இளமையின் நிலையில்லாமையை உணர்த்துதல் .

11. நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் ; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.

(பொ-ள்.) நல் அறிவாளர் - பழுதற்ற அறிவினையுடையோர், நரை வரும் என்று எண்ணி - மூப்பு வருமென்று கருதி, குழவியிடத்தே துறந்தார் - இளமையிலேயே பற்றுள்ளத்தை விட்டார், புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே - குற்றம் நீங்குதலில்லாத நிலையில்லாத இளமைக் காலத்தை அறவழியிற் பயன்படுத்தாமல் நுகர்ந்து களித்தவர்களே, கோல் ஊன்றி இன்னாங்கு எழுந்திருப்பார் - மூப்பு வந்து கையிற் கோல் ஒன்று ஊன்றித் துன்பத்தோடு எழுந்து தள்ளாடுவார்கள்.

(க-து.) இளமைப் பருவத்தை அறவழியிற் பயன் படுத்தாமல் நுகர்ந்து மயங்கியவர்கள், பின்பு மூப்பினால் வருந்துவார்கள்.

(வி-ம்.) நரை' மூப்புப் பருவமும், ‘குழவி' இளமைப் பருவமும் உணர்த்துங் குறிப்பில் வந்தன. துறத்தல் - பற்றுள்ளம் விடுதல். புரை தீரா' ‘மன்னா' இரண்டும் இளமைக்கு அடைமொழிகள். மகிழ்தல் - இங்கு நுகர்தல ; இளமையை அறஞ்செய்தற்குக் கருவியாகக் கொள்ளாமல் , அதனையே துய்க்கும் பொருளாகக்கொண்டு இன்புறுதல் பிழை என்றபடி. நல்லறிவாளர் துறந்தார் எனவே, இளமை மகிழ்ந்தார் புல்லறிவாளர் என்பது பெறப்படும் . பட்டாங்கு' என்பதுபோல, ‘இன்னாங்கு' என்பதும் ஒரு சொல். பற்றுள்ளம் விட்டு எம்முயற்சியையும் இளமையிலேயே செய்க என்பது பொருள். அங்ஙனம் செய்தார்க்கு, மூப்பும் வராது ; வரினும் இன்னல் செய்யாது என்பது உணர்த்தப்பட்டது.

12. நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன ;- உட்காணாய் ;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.

(பொ-ள்.) நட்பு நார் அற்றன - நேயமும் கயிறு அறுந்தன ; நல்லாரும் அஃகினார் - சான்றோரும் அணுக்கங் குறைந்தனர், அன்பு தளையும் அவிழ்ந்தன - பொது மக்களிடம் உண்டான அன்பு என்னுங் கட்டும் நெகிழ்ந்தன, உள் காணாய் - அகமாக எண்ணிப் பார், வாழ்தலின் ஊதியம் என் உண்டு - இளமையை மகிழ்ந்து வாழ்தலினால் பயன் என்ன உண்டு, ஆழ்கலத்து அன்ன கலி வந்தது - கடலில் மூழ்கிவிடுகின்ற மரக்கலத்தை ஒத்த துன்பம் இதோ வருகின்றது.

(க-து.) இளமையையே பொருள் செய்து வாழ்வதனால், நண்பர் சான்றோர் பொதுமக்கள் முதலியோரது தொடர்பு குறைந்து வாழ்நாளுங் கெடும்.

(வி-ம்.) அற்றன அவிழ்ந்தன என்று பன்மையாக வந்தமையால், நட்புகள் அன்புகள் என்று அவ்வினைகளின் வினைமுதல்களையும் பன்மையாகக் கொள்க ; பலராற் பலவகையாகக் கொள்ளப்படுதலால் அவை பன்மையாயின. அன்பு என்றது, அற்பு என்றாயிற்று ! இடையிலுள்ள எழுத்து வலித்தது. இளமையைப் பொருளாக நினைத்துப் பற்றுள்ளத்தோடு உயிர் வாழ்ந்தமையால், நண்பர் முதலியோர் அற்றனர். இங்ஙனம் நட்பு முதலியன அகல ஒருவன் உயிர் வாழ்தலால் உண்டான பயன்றானும் ஏதுமில்லை. கடலுள் மரக்கலம் ஆழ்ந்தாற்போல இவ்வுடம்பு திடுமெனக் கூற்றுவன்வாய் அழிவதுதான் அதனாற் கண்ட பயன் என்றற்கு வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி ' என்றார். வந்தது என இறந்த காலத்தால் நின்றது, விரைவில் துணிவுப் பொருட்டு.

13. சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு.

(பொ-ள்.) சொல் தளர்ந்து - பேச்சின் வலி குறைந்து, கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய் - கையிற் கோல் ஊன்றித் தள்ளாடிய நடையை உடையவராய், பல் கழன்று - பற்கள் உதிர்ந்து, பண்டம் பழிகாறும் - இவ்வுடம்பாகிய பண்டம் பழிக்கப்படுமளவும், இல் செறிந்து காமநெறி படரும் கண்ணினார்க்கு - மனைவியோடு பற்றுக் கொண்டிருந்து காமவழியிற் செல்லும் சிற்றறிவுடையாருக்கு, ஏமம் நெறி படரும் ஆறு - மெய்யின்ப நெறியில் செல்லும் வகை, இல்லையே - உண்டாவதில்லை.

(க-து.) வாழ்நாளளவுங் காம நோக்கமுடையவர் பேரின்ப நெறி செல்லுதல் இல்லை.

(வி-ம்.) பண்டம் - பொருள் ; இங்கே உடம்புக்கு வந்தது. உயிரிருந்தும் உயிர்க்குரிய அறவினைகட்குப் பயன்படாமையால் உயிரில்லாததுபோல இழிவாக்கிப் பண்டம் என்றார். அது பழிக்கப்படுதலாவது இறக்குமுன் நெடுங்காலம் நோய் முதலியன கொண்டு பிறரால் இழித்துக் கூறப்படுதல். பண்டம் பழிகாறும்' என்றது , சாகு மளவும் என்னும் குறிப்பின்மேல் நின்றது. மனைவியின்பால் அறிவான் அன்புறாமற் காமத்தான் பற்றுக்கொள்ள லென்பது, ‘செறிந்து' என்பதன் குறிப்பினாற் பெறப்படும். இல்லையே என்னும் ஏகாரம் இரக்கப் பொருட்டு.

14. தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.

(பொ-ள்.) தாழா - முதுகு தாழ்ந்து , தளரா - உடம்பின் கட்டுத் தளர்ந்து, தலை நடுங்கா - தலை நடுங்கி, தண்டு ஊன்றா - கையில் தடி ஊன்றி, வீழா - விழுந்து, இறக்கும் - இறக்கப்போகும் மூப்பு நிலையிலுள்ள, இவள் மாட்டும் - இத்தகைய ஒருத்தியிடத்தும், காழ் இலா - உறுதியான அறிவில்லாத, மம்மர்கொள் மாந்தர்க்கு - காம மயக்கத்தைக் கொள்ளுகின்ற மக்களுக்கு, தன் கைக்கோல் - அவள் இப்போது பிடித்திருக்கும் கையின் ஊன்றுகோல், அம்மனைக்கோல் ஆகிய ஞான்று - அவள் தாயின் கைக் கோலாயிருந்த காலத்தில், அணங்கு ஆகும் - வருத்துகின்ற காமத் தன்மையையுடைய அழகுருவம் இருந்திருக்கும்.

(க-து.) முன்பு, கண்டோரைப் பிணிக்கும் அழகுருவோடு திகழ்ந்த மகளிர் பின்பு உடம்பு கூனித் தலைநடுங்குகின்ற இரங்கத்தக்க மூப்பு நிலையை அடையக் காண்டலின் இளமையை ஒரு பொருட்டாக எண்ணிக் காமத்தில் ஆழ்ந்து அதனால் அறச்செயல்களைக் கைநழுவ விடுதலாகாது.

(வி-ம்.) முதுகு வளைந்து கூன் அடைந்து என்றதற்குத் தாழா எனப்பட்டது. இவள் மாட்டும்' என்னும் உம்மை இழிவு சிறப்பொடு எச்சமும் உணர்த்திற்று. காழ் - உரம் ; இங்கே அறிவு உரம். அணங்கு - வருத்தும் அழகுருவம் ; பரிமேலழகர், "அணங்கு காமநெறியான் உயிர் கொள்ளுந் தெய்வமகள்"என்றதும் இப்பொருட்டு. அணங்கா யிருந்திருக்கும் என்னும் பொருளில் "அணங்காகும் " என வந்தது. இப்போது மூத்திருக்கும் இவள் கையின் கோல் இவள் தாயின் கையில் ஊன்றுகோலாயிருந்த போது இவள் இளமையுடையவளாய் இருந்திருப்பாள் என்பது குறிக்கத் தன்கைக்கோல் அம்மனைக் கோலாகிய ஞான்று' எனப்பட்டது. இவள் இளமைக் காலத்தில் என்று குறித்தற்கு இங்ஙனம் வந்தது ; ஈதுகாண் உலகியல்பு என்று அறிவுறுத்துதற்கு. இது மேற் செய்யுளாலும் உணரப்படும்.

15. எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள் ;- தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்
டேகும் அளித்திவ் வுலகு.

(பொ-ள்.) எனக்குத் தாய் ஆகியாள் - எனக்குத் தாயாயிருந்தவள், என்னை ஈங்கு இட்டு - என்னை இவ்வுலகத்தில் விட்டுவிட்டு, தனக்குத் தாய் நாடி - தனக்குத் தாய் விரும்பி, சென்றாள் - இறந்துபோனாள் ; தனக்குத் தாய் ஆகியவளும் - அப்படிப் போன அவளுக்குத் தாயாக நேர்ந்தவளும், அது ஆனால் - அவ்வாறே போனால், தாய் தாய்க்கொண்டு - ஒரு தாய் தனக்குத் தாயைத் தாவிக்கொண்டு , ஏகும் அளித்து இவ்வுலகு - போகின்ற எளிமையையுடையது இந்த உலகம் என்க.

(க-து.) இன்று இளையராயிருப்பவர் நாளை மூத்து இறந்துபோதலே இயல்பாதலால், இளமை நிலையாதென்பது திண்ணம்.

(வி-ம்.) இட்டு' என்னுஞ் சொல், ‘என்னை இங்கே பெற்றெடுத்து விட்டுத் தன்னை ஒருத்தி பெற்றெடுக்கு மாறு பிரிந்தாள்' என்னுங் குறிப்பின் உறுப்பாய் நின்றது. ஏ : இசைநிறை. தாய்க்கொண்டு - தாவிக்கொண்டு. இயல்பாயிருத்தலின், உலகுக்கு எளிமை கூறினார்.

16. வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.

(பொ-ள்.) வெறி அயர் வெம் களத்து - வெறியாடு தலைச் செய்கின்ற கொடிய பலிக்களத்தில், வேல்மகன் பாணி - வெறியாடுவோனுடைய கைகளிற் கட்டியுள்ள, முறி ஆர் நறு கண்ணி - தளிர்கள் இடையிடையே பொருந்திய மணமமைந்த மலர்மாலை, முன்னர் தயங்க - தன்னெதிரில் விளங்கா நிற்க, மறி - அதைக் கண்ட பலி ஆடு, குளகு உண்டு அன்ன - அதிலுள்ள தளிரைத் தனக்கு உணவாக உண்டு மகிழ்ந்தாற் போன்ற. மன்னா மகிழ்ச்சி - இளமையால் வரும் நிலையா மகிழ்ச்சி, அறிவுடையாளர்கண் இல் -அறிவுடையாரிடத்தில் இல்லை.

(க-து.) அறிவுடையவர்கள், இளமை யெழுச்சிகளை அறவினைகட்கு ஊறு செய்வனவாகக் கருதி அஞ்சுவரே யல்லால் அவற்றை நுகர்ந்து களியார்.

(வி-ம்.) வெறி - தெய்வமேறி யாடுந் தன்மை ; அயர்தல் - அதனைச் செய்தல் ; பலியிடுதலின், கொடிய களமாயிற்று. வேலைத் தன்கையில் அடையாளமாகப் பிடித்துக் கொண்டு ஆடும் மகனாதலில். வெறியாட்டாளன் வேல மகன்' எனப்பட்டான் ; வேலன் என்று கூறுதலும் உண்டு; இது குறிஞ்சி நிலத்து வழக்கம் ; அங்கே முருகன் தெய்வமாகலின் இங்ஙனமாயிற்று. பூக்களுடன் இடையிடையே இலைகளும் இட்டு மாலை தொடுப்பராகலின், ‘முறி ஆர் நறுங்கண்ணி ' எனப்பட்டது. குளகு - தழையுணவு. பலிக்கடா, தான் கொலையுறுதற்கு அடையாளமாயுள்ள வேலன் கை மாலைக்கு அஞ்சாமல். அறியாமையால் அதிலுள்ள தழையைத் தனக்கு உணவாகக் கருதி உண்டு' சின்னேர இன்பம் நுகர்ந்தது ; அறிந்தோர்க்கு அச்செயல் ஏழைமையுடையதாய்த் தோன்றும். இளமையெழுச்சிகளின் மயங்கி, ‘மற்றறிவாம் நல்வினை யாம் இளையம்' 1 என்று மக்கள் ஒழுகுதலும் அத்தகையதேயாம் பின்வரும் பேரிடையூறு கருதாமற் சிறிதின்ப நுகர்வுக்காக அறவினைகள் கைவிட்டு நிற்றல் தவறென்பது உணர்த்தப்பட்டது.

17. பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து.

(பொ-ள்.) இளமை - இளமைப் பருவம், பனி படு சோலை பயன் மரம் எல்லாம் - குளிர்ச்சி பொருந்திய சோலையிலுள்ள பயன் தரும் மரங்களெல்லாவற்றினின்றும், கனி உதிர்ந்து வீழ்ந்து அற்று - பழங்க ளுதிர்ந்து வீழ்ந்தாற்போலுந் தன்மையது ; இவளும் குனிந்து - இவ்விளமையுடையவளும் ஒரு காலத்திற் கூனாகி, கோல் கண்ணள் ஆகும் - வழிதெரிந்து நடப்பதற்கு ஊன்று கோலையே கண்ணாக உடையவளாவள். ஆதலால் ; வேல் கண்ணள் என்று - இப்பொழுது வேல்போலுங் கண்ணுடையாளென்று, இவளை - இந்த இளந்தன்மையாளை. நனி பெரிதும் வெஃகன்மின் - மிகப்பெரிரும் விரும்ப வேண்டாம்.

(க-து.) இப்போது கனிந்தும் குளிர்ந்தும் தோன்றும் இளமை ஒரு காலத்தில் நிலைமாறிக் கெடும்.

(வி-ம்.) உவமையிற் சுட்டிய தன்மைகள் பொருளுக்கும் ஒக்கும். இளமை யாவர்க்கும் ஒரு படித்தாய்க் கெடுதலின், ‘மரமெல்லாம்' என்றார். வீழ்தலின் லிரைவு தோன்ற உதிர்ந்து வீழ்ந்தற்று' என்றார். "நனிபெரிதும்" ஒரு பொருளில் வந்த இருசொல் ; அது வெஃகுதலின் முடிவின்மையையும் இளமைத் தன்மையை அளவாகப் பயன்படுத்திக் கொள்ளுங் கடமையையுங் குறித்துநின்றது. இவள் என்னுஞ் சுட்டுக்கள் இரண்டுள் முன்னது ஒரு மாதையும் பின்னது அவள் இளமைப் பண்பையுஞ் சுட்டி நின்றன. கோல்கொண்டு வழி தெரிந்து செல்லுதலின் கோல் கண்ணள்' எனப்பட்டது. மற்று: வினைமாற்று.

18. பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.

(பொ-ள்.) பருவம் எனைத்து உள - வயது எவ்வளவு ஆகியிருக்கின்றன. பல்லின்பால் ஏனை - பல்லின் தன்மை எப்படியிருக்கின்றன, இரு சிகையும் உண்டீரோ - இரண்டு பிடியேனும் உண்கின்றீர்களா, என்று வரிசையால் - என்று ஒன்றன்பின் ஒன்றாக, உள் நாட்டம் கொள்ளப்படுதலால் - இங்ஙனம் பிறரைப்பற்றித் தமக்குள் ஆராயும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதனால், யாக்கைக் கோள் - உடம்பின் இளமையை, எண்ணார் அறிவுடையார் - அறிவுடையோர் ஒரு பொருளாகக் கருதமாட்டார்கள்.

(க-து.) இளமை கழிதலை யாரும் தமக்குள் உணர்தலின், அறிவுடையோர் அந் நிலையா இளமையை ஒரு பொருளாக மதித்து மகிழார்.

(வி-ம்.) வயது என்பது இத்தனை ஆண்டுகள் என்னுங் கருத்தில் வந்தமையின், ‘உள' என்று பன்மை வினைகொண்டது . பல்லின் பால்' என்பதிற் பால்' தன்மை யென்னும் பொருட்டு ; ‘பான்மை' என்பதிற் போல. சிகையும் - சிகையேனும், ஆண்டு முதிர்ந்து பல்பழுதாகிக் குடலுங் கெடுதலின் இங்ஙனம் ஒருவரைப்பற்றி ஒருவர் நலம் உசாவும்உள் எண்ணம் கொள்ளப்படுகின்றது. யாக்கைக் கோள் - யாக்கையின் தன்மை ; இளமை, இவ்வாற்றால் , இளமை நிலையாமை உணர்த்தப்பட்டது.

19. மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்;
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.

(பொ-ள்.) மற்று அறிவாம் நல்வினை - நற்செயல்களைப் பின்னால் தெரிந்து செய்து கொள்ளலாம், யாம் இளையம் - இப்போது யாம் இளமைப் பருவமுடையேம், என்னாது - என்று கருதாமல், கைத்து உண்டாம் போழ்தே - கையில் பொருள் உண்டானபொழுதே. கரவாது அறம் செய்ம்மின் - ஒளியாமல் அறஞ் செய்யுங்கள் ; ஏனென்றால், முற்றியிருந்த கனி ஒழிய - பழுத்திருந்த பழங்களேயல்லாமல், தீ வளியால் - கோடைக் காற்றினால், நல் காய் உதிர்தலும் உண்டு - வலிய காய்களும் மரங்களிலிருந்து விடுதலுண்டு.

(க-து.) மூத்தோரே யல்லாமல் இளையோரும் திடுமென இறந்துபோதல் உண்டாகலின், கையிற் பொருள் உண்டான இளமைக் காலத்திலேயே அதனை அறஞ்செய்து பயன் கொள்ளவேண்டும்.

(வி-ம்.) யாம் இளையம்' என்ற குறிப்பு இப்போது யாம் இளமையுடையேம் ; அவ்விளமை யின் பங்கள் நுகர்தற்குப் பொருள் தேவை ; ஆதலின் , அறவினைகளை மூப்பு வந்தபின் செய்வேம்,' என்று நினைத்தலாகாது என்னுங் கருத்தை உட்கொண்டு நின்றது. கைத்து - கையிலுள்ளது ; அது கைப்பொருள் ; செல்வம். இளமைப் பருவத்தைக் கைத்துண்டாம் போழ்து, என்று விதந்தார். அப்பருவமே முயன்று பொருள் தேடுதற்குரிய காலமாகலின், ‘கனியொழிய' என்பதை இரட்டுற மொழிதலாகக் கொண்டு, பழங்கள் உதிராமல் மரத்தில் நிற்கக் , காய்கள் உதிர்ந்துவிடுதலும் உண்டு எனவும் ஒரு கருத்துக்கொள்க. மூப்புடையோர் இறவாமுன் இளமையுடையோர் இறந்து போதலும் உண்டு என்பது இதன் கருத்து. காயுதிர்தல் சிறுபான்மையாகலின், காயுதிர்தலும் என எதிர்மறையும்மை கொடுக்கப்பட்டது.

20. ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய் அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.

(பொ-ள்.) ஆள் பார்த்து - தான் உயிர் பிரித்துக் கொண்டு போகும் ஆளைக் கருதி, உழலும் - அதே வேலையாகத் திரிகின்ற, அருள் இல் கூற்று - இரக்கம் இல்லாத கூற்றுவன், உண்மையால் - ஒருவன் இருக்கின்றானாதலால், தோள் கோப்பு - மறுமையாகிய வழிக்குக் கட்டுச் சோறு போல் உதவும் புண்ணியத்தை, காலத்தால் - இளமையாகிய தக்க காலத்திலேயே , கொண்டு உய்ம்மின் - உண்டாக்கிக் கொண்டு பிழையுங்கள், பீள் பிதுக்கி - முற்றாத இளங்கருவையும் வெளிப்படுத்தி, பிள்ளையை - குழந்தையை, தாய் அலறக் கோடலான் - தாய் அலறியழும் படி உயிர் கொள்ளுதலால், அதன் கள்ளம் - அக்கூற்றுவனது கடுமையை, கடைப்பிடித்தல் நன்று - நினைவில் இருத்திக் காரியங்கள் செய்தல் நல்லது.

(க-து.) இளங் கருவையும் அழிக்கும் கூற்றுவன் உண்மையால் இளமை நிலையாமை விளக்கமாதலின், இம்மை மறுமைக்குரிய புண்ணிய காரியங்களை இளமை யுடையோர் உடனே செய்துகொள்ள வேண்டும்.
(வி-ம்.) கூற்றுவன் கருத்தாயிருக்கி றானென்பதற்கு ஆட் பார்த்து' எனவும், அதுவே வேலையாயிருக்கிறானென்பதற்கு உழலும்' எனவும், கடமையைச் செலுத்தும் போது கண்ணோட்டங் குறுக்கிட இடந்தரான் என்பதற்கு அருள்இல்' எனவும், உயிரை மட்டும் உடம்பினின்று பிரித்துக்கொண்டு போவான் என்பதற்குக் கூற்று' எனவும், அவன் என்றும் உள்ளான் என்பதற்கு உண்மையால்' எனவும் , உயிருடன் நெடுகச் செல்லத்தகுந்த புண்ணியத்தைத் தேடுமின் என்பதற்குத் தோட்கோப்புக் கொண்டுய்ம்மின்' எனவுங் கூறினார். பீள் - முதிராக் கருப்பம். கள்ளம் என்றது இங்கே உள் எண்ணம்' என்னும் பொருளில் வந்தது. கூற்றுவன் தன் உட்கருத்தை உறுதியாகச் செய்தே முடித்தலின், அக்கடுமை தோன்றக் கள்ளம்' என்றார். தோள் கோப்பு - தோளில் கோத்துச் செல்லுங்கட்டுணா. மறுமையாகிய வழிக்கு அதுபோல் உதவும் புண்ணியத்தை அச்சொல்லாற் கூறினார். "கூற்றங் கொண்டோடத் தமியே கொடுநெறிக்கட் செல்லும் போழ்தின், ஆற்றுணாக் கொள்ளீர்," என்றார் சிந்தாமணியினும்,1 காலத்தாலேயே என்னுந் தேற்றேகாரமும், பீளையும் என்னும் இழிவு சிறப்பும்மையும் விகாரத்தால் தொக்கன.