என்றது, தாழ்வு தாளாத உள்ளவியல்பு

291 திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதங் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமே,
மன முடையார் மனம்.

(பொ-ள்.) திரு மதுகையாகத் திறன்இலார் செய்யும் பெருமிதம் கண்டக் கடைத்தும் -செல்வம் வலிமையாகக் கயவர் செய்யும்வரம்புகடந்த செயல்களைப்பார்த்தவிடத்தும், எரிமண்டிக் கானம் தலைப்பட்ட தீப்போல் கனலும்மானமுடையார் மனம் - மானமுடைய நன்மக்களின் மனம்எரிதல் மிகுந்து காட்டில் உண்டான காட்டுத்தீப்போல் அனல் கொள்ளும்.

(க-து.) தகாத செயல்களைக் கண்டால்மானமுடையார் மனம் அழல்கொள்ளும்.

(வி-ம்.) மதுகை யென்றது, வலிமை;"அனைமதுகையர் கொல்" என்புழிப்போல. திறனிலார் என்றது கயவரை:பெருமிதம் என்றது, பெருமிதம் போன்ற பொருந்தாச்செயல்களை இங்குணர்த்திற்று. கண்டக் கடைத்தும்என்னும் உம்மை, பிற பொருந்தாச் செயல்களைஅறிந்தவிடத்துங் கனலல்போல் என்பது விளக்கிஇறந்தது தழீஇயது.

292 என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பா டுரைப்பரோ தம்முடையார்; -தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.

(பொ-ள்.) என்பாய் உகினும்இயல்பிலார் பின் சென்று தம் பாடு உரைப்பரோ தம்உடையார் - தன்மானமுடையோர், தாம் எலும்பாகித்தசை சிதையினும், குணமில்லாதவர் பின் சென்றுதம்முடைய இடுக்கண்களைச்சொல்லிக்கொள்ளமாட்டார்; தம் பாடு உரையாமைமுன்னுணரும் ஒண்மையுடையார்க்குத் தாம் உற்ற நோய்உடையரோ - தம்முடைய துன்பங்களைத் தாம்எடுத்துரையாமைக்கு முன்பே அவற்றை உணர்ந்து உதவும்அறிவு விளக்கமுடைய குணசாலிகட்கும் தாம் அடைந்தஇன்னல்களை அவர் உரையார்போலும்!(மானமுடையாரியற்கை அத்தகைத்து!)

(க-து.) மானமுடையார் தம்துன்பங்களைப் பிறர்க்குப் புலப்படுத்தார்.

(வி-ம்.) உகுதல், தசை வீழ்தல்;இயல்வு, இயற்கையான நற்குணம். "ஏதிலாரென்பார்இயல்பில்லார்" என்புழிப் போல.ஓகாரங்களுள் முன்னது எதிர்மறை: பின்னது ஐயங் கருதிவினா. தம் என்றது, தம் உயிரியல் பாகிய மானத்தைஉணர்த்தா நின்றது. உடையார்க்கு மென்று உயர்வுசிறப்பும்மை விரித்துக்கொள்க.

293 யாமாயின் எம்மில்லங் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல்-நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுசு செல்வர் தொடர்பு.

(பொ-ள்.) யாமாயின் எம் இல்லம்காட்டுதும் - வறியேமாகிய யாமாயின் செல்வர்கட்குஉண்ணவும் இளைப்பாறவும் எம் இல்லத்தை இடமாகஉதவுகின்றோம். தாமாயின் காணவே கற்பு அழியும்என்பார்போல் நாணிசோறும் புறங்கடைவைத்துஈவர்-ஆனால் அச்செல்வர்களாயின் யாம்காணுமளவிலும் தம் மனைவியரின் கற்புக்கெடும் என்றுகருதுவார்போல் மனங் கூசிச், சோறும் வாயிலின்வெளியில் வைத்துப் போடுவர்; அதனால் மறந்திடுகசெல்வர் தொடர்பு - ஆதலால் பிறரைப்பொருள்செய்யாத செல்வர்களின் தொடர்பை மக்கள்மறந்துவிடுவார்களாக!

(க-து.) தாம் வறியராயினும் தம்மைமதியாத செல்வர்களின் தொடர்பை மானமுடையோர்மறந்து விடுதல் வேண்டும்.

(வி-ம்.) நாணி என்றார்,அச்சோறிடுதலுந் தகாததொன்று செய்தலாக அவர்கருதுதலின். சோறும் என்னும் உம்மை, உள்ளே இருந்துஉண்ணுதற்குரிய உணவும் என்னும் பொருள் தந்து உயர்வுசிறப்பாய், இனிச் சற்று இளைப்பாறும் பொருட்டுப்படுத்தலும் புறக்கடைக் கண்ணதே என்னும் பொருள்பெறுவித்து எதிரது தழீஇயதாய் நின்றது.

294 இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடா
தும்மையும் நல்ல பயத்தலால், -செம்மையின்
நானம் கமழுங் கதுப்பினாய்! நன்றேகாண்
மான முடையார் மதிப்பு.

(பொ-ள்.) செம்மையின் -நடுநிலையாக நோக்குமிடத்து, நானம் கமழும்கதுப்பினாய் - கத்தூரி மணக்குங் கூந்தலுடையபெண்ணே!: மானமுடையார், மதிப்பு - மானமுடையார்நடக்கை, இம்மையும் நன்றாம் -புகழும் இன்பமுந்தருதலால் இம்மையிலும் நன்றாகும்; இயல்நெறியும்கைவிடாது உம்மையும் நல்ல பயத்தலால் நன்றேஉண்மை நெறியும் வழுவுதலின்றி மேலுலகிலும்இன்பமாவன உண்டாக்குதலால் மறுமைக்கும்நல்லதேயாம்.

(க-து.) மானமுடையார் ஒழுக்கம்இருமைக்கும் இன்பந் தரும்.

(வி-ம்.) இயல்நெறி வீடுபயப்பதாகலின், இயல்நெறியுமென்று உம்மைதந்தார்; நாயனாரும் "பேராவியற்கை" என வீட்டினை விதந்தமை காண்க. உம்மையென்றது,மேலுலகம். மதிதொழுகும் ஒழுக்கம்,மதிப்பெனப்பட்டது.

295 பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்; -சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று.

(பொ-ள்.) பாவமும் ஏனைப் பழியும்பட வருவசாயினும் சான்றவர் செய்கலார் -மறுமைக்குத் தீவினையும் இம்மைக்கு மற்றைப்பழியும் உண்டாகும்படி நேர்வனதாம் இறப்பதாயினும்சான்றோர் செய்யமாட்டார்: சாதல் ஒருநாள்ஒருபொழுதைத் துன்பம் அவைபோல் அருநவை ஆற்றுதல்இன்று - ஏனென்றால், இறத்தல் என்பது ஒரு நாளில் ஒருநேரத்துத் துன்பம்; ஆனால் அப் பாவமும்பழியும்போல் என்றுந் துன்பத்துக் கேதுவானபெருங்குற்றம் பயப்பிப்பது வேறொன்றும் இல்லை.

(க-து.) மானமுடையோர்,பழிபாவஞ்கட்கு அஞ்சியொழுகுவர்.

(வி-ம்.) ஏனையென்றார்மற்றொன்றாகிய வென்றற்கு. வருவ:பெயர். சாதலின்இன்னாத தில்லை யாகலின் அவ்வின்னலின்உயர்வு தோன்றச் சாயினும் என்றார். அருநவை,தீர்தற்கரிய குற்றம்.

296 மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம்
செல்வ ரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார்.

(பொ-ள்.) மல்லல் மா ஞாலத்துவாழ்பவருள் எல்லாம் - வளப்பமிக்க இப் பெரியஉலகில் உயிர்வாழ்பவரெல்லாருள்ளும், செவ்வர்எனினும் கொடாதவர் நல் கூர்ந்தார் -பொருளுடையராயினும் பிறர்க்கொன்று உதவாதஇயல்புடையார் வறியரேயாவர்; நல்கூர்ந்தக்கண்ணும் பெருமுத்தரையரே செல்வரைச் சென்றுஇரவாதார் - வறுமையுற்ற விடத்தும்பொருளுடையாரிடம் சென்று ஒன்று இரவாதவர்பெருமுத்தரையரையொத்த பெருஞ் செல்வரேயாவர்

(க-து.) உலகத்தில் ஒன்று உதவும்நிலையும் இரவா நிலையுமே செல்வ நிலையாகும்.

(வி-ம்.) பெருமுத்தரைய ரென்பார், இவ் வாசிரியர் காலத்தில் விளங்கியபெருஞ் செல்வராவார்; பெருமுத்தரையரே என்னும்ஏகாரத்தை நல்கூர்ந்தா ரென்பதற்கும் ஒட்டுக.கொடாதவர் செல்வத்தாற் பயன் பெறாமையின்,‘நல்கூர்ந்தா' ரெனவும், நல்கூர்ந்தக் கண்ணும்மானத்தோடு மனவமைதியாய் வாழ்தலின் பிறரைஇரவாதவர் பெருமுத்தரையரே யெனவுங் கூறப்பட்டனர்.

297 கடையெலாம் காய்பசி அஞ்சுமற் றேனை
இடையெல்லாம் இன்னாமை அஞ்சும் - புடைபரந்த
விற்புருவ வேனெடுங் கண்ணாய்! தலையெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும்.

(பொ-ள்.) புடை பரந்த வில் புருவவேல் நெடு கண்ணாய் - பக்கங்களில் தசை பருத்தவில்போலும் புருவங்களையுடைய வேல்போலும் நீண்டகண்களமைந்த பெண்ணே!; கடை எலாம் காய் பசிஅஞ்சும், இடை எலாம் இன்னாமை அஞ்சும், மற்று ஏனைத்தலை எல்லாம் சொல்பழி அஞ்சிவிடும் - மக்களிற்கடையானவரெல்லாரும் தம்மை வருத்தும்வயிற்றுப்பசிக்கு அஞ்சி மானங் கைவிடுவர்;இடைப்பட்டவ ரெல்லாரும் தம் வாழ்க்கையில் வரும்உயிரிறுதி முதலிய துன்பங்களுக்கு அஞ்சி மானத்தைவிட்டொழுகுவார்; ஆனால் மற்றத்தலையானவரெல்லாம் பழிச் சொற்களுக்கு அஞ்சிமானம் விடாது நடந்து கொள்வர்.

(க-து.) பழிச்சொல்லுக்கு அஞ்சுகின்ற மானத்தோடுஉயிர் வாழ்தலே தலைமக்களின் செயலாகும்.

(வி-ம்.) "காய்பசிக்கடும்பேய்" என்றார் பிறரும், கடைஇடை தலையென்பன மக்களைக் குறித்தன; மற்று: வினைமாற்று.பசி நீக்கமே நோக்கமாக உயிர்வாழ்வோர்கடையானவரெனவும், ஏனை வாழ்க்கையின்பமேநோக்கமாக உயிர் வாழ்வோர் இடையானவரெனவும்,மானங்காத்தலே நோக்கமாக உயிர்வாழ்வோர்தலையானவரெனவும் இச்செய்யுள் கூறிற்று; மானமாவதுபழிச்சொல் அஞ்சியொழுகுதலென்க. "சான்றோர்பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்" என்றார் அகத்தினும். விடும் என்னும் விகுதிஅந்நிலையில் அவர் உறுதியுடன் நடந்துகொள்வரென்னுந் துணிவுப் பொருள் உணர்த்திற்று.சாதலின் இன்னாத தில்லையாகலின், இன்னாமைஉயிரிறுதியாகிய துன்பத்தையும் உணர்த்துதல் கண்டுகொள்ளப்படும்; புருவங்களையுடைய கண் என்க.

298 நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்-கொல்லன்
உலையூதுந் தீயேபோல் உள்கனலுங் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்.

(பொ-ள்.) நல்லர், பெரிது அளியர்,நல்கூர்ந்தார் என்று எள்ளிச் செல்வர்சிறுநோக்கு நோக்குங்கால இவர் நல்லவர், மிகவுங்கனிவுடையர், ஆயினும் வலியராயிருக்கின்றார் என்றுஇகழ்ச்சியால் நல்லியல்புகளை இகழ்ந்து கூறிச்செல்வர்கள் சிறுமைப் பார்வை பார்க்குங்கால்,தலையாய சான்றோர் மனம் கொல்லன் உலையூதும்தீயேபோல் உள் கனலும் - தலைமக்களானசான்றோர்களின் உள்ளம் கொல்லனதுஉலைக்களத்தில் ஊதியெழுந்தீச் சுடர்போல்உள்ளே அழல் கொள்ளும்.

(க-து.) மெய்யறிவின்றிநல்லியல்புகளைப் பழித்தொதுக்கும் செல்வர்உரைகட்குச் சான்றோர் உள்ளம் மிகவும் அழலும்.

(வி-ம்.) சிறு நோக்கு, பொருள்செயா நோக்கு;"சிறு நகை" என்புழிப்போல. கொல்லும் ஓவும்அசை, நல்லியல்புகள்பால் மதிப்பின்மையேமானிகள் உள்ளம் அத்தனை அழல் கொள்ளுதற்குஏதுவாயிற்று. தலையாய என்றார் அச் செல்வர் முதல்அனைவரினும் மேலாயவரென்றற்கு. சினம் ஆறுதல்அவரியல்பாகலின், உள்கனலும் எனப்பட்டது.

299 நச்சியார்க் கீயாமை நாணன்று, நாணாளும்
அச்சத்தால் நாணுதல் நாணன்றாம்; எச்சத்தின்
மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
சொல்லா திருப்பது நாண்.

(பொ-ள்.) நச்சியார்க்கு ஈயாமைநாண் அன்று- தம்மை விரும்பி வந்தடைந்தவர்க்குஒன்று உதவமாட்டாமை நாண் அன்று; நாள் நாளும்அச்சத்தால் நாணுதல் நாண் அன்று - நாடோறும்தீயவை அஞ்சும் அச்சத்தால் அவை செய்ய நாணுதலும்ஒரு நாண் அன்று; எச்சத்தில் மெல்லியராகித் தம்மேலாயார் செய்தது சொல்லாதிருப்பது; நாண்-தமதுமரபில் தாம் வீரம் முதலியவற்றில் எளியராகித்தம் முன்னோர் ஆற்றிய அரியசெயல்களைத்தமக்கொரு பெருமையாகச் சொல்லிக்கொள்ளாதிருத்தலே மானிகட்கு மேலானநாணமாவதாகும்.

(க-து.) தம் செயல்களால் தாம்பெருமை கொள்ளுதலே மானிகட்கு அழகு.

(வி-ம்.) நாணம்; ஈண்டுநல்லியல்பாகக் கருதப்பட்டது. நச்சியார்க்குஈயமாட்டாமை காரணமாக நாணுதலும் அச்சத்தால்நாணுதலும் உயர்ந்த நாணங்களாயினும் அவற்றினும்உயர்ந்ததொரு நாணத்தின் மேன்மைதேற்றும்பொருட்டு. அதனை நோக்க அவை நாண் அல்லஎன்றார். ஆம் : அசை. எச்சம் என்றது, ஈண்டு வழிவழிமரபு ; "வன்மையும் மாண்பும் வளனும் எச்சமும்தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க்கு" என்றதிற் காண்க. தாம் முயன்று தமது எளிமையைநீக்கிக்கொள்ளாமை மானமுடைய ஒருவற்கு மிகநாணத்தகுவதாகலின், இவ்வாறு கூறினார்.

300 கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும்; -இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் மழுங்க வரின்.

(பொ-ள்.) கடம் மா தொலைச்சியகான் உறை வேங்கை இடம் வீழ்ந்தது உண்ணாதுஇறக்கும் - மதம் பொருந்திய யானையை அதன் வலிதொலைத்து வீழ்த்திய காட்டிலுறையும் புலி, தனக்குஇடப்பக்கம் வீழ்ந்த அவ்வியானையை, தான் பசிமிகுதியால் உயிர்துறக்குந் தறுவாயிலிருப்பினும்,உண்ணாமல் உயிர்விடும்; இடம் உடைய வானகம்கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம்மழுங்கவரின் - ஆதலால் செல்வப்பெருக்குடையதுறக்கவுலகம் தானே தம் கையகப்படினும் அது தமதுமானம் கெட வருவதாயின் அதனைப் பெரியோர்விரும்பார்.

(க-து.) மானத்தால் உண்டாகும்இன்பமே இன்பமாகும்.

(வி-ம்.) "கிடந்துயிர்மறிகுவதாயினும், இடம்படின் வீழ்களிறு மிசையாப்புலி" என்றார் பிறரும். ‘இடமுடையவானகம்' என்றவிடத்து இடம் என்றது வளம்உணர்த்தும்; "இடமில்லாக் காலும்" என்புழிப்போல. ஈண்டுப் போகம் உணர்த்திற்று.‘கையுறின்' என்றது. கிடைப்பினும் என்னும்பொருட்டு. ‘மழுங்க' வென்னுங் குறிப்பாற்,பெரியார்களுக்குள்ள மேன்மையெல்லாம்அவர்கள்பால் இம் மானம் என்னும் உயர் குணம் ஒன்றுஎன்றும் பொன்றாது சுடர்விட்டுக்கொண்டிருப்பதுதான் என்பது பெறப்படும்.