அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
மு.வ உரை:
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு
உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது
உரைப்பவனுடையத் தகுதிகள்.
சாலமன் பாப்பையா உரை:
நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது
அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும்
கொண்டிருப்பவரே தூதர்.
கலைஞர் உரை:
அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும்,
அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்
குறள் 682:
அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று
கின்றி யமையாத மூன்று
மு.வ உரை:
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை
ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு,
அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும்
தூதர்க்கு இன்றியமையாதன.
கலைஞர் உரை:
தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று
முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை
குறள் 683:
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு
வென்றி வினையுரைப்பான் பண்பு
மு.வ உரை:
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு
காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக
விளங்குதல் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை
அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன்
நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.
கலைஞர் உரை:
வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி
ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே
வல்லவனாக இருத்தல் வேண்டும்
குறள் 684:
அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு
செறிவுடையான் செல்க வினைக்கு
மு.வ உரை:
இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம்,
ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும்
தொழிலுக்குச் செல்லலாம்.
சாலமன் பாப்பையா உரை:
இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம்,
பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத்
தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.
கலைஞர் உரை:
தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு,
தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல்
வேண்டும்
குறள் 685:
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது
நன்றி பயப்பதாந் தூது
மு.வ உரை:
பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள்
பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை
உண்டாக்குகின்றவன் தூதன்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச்
சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக்
கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.
கலைஞர் உரை:
சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத்
தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே
சிறந்த தூதருக்கு அழகாகும்
குறள் 686:
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்க தறிவதாந் தூது
தக்க தறிவதாந் தூது
மு.வ உரை:
கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு
அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை
அறிகின்றவனே தூதன்.
சாலமன் பாப்பையா உரை:
அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல்,
பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு
அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.
கலைஞர் உரை:
கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும்
பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில்
உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்
குறள் 687:
கடனறிந்து காலங் கருதி இடனறிந்
தெண்ணி உரைப்பான் தலை
தெண்ணி உரைப்பான் தலை
மு.வ உரை:
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை
செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே
தூதன்.
சாலமன் பாப்பையா உரை:
தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம்
ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு,
ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு
சொல்பவனே தூதருள் தலைமையானவன்.
கலைஞர் உரை:
ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய
காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச்
சொல்பவனே சிறந்த தூதனாவான்
குறள் 688:
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு
வாய்மை வழியுரைப்பான் பண்பு
மு.வ உரை:
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல்,
துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை
இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச்
செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின்
பண்பு.
கலைஞர் உரை:
துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும்
தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்
குறள் 689:
விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்
வாய்சோரா வன்க ணவன்
மு.வ உரை:
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத
உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும்
தகுதியுடையவன்.
சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம்
சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான
செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.
கலைஞர் உரை:
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு
எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி
படைத்தவனாக இருத்தல் வேண்டும்
குறள் 690:
இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்
குறுதி பயப்பதாம் தூது
குறுதி பயப்பதாம் தூது
மு.வ உரை:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி
விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த
அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு
நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.
கலைஞர் உரை:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப்
பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான
தூதனாவான்
0 Comments