101 பல்லாவுள்
உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக்
கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற்
செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.
(பொ-ள்.) பல் ஆவுள் உய்த்துவிடினும் - பல ஆக்களின் இடையில்
செலுத்திவிடப்பட்டாலும் ; குழக்
கன்று - இளைய ஆன்கன்று, வல்லதாம்
தாய் நாடிக் கோடலை - தன் தாய் ஆவினைத் தேடித் தெரிந்தடைதலை, வல்லதாகும்; தொல்லைப்
பழவினையும் - பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும், தன் செய்த கிழவனை நாடிக் கொளற்கு - தன்னைச் செய்த
உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அன்ன தகைத்தே - அத்தகைய தன்மையுடையதேயாகும்.
(க-து.) பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்.
(வி-ம்.) "மழவுங் குழவும் இளமைப் பொருள"
வாதலின் குழக்கன்றென்றது, இளங்கன்றை. தாய், இரு திணைக்கும் பொதுப் பெயர்; ‘பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்' என்ற விடத்து, "எல்லாப் பெயரும்" என்றதனால் இம்முறைப் பெயரும்
பெறப்பட்டது. ‘தொல்லை' யென்றார், தொடர்ந்து
வருதல் தோன்ற. கிழவன் - உரிமையுடையோன். விடாது பற்றும் என்றற்கு, இவ்வுரிமைப் பொருள் உணர்த்துஞ் சொல் வந்தது.
102 உருவும்
இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் -
ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான்
வாழ்க்கை உடம்பிட்டு
நின்றுவீழ்ந் தக்க
துடைத்து.
(பொ-ள்.) உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும் ஒருவழி நில்லாமை
கண்டும் - தோற்றமும் இளமை நிலையும் மேன்மை வாய்ந்த செல்வமும் நன்மதிப்பும்
எல்லாரிடமும் ஒரே வகையாகப் பொருந்தாமை நேரிற் பார்த்தும், (அதற்குக் காரணம் பழவினையே யென்றும், ஆகவே, நல்வினைகள்
செய்தால் மேற்பிறவிகளில் நன்னிலைமைகள் பொருநதும் போலுமென்றும் அறிந்தொழுகாமல்), ஒருவழி ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை - யாதானும் ஒரு
வகையால் ஒரு நல்வினையையேனும் செய்யாதவனது உயிர் வாழ்க்கை, உடம்பு இட்டு நின்று வீழ்ந்தக்கது உடைத்து - உடம்பு
தோற்றிச் சிலகாலம் பயனில்லாமல் இருந்து பின் இறந்துபோகும் வீண் நிலையினையே யுடையதாகும்.
(க-து.) நல்வாழ்வுக்குக் காரணம் நல்வினையே யென்றறிந்து அதனை இயன்ற
அளவிலாயினுஞ் செய்து பிறவியைப் பயனுடையதாக்குதல் வேண்டும்.
(வி-ம்.) செல்வம், அறம்
முதலிய நோக்கங்கட்குப் பயன்படுத்தற்குரியதாகலின், ‘ஒண்பொரு' ளெனப்பட்டது.
நில்லாமை - நின்று பொருந்தாமை. ‘உடம்பு
இட்டு'
என்பதற்குத் ‘தம்மைப் போல் உடம்பு மாத்திரையாக உணர்ச்சியில்லாச் சில
குழந்தைகளைத் தோற்றி' என
உணர்த்தலும் ஒன்று. வீழ்ந்தக்கது என்பது ‘வீழுந்தகையது' என்னும் பொருட்டு; இதனால் உட்கு முதலியன இல்லாத வாழ்க்கை வீண் என்பது
பெறப்பட்டது; "உட்கில்
வழி வாழா வூக்கம் மிக இனிதே" என்றார் பிறரும்.
103 வளம்பட
வேண்டாதார் யார்யாரு மில்லை;
அளந்தன போகம் அவரவ ராற்றான்
;
விளங்காய் திரட்டினார்
இல்லை,
களங்கனியைக்
காரெனச் செய்தாரும் இல்.
(பொ-ள்.) வளம்பட வேண்டாதார் யார் யாரும் இல்லை - செழுமை பெற
விரும்பாதவர் உலகில் ஒருவருமில்லை, அளந்தன
போகம் அவரவர் ஆற்றல் - ஆனால் இன்பநுகர்வு அவரவர் முன்வினைப்படியே அளவு
செய்யப்பட்டுள்ளன. விளங்காய் திரட்டினார் இல்லை களங்கனியைக் கார் எனச் செய்தாரும்
இல் - விளங்காயை உருண்டை வடிவினதாக அமைத்தவரும் இல்லை, களம்பழக்கத்தைக் கரிய உருவினதாகச் செய்தவரும் இல்லையாதல்
போல வென்க.
(க-து.) அவ்வவற்றின் முறைப்படியே அவையவை அமைதலின், வளம் பெற விரும்புவோர் அதற்கேற்ப நல்வினை செய்தல் வேண்டும்.
(வி-ம்.) யார்யாரு மில்லை என்னும் அடுக்கு எஞ்சாமைப் பொருளது.
ஆற்றால் - வினைவழியே. ‘திரட்டினாரில்லை; செய்தாருமில்' என்றது, எடுத்துக்காட்டுவமையணி.
104 உறற்பால
நீக்கல் உறுவர்க்கும் ஆகா
பெறற்பா லனையவும் அன்னவாம்; மாரி
வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்.
(பொ-ள்.) உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா - உருத்து வருந்
தீவினைகளை நீக்குதல் சான்றோர்க்கும் ஆகாது, பெறற்பால் அனையவும் அன்னவாம் - அங்ஙனமே அடைந்தின்புறற்குரிய
நன்மைகளும் அப்பெரியோர்களால் தடை செய்தற்குரியன அல்லவாம், மாரி வறப்பின் தருவாரும் இல்லை, சிறப்பின் அதனைத் தணிப்பாரும் இல் - மழை பெய்யாதொழியின்
அதனைப் பெய்விருப்பாருமில்லை ; மிகப்
பெய்யின் அதனைத் தணிப்பாருமில்லை யாதல்போல வென்க.
(க-து.) இருவினைகளும் பொருந்தியே தீருமாதலின், தீவினைகளை நீக்கி நல்வினைகளைச் செய்தல் இன்றியமையாததாகும்.
(வி-ம்.) உறுவர் - தக்கோர் . ஆகா ; பன்மையன்று ஈறுதொகுத்தல். தீவினைகளை ஒப்பவே தவறாது வந்து
பொருந்துவவான என்றற்கு ' அனையவும் ' எனப்பட்டது. தருவாரும் தணிப்பாருமென்னும் உம்மைகள்
ஒன்றையொன்று தழீஇ நின்றன. ஆற்றலாகிய வினையின் விளைவு அமையினன்றி மாரி
தருவாருமில்லை, தணிப்பாருமில்லை
என்பது கருத்தாகக் கொள்க.
105 தினைத்துணைய
ராகித்தந் தேசுள் ளடக்கிப்
பனைத்துணையார் வைகலும்
பாடழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்த
தெவனுண்டாம் மேலை
வினைப்பய னல்லாற் பிற.
(பொ-ள்.) தினைத்துணையராகித் தேசுஉள் அடக்கிப் பனைத்துணையார் வைகலும்
பாடு அழிந்து வாழ்வர் - பனையளவினரான பெருமையுடையோர் சிலர் நாடோறும் பெருமை
குறைந்து தினையளவினராய்ச் சிறுத்துத் தமது மேன்மையை உள்ளத்தில் அடக்கிக் கொண்டு
உலகில் உயிர்பொறுத் திருக்கின்றனர்; நினைப்பக் கிடந்தது எவன் உண்டு மேலை வினைப்பயன் அல்லால் பிற
- இதற்குக் காரணம் முன்னை வினைப்பயனல்லால் வேறு கருதக் கிடந்தது யாதுண்டு!
(க-து.) முன்னைத் தீவினை எத்தகைய பெரியோரையும் உருத்து வருத்தும்.
(வி-ம்.) தினை பனை யென்னும் அளவுகள் கண்ணியங் கருதின. எவனுண்டாம்
என்பதில்,
‘ஆம்' அசைநிலை.
பிற,
வேறு என்னும் பொருட்டு, தேசு என்பது மேன்மைப் பொருட்டாதல் "வலிச்சினமும்
மானமும் தேசும்" என்னும்
புறப்பொருள் வெண்பா மாலையினுங் காண்க.
106 பல்லான்ற
கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிதிரேல்
- கல்லாதார்
சேதனம் என்னுமச் சேறகத்
தின்மையால்
கோதென்று கொள்ளாதாம்
கூற்று.
(பொ-ள்.) பல் ஆன்ற கேள்விப்பயன் உணர்வார் வீயவும் கல்லாதார் வாழ்வது
அறிதிரேல் - பலவகைப்பட்ட பரந்த நூற்கேள்விகளின் பயனை அறிந்தொழுகுங் கற்றோர் உலகில்
விரைவில் இறக்கவும் கல்லாதார் நீடு வாழ்வது எங்ஙனமென்று கருதுவீர்களானால்; (அதற்குக் காரணம்) சேதனம் என்னும் அசசேறு அகத்து இன்மையால்
கோது என்று கொள்ளாதாம் கூற்று - அறிவென்னும் அப்பிழிவு அவர்கள் உள்ளத்தில்
இல்லாமையால் அவர்களை வெறுங்கோது என்று கருதிக் கழித்துவிடுவான் கூற்றுவன் என்பது.
(க-து.) சாதல் நேரினும் கற்றல் கேட்டல் முதலிய நல்வினைகளைச் செய்து
புண்ணியம் பெறுதல் வேண்டும்.
(வி-ம்.) கேள்வியின் பயனாவது மெய்யுணர்வுப்பேறு, அறிந்து ஒழுகுவாரென்றற்கு ‘உணர்வார்' எனப்பட்டது.
கற்றோர் அறிவுச்சாறு பெற்றுக் கனிந்துவிட்டோராதலின், பிறவிப்பயனை அவர் அடைந்துவிட்டமை கருதி அதனினும்
மேனிலையுறும் பொருட்டு விரைவில் அவரது ஊனுடல் கழற்றப்பட்ட தெனவும். கல்லாதார்
இன்னும் அத்தகுதி பெறாமையால் இவ்விடமே கழித்து விடப்பட்டனரெனவுந் தெரிவித்து, அம்முகமாக, விரைவில்
நல்வினை செய்து நன்னிலையுறுகவென அறிவுறீஇயது இச் செய்யுள். ‘அச்சேறு' என்னுஞ்
சுட்டுக் கல்வி கேள்வி யறிவு கருதியது.
107 இடும்பைகூர்
நெஞ்சத்தார் எல்லாருங் காண
நெடுங்கடை நின்றுழல்வ
தெல்லாம் - அடம்பப்பூ
அன்னங் கிழிக்கும் அலைகடல்
தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும்.
(பொ-ள்.) அடம்பப்பூ அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப -
அடம்பங்கொடியின் மலரை அன்னப் பறவைகள் கோதுகின்ற அலைமோதுங் கடலின் குளிர்ந்த
துறைவனே,
இடும்பை கூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண நெடுங்கடை
நின்றுழல்வதெல்லாம் - மக்களிற் சிலர், துன்பம் மிக்க உள்ளத்தவராய் எல்லாருங் காணும்படி பெரிய
வீடுகளின் நெடிய தலைவாயிலில் நின்று பிச்சையேற்றுழல்வதெல்லாம், முன்னை வினையாய் விடும் - ஆராய்ந்து பார்க்குங்கால்
பழவினைப்பயனாய் முடிந்து நிற்கும்.
(க-து.) நல்வினையுடையோர் இரந்துழலார்.
(வி-ம்.) ஏளனமும் இரக்கமுந் தோன்ற ‘எல்லாருங் காண' எனவும், உழல்வாரது
ஏழைமை நன்கு வெளிப்பட ‘நெடுங்கடை' எனவுங் கூறப்பட்டன. அடம்பு நெய்தல் நிலத்து நீர்ப்
பூங்கொடி. "அடும்பிவர் அணியெக்கர்" என்றார் பிறரும்.
108 அறியாரும்
அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடு பட்டவை செய்தல் -
வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும்
நீள்கடல் தண்சேர்ப்ப!
செய்த வினையான் வரும்.
(பொ-ள்.) வளி ஓடி நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல் தண் சேர்ப்ப -
காற்று வீசி நெய்தல் மலர்த் தேன் சிந்தும் பரந்த குளிர்ந்த கடற்கரையின் தலைவனே!
அறியாரும் அல்லர் அறிவது அறிந்தும் பழியோடு பட்டவை செய்தல் செய்த வினையான் வரும் -
மக்களிற் சிலர் அறியா தாருமல்லராய் அறியத்தக்கதை அறிந்தும் பழியோடு கூடிய
தீச்செயல்களைச் செய்தல் முன் செய்த தீவினையால் நேர்வதாகும்.
(க-து.) அறிஞராய் விளங்குதலோடு பழிப்படா நல்வினைகளுஞ் செய்து
புண்ணியப் பேறுடையராதல் வேண்டும்.
(வி-ம்.) ‘இது தீது
: இது செய்யின் இதன் விளைவு இத்தனை துன்பமாகும்,' என்பதை அறிந்தவரே யென்றற்கு, ‘அறியாருமல்லர்' எனப்பட்டது. ‘அறிவது' என்றது, ஒழுக்க முறைமைகள். ஓடியென்னும் எச்சம் காரணப்பொருட்டு.
நெய்தல் - ஒரு மலர். "சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகா," ராதலின். இதுமுன் வினைப்பாலதாயிற்று.
109 ஈண்டுநீர்
வையத்துள் எல்லாரும் எத்துணையும்
வேண்டார்மன் தீய ; விழைபயன் நல்லவை ;
வேண்டினும் வேண்டா விடினும்
உறற்பால
தீண்டா விடுத லரிது.
(பொ-ள்.) ஈண்டு நீர் வையத்துள் - மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட
உலகத்தில்,
எல்லாரும் எத்துணையும் வேண்டார் தீய - யாரும் சிறிதும்
துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். விழை பயன் நல்லவை - எல்லாரும்
எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால தீண்டாவிடுதல் அரிது -
மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன
பொருந்தாதொழிதல் இல்லை.
(க-து.) இன்பந் தரும் நல்லவற்றையே மக்கள் விரும்புதலால், அவற்றிற்கேற்றபடி நல்வினைகளைச் செய்து வரல்வேண்டும்.
(வி-ம்.) மன் : அசைநிலை. ‘தீண்டா' என்னும்
வினையெச்ச ஈறு தொக்கது. அரிதென்றது, "மனக்கவலை மாற்றலரிது" என்புழிப்போல இன்மைப் பொருட்டு.
110 சிறுகா
பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே
யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும்
அதனால்
இறுகாலத் தென்னை பரிவு
(பொ-ள்.) சிறுகாலைப் பட்ட பொறியும் - கருவமையுங் காலத்திலேயே அமைந்த
ஊழ்வினைகளும், சிறுகா பெருகா முறை
பிறழ்ந்து வாரா உறுகாலத்து ஊற்றாகா ஆமிடத்தே ஆகும் - குறையமாட்டா, மிகமாட்டா, முறைமாறிப்
பொருந்தமாட்டா, உற்ற காலத்தில்
உதவியாக மாட்டா, உதவியாதற்குரிய
காலத்தில் உதவியாகும், அதனால் -
ஆதலால்,
இறுகாலத்து என்ன பரிவு - ஊழ் வினையால் கெடுங்காலத்தில்
வருந்துவது ஏன் ?
(க-து.) ஊழ்வினைகளை நுகர்ந்தே தீரவேண்டுமாதலின், தீவினைகள் செய்யாதிருத்தல் வேண்டும்.
(வி-ம்.) ‘ஊன்றாகா ' என்பது ஊற்றாகா என நின்றது. ஊன்று - ஈண்டு ஊன்றுகோல் :
ஊன்றுகோல் போல் உதவியாகா என்பது கருத்து. எவ்வளவு துன்புற்றாலும் வினை உருத்து
வருத்துமேயல்லது அவ்வுற்ற நேரத்தில் உதவிசெய்யா தென்றற்கு அங்ஙனம் கூறப்பட்டது.
உதவி செய்தற்குரிய நல்வினையாயின் உதவும் என்றற்கு ‘ஆமிடத்தே ஆகும்' எனப்பட்டது; சிறுகாலை
யென்றது பிறவித்தொடக்கத்தை; ஈண்டுக்
கருவியின் நிலையை உணர்த்திற்று. பொறியும் என்னும் உம்மை எதிரது தழீஇயதாய்ப்
பின்னர்ச் செய்யும் ‘வினைகளும்
அத்தகையனவே என்பதைப் புலப்படுத்தி நின்றது, என்னை' யெனப்பட்டது.
பயனில்லை யென்றற்கு, பரிவு
என்றார்,
பெற்ற காலத்துற்ற அன்பினால் வருந்துதலின். இக்கருத்து, சிந்தாமணியில் ‘நோதலும் பரிவுமெல்லாம்' என
விதந்துரைக்கப்பட்டது.
0 Comments