371 விளக்கொளியும்
வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.
(பொ-ள்.) விளக்கொளியும்வேசையர் நட்பும் இரண்டும் துளக்குஅற நாடின் வேறுஅல்ல -
விளக்கின் ஒளியும் விலைமகளிர் உறவுமாகியஇரண்டும் கலக்கமின்றி ஆராய்ந்தால் அவை
தம்தன்மையில் வேறு அல்ல; விளக்கொளியும்
நெய்அற்றகண்ணே அறும் அவர் அன்பும் கை அற்றகண்ணேஅறும் - விளக்கின் ஒளியும்
நெய்வற்றியபோதேஅவியும், அம் மகளிரின் அன்பும்
பொருள்வற்றியபோது இல்லையாய்விடும்.
(க-து.) பொதுமகளிர் அன்புவிலைக்கே அல்லது விலை கொடுப்பார்க்கன்று.
(வி-ம்.) ஒளிக்குக் காரணம்நெய்யாதல்போல அவரன்புக்குக் காரணம்பொருளல்லது வேறல்ல
என்றார். துளக்கற நாடுதல்,ஐயந் திரிபின்றி
ஆராய்தல், கண்ணே யென்னும்ஏகாரம் இரண்டிடத்தும் தேற்றம்;
ஏனையது அசை.கையென்னும் இடப்பெயர் இடத்திலுள்ளபொருட்காயிற்று:
ஆகுபெயர் "பிறந்தவழிக்கூறலும்" என்றதனாற் கொள்க.
372 அங்கோட்
டகலல்குல் ஆயிழையாள் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின
மேற்காணம் இன்மையான் மேவா தொழிதாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.
(பொ-ள்.) அம் கோடு அகல் அல்குல்ஆய் இழையாள் நம்மோடு செங்கோடுபாய்துமேஎன்றாள்
மன் - அழகிய பக்கங்கள் உயர்ந்த அகன்றஅல்குலையுடைய ஆராய்ந்தெடுத்த
இழைகளையணிந்தவிலைமகள் நாம் பொருளுடையமாயிருந்த காலத்துநம்மோடு செங்குத்தான
மலையுச்சியில் ஏறிக்கீழ்விழுந்து ஒன்றாய் உயிர் துறப்போம் என்றுஅன்புரை கூறினாள்; காணம் இன்மையான்செங்கோட்டின்மேல் மேவா தொழிந்தாளே
கால்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து - இப்போது நமதுகையிற் பொருளில்லாமையால் தனது
காலில்வாதநோயென்று காட்டிப் போலியாக அழுது அம்மலையுச்சியின்மேல் வராமற் போனாளே!
(க-து.) பொதுமகளிரின் அன்புரைபோலியென்றொழிக.
(வி-ம்.) ‘அங்கோட் டகலல்குல்'இயற்கை யழகினையும்'
‘ஆயிழை' செயற்கை யழகினையும்உணர்த்தி அவை
கருவியாகக் காமுகரைப் பிணிக்கும்பொதுமகளிரின் இயல்பு புலப்படுத்தப்பட்டது.‘பாய்தும்'
என்றது முன்னிலையை உளப்படுத்தியபன்மை. ஏதானும் இடர்வந்தாற்
‘பாய்தும்'என்றபடி. ஏகாரம்; உறுதி
புலப்படுத்தித் தேற்றமாய்நின்றது. மேல்: மேவா தொழிந்தாளெனக்கூறப்படுதலின் மன்
ஒழியிசை யன்று : கழிவுப்பொருளது. ஒழிந்தாளே என்னும் ஏகாரம் ஈண்டுஇரங்கலின் மேற்று.
இறந்த காலத்தாற்கூறினமையின் இப்போது இவன் வறிஞனாய் வாழவழியற்று உயிர் துறக்கச்
செங்கோட்டின்மேல்ஏறினானாயிற்று. கால் காற்றாகலின், கால்
நோய்வாயுநோய். பொருள் இப்போது இல்லையாயினது அவள்பறித்துக் கொண்டமையின் என்க.
373 அங்கண்
விசும்பின் அமரர் தொழப்படுஞ்
செங்கண்மா லாயினும் ஆகமன், - தங்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி
ரன்னார்
விடுப்பர்தங் கையாற் றொழுது.
(பொ-ள்.) அங்கண் விசும்பின்அமரர் தொழப்படும் செங்கண்மால் ஆயினும் ஆக -அழகிய
இடமகன்ற விண்ணுலகத்தின் தேவர்களால்வணங்கப்படுகின்ற சிவந்த தாமரைக்
கண்களையுடையதிருமாலை ஒப்பவனாயினுமாக; தம் கைக்கொடுப்பதுஒன்று இல்லாரைக் கொய்தளிர் அன்னார் விடுப்பர்தம் கையால்
தொழுது - கொடுக்கத்தக்க பொருள் தமதுகையில் ஒன்றுமில்லாத ஆடவரை
கொய்தற்குரியஇளந்தளிர் போன்ற மேனியையுடைய பொதுமகளிர் தம்கைகளால் வணங்கி
விடைகொடுத்தனுப்பிவிடுவர்.
(க-து.) பொதுமகளிர்பொருளொன்றல்லது வேறு தகுதி கருதார்.
(வி-ம்.) ‘மால்' என்றது பெருமையும்,‘செங்கண்' என்றதும் உருவும், ‘அமரர்
தொழப்படு'மென்றது செல்வாக்கும் உணர்த்தின. உரு, திருமுதலியவற்றிற் சிறந்த ஆடவர்க்குநல்லிலக்கணமாகத் திருமாலைக்
கூறுதல்நூற்றுணிபாகலின் ஈண்டுங்
கூறினார்.திருமாலாயினும் பொருளிலனேல் விடத்தக்கானென்னும் பொருட்டாகலின் மன்
கழிவின்கண்வந்தது. ‘கொய் தளி' ரென்னும் அடைதளிரின்
தகுதிகருதிற்று. பொருளீட்டுதற்குரிய சிறந்தஆடவனாகலானும் பொருளுண்டான காலத்து
வருகவெனவிரும்புதலானும் பகைப்பதின்றி இனிதாகவிடுத்தலின் ‘தொழுது விடுப்ப' ரென்றார்.
374 ஆணமில்
நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக்
காணமி லாதார் கடுவனையர்; - காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த
பொருளுடையார்
அக்காரம் அன்னார் அவர்க்கு.
(பொ-ள்.) ஆணம்இல் நெஞ்சத்துஅணிநீலக் கண்ணார்க்குக் காணம் இலாதார் கடுஅனையர் -
அன்பில்லாத உள்ளமும் அழகிய நீலமலர்போன்ற கண்களுமுடைய
பொதுமகளிர்க்குப்பொருளில்லாதார் எத்துணை உயர்ந்தவராயினும்நஞ்சையொப்பத் தோன்றுவர்; காணவே செக்கூர்ந்துகொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம்அன்னார் அவர்க்கு - பலருங் காணச்செக்காட்டிப்பிழைப்பாரும் ஈட்டிய
செல்வமுடையார்அவர்க்குச் சர்க்கரைபோல் விரும்பத்தக்கவராவர்.
(க-து.) எந்நிலையினும் பொருளுடையாரையேவிலைமகளிர் விரும்புவர்.
(வி-ம்.) அகமும் புறமும்தம்மியல்பில் மாறுபட்டு நிற்குங் கள்ளம்உணர்த்துவார், ‘ஆணமில் நெஞ்சத்து அணிநீலக்கண்ணார்' என்றார், "மாயப்பொய் கூட்டிமயக்கும் விலைக்
கணிகை" என்றார்பிறரும். ‘கடுவனைய '
ரென்றமையாற் பொருளின்மையேஅவர்க்கு எடுப்பாய்த் தோன்றுதல்
பெறப்பட்டது.கொள்ளவென்றது, ஈண்டு உயிர்வாழலின் மேற்று;உம்மை இழிவு சிறப்பு, இதனால் காணமில்லாதார்எத்துணை
உயர்ந்தவராயினும் எனமேல்உரைக்கப்பட்டது. இவை நான்கு பாட்டானும் பொதுமகளிர் அன்பு,
பொருட்கே யன்றி அதுகொடுப்பார்கன்றென்பது பெறப்பட்டது.
375 பாம்பிற்
கொருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் -
ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார்.
(பொ-ள்.) பாம்பிற்கு ஒரு தலைகாட்டி ஒரு தலைதேம் படு தெள் கயத்து மீன்
காட்டும்மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வார் -இன்சுவை மிக்க தெளிந்த
நீர்ப்பொய்கையில்பாம்புக்குத் தனதுடலின் ஒரு புறமாகிய தலையைக்காட்டி மற்றொரு
புறமாகிய வாலை மீனுக்குக் காட்டிஅவ்வவற்றிற்கினமாயிருந்து உயிர் பிழைத்து
வரும்விலாங்கு மீனைப் போன்ற கள்ளச் செயலுடையவிலைமகளிரின் தோள்களைக் கூடுங் காமுகர்,விலங்கு அன்ன வெள் அறிவினார் -
விலங்கைப்போற்பகுத்தறிவில்லாத அறியாமையுடையவராவர்.
(க-து.) விலைமகளிர்கள்ளவுருவினராகலின் அவரைக் கூடற்க வென்பது.
(வி-ம்.) விலாங்கு மீனின்தலைப்புறம் பாம்பு போலவும் வாற்புறம் மீன்போலவும்
இருக்குமாகலின், பாம்பு மீனென்று கருதிஇரைபிடிக்க
வருமாயின் அதற்குத் தலைப்புறங்காட்டிஇனம்போல உலவி உயிர் தப்பியும், தனக்கு உணவாகியசிறு மீன்கள் பாம்பென்று கருதி அஞ்சிவிலகுமாயின் அவற்றிற்கு
வாற்புறங்காட்டிஇரையுண்டு உயிர் பிழைத்தும் அது வஞ்சித்துவாழ்தலின், பொருளற்றாரையும் பொருளுற்றாரையும்பகையாதும் நேசித்தும்
அவரவர்க்கேற்பஒழுகிப்பரிந்தும பொருள் பறித்தும் வஞ்சித்துஉயிர் வாழும் விலை
மகளிர்க்கு அஃது உவமமாயிற்று.கரந்து பொருள் பறித்து வாழும் இம் மகளிரியல்பு,"காரிகை கடுநுனைத் தூண்டிலாக, உட்கும் நாணும்ஊராண்
ஒழுக்கும், கட்கின் கோலமுங் கட்டிரையாக,இருங்கண் ஞாலத் திளையோர் ஈட்டிய, அருங்கலவெறுக்கை
யவைமீனாக, வாங்குபு கொள்ளும்வழக்கியல் வழாஅப் பூங்குழை
மகளிர்" எனப்பிறாண்டும் நுவலப்பட்டமை காண்க. ஒரு தலை, ஒருபுறம்.
ஆங்கு: அசை. கள்ளத்தைப் பகுத்தறிதலாகியஉள்ளீடில்லாமையின், ‘வெள்ளறிவினா'
ரென்றார்.
376 பொத்தநூற்
கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல்
நித்தலும் நம்மைப் பிரியலம்
என்றுரைத்த
பொற்றொடியும் போர்த்தகர்க்கோ டாயினாள்
நன்னெஞ்சே
நிற்றியோ போதியோ நீ.
(பொ-ள்.) பொத்த நூல் கல்லும்புணர் பிரியா அன்றிலும்போல் நித்தலும்
நம்மைப்பிரியலம் என்று உரைத்த பொன் தொடியும் போர்த்தகர்க் கோடு ஆயினாள் - நாம்
பொருளுடையமாயிருந்தகாலத்தில், கோத்த நூலோடு
பொருந்திய மணியும்சேர்க்கை பிரியாத அன்றிற் பறவைகளும்போலஎந்நாளும் நம்மைப்
பிரியோம் என்று உறுதி கூறியபொன்னாற் செய்த வளையலையணிந்த பொது மகள்,இப்போது, போர்த்தொழில் செய்கின்ற ஆட்டுக்கடாவின்
கொம்புபோல் மனம் முறுக்குண்டுவன்மையாய்ப் பின்வாங்கி விட்டாள்; நல்நெஞ்சே நிற்றியோ போதியோ நீ - கவடற்றநெஞ்சமே! இனி நீ அவளிடமே நயந்து
நிற்பாயோஅன்றி நன்னெறியில் திரும்பி வருவாயோ?
(க-து.) விலைமாதர்நம்பத்தக்கவரல்லர்.
(வி-ம்.) பொத்த வென்பது ஈண்டுக்கோத்த வென்னும் பொருட்டு. கல், முத்து முதலியமணிகள்; "கற்குளி
மாக்கள்" என்புழிப்போல. நூலும் மணியும் போலவும் பிரியாஅன்றில் போலவும் என்றது,
என்றும் உடனுறைவுக்குவந்த உவமம். ‘பிரியலம்' என்பது
ஆயத்தையும்உள்ளடக்கிப் படர்க்கையை உளப்படுத்தியதன்மைப் பன்மையாம். தகர்க்கோடு
வல்லென்றுதிரிந்து பின் வாங்கி நிற்றற்கு உவமையாயிற்று.
377 ஆமாபோல்
நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
சேமாபோல் குப்புறூஉஞ் சில்லைக்கண்
அன்பினை
ஏமாந் தெமதென் றிருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை.
(பொ-ள்.) ஆமாபோல் நக்கி அவர்கைப்பொருள் கொண்டு சேமாபோல்
குப்புறூஉம்சில்லைக்கண் அன்பினை ஏமாந்து எமதுஎன்றிருந்தார் - முதலிற் காட்டாவைப்
போல்மெத்தென ஊற்றின்பந்தந்து காமுகரின் கையிலுள்ளபொருளைப் பறித்துக்கொண்டு பின்பு
காட்டெருதைப்போற் பிறவிடத்துப் பாய்ந்தோடிவிடும்தீயொழுக்கமுடைய பொதுமக ளுள்ளத்துப்
போலியன்பினை மதிமயங்கி எமக் குரியதென்றுநம்யிருந்தவர், பெறுப பலரால் நகை - உலகிற்பலரால் நகைத்தலைப் பெறுவர்.
(க-து.) பொருட்பெண்டி ருறவைநம்பியிருந்தவர் பின்பு வறிய நிலையில்
அவராற்கைவிடப்பட்டுப் பலரால் நகைத்தலுக் கிடமாவர்.
(வி-ம்.) ஆமா பிறவுயிர்களைநாவினால் மெத்தெனத் தடவுமென்றும், அதுவே அவ்வுயிர்கட்குக் கடுவாகிய
இறுதியைவிளைவிக்குமென்றுங் கூறுப. ஆமா காட்டான்ஆனமைபோலச் சேமாவுங்
காட்டெருதாயிற்று.குப்புறுதல் பாய்ந்து கடத்தல். பிறவிடத்தென்றதுபொருளுடையார்
பிறரிடத்தென்க. தன்விருப்பம்போல் திரிந்து வளம் உண்டு
கொழுத்திருத்தலின்அவ்வியல்புடைய பொதுமகளிர்க்குக்காட்டுவிலங்குகள் எடுத்துக்
காட்டப்பட்டன.சில்லை,. தூர்த்தை; இழிவென்னும்
பொருளான் வந்தது.தாம். ஆம் : அசைகள், நம்பிப்
பொருளிழந்துகைவிடப்பட்ட நிலைகள், பிறர்
நகைத்தற்குக்காரணமாயின.
378 ஏமாந்த
போழ்தின் இனியார்போன் றின்னாராய்த்
தாமார்ந்த போதே தகர்க்கோடாம் -
மானோக்கின்
தந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
செந்நெறிச் சேர்துமென் பார்.
(பொ-ள்.) ஏமாந்த போழ்தின்இனியார்போன்று இன்னராய்த் தாம் ஆழ்ந்தபோதேதகர்க்கோடு
ஆம் - காமுகர் தம்பால்மயங்கியிருந்த காலத்தில் புறத்தே
அவர்க்குஇனியாரைப்போலிருந்து அகத்தே வஞ்சம்மிக்கவராய்த் தாம் அவர்
பொருளையெல்லாம்உண்டுவிட்டவுடனே ஆட்டுக் கடாவின் கொம்புபோல்திருக்குண்டு செல்கின்ற, மான் நோக்கின் தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேரார்
செந்நெறிச்சேர்தும் என்பார் - மான் போன்ற மருண்டபார்வையினையுடைய தம் மனம் போன
வழியே யொழுகும்பொருட் பெண்டிரது அகன்ற மார்பினைஅருணெறியிலொழுகுவே மென்றிருப்பார்
கூடார்.
(க-து.) விலைமாதரது சேர்க்கையால்அருணெறியொழுக்கங் கெடும்.
(வி-ம்.) தகர்க்கோடாம்பெண்டிரென்க. அருணெறியொழுக்கத்தும் பொருணெறிப்போக்குங்
கரவு முடையாரது தொடர்புமாறுபட்டதாகலின் சேராரென்றார்."பொருட்பொருளார்
புன்னலந் தோயார்அருட்பொருள். ஆயும் அறிவி னவர்" என்றார்நாயனாரும், தந்நெறிப் பெண்டிரென்றது,ஒருவர்க்குரிமையாய்
அடங்காமை யுணர்த்திற்று.
379 ஊறுசெய்
நெஞ்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி
எமரென்று கொள்வாருங் கொள்பவே
யார்க்குந்
தமரல்லர் தம்உடம்பி னார்.
(பொ-ள்.) ஊறு செய் நெஞ்சம் தம்உள்ளடக்கி ஒள் நுதலார் தேற மொழிந்த மொழிகேட்டு -
பிறர்பாற் பொருள் பறித்துக்கொள்ளுதலாகிய தீமையைச் செய்யுந் தமது நினைவைப்புறத்தே
புலப்படாதபடி தம் உள்ளத்தில்அடக்கிக்கொண்டு ஒளிமிக்க நெற்றியையுடையபொருட் பெண்டிர்
புறத்தே மனந் தெளியும்படிமொழிந்த பசப்பு மொழிகளைக் கேட்டு, தேறி எமர்என்று கொள்வாரும் கொள்ப-அவற்றை நம்பி
அப்பெண்டிர் எமக்குரியரென்று உரிமை கொள்வாருங்கொள்வர்; யார்க்கும்
தமர் அல்லர் தம்உடம்பினார் - அம் மாதரார் எவர்க்கும்உறவினராகார் அவர் தமக்கே
உரியஉடம்பினையுடையர்.
(க-து.) வேசையர் தமதுடம்பைத்தமதாக்கத்துக்குப்
பயன்படுத்துவரான்றிப்பிறரெவர்க்கும் உரிமையாக்கார்.
(வி-ம்.) ‘தூண்டி லிரையின்துடக்குள் ளுறுத்துத் தேன் தோய்த் தன்னதீஞ்சொல்
அளைஇ" உரையாடும்இயல்பினராதலின், ‘ஊறுசெய் நெஞ்சம் தம்உள்ளடக்கித் தேற மொழிந்த மொழி' என்றார்.‘கொள்வாருங்கொள்ப'
வென்றார்,தமக்குடம்பாடின்மையின்.
அன்புடையராயின்பிறர்க்கென்பும் உரியராவராகலின் அன்பிலாரானஇவர் தம் முடம்பு தமக்கே
உரியவராயினார். இவைஐந்து பாட்டானும் விலைமாதரது கரவுடைமைபெறப்பட்டது.
380 உள்ளம்
ஒருவன் உழையாத ஒண்ணுதலார்
கள்ளத்தாற் செய்யுங் கருத்தெல்லாந் -
தெள்ளி
அறிந்த விடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பி னவர்.
(பொ-ள்.) உள்ளம் ஒருவன்உழையதா-தமது நெஞ்சம் வேறொருவனிடத்ததாக, ஒள்நுதலார் கள்ளத்தால் செய்யுங் கருத்தெல்லாம்
-ஒளிபொருந்திய நெற்றியையுடைய பொருட்பெண்டிர்வஞ்சனையால் தம்மிடஞ் செய்யும்
நினைவெல்லாம்,தெள்ளி அறிந்தவிடத்தும் அறியாராம் பாவம்செறிந்த
உடம்பினவர் - ஆராய்ந்து நன்றாகத்தெரிந்த நிலையினும் தீவினைமிக்கபிறப்பினையுடையவர்
அத்தெரிவினைத்தமதொழுக்கத்திற் கொண்டுவரும்அறிவாற்றலில்லாதவராவர்.
(க-து.) தீவினை மிக்கார்விலைமாதரின் வஞ்சங்களை நன்கு தெரிந்திருந்தும்அவரின்
நீங்கியொழுகும் ஆற்றலில்லாதவராவர்.
(வி-ம்.) உள்ளம் ஒருவனுழையதாவென்றமையான் உடம்பு
பிறனொருவனுழையாதாக்கள்ளஞ்செய்வரென்பது பெறப்பட்டது.அறிதற்கிருந்த அறிவாற்றல், தீவினைச்செறிவால்அறிந்தவாறொழுகுதற்கில்லாமையின்,‘அறிந்தவிடத்தும் அறியாராம்' என்றார். ஆம்,ஆவரென்னும்பொருட்டு. ‘அறிவதறிந்தும் பழியோடுபட்டவை செய்தல்செய்த வினையான்
வருமாகலின் ‘பாவஞ் செறிந்த உடம்பினவர்' என்றார். இதனான்வஞ்சமிக்க விலைமாதரினின்று காமுகர்நீங்காமைக்கு ஏதுக்
கூறுமுகத்தால் அவ்விருதிறத்தாரது இழிவும் உரைக்கப்பட்டது.
0 Comments