செயற்கரிய யாவுள நட்பின்
அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
வினைக்கரிய யாவுள காப்பு
மு.வ உரை:
நட்பைப்போல் செய்து
கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய
காவலாக இருப்பவை எவை உள்ளன.
சாலமன் பாப்பையா உரை:
சம்பாதிப்பதற்கு நட்பைப்
போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து
விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?
கலைஞர் உரை:
நட்புக் கொள்வது போன்ற
அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை
குறள் 782:
நிறைநீர நீரவர் கேண்மை
பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு
பின்னீர பேதையார் நட்பு
மு.வ உரை:
அறிவுடையவரின் நட்பு பிறை
நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின்
நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.
சாலமன் பாப்பையா உரை:
பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு
தேயும்.
கலைஞர் உரை:
அறிவுள்ளவர்களுடன்
கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ
முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்
குறள் 783:
நவில்தொறும் நூனயம் போலும்
பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
பண்புடை யாளர் தொடர்பு
மு.வ உரை:
பழகப் பழக நற்பண்பு
உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக்
கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
படிக்கும்போது எல்லாம்
மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும்
போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.
கலைஞர் உரை:
படிக்கப் படிக்க இன்பம்
தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின்
நட்பு
குறள் 784:
நகுதற் பொருட்டன்று நட்டல்
மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு
மேற்சென் றிடித்தற் பொருட்டு
மு.வ உரை:
நட்புச் செய்தல் ஒருவரோடு
ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர்
நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனோடு நட்புக் கொள்வது
சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல்
இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.
கலைஞர் உரை:
நட்பு என்பது சிரித்து
மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச்
செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்
குறள் 785:
புணர்ச்சி பழகுதல் வேண்டா
உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்
நட்பாங் கிழமை தரும்
மு.வ உரை:
நட்புச் செய்வதற்குத்
தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த
உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனோடு ஒருவன் நட்புக்
கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ
வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக்
கொடுக்கும்.
கலைஞர் உரை:
இருவருக்கிடையே நட்புரிமை
முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை இருவரின் ஒத்த மன
உணர்வே போதுமானது
குறள் 786:
முகநக நட்பது நட்பன்று
நெஞ்சத்
தகநக நட்பது நட்பு
தகநக நட்பது நட்பு
மு.வ உரை:
முகம் மட்டும் மலரும்
படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக
உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
பார்க்கும்போது மனம்
மகிழாமல், முகம் மட்டுமே மலரப்
பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.
கலைஞர் உரை:
இன்முகம் காட்டுவது
மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான
நட்பாகும்
குறள் 787:
அழிவி னவைநீக்கி ஆறுய்த்
தழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
அல்லல் உழப்பதாம் நட்பு
மு.வ உரை:
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து
நீக்கி, நல்ல வழியில் நடக்கச்
செய்து, அழிவுவந்த காலத்தில்
உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அழிவு தரும் வழிகளில்
நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச்
செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.
கலைஞர் உரை:
நண்பனைத் தீயவழி சென்று
கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச்
செய்து, அவனுக்குத் தீங்கு
வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்
குறள் 788:
உடுக்கை இழந்தவன் கைபோல
ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
இடுக்கண் களைவதாம் நட்பு
மு.வ உரை:
உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத்
துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
சாலமன் பாப்பையா உரை:
பலர் முன்னே ஆடை
நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத்
துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.
கலைஞர் உரை:
அணிந்திருக்கும் உடை
உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய
உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே
நப்புக்கு இலக்கணமாகும்
குறள் 789:
நட்பிற்கு வீற்றிருக்கை
யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
மு.வ உரை:
நட்புக்கு சிறந்த நிலை எது
என்றால், எப்போதும் வேறுபடுதல்
இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி
செய்து தாங்கும் நிலையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நட்பின் அரியணை எது
என்றால், எப்போதும் மாறாமல்
முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.
கலைஞர் உரை:
மனவேறுபாடு கொள்ளாமல்
தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின்
சிறப்பாகும்
குறள் 790:
இனையர் இவரெமக்
கின்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு
புனையினும் புல்லென்னும் நட்பு
மு.வ உரை:
இவர் எமக்கு
இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்
தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.
சாலமன் பாப்பையா உரை:
இவர் எமக்கு இத்தனை அன்பு
உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே
என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப்
போய்விடும்.
கலைஞர் உரை:
நண்பர்கள் ஒருவருக்கொருவர்
``இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்'' என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும்
அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்
0 Comments