கால்நிலம் தோயாக் கடவுளை -
யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச்
சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.
(பொருள்.) வான்இடு வில்லின்-மேகத்தால் உண்டாகின்ற இந்திரவில்லைப்போல, வரவு அறியா வாய்மையால் - பிறப்பின் வருகையை அறிந்துகொள்ளக்கூடாத
உண்மையினால், யாம் எம் உள்ளத்து
முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி, கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில்
படிதலில்லாத அருட்கோல இறைவனை, நிலம்
சென்னி உற வணங்கி - தரையில் எமது முடி பொருந்தும்படி தொழுது, சேர்தும் - இடைவிடாது உள்ளுவோம்.
(கருத்து.) பிறப்பின் தோற்றம் முதலியவற்றை நாம் முழுதுந்
தெரிந்துகொள்ளக் கூடாமையால், விரும்பும்
நலங்களின் பொருட்டு இறைவனைத் தொழுது அடைக்கலமாவோம்.
(விளக்கம்) வான் என்றது மேகம். மேகத்தால் இந்திரவில் உண்டாகுங் காரணம்
ஓர் இயற்கைப்பொருள் உண்மையாகும் ; ஆதலால், அதனை மூன்றாம் வேற்றுமையில் உரைப்பது சிறப்பு . வரவு -
பிறப்பின் வருகை ; அஃதாவது, பிறப்பின் தோற்றம் முதலிய தன்மைகள். வாய்மை - உண்மை நிலைமை ; பிறப்பின் தோற்றம் முதலியவற்றை அறிந்துகொள்ளக் கூடாத
இயற்கையுண்மை நிலைமை ; இன்ன
காலத்தில் இன்ன வகையில் தோன்றும் அல்லது மறையும் என்று தெரிந்துகொள்ளக்கூடாத
நிலைமை. இந்திரவில் இக் கருத்துக்கு உவமையாதல், "வானிடு சிலையின் தோன்றி," என்று வரும் சிந்தாமணியினாலுந் துணியப்படும். ‘அபியுத்தர் ' என்னும் ஒருவர் இக் கடவுள் வாழ்த்துச் செய்யுள்
இயற்றினாரெனவும், அன்று. பதுமனார்
என்னும் ஒருவர் இயற்றினாரெனவும், கூறுப.
0 Comments