அவையிலுள்ளாரின் தகுதி தெரிந்து ஒழுகுதல்

311 மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர்
அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்
கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்
சொன்ஞானஞ் சோர விடல்.

(பொ-ள்.) மெய்ஞ்ஞானக் கோட்டிஉறழ்வழி விட்டு - உண்மையறிவினையுடையகூட்டத்திற் கலந்து அவர் வழி நின்றொழுகுதலைவிடுத்து; ஆங்கு ஓர் அஞ்ஞானம் தந்திட்டு அதுஅறத்துழாய் - அதற்கு மேலும் அம் மெய்ஞ்ஞானமுடையாரிடையே தமது ஓர் அறியாமைக் கருத்தையும்உரைத்து, அதனையே மிகவும் பன்னிப்பன்னிப் பேசி,கைஞ்ஞானம் கொண்டு ஒழுகும் கார் அறிவாளர்முன் -இவ்வாறு தமது சிற்றறிவே பற்றியொழுகுகின்றமயக்கவறிவினரெதிரில், சொல் ஞானம் சோரவிடல்- புகழ்தற்குரிய தமது ஞானப் பெருமையினைக்காட்டிக்கொள்ளாமல் தளர்த்துக் கொள்க.

(க-து.) தமது சிற்றறிவையேபேரறிவாகக் கொண்டு அடங்காதொழுகுவாரிடம்சான்றோர் தமது ஞானப்பெருமையை வெளிப்படுத்திக்கொள்ளார்.

(வி-ம்.) ‘அதுவாங்கு'என்னுமிடத்தில் ‘ஆங்கு' அசை. ‘கை' சிறுமைப் பொருட்டாதல் ‘கையேடு' ‘கைவாள்' என்பவற்றானுங்காண்க. அறியாமை மிகுதியாக உடைய அறிவென்றற்குக்‘காரறிவு' எனப்பட்டது. விடல் என்னும் வியங்கொள்ஈண்டு உடன்பாடு. பயனில்லாமையின் விடுக என்றார்.

312 நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந்
தீப்புலவற் சேரார் செறிவுடையார்; -தீப்புலவன்
கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும்.

(பொ-ள்.) நாப் பாடம் சொல்லிநயம் உணர்வார் போல் செறிக்கும் தீப்புலவன்சேரார் செறிவுடையார் - தாம் இதற்குமுன் நெட்டுருச்செய்த பாடங்களை அப்படியே சொல்லிக்காட்டி ஏதோபொருள்நயம் உணர்வார்போல் நடித்துத் தம்அறியாமைக் கருத்துக்களை அவற்றிற் செறித்துககூறும் போலிப் புலவனை அவ்வாரவாரமில்லாமெய்ப்புலவோர் அணுகார்; (ஏனென்றால்,) தீப்புலவன் கோட்டியுள் குன்ற - மெய்ப்புலவோராகிய தமதுவருகையால் அப் போலிப் புலவன் அவையிற் பெருமைகெடுதலால்; குடிப்பழிக்கும் - அவன் தமதுகுடிப்பிறப்பைப் பற்றிப்பழித்துப் பேசுவான்;அல்லாக் கால்தோட்புடைக் கொள்ளா எழும் -அல்லாவிட்டால் தன் தோளைத் தட்டிக்கொண்டுவலுச்சண்டைக்கு எழுவான் என்க.

(க-து.) போலிப் புலவரோடுமெய்ப்புலவர் சேர்ந்து பெருமை குன்றுதலாகாது.

(வி-ம்.) பொருள் தெரிந்து,கல்லாமையின், ‘நாப்பாட' மெனவும்,போலிப்புலவரால் உலகுக்குத் தீமை விளைதலின்‘தீப்புலவன்' எனவுங் கூறினார். செறிவு,போலியாரவராமில்லா அடக்கமுடைமை. கல்வி, அறிவு,ஒழுக்க முதலியவற்றால் இவரைக் குறைகூறுலாகாமையின்இவர் குடிப்பிறப்பைப் பற்றிப் பேசும் எனவும்,அதனை எவரும் பொருள் செய்யாமையின் தோள்தட்டிஎழும் எனவும் உரைத்தார். "வெல்வது வேண்டிவெகுண்டுரைக்கும் நோன்பிலி" என்றார்பிறரும். ‘குன்ற' என்னும் எச்சம் காரணப்பொருட்டு

313 சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார், -கற்ற
செலவுரைக்கும் ஆறறியார், தோற்ப தறியார்,
பலவுரைக்கும் மாந்தர் பலர்.

(பொ-ள்.) சொல் தாறு கொண்டுசுனைத்தெழுதல் காமுறுவர் - சொல்லாகிய முட்கோல்கொண்டு நாத்தின வெடுத்துப் பேச முற்படுதலை மிகவிரும்பும் இயல்பினர், கற்று ஆற்றல் வன்மையும்தாம் தேறார் - நூல்நுட்பங்களைக் கற்றறிந்துஒழுகும் வல்லமையுந் தாம் தெளியார், கற்ற செலஉரைக்கும் ஆறு அறியார் - தாம் கற்ற சிலவற்றைக்கேட்பவர் உள்ளத்திற் பதியும்படி எடுத்துரைக்கும்முறையையும் அறியார்; தோற்பது அறியார் -தம்சொற்கள் பயன்படுதலின்றி வீணாகியொழிதலையுங்கருதார்; பல உரைக்கும் மாந்தர்பலர்-ஒன்றைப் புலப்படுத்தும்பொருட்டு இவ்வாறு பலசொற்கள் சொல்லி அவம்படும் மாந்தர் உலகிற்பலராவர்.

(க-து.) நாத் தின வெடுத்துப் பலசொல்லலாகாது.

(வி-ம்.) ‘காமுறும் இயல்பினர்தேறார், அறியார், அறியார், இவ்வாறு பல உரைக்கும்மாந்தர் உலகிற் பல' ரென்க, பொருள்வளமில்லாமையின், நயனிலாச் சொற்கள் ‘தாறு'எனப்பட்டன. எதுகை நோக்கி இடையொற்று மிக்கது.சில சொல்லல் தேறாது பல சொல்லக் காமுறுதலின், ‘சுனைத்தெழுதல்' என்றார். ஆற்றல் ஈண்டுஒழுகுதலென்னும் பொருட்டு. ‘ஆற்றுவாராற்றல்' என்பதுங் கருதுக. உம்மை பிறவற்றிற்குங் கொள்க.

314 கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம்-மற்றதனை
நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு காட்டி விடும்.

(பொ-ள்.) கற்றதும் இன்றிக்கணக்காயர் பாடத்தால் பெற்றது ஆம் ஓர்சூத்திரமதனை - தாம் ஆழ்ந்து பயின்றதுமின்றித்தக்க கேள்வியுமின்றிப் பள்ளி ஆசிரியர்நெட்டுருச் செய்வித்த மனப்பாடத்தால் தெரிந்துகொண்டதாகிய ஒரு நூற்பாவினை, நல்லாரிடைப் புக்குநாணாது சொல்லிப் பேதை தன் புல்லறிவுகாட்டிவிடும் - நற்புலவர் அவையிற் சென்றுநாணுதலின்றி விரித்துரைத்து அறிவிலான் தனதுசிற்றறிவினைக் காட்டிக்கொள்வான்.

(க-து.) நூல் நுட்பங்களைநன்குணர்ந்து விளங்கும் நற்புலவரிடையில்ஏனையோர் நாவடக்கமுடையராதல் வேண்டும்.

(வி-ம்.) கற்றதூஉமின்றி என்னும்உம்மை கேட்டதூஉமின்றி என்பது விளக்கி நின்றது.கணக்காயர், கல்வி கற்பிக்கும்பள்ளியாசிரியர்; "கணக்காயர் இல்லாதஊரும்" என்றார் கடுகத்தினும். ஓர்சூத்திரமென்றார், வேறு தெரியாமையானும் அஃதும்அரிதிற் கிடைத்தமையானும். மற்று:அசை. பிழையைப்பிழையென்று கருதும் உள்ளவொடுக்கமில்லாமையின்,‘நாணாது சொல்லி' எனப்பட்டது.

315 வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ-டொன்றி
உரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள்
சுரைவித்துப் போலுந்தம் பல்.

(பொ-ள்.) வென்றிப் பொருட்டால்விலங்கு ஒத்து மெய்கொள்ளார் கன்றிக்கறுத்தெழுந்து காய்வாரோடு - போலி வெற்றியின்பொருட்டுப் பகுத்தறிவின்றிவிலங்கோடொத்தவராய் உண்மையை அறியாமற்காழ்த்து மிகக் கொதித்து எரிந்து விழுவரோடு,ஒன்றி சுரை வித்தகம் எழுவார் சுரை வித்துப்போலுந் தம் பல் கையுள் காண்பநெருங்கித் தமதுஉரைவல்லமையைப் புலப்படுத்த முற்படும் நற்புலவர்சுரையின் விதையை ஒத்த தம் பற்களைக்கன்னத்தில் அறைந்து அவர் உதிர்த்தலால் உடனேதம் கையிற் காண்பவராவர்.

(க-து.) சினத்தால் தம்மை வெல்லமுற்படும் போலிப் புலவருடன் நற்புலவர் தமது உரைவித்தகத்தைப் புலப்படுத்திக் குறைவடைதலாகாது.

(வி-ம்.) கறுத்தென்றதோ டமையாதுஎழுந்தென்றமையின், மிக்க கருத்தெனப்பட்டது.உரைவித்தகத்துக்கு முற்படுவார்என்றுரைத்துக்கொள்க. சுரை வித்தென்னும் உவமைஉதிர்ந்த பல்லின் இயல்புரைத்தபடி; ‘சுரைவித்தேய்ப்பப் பிறழ்ந்துவேறாயின' எனஇவ்வுவமை பல்லுக்குப் பிறாண்டும் வந்திருத்தல்அறிக.

316 பாடாமே ஓதிப் பயன்றெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால்-கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட் கிறப்பப் பரிந்து.

(பொ-ள்.) பாடமே ஓதிப்பயன்தெரிதல் தேற்றாத மூடர் மனிதக்க சொல்லுங்கால் -செய்யுள்களை நெட்டுருச் செய்து சொல்லிக்கொண்டுஅதன் பொருள் நுட்பங்கண்டு இன்புறுதல் அறியாத,மூடர்கள் அருவருக்கத்தக்க உரைகளைச்சொல்லும்போது, கேடு அருசீர்ச் சான்றோர் அவரைஈன்றாட்கு இறப்பப் பரிந்து சமழ்த்தனர் நிற்ப -என்றும் அழிதலில்லாத சிறப்பினையுடையமெய்ப்புலமை சான்ற பெரியோர் அம் மூடர்களைப்பெற்றெடுத்த தாய்க்காக அவள் வருந்துவளே என்றுமிக இரங்கி யாதுங் கூறாதுபொறுமையுடையராயிருப்பர்.

(க-து.) சான்றோர் அவையில்மூடர்கள் யாதும் பேசித் தம்மை ஈன்றார்பெயர்க்கு இழுக்குத் தேடுதலாகாது.

(வி-ம்.) பாடமே என்னும் ஏகாரம்பொருள் தெரியாதவரெனப் பிரிந்து நிற்றலின்பிரிநிலை. தெரிதல், தெரிந்து இன்புறுதல்.சான்றோன் எனக் கேட்ட தாய் ஈன்ற ஞான்றினும்பெரிதுதுவத்தலின் மூடனெனக் கேட்டதாய்அவ்வீன்ற ஞான்றினும் பெரிது வருந்துதல் ஒருதலையாகலின், ‘ஈன்றாட்கு இறப்பப் பரிந்து'என்றார்; தாய் வருந்துதல் அம்மகப்பேற்றால்யார்க்கும் யாதும் பயனின்மையினென்க. பொதுவிற்பெற்றோர்க்கென்னாது ஈன்றாட் கென்றார், அவள்வருத்தம் பெரிதாதலினென்பது.

317 பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; மற்றம்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள்.

(பொ-ள்.) பெறுவது கொள்பவர்தோள்போல் நெறிப்பட்டுக் கற்பவர்க்கெல்லாம்நூல் எளிய-கொடுப்பவரை மனத்துட் கொள்ளாமல்தாம் பெறுகின்ற விலைப் பொருளையே கருத்தாகக்கொள்ளும் பொது மகளிரின் தோள்கள் பலர்க்கும்எளியவாதல் போல ஒரு தொடர் புற்றுக்கற்பவரெல்லார்க்கும் நூல்களின்பொதுக்கருத்துக்கள் எளியனவாய் விளங்கும்;மற்று-ஆனால்; அம்முறிபுரை மேனியர் உள்ளம்போன்றுயார்க்கும் அறிதற்கு அரிய பொருள்-மாந்தளிர்போன்ற மேனியையுடைய அவ்விலை மகளிரின் மனம்யார்க்கும் அறிதல் அருமையாதல் போல, நூலின்உட்பொருள்கள் எல்லார்க்கும் அறிதற்கரியனவாகும்.

(க-து.) நூல்களின் நுண்பொருள்அறியும் நற்புலவோர் உலகில் மிகச் சிலராவர்.

(வி-ம்.) நெறிப்பட்டுக்கற்பவர்க் கென்றார், ஓரளவு செயற்கைமுயற்சிகளால் நூல்களின் மேற்போக்கானகல்வியறிவை யாரும் அறியலாம் என்றற்கு.மாற்று:வினை மாற்று. நூல்களின் ஆழ்ந்தஉட்கருத்துக்களே உண்மையிற் ‘பொருள்'என்பதற்குரியனவாகலின், வாளா ‘பொருள்' என்றேகூறினார். அவற்றை யறிவரே ‘நூல்வழி நுனித்த நுழைநுண்ணுணர்வின' ரென்க.

318 புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார்
உய்த்தக மெல்லா நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே, பொருடெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.

(பொ-ள்.) புத்தகமே சாலத்தொகுத்தும் பொருள் தெரியார் - புத்தகங்களைமிகுதியாகத் தொகுத்து வைத்தும் பலர் அவற்றின்பொருள் தெரியாதவராவர்: உய்த்து அகமெல்லாம்நிறைப்பினும் அவற்றைப் போற்றும் புலவரும் வேறுபொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறுபிறர்முயன்று நூல்களை வீடு முழுமையும் நிறைத்து வைத்தாலும்அவற்றை அன்புடன் பாதுகாக்கும் அறிஞர்களும் வேறு,அவற்றின் கருத்தறிந்து தம்மையும் பிறரையும்தெளிவித்துக் கொள்ளும் பேரறிஞர்களும் அவரின்வேறாவர்.

(க-து.) நூலகளின் கருத்தறிந்துநலம்பெறல் வேண்டும்.

(வி-ம்.) நூல்களிற் றெளிவு பெறுதல்பிறர் முயற்சி யாலன்றென்பது ‘உய்த்துஅகமெல்லாம் நிறைப்பினும்' என்றதனாற்பெறப்படும். மாற்று : வினைமாற்று. பொதுவாகவேனும்நூல்களின் அருமையறிந்தன்றிப்போற்றுதலாகாமையானும் அப்போற்றுதலொன்றும்அவரை அவ்வறிவுத்துறையிற் செலுத்தும்வாயிலாதலானும் அவரும் ஈண்டுப் புலவரெனப்பட்டனரென்க. ‘பொருள் தெரிந்து' என்றார்; பயன்கொண்டுஎன்னும் பொருட்டு; "நூல் விளைந்தனைய நுண்சொற்புலவர்" என்றார் பிறரும்.

319 பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந் நான்கின்
கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் - பழிப்பில்
நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு?

(பொ-ள்.) பொழிப்பு அகலம்நுட்பம் எச்சம் இந்நான்கின் நூல் கொழித்துஅகலம் காட்டாதார் சொற்கள்-பொழிப்புரைஅகலவுரை நுட்பவுரை எச்சவுரை யென்னும் இந்நால்வகையுரைகளாலும் நூலை ஆராய்ந்து தெரிந்து அதன்விரிந்த பொருட்பெருக்கை விளக்கிக்காட்டாதவருடைய சொற்கள், பழிப்பு இல் நிரை ஆமாசேர்க்கும் நெடு குன்ற நாட-பழித்தலில்லாதகாட்டாக்களின் இனத்தைத் தமது செழுமையால்தம்மாட்டு வருவிக்கும் உயர்ந்த மலைகளையுடையநாடனே!; நூலிற்கு நான்கு உரையாமோ-நூலிற்குச்சிறந்த உரையாகுமோ? ஆகாவென்க.

(க-து.) ஏதொன்றையும் நால்வகையுரைகளாலும் விளக்கிப் பேசவேண்டும்.

(வி-ம்.) பொதுவின் உரைத்தல்பொழிப்பெனவும், வினாவியுரைத்தல் அகலமெனவும்,ஏதுவினிறுத்தல் நுட்பமெனவும், இவற்றாற் றுணிதல்எச்சமெனவும் உரைக்கப்படும். இவற்றினியல்பைநச். பாயிரவுரை மேற்கோள்களிற் காண்க.வளமான ஆக்களென்றற்குப் ‘பழிப்பில் ஆமா'என்றார்.

320 இற்பிறப் பில்லா ரெனைத்துநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்குங் கருவியரோ? -இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில்.

(பொ-ள்.) இற்பிறப்பு இல்லார்எனைத்து நூல் கற்பினும் சொல் பிறரைக் காக்கும்கருவியரோ-உயர்ந்த குடிப்பிறப் பில்லாதவர்எவ்வளவு நூல்கள் பயின்றாலும் ஏனைக் கல்லாதவரின்வழுச்சொற்களை இகழாது அடக்கும் பொறுமையாகியகருவியை யுடையவராவரோ? ஆகார்; இற்பிறந்தநல்லறிவாளர் - ஆனால் உயர்குடியுட் பிறந்த சிறந்தஅறிவுடையவர், நவின்ற நூல் தேற்றாதார்புல்லறிவுதாம் அறிவது இல்-புலனெறியுலகில்அடிப்பட்டுப் பழகிவரும் நூல்களின் நுண்பொருள்தெளியப்பெறாத கல்லாமையுடையவரது சிற்றறிவைத்தாம் ஆராய்ந்து காண்பதில்லை.

(க-து.) நூலறிவின் சிறப்போடுகுடிப்பிறப்பு மாண்பு மிருப்பின், புலவர்கட்குப்பொறுமையும் பெருந்தன்மையும் மிகும்.

(வி-ம்.) பிறர் சொல்லையெனமாறுக: ஓகாரம்: வினா. கருவியரோ வென்றார்,அக்கருவி கல்வி முதலியவற்றால் கிடைப்பதன்றாய்க் குடிப்பிறப்பினாற் சிறப்பிற்கிடைக்கு மென்றற்கு; "குலத்தொடு புணர்ந்தநலத்தகு நண்பின் அழுக்கா றகன்றஒழுக்கறோம்பி" என்றார் பிறரும். நவின்றநூலென்றது, அறியும் எளிமைபற்றி; அவ்வெளிமையிலும்அதனைத் தெளியாதவரது புல்லறிவு, தானேவெளிப்படையாய் மிகுந்த தெரியினும். பெரியோர்நோக்கம் அது காண்பதல்லாமையாற், புல்லறிவுஅறிவது இல்' எனப்பட்டது.