உடம்பின் நிலையாமையை உணர்த்துவது
21. மலைமிசைத்
தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் -
நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத்
தூற்றப்பட்ட டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.
(பொ-ள்.) மலைமிசை தோன்றும் மதியம்போல் - மலையின் உச்சியில்
தோன்றுகின்ற முழு நிலாவைப்போல, யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - யானையினது தலையின் மேல் கொள்ளப்பட்ட குடைநிழலிற் சென்ற
அரசரும் ,
நிலமிசை - இந் நிலத்தில் , துஞ்சினார் என்று -இறந்து மண்ணானார் என்று, எடுத்துத் தூற்றப்பட்டார் அல்லால் - குறித்து
இழித்துரைக்கப்பட்டாரேயல்லாமல், எஞ்சினார்
இவ்வுலகத்து இல் - இறவாமல் நின்றவர் இவ்வுலகத்தில் இல்லை.
(க-து.) மக்களாய்ப் பிறந்தவர் எத்தகையோ ராயினும் அவர் இறந்து போதல்
உறுதியாதலின், இருக்கும் போதே
யாவரும் அறஞ் செய்து கொள்க.
(வி-ம்.) ‘யானைத்
தலை'
என்றதற்கேற்ப உவமையிலும் ‘மலையின் உச்சி' யென்று உரைத்துக் கொள்க. குடையர் - குடையையுடையராய் அதன்
நிழலில் இருக்கும் அரசர். குடையரும் என உயர்வுசிறப்புக் கொள்க. இறுதியில் ‘இவ்வுலகத்து' என வருதலின் ‘நிலமிசை' யென்றது.
மண்ணில் என்னும் பொருட்டு, மண்ணில்
வீழ்ந்து மண்ணோடு மண்ணானார் என்பது குறிப்பு. எத்துணை உயரத்தில் ஏறிச்
சென்றோர்க்கும் முடிவில் இருப்பிடம் மண்ணே எனவும் ஒரு நயம் காண்க. எனவே ஏனையோர்
இறத்தல் பற்றிக் கூற வேண்டாதாயிற்று. இறந்தாரென்னுஞ் சொல் இழிவு தருதலின், தூற்றப்பட்டார் எனப்பட்டது.
22. வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ தெழுதலால் -
வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்
;
யாரும்
நிலவார் நிலமிசை மேல்.
(பொ-ள்.) வாழ்நாட்கு - ஆயுள்நாட்களுக்கு, அலகா - அளவு காணும்படி, வயங்கு ஒளி மண்டிலம் - விளக்குகின்ற கதிரவன் என்னும்
ஒளிவட்டம்,
வீழ்நாள் படாது எழுதலால் - வீண் நாள் படாமல் தொடர்பாகக்
தோன்றி வருவதனால், வாழ்நாள்
உலவாமுன் - அம் முறையே கணக்கிடப்பட்டு ஆயுள்நாள் அற்றுப்போகுமுன், ஒப்புரவு ஆற்றுமின் - உதவி செய்யுங்கள்; மேல் - அந்த ஆயுள் நாளுக்குமேல், யாரும் நிலவார் நிலமிசை - யாரும் இவ்வுலகத்தில்
நிலைக்கமாட்டார்கள்.
(க-து.) கதிரவன் நாடோறுந் தோன்றுதலால் நாட்கணக்குத் தெரிதலின், அக் கணக்குக் கொண்டு வாழ்நாள் கழியுமுன் அறஞ் செய்துகொள்க.
(வி-ம்.) அலகா - அலகாக, அஃதாவது அலகு கண்டு கொள்ளும் வகையில் , அலகு - அளவு ; ஒளி மண்டிலம் - இங்கே பகலவன். ஒரு நாளாவது தவறாமல் என்றற்கு
‘வீழ்நாள் படாது' எனப்பட்டது. வீழ்நாள்; தவறும் நாள் ; தப்பிப்போகும் நாள் உண்டாகாதபடி என்பது பொருள். நிலவார்
என்பதற்கு பகுதி நில் என்பதாகலின், நிலைக்கமாட்டார்
எனப பொருளுரைக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுதலாலேயே இருவரறிவும் ஒத்து
இணக்கமுறுதலின், உதவி ‘ஒப்புரவு' எனப்பட்டது.
23. மன்றம் கறங்க மணப்பாறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப்
-பின்றை
ஒலித்தலும் உண்டாமென்
றுய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்.
(பொ-ள்.) மன்றம் கறங்க - பேரவை முழுதும் ஒலிக்கும்படி, மணப்பறையாயின - திருமண மேளமாய் முழங்கியவை, அன்று அவர்க்கு ஆங்கே - திருமண நாளன்று திருமண மக்களுக்கு
அத்திருமணக் கூடத்திலேயே, பிணப்பறையாய்
பின்றை ஒலித்தலும் உண்டாம் என்று - சாவுமேளமாய்ப் பின்பு ஒலித்தலும் நேருமெனக்
கருதி,
உய்ந்து போம் ஆறே - நன்னிலையுற்றுச் செல்லுவதற்கான
அறவழியிலேயே, வலிக்குமாம் மாண்டார்
மனம் - அறிவு மாட்சிமைப்பட்டோரது நன்மனம் துணிந்து நிற்கும் என்ப.
(க-து.) மணப்பறையே பிணப்பறையாகவும் மாறுமாதலின், யாக்கையின் நிலையின்மை கருதி உடனே அறஞ்செய்க.
(வி-ம்.) மன்றம் - அவை ; இங்கே, திருமணப்
பேரவை,
மணமக்கள் ஆணும் பெண்ணுமாயிருத்தலின் அவ்விருபாலார்க்கும்
பொருந்த ‘அவர்க்கு' எனப்
பலர் பாலாற் கூறினார். பெரும்பான்மை யன்றாகலின் ‘ஒலித்தலும் உண்டாம்' என்னும் உம்மை எதிர்மறை. ‘உய்ந்து போம் ஆறு' ,என்றது, பொதுவாக
அறவழி. ஏகாரம்: பிரிநிலை. இளமையைத் துய்ப்பதா அறவழியிற் செல்வதா என இருதலைப்பட்டு
ஐயுறும்போது, மாட்சிமைப்பட்டாரது
மனம் அறவழியின் பக்கமே ஈர்ப்புறும் என்னும் இயல்பை ‘வலிக்கும்' என்னும்
ஒரு சொல்லால் விளங்க வைத்தார். வலிக்குமாம் என்பதில் ‘ஆம்' என்ப
என்னுங் குறிப்பினது ; அன்றி, அசையெனலும் ஒக்கும்.
24. சென்றே
எறிப ஒருகால் ; சிறுவரை
நின்றே எறிப பறையினை -
நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள்
மூடித்தீக் கொண்டெழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து.
(பொ-ள்.) சென்று - இறந்தவர் வீட்டுக்குப் போய், எறிப ஒரு கால் - பறையடிப்போர் ஒருமுறை பறைகொட்டுவர், சிறுவரை நின்று - சிறிது பொழுது நிறுத்தி, எறிப பறையினை - மீண்டும் அச் சாவுமேளத்தைக் கொட்டுவர், முக்காலைக் கொட்டினுள் - மூன்றாம் முறையாகக் கொட்டுமுன், செத்தாரைச் சாவார் சுமந்து - இறந்தவரை இனி இறப்பவர்
சுமந்துகொண்டு, மூடி தீ கொண்டு எழுவர்
- துணியால் மூடித் தீயைக் கைக்கொண்டு இடுகாட்டுக்குப் புறப்படுவர், நன்றே - இந்நிலை இன்பந் தருவதோ, காண் - எண்ணுக.
(க-து.) இறந்த பின்னும் உடல் சிறிது நேரமேனும் வீட்டிலிருக்க
இடமில்லாமையின், யாக்கையின்
நிலையாமையைக் கருதி, உடனே
அறவழிக்கண் நிற்க.
(வி-ம்.) நன்றே என்னும் ஏகாரம் எதிர்மறை ஏனைய அசை . வரை- பொழுதின்
அளவு ;
சிறுவரை - சிறு பொழுதளவு. நின்று - நிறுத்தி என்னும்
பொருட்டு,
முக்காலைக் கொட்டினுள் - மூன்றாம் பொழுதின்
கொட்டுதலுக்குள். சுமந்து எழுவர் என்று கொள்க. சாவார் - சாவோர் ; இவர் நிலையும் இன்னதே என்றதற்குச் ‘சாவார் சுமந்து என அச் சொல்லாலேயே கூறினார். இந்நிலையில்லா
வாழ்வை நிலையாக எண்ணி இன்புறுவாரை நோக்கி,இது நன்றாகுமோ நினைமின் என்பார்' நன்றேகாண், என்றார்.
25. கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு
காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங் கொண்டீன்
டுண்டுண்டுண் டென்னும்
உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.
(பொ-ள்.) கணம் கொண்டு - கூட்டம் கொண்டு, சுற்றத்தார் - உறவினர், கல் என்று அலற - கல்லென்று அலறி அழ, பிணம் கொண்டு - பிணத்தை எடுத்துக்கொண்டுபோய், காடு உய்ப்பார் கண்டும் - இடுகாட்டிற் கிடத்துவாரை நேரிற்
பார்த்தும், மணம் கொண்டு -
திருமணம் செய்து கொண்டு, ஈண்டு
உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினான் - இவ்வுலகத்தில் இன்பம் உண்டு உண்டு உண்டு
என்று கருதிம மயங்குகின்ற மயக்க உணர்வினையுடையானுக்கு, டொண் டொண் டொடு என்னும் பறை - டொண் டொண் டொடு என்று
ஒலிக்கின்ற சாவு மேளம், சாற்றும்
- அங்ஙனம் ஓரின்பம் இல்லை இல்லை இல்லை என்று சொல்லும்.
(க-து.) இவ்வுலக வாழ்க்கையை அறவழியிற் பயன் படுத்திக்கொள்ள
வேண்டுமே யல்லாமல், இதில்
இன்பம் உண்டென்று மயங்கலாகாது.
(வி-ம்.) கணங்கொண்டு, கூடி யென்னும் பொருட்டு. கல் : ஒலிக்குறிப்பு . உய்த்தல் -
சேர்த்தல். உணர்வினாற்கு என நான்கனுருபு கொள்க. சாற்றுமே, அறிவுறுத்துமே என்பது அடுக்கு துணிவுக்கு1, உண்டு உண்டு உண்டு என்றதன் கருத்தை, அவ்வொலி போன்றதொன்றால் ஏளனத்தோடு மறுக்கும் முறையில் டொண்
டொண் டொடு என்பது வந்தது ; சாப்பறையின்
ஒலி முறையும் இவ்வொலிக் குறிப்போ டிருப்பது அதற்கு இயைந்தது.
26. நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென்
பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச்
செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.
(பொ-ள்.) தோல் பையுள் நின்று - தோலாலான பையாகிய உடம்பினுள் இருந்து, தொழில் அறச்செய்து ஊட்டும் - தொழில்களை முடியச் செய்து
அவ்வுடம்பை உண்பித்து வருகின்ற, கூத்தன்
- கூத்தனை ஒத்த உயிர், புறப்பட்டக்கால்
- வெளிப்பட்டு விட்டபின், நார்
தொடுத்து ஈர்க்கில் என் - அவ்வுடம்பை நாரினாற் கட்டி இழுத்தா லென்ன, நன்று ஆய்ந்து அடக்கில் என் - நன்றாகத் தூய்மைசெய்து
அடக்கஞ்செய்தால் என்ன, பார்த்துழிப்
பெய்யில் என் - கண்ட இடத்திற் போட்டா லென்ன, பல்லோர் பழிக்கில் என் - அதனாற் பலரும் பழித்தாற்றான் என்ன ; வருகின்ற பெருமை சிறுமைகள் ஒன்றுமில்லை.
(க-து.) உயிர் நீங்கிய பின் உடம்பு இகழப்படுவ தொன்றாதலால், இவ்வுடலை ஓம்பி மகிழ்வதற்காக நற்செயல்களைக் கைவிடற்க.
(வி-ம்.) பார்த்தஉழி எனப் பிரிக்க; இழிவு தோன்றத் ‘தோற்பை', என்றார்.
அறச் செய்து என்றது, வேண்டுமளவும்
என்னும் பொருட்டு ; இது
முயற்சி மிகுதியைக் காட்டிற்று. கூத்தன் என்றார். அசைவோன் அவனே ; இவ்வுடம்பில் ஒன்றுமில்லை ; ஆதலால் இவ்வுடலை ஓம்புதற்காக அவ்வுயிரை ஓம்பும்
அறச்செயல்களைக் கைவிடற்க என்றற்கு. உயிரைக் கூத்தன் என்றது உருவகம்.
27. படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென்
றெண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும்
திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின்
மேல்.
(பொ-ள்.) படு மழை மொக்குளின் - மழை நீரில் தோன்றுகின்ற
குமிழியைப்போல, பல்காலும் தோன்றிக்
கெடும் இது ஓர் யாக்கை - பல தடவையும் தோன்றித் தோன்றி விரைந்து அழிந்து போகின்ற
ஓருடம்பு இது. என்று எண்ணி - என்று இதன் இழிவு கருதி, தடுமாற்றம் தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை -
இங்ஙனம் பிறவியில் தடுமாறுதலை யாம் நீக்க முயல்வேம் என்று மெய்யுணரும் உறுதியான
அறிவுடையவரை, நேர்ப்பார் யார் நீள்
நிலத்தின் மேல்- ஒப்பவர் யாவர் இப்பெரிய நிலவுலகத்தில் ; ஒருவருமில்லை.
(க-து.) யாக்கையின் நிலைமை நீர்க்குமிழி போன்றதாதலால், பிறவித் தடுமாற்றத்தைத் தீர்க்க முயல்பவரே உயர்ந்தவராவர்.
(வி-ம்.) மழை படு மொக்குள் என்று மாற்றிக்கொள்க ‘பல்காலும்' என்னுங்
குறிப்பால் விரைந்து கெடுதலும் பெறப்படும். உவமையின் இயல்பு பொருளில்
விளக்கப்பட்டது. தோன்றிக் கெடுதல் - பிறந்து இறத்தல். இது, ஓர் என்பன, இகழ்ச்சிப்பொருள்.
தடுமாற்றம், பிறவித் தடுமாற்றம், அது தீர்த்தலாவது, யாக்கை இன்பத்தை ஒரு பொருளாகக் கருதியொழுகாமல், அறவழியில் நின்று மெய்யுணர்ந்து வீடுபெற முயலுதல், மயங்கி வலைப்படாமையின், 1‘திண்ணறிவாளர்' என்றார். நோப்பார் யாருமில்லையெனவே, மேம்படுவாரின்மைதானே பெறப்பட்டது.
28. யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர்
தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கை
மலையாடு மஞ்சுபோல்
தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.
(பொ-ள்.) யாக்கையை - உடம்பை, யாப்பு உடைத்தாப் பெற்றவர் - உறுதியுடையதாகப் பெற்றவர், தாம் பெற்ற யாக்கையால் - தாம் அங்ஙனம் முன் நல்வினையினால் அரிதின் அடைந்த
அந் நல்யாக்கையினால் , ஆய பயன் கொள்க- ஆகக்கூடிய புண்ணியப்
பயனைக் காலந்தாழாமற் செய்து கொள்க. ஏனென்றால் ; மலை ஆடு
மஞ்சுபோல் தோன்றி - மலையுச்சியில் உலவுகின்ற மேகம் போலக் காணப்பட்டு, மற்று ஆங்கே நிலையாது நீத்துவிடும் -பின்பு அங்ஙனம் காணப்பட்டபடியே
நிலையாமல் இவ்வுடம்பு அழிந்துவிடும்.
(க-து.) நல்ல யாக்கையை அடையப் பெற்றவர்கள், அதனாலான அறப்பயன்களை உடனே செய்து
முடித்துக் கொள்ளவேண்டும்.
(வி-ம்.) யாப்பு - உறுதி : நோயில்லாத நல்ல யாக்கையாகப் பெற்றவர்கள்
என்பது கருத்து. பெறுதலின் அருமை நோக்கிப் ‘பெற்றவர்' என்றும், தாந்தாம்
செய்த முன்னை நல்வினையினாலேயே அதனை அடைதல் கூடுமென்று அங்ஙனம் அடைதலில் இருந்த
அருமையை மேலும் வலியுறுத்தக் கருதித் ‘தாம் பெற்ற,' என்றுங் கூறினார். ஆயபயன் - அறம்.
மேகம் திடுமெனத் தோன்றினாற்
போலவே திடுமென அழிந்தும்போம் என்றற்குத் 'தோன்றி ஆங்கே' எனப்பட்டது. மற்று : வினைமாற்று.
நீத்துவிடும் என்னுஞ்சொல் அழிந்துவிடும் என்னும் பொருளது. மேகம் நீரிலிருந்து
தோன்றி அழகிதாய் வடிவமாய் நிறமாய் ஒளி ஒலிகளோடு பிறர் விரும்பி எதிர்நோக்கும்படி
மேன்மையான இடத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்து பின் நீராகவே உருவழிந்து
மறைந்துவிடுதல் போல, இவ்வுடம்பும் மண்ணிலிருந்து தோன்றி
அழகியதாய் வடிவமாய்ப் பார்வையொளி பேச்சொலிகளோடு பிறர் விரும்பி எதிர் நோக்கும்படி
செல்வாக்கான இடத்தில் உலவிக் கொண்டிருந்து பின் மண்ணாகவே உருவழிந்து போகும் என்று
உவமையை விரித்துக் கொள்க.
29. புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை ; - இன்னினியே
நின்றான் இருந்தான்
கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.
(பொ-ள்.) புல் நுனிமேல் நீர்போல் - புல் நுனியில் நிற்கும்
நீர்த்துளி போன்றது, நிலையாமை
- யாக்கை நிலையாமை யென்பது ; என்று
எண்ணி - என்று கருதி, இன்இனியே
- இப்பொழுதே - இப்பொழுதே, செய்க
அறவினை - அறச்செயல்கள் செய்க, ஏனென்றால்
;
இன் இனியே நின்றான் இருந்தான் கிடந்தான் - இப்போதுதான்
ஒருவன் இங்கே நின்றான் இருந்தான் படுத்தான், தன் கேள் அலறச் சென்றான். உடனே தன் உறவினர் அலறி அழும் படி
இறந்துவிட்டான், எனப்படுதலால் - என்று
உலகத்திற் சொல்லாப்படுவதனால் என்க.
(க-து.) புல் நுனி நீர்போல உடம்பு நொடிப்பொழுதிலும் மாய்தல்
நேர்தலின் உடனே நற்செயல்கள் செய்து கொள்க.
(வி- ம்.) ‘எனப்படுதலால்' நிலையாமை புல் நுனி மேல் நீர்போல் ஆகும் என்று கூட்டுக.
நுனிமேல் - நுனியில் . நீர்- பனிநீர் ; அது துளிநீராதலின் விரைந்து ஆவியாய்ப் போகும் ; யாக்கையின் நிலையாமை அத்தகையது. இனி இனி என்னும் அடுக்கு ‘இன்னனி ' யெனத்திரிந்து
நின்றது ;
"இன்னினி வாரா" 1 என்றார் பிறரும்; இந்நொடியே என்னும் விரைவுப் பொருளது. நின்றான் இருந்தான்
கிடந்தான் சென்றான் என்றதும் மிக்க விரைவு புலப்படுத்துதற்கு.
30. கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள்
- வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு
புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.
(பொ-ள்.) வாளாது சேக்கை மரன் ஒழிய - சும்மா கூடு மரத்தில் கிடக்க, சேண் நீங்கு புள்போல - அதிலிருந்து தொலைவிலே பறந்து
போய்விடும் பறவைகள் போல - மாந்தர்கள் - மக்கள், கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி - ஒருவரையும் கேளாமலே வந்து
சுற்றங்களாய் ஒரு குடும்பத்தில் பிறந்து, யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து - பின்பு தம் உடம்பை
உறவினரிடம் கிடக்கும்படி நீக்கி விட்டு, வாளாதே போவர் - பேசாமலே இறந்து போய் விடுவார்கள்.
(க-து.) சொல்லாமலே போய்விடுவதனால் இன்ன போது இறக்கும் நேரமென்பது
தெரியாமையின், உடனே அறஞ்செய்து
கொள்க.
(வி-ம்.) ‘வாளாதே' என்னுஞ் சொற்கள் இரண்டனுள் ஒன்று உவமத்துக்கும் ஒன்று
பொருளுக்குங் கொள்க. மரம் மரன் என வந்தது போலி. சேண் நீங்கு என்னுங் குறிப்பால், திரும்பாமை புலப்பட்டது. புட்களில் அங்ஙனம் சேண்
நீங்கிவிடும் புட்களே ஈண்டைக்கு உவமை. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தற்காகக்
கூடுகட்டியிருந்து வினை முடிந்தபின் அக்கூட்டைவிட்டுச் சேண் நீங்கிவிடும் புட்கள்
இவ்வுவமத்துக்குப் பொருந்தும் ; உயிரும்
பிறர்க்குப் பயன்படும் பொருட்டே இவ்வுடம்பெடுத்துத் தங்குதலின் ஈது ஒக்கும்.
அதனாற்றான், கேளாதே வந்து வாளாதே
போவர்;
தமரின் பொருட்டு எடுத்த உடலாதலின் அத்தமர்க்கே அது
கிடக்கும்படி நீத்து என்றார். ‘மாந்தர்கள்
தோன்றிப்,
புட்போல நீத்துப் போவர்' எனக்கொள்க.
0 Comments