்கு இந் நன்மைப் பொருளுண்மைபிங்கலந்ததையிற் காணப்படும். முயல்,திங்களின்கட் காணப்படும் மறு. பிறை தொழுதல்வழக்கமாதலின், அதன்கண் உள்ள மறுவும்தொழப்படுவதாயிற்று. சீர்மை, பொதுவாக ஈண்டுநிலைமை என்னும் பொருட்டு. நிலை வழுவாதவராகலின்,நல்லோர் குன்றன்னா ரெனப்பட்டனர். அவரோடுகேண்மை கொள்ளுதலாவது அவர் அன்புக்குரியவராய்அவர் இனத்தவராய் இருத்தலென்க.

177 பாலோ டளாயநீர் பாலாகு மல்லது
நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; -தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
பெரியார் பெருமையைச் சார்ந்து.

(பொ-ள்.) பாலோடு, அளாய நீர்பாலாகுமல்லது நீராய் நிறம் தெரிந்துதோன்றாது-பாலோடு கலந்த நீர் பாலாகித்தோன்றுமல்லது நீராய்த் தன் நிறம் விளங்கித்தோன்றாது; தேரின்-ஆராய்ந்தால், சிறியார்சிறுமையும் தோன்றாது நல்ல பெரியார் பெருமையைச்சார்ந்து - உயர்ந்த பெரியாருடையபெருந்தன்மையைச் சார்தலால் சிறியார்குறைபாடுந் தோன்றாமற் பெருமையேயாகும்.

(க-து.) மக்கள் பெரியாரோடுசேர்ந்திருந்து தம் குறை நீங்கிப் பெருமையடைதல்வேண்டும்.

(வி-ம்.) உவமையில் நீராய்த்தெரியாமையும் பாலாய் நிறமாதலுங்கூறப்பட்டமையின், பொருளிலும் சிறுமைதோன்றாமையோடு பெருமை உருவாதலும்உரைத்துக்கொள்க. நீர் தன் நிறந்தெரிந்துதோன்றா தென்றமையின் பால் நிறந்தெரிந்துதோன்றுமென்பது பெறப்பட்டமையால் அவ்வாறேசிறியோர்க்குங் கொள்க. "உவமப் பொருளின்உற்ற துணருந் தெளிமருங் குளவே திறத்தியலான" என்பதனான் இங்ஙனங் கொள்ளப்படும். ஆம்இரண்டனுள் முன்னது அசை. நல்ல என்னும் அடைமொழிஇயல்புணர்த்தியபடி.

178 கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவ ருழுபடைக்கு;
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேற்
செல்லாவாம் செற்றார் சினம்.

(பொ-ள்.) கொல்லை இரு புனத்துக்குற்றியடைந்த புல் - கொல்லையாகிய பெரியநிலத்திலுள்ள மரக்கட்டையைச் சேர்ந்து வளர்ந்தபுல். ஒல்கா ஆகும் உழவர் உழுபடைக்கு - உழவரதுஉழுகின்ற படையாகிய கலப்பைக்குக் கெடாதனவாகும்;மெல்லியரேயாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்செல்லா செற்றார் சினம்-வலிமையில்லாதவரேயாயினும் நல்லினத்தாரென்னும் வலிய சார்பினைச்சார்ந்தவர்மேல் பகைவரது சினம்பயன்படாமற்போம்.

(க-து.) நல்லாரினத்திற்சேர்ந்திருப்பார்மேற் பகைவர் சினம் செல்லாது.

(வி-ம்.) குற்றி - சிறுகட்டை;ஈண்டுக், கொல்லையில் வளர்ந்து தரையளவாகவெட்டப்பட்டுவிட்ட வேர்க்கட்டை. ஒல்காமைக்குஇங்குக்கெடாமைப்பொருளுரைக்க. "ஒல்கியஎழில்" என்றவிடத்துக் "கெட்டஅழகு" என்று நச்சினார்க்கினியர் உரை கூறினமைகாண்க. மெல்லியரென்றது அறிவு, ஆற்றல், பொருள்,நிலை முதலியவற்றிற் சிறியர் என்னும் பொருட்டு.நற்சார்வு, இந்நிலைகளிற் பெரியாராயினாரது துணை.சினம், பகையின்மேற்று, செல்லாது என்பதுகடைகுறைந்து நின்றது. "தக்காரினத் தனாய்த்தானொழுக வல்லானைச், செற்றார் செயக்கிடந்ததில்" என்றார் நாயனார்.

179 நிலநலத்தால் நந்திய நெல்லேயோல் தத்தங்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத்
தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினஞ் சேரக் கெடும்.

(பொ-ள்.) நிலநலத்தால் நந்தியநெல்லேபோல் தத்தங் குலநலத்தால் ஆகுவர்சான்றோர் - நிலத்தின் வளத்தினாற் செழித்துவளர்ந்த நெற்பயிரைப்போல் தத்தம் இனநலத்தால் நல்லோர் மேன்மேலும் சான்றாண்மையுடையோராவர்; கலநலத்தைத் தீவளி சென்றுசிதைத்தாங்கு - மரக்கலத்தின் வலிமையைக்கொடியபுயற்காற்றுச் சென்று கெடுத்தாற்போல,சான்றாண்மை தீ இனம் சேரக் கெடும் - தீயஇனத்தவரைச் சேர அதனால் அச் சான்றாண்மைஅழியும்.

(க-து.) இயல்பாகவேநல்லோராயிருப்பவர்க்கும் நல்லினச் சேர்க்கைநன்மையையும் தீயினச் சேர்க்கை தீமையையும்உண்டாக்கும்.

(வி-ம்.) நிலத்துக்கு நலமாவதுவளம். குலம்-கலந்து பழகுவோர் இனம். இச்செய்யுள்சான்றோரைக் கருத்திற்றாதலின் அவர் மேலுமேலுஞ்சான்றோராகுவரென்று முதற்பகுதிக்குஉரைக்கப்பட்டது. கலத்துக்கு நலமாவதுஅலைகளாற்றாக்குறாது செல்லும் உறுதி.உவமைக்கேற்றபடி பொருளின் எழுவாய் தீயினம்ஆகவேண்டுமாயினும், அதனாற் கருத்துக்குஇழுக்கின்றென்க. இது, "உவமப்பொருளையுணருங்காலை, மரீஇய மரபின் - வழக்கொடு படுமே" என்பதனாற் றெளியப்படும்.

180 மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த
இனத்தால் இகழப்படுவர்; - புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே,
எறிபுனந் தீப்பட்டக் கால்.

(பொ-ள்.) புனத்துவெறி கமழ்சந்தனமும் வேங்கையும் வேம் எறிபுனம் தீப்பட்டக்கால் - காட்டினுள்ள மணங் கமழ்கின்றசந்தனமரமும் வேங்கைமரமும் பெருங்காற்றுவீசுகின்ற அக்காடு தீப்பிடித்தால் வெந்து அழிந்துவிடும்; மனத்தால் மறு இலரேனும் தாம் சேர்ந்தஇனத்தால் இகழப்படுவர்-ஆதலால், சான்றோர் தம்மனநலத்தால் மாசிலராயினும் தாம் சேர்ந்த தீயஇனத்தினால் பெருமை குன்றிப் பழிக்கப்படுவர்.

(க-து.) சான்றோர் மனநலம் நன்குடையராயினும்தீயினச் சேர்க்கையால் பெருமை குறைந்து கெடுவர்.

(வி-ம்.) இகழப்படுவர்சான்றோரென்று கொள்க. இகழப்படுவரென்னுங்குறிப்பால் இனம் தீயினத்துக்காயிற்று.மணங்கமழ்தல் வேங்கைக்குங்கொள்க. "வேங்கைகமழுமெஞ் சிறுகுடி" என்றார் பிறரும்.வேமே என்னும் ஏகாரம் இரக்கம் புலப்படுத்திற்று.எறிதலென்னும் ஆற்றலாற் பெருங்காற்றெனப்பட்டது.காடுகளிற் காற்றினால் மரங்கள் உராய்ந்துதீப்பற்றுதல் இயல்பாகலின் எறிதல் என்பதுஇப்பொருட்டாயிற்று. புனத்துச் சந்தனமும்வேங்கையும் அப்புனம் எறிபுனமாய்த்தீப்பட்டக்கால் வேமென்னும் பொருட்டுப் புனம்மறித்துங் கூறப்பட்டது. உம்மைகள் எண்ணொடு உயர்வுசிறப்பும் ஆம்.