மெலிந்த உணர்வினாரது இயல்புணர்த்திற்று.

351 ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங்
காத்தோம்பித் தம்மை அடங்குப; - மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார்.

(பொ-ள்.) ஆர்த்த அறிவினர் ஆண்டுஇளையராயினும் காத்து ஓம்பித் தம்மை அடக்குப -உறுதிமக்க மெய்யறிவினையுடையார் ஆண்டில்இளையராயினும் தம்மைத் தீய நெறியினின்றுந்தடுத்து நன்னெறியில் நிறுத்திஅடக்கிக்கொள்வர்; மூத்தொறும் தீத்தொழிலேகன்றித் திரிதந்து எருவைபோல் போத்து அறார்புல்லறிவினார் - ஆனால் மெலிந்தஅறிவினையுடையார் கழுபோல முதிர முதிரத் தீயசெய்கைகளே தடிப்பேறி அலைந்து மாசு நீங்கார்.

(க-து.) ஆண்டு முதிர்ந்து உலகப்பழக்கம் ஏறுதலால் கயவர் பெறும் பயன் யாதுமில்லை.

(வி-ம்.) ஆர்த்தவென்பது காழ்ந்தவென்னும் பொருட்டு. ‘காத்து ஓம்பி அடக்குப'என்பதற்குப் புலன் நெறியிற் காத்து ஞானநெறியில் ஓம்பி அருளில் தம்மை அடக்கியொழுகுவர்என்க. மூத்தொறும் என்றார், மூத்தலிற்பயனில்லாமையின். எருவை, மேலுமேலும் பிணத்தையேஉகத்தலைதப்போல் தீயனவே விரும்பியலைவர்என்பது. போத்தென்றது புரை: ஆவது, குற்றம். கயமைஈண்டு மென்மையாகலின் மெலிந்தஅறிவினார் புல்லறிவினாரெனப்பட்டனர்.

352 செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாந் தேரை: - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது.

(பொ-ள்.) செழும் பெரும்பொய்கையுள் வாழினும் என்றும் வழும்புஅறுக்ககில்லாவாம் தேரை-நீர் நிறைந்த பெரியகுளத்தின்கண் உயிர் வாழ்ந்தாலும் தவளை தன்மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கைநீக்கிக்கொள்ளும் ஆற்றலில்லாதனவாகும்; வழும்புஇல் சீர் நூல் கற்றக் கண்ணும் நுணுக்கம் ஒன்றுஇல்லாதார் தேர்கிற்கும் பெற்றி அரிது - அது போல,பிழையற்ற சிறப்பினையுடைய மெய்ந்நூல்களைப்பயின்றாலும் நுட்பஞ் சிறிது மில்லாதவர் தம்மைஅதனால் மேம்படுத்திக்கொள்ளும் மாட்சி இல்லை.

(க-து.) அறிவு உரமில்லாதவர், தக்கவாய்ப்புக்களிருந்தாலும் தம்மைமேம்படுத்திக்கொள்ள அறியார்.

(வி-ம்.) பொய்கைக்குச் செழுமைநீரின் நிறைவு. உரமுள்ள அறிவு நுணுக்கம் பெறும்ஆற்றலுடையதாகலின், நுட்பமில்லா அறிவென்பதுமெலிந்த அறிவினையுணர்த்தும்; ஆதலின் ஈண்டுநுணுக்கமில்லாதரென்றது, கயவரை யென்க. தேர்தல்,தகுதி பெறுதல்; மாட்சிமைப்படுத்திக் கொள்ளலென்பது. அருமை இன்மைமேற்று; "மதிநுட்பம் நூலோடுடையார்" எனத்தெய்வப் புலவர்மதிநுட்பத்துக்கு முதன்மை தேற்றியதூஉங் காண்க.

353 கணமலை நன்னாட! கண்ணின் றொருவர்
குணனேயுங் கூறற் கரிதால், குணனழுங்கக்
குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்
கெற்றா லியன்றதோ நா.

(பொ-ள்.) கண மலைநல் நாட -கூட்டமான மலைகளையுடைய உயர்ந்த நாடனே!. கண் இன்றுஒருவர் குணனேயும் கூறற்கு அரிது - புறத்தில் ஒருவரதுநல்லியல்பினையும் பேசுதற்குஅருமையாயிருக்குமென்ப; குணன் அழுங்கக் குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு எற்றால் இயன்றதோநா - ஆனால் அவரது நல்லியல்பு கெடும்படி, செய்யாதகுற்றங்களை அவரெதிரிலிருந்து செய்ததாகக் கூறும்மெலிந்த அறிவினார்க்கு நாக்கு எதனால்உருவானதோ, அறிகிலேம்.

(க-து.) கயவர், அஞ்சாது,பொய்யுரைக்கும் இயல்பினர்.

(வி-ம்.) புறத்திற் குறை கூறாதுகுணங்கூறுதல் பொருந்துமேனும் அதனையுங்காரணமின்றிக் கூறச் சான்றோர் கூசுவர்;அற்றாயின், காரணமின்றியே அதுவும் குற்றத்தை,இல்லாத குற்றத்தை, எதிரிலேயே புனைந்துரைத்துப்பழிப்பதாயின் அதனை என்னென்பது என்றபடி.எதிரிற் குற்றங் கூறித் திருத்த முயல்வதுநன்றாகலின், இங்குக் குற்றம் என்றது, இல்லாதகுற்றத்தை யென்க. அறிகிலேம் என்பதுசொல்லெச்சம். தசையினாலியன்ற தன்றென்பதுகுறிப்பு. அறிவொடுபடாத நாவினியல்புஇனைத்தென்பது இதனாற் பெறப்பட்டது.

354 கோடேந் தகலல்குற் பெண்டிர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
புதுப் பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.

(பொ-ள்.) கோடு ஏந்து அகல்அல்குற் பெண்டிர்தம் பெண் நீர்மை சேடியர்போலச்செயல் தேற்றார்-பக்கம் உயர்ந்து அகன்றஅல்குலையுடைய நல்லிலக்கணம் அமைந்த நற்பெண்டிர்,வேலைக்காரிகளைப்போல் தமது பெண்மையில்பைப்புறத்தில் ஒப்பனை செய்து காட்டுதல் அறியார்;மற்றையவர் கூடிப் புதுப் பெருக்கம்போலத் தம்பெண் நீர்மை காட்டி மதித்து இறப்பர் - ஆனால்ஏனைத் தீய பெண்டிரோ தம்முட் கூடிப் புதுவெள்ளம்போலப் புனைதல் செய்து தமது பெண்மையியல்பைப்புறத்திற் புலப்படுத்தித் தாமே மதித்துவரம்புகடந்து நடப்பர். (அதுபோற் கயவர்இடம்பத்தால் அவம்படுவரென்பது.)

(க-து.) கயமைஉள்ளீடில்லாததாகலின் இடம்பத்தையே விரும்பும்.

(வி-ம்.) கோடேந்து அகலல்குலென்னும் அடைமொழி ஈண்டு நல்லிலக்கணந்தேற்றிப் பெண்டிர் நற்பெண்டிரென்பதுணர்த்திற்று. ஒப்பனை செய்துகொள்ளாமைக்குச் சேடியர் உவமமாயினார். புதுப்புனலுவமம் ஈண்டு ஒப்பனை ஆரவாரம் முதலியவற்றிற்குவந்தது. மதித்திறப்பரென்பதற்கு, பிறர், பொருள்தந்தபோது அவரை மதித்துத், தராதபோது மீறிஒழுகுவரென மொழிந்துகொள்க. உவமமும் இதற்கொக்குமென்பது, ‘புதுப்புனலும் மாரியறவே அறுமே அவரன்பும்வாரியறவே அறும்' என மேலும் இவ்வியல்புதேற்றி வருதலால் அறியப்படும். உவமமட்டுங் கூறிஇச்செய்யுள் அறிஞர் கயவர்களியல்புஉணர்த்தலின், இது பிறிது மொழிதலென்னும் அணி.அறிஞர் அடக்கமாகவும் கயவர் ஆடம்பரமாகவும்ஒழுகுவரென்பதும் இதனாற் பெறப்பட்டது

355 தளிர்மேலே நிற்பினுந் தட்டமாற் செல்லா
உளிநீரார் மாதோ கயவர்; - அளிநீராக்
கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.

(பொ-ள்.) தளிர்மேலே நிற்பினும்தட்டாமற் செல்லா உளிநீரார் கயவர் -இளந்தளிரின்மேல் நின்றாலும் பிறர்தட்டினாலன்றி அதனுள் இறங்காத உளியின்இயல்பினையுடையவர் கயவர்; அளிநீரார்க்குஎன்னானும் செய்யார் இன்னாங்கு செய்வார்ப்பெறின் எனைத்தானும் செய்ப - ஏனென்றால்,பிறர்க்கு இரங்கும் இயல்புடைய சான்றோர்க்குச்சிறிதும் பயன்படாமல், தமக்குக்கொடுமைசெய்வாரைப் பெற்றால் அவர் எவ்வளவும் பயன்பட்டுவேலை செய்வர்.

(க-து.) கயவர், வருத்தியே வேலைவாங்குதற்குரியர்.

(வி-ம்.) அளிநீரரான சான்றோர்பக்கலிருப்பது இனிதாக வேலைபார்ப்பதற்கிடமாயினும் அங்கு அவர் பயன்படாமல்,தம்மை வருத்துவார் பக்கலே பயன்படுதல் பற்றித்தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லாத உளிஉவமமாயிற்று. "கரும்பு போற் கொல்லப்பயன்படுங்கீழ்" என்றார்திருவள்ளுவரும். மாது, ஓ:அசை. செய்தல் ஈண்டுப்பயன்படுதலின்மேற்று. இக் கருத்து இவ்வுவமமேகொண்டு, "விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்,முட்டாதவரை வியங்கொளல் வேண்டுமால்,தொட்டக்கால் மாழ்குந் தளிர்மேலே நிற்பினுந்,தட்டாமற் செல்லாது உளி" என பிறாண்டும்வருதல் அறிக. உளிக்கு இறங்குதலென்றது, கயவர் தம்தொழில் செய்தற்குக் கொள்ளப்படும்.

356    மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்தநன் றுள்ளுவர் சான்றோர் : கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.

(பொ-ள்.) மலைநலம் உள்ளும் குறவன்- குறவன் தனக்கு வளந்தந்த மலையினது நன்மையைநினைந்து பாராட்டிக்கொண்டிருப்பான்; பயந்தவிளைநிலம் உள்ளும் உழவன் - உழவன் தனக்குவிளையுள் பயந்த விளைநிலங்களின் நன்மையைநினைந்து பாராட்டிக்கொண்டிருப்பான்; சிறந்தஒருவர் செய்த நன்று உள்ளுவர் சான்றோர் - அவைபோல, ஒருவர் அருட்குணம் மிகுந்து தமக்குச் செய்தநன்றியை நினைந்து பாராட்டிக்கொண்டிருப்பர்சான்றோர்; கயம் தன்னை வைததை உள்ளிவிடும் -ஆனால் தாழ்ந்த அறிவினன், தன்னைப் பிறர்பழித்ததை நினைத்துப் பகைமை கொண்டுவிடுவன்:(நலம் பாராட்டான் என்பது.)

(க-து.) மெலிந்த அறிவினர், பிறர்தீமைகள் உள்ளுதலை விலக்கி நலந்தேடி உள்ளும்ஆற்றலில்லா தவராவர்.

(வி-ம்.) குறவர்க்கும்உழவர்க்கும் வாழ்வு மலையினாலும்விளைநிலுத்தினாலும் உண்டாதல்போல,

சான்றோரது வாழ்வு பிறர் செய்தநன்றியுள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டுநடைபெறுதலும், கீழோரது வாழ்வு பிறரைப் பகைத்துக்கொள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டுநடைபெறுதலும், பெறப்படும். உள்ளுதல், ஈண்டுநினைந்து பாராட்டுதல். புன்மை கருதிக் கயம் எனஅஃறிணையான் முடிக்கப்பட்டது."இரும்பிற்பிணிப்பர் கயத்தை" என்றார்பிறரும். விடும் என்னுந் துணிவுப்பொருள் விகுதி,தவறித் தீயதில நுழைந்துவிட்ட புன்மையின்முரட்டுத் துணிவினை உணர்த்தும்.

357 ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்: - கயவர்க்
கெழுநூறு நன்றிசெய் தொன்றுதீ தாயின்
எழுநூறுந் தீதாய் விடும்.

(பொ-ள்.) ஒரு நன்றி செய்தவர்க்குஒன்றி எழுந்த பிழை நூறுஞ் சான்றோர் பொறுப்பர் -தமக்கு ஒரு நன்மை செய்தவர்க்குச் சான்றோர்அவரால் பின்பு தொடர்ந்து உண்டான நூறுகுற்றங்களும் பொறுத்து நிற்பர்; கயவர்க்கு எழுநூறுநன்றி செய்து ஒன்று தீதாயின் எழுநூறுந் தீதாய்விடும் - ஆனால், அறிவில் தாழ்ந்தோர்க்கு ஒருவர்எழுநூறு நன்மைகள் செய்து பின்பு தவறுதலால் ஒன்றுதீமையாக நேர்ந்துவிட்டால் அவ்வெழுநூறுநன்மைகளும் தீமைகளாய்க் கருதப்பட்டு விடும்.

(க-து.) கயவர் அறிவு, நன்மைகளில்அழுந்தி நில்லாமல் தீமைகளையே முனைந்தெண்ணிநிற்கும்.

(வி-ம்.) ஒன்றியெழுதல், சேரத்தோன்றுதல், பொறுத்தலாவது, பொறுத்துத்தீங்கியற்றாது நிற்றலென்றும் ‘தீதாய்விடுதலாவது, தீமைகளாய்க் கருதப்பட்டுப் பலதுன்பங்கள் விளைதற்கு ஏதுவாய் விடுதல் என்றுங்கொள்க; "நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்" என்பவாகலின், சான்றோர் பிழை நூறும்பொறுப்பராயினர். "நன்றி செய்குநர்ப்பிழைத்தோர்க் குய்வில வென்னுங்குன்றாவாய்மை" என்றதூஉம் அறிக.

358 ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள்; - கோட்டை
வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய்; பன்றி
செயிர்வேழ மாகுத லின்று.

(பொ-ள்.) ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள் - பொருளில்லாமை முதலியவற்றால் தளர்வுண்டான காலத்திலும் உயர்குடியிற் பிறந்த சான்றோர் செய்யும் நற்செயல்களைச் செல்வமுள்ள காலத்திலும் கயவர்கள் செய்யார் : கோட்டை வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி செயிர்வேழம் ஆகுதல் இன்று - ஒளிமிக்க கண்களையுடைய பெண்ணே! பன்றியின் கொம்பை வயிரம் பொருத்திப் பூண்கட்டினும் அது போர்ச்சினமுடைய யானையாதலில்லை.

(க-து.) நல்லன செய்தல் கயவரியல்பன்று.

(வி-ம்.) உவமையாற் கயவர்க்கு இயல்பன்மை பெறப்படும். ஏட்டை: தளர்வு: "ஏட்டைப்பசி" என்புழிப் போல, இற்பிறந்தாரென்னுங் குறிப்பால் அறஞ்செய்தல் பிறவி யியல்பென்பது பெறப்படும். மோடென்றது, ஈண்டுச் செல்வவுயர்வு. இழிவு கருதியும், உருவம் ஏனை அறிஞரையொப்ப முழுதொத்திருப்பது கருதியும், அறிவு முதலிய உயிர் வளர்ச்சியின்றிப் பிறந்தவடிவாக விளங்குதல் கருதியும் மூடர் ‘முழுமக்க' ளெனப் பட்டனர். செறிப்பினும் செறித்துக் கட்டினு மென்க.

359 இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந் - தொன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்.

(பொ-ள்.) இன்று ஆதும் இந்நிலையேஆதும் இனிச்சிறிது நின்று ஆதும் என்றுநினைத்திருந்து ஒன்றி உரையின் மகிழ்ந்து - இன்றுசெல்வராவோம், இப்பொழுதே செல்வராவோம்,இனிச் சற்றுப் பொறுத்துச் செல்வராவோம் என்றுஎண்ணமிட்டுக்கொண்டிருந்து அதிற்படிந்துவாய்ப்பேச்சினாற் களித்து, தம் உள்ளம் வேறாகி-ஆனால் அதற்குரிய முயற்சியிலராய்த் தம் இயல்புவேறுபட்டு, மரை இலையின் மாய்ந்தார் பலர் -தாமரையிலையைப் போல், இருந்த நிலையிலேயேமாய்ந்தொழிந்த கயவர் பலராவர்.

(க-து.) அறிவின் மெலிந்தோர்வீண் எண்ணமும் வாய்ப்பேச்சும் உடையவராய் உரியசெயலில்லாதவராவர்.

(வி-ம்.) இந்நிலையே என்பதற்கு,இப்போதுள்ள தொழில் முதலிய நிலைமைகளின்ஏதுவாகவே யென்று உரைத்தலும் ஒன்று. மரை: தாமரையென்பதன் முதற்குறை; தாமரையிலை கடைசியில் தான்இருந்த இடத்திலேயே இருந்து உலர்ந்து மறைந்துவிடுதலால் உவமையாயிற்று; இலையைக் கூறினார் மேலேவிளங்கித் தெரிதலாலும் கயவர்க்கு உவமையாதலாலுமென்க. "மரையிலை போல மாய்ந்திசினோர்பலரே" என்றார் பிறரும்

360 நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும்; - ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப்பெருங்க லன்னா ருடைத்து.

(பொ-ள்.) நீருள் பிறந்து நிறம்பசியதாயினும் ஈரம் கிடையகத்து இல்லாகும் -நீரினுள் தோன்றி மேலே நிறம்பசுமையுடையதாயிருந்தாலும் நெட்டியின் உள்ளே ஈரம்இல்லையாம் ; நிறைப்பெருஞ் செல்வத்துநின்றக்கடைத்தும் அறைப்பெருங்கல் அன்னார்உடைத்து - அதுபோல, நிறைந்த பெரிய செல்வநிலையில் நின்றாலும், பாறையாகிய பெரியகல்லைப்போல் வன்மையான உள்ளம் படைத்த கயவரைஉடைத்து இவ்வுலகம்.

(க-து.) கயவர்க்கு ஈர உள்ளம்இல்லை.

(வி-ம்.) நீர் செல்வத்துக்கும்,பசுமை கவர்ச்சியாகிய தோற்றப் பொலிவுக்கும்,ஈரம் இரக்கத்துக்குங் கொள்ளப்படும்; ஓரும்: அசை.எதுகை நோக்கி நிறைப்பெருமென ஒற்றுமிக்கது.பாறைபட்ட உள்ள முடையா ரென்றற்கு,‘அறைப்பெருங்கல் அன்னா' ரென்றார். படிமம்வகுத்தற்கும், இருத்தல் கிடத்தல்முதலியவற்றிற்குங் கூடப் பயன்படுதலில்லாதஅறுப்புக்களை யுடைய பெருங்கல்அறையெனப்படுமாகலின், யாதும் பயன்படாமை கருதிற்றுஇவ்வுவமம். "கல் நனி நல்ல கடையாயமாக்களின்" எனக் கீழ் வந்தது;இதனினும் சிறந்த கல்லென்பது இதனாற்பெறப்பட்டது.