உலகத்தின் நிலையாமை
உணர்ந்து யான் எனது என்னும் இருவகைப் பற்றும் விட்டு மெய்யுணர்வில் ஒழுகுதல், உடம்பின்மேல் உள்ள பற்று, யான் என்னும் அகப்பற்று. செல்வம் முதலியவற்றின்மேல் உள்ள
பற்று,
எனது என்னும் புறப்பற்று. துறத்தல் - இவ் விருவகைப்
பற்றுகளையும் விடுதல்.
51. விளக்குப்
புகஇருள் மாய்ந்தாங் கொருவன்
தவத்தின்முன் நில்லாதாம்
பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள்
பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம்
தீது.
(பொ-ள்.) விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு - ஓரிடத்தில் விளக்கொளி
வர அங்கே இருந்த இருட்டு நீங்கினாற்போல, ஒருவன் தவத்தின் முன் நில்லாது பாவம் - ஒருவனது
தவமுயற்சியின் முன் அவன் அதற்குமுன் செய்ததீவினை நில்லாது, விளக்கு நெய் தேய்விடத்து - விளக்கின் நெய் குறையுமிடத்தில், சென்று இருள் பாய்ந்தாங்கு - இருட்டு மீண்டும் போய்ப்
பரவினாற்போல, நல்வினை தீர்விடத்து
நிற்கும் தீது - நல்வினை நீங்குமிடத்தில் தீவினை சென்று சூழ்ந்து நிற்கும்.
(க-து.) இடைவிடாமல் தவஞ் செய்யவேண்டும்.
(வி-ம்.) விளக்கென்பது தவம் : விளக்கெரிவதற்குக் காரணமான
நெய்யென்பது, தவம் நிகழ்தற்குக்
காரணமான நல்வினை என்று கொள்க. முன் நல்வினையினாலேயே தவம் நிகழுமென்பது,
"தவத்தால் தவம் செய்யாதார்"1 என்று முன் வந்தமையின் பெறப்படும். ஆம் : இரண்டிடத்தும்
அசை. புக மாய்ந்தாங்கு எனவும் தேய்விடத்துப் பாய்ந்தாங்கு எனவும் வருதலால், தவம் இடை விடாமாற் செய்யப்படும் என்பது பெறப்பட்டது. இஃது
உவமையணி.
52. நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம்
செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்
கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.
(பொ-ள்.) நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி -
நிலையாமையியல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும்
இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்து, தலையாயார் - சிறந்தவர்கள், தம் கருமம் செய்வார் - தமது கடமையாகிய தவமுயற்சியைச்
செய்வார்கள், தொலைவு இல்லா சத்தமும்
சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும் பித்தரின் - கற்று முடிதலில்லாத இலக்கண நூலும்
கோள் நூலும் என்று இவை போல்வன கூவிக்கொண்டிருக்கும் பித்தரைவிட, பேதையார் இல் - அறிவிலாதவர் பிறர் இல்லை.
(க-து.) இலக்கணம் முதலிய கருவி நூல்களையே என்றுங் கற்றுக்கொண்டிராமல்
நிலையாமை முதலியன உணர்ந்து உடனே தவஞ்செய்ய வேண்டும்.
(வி-ம்.) எண்ணும்மையும் ‘உள்ளன' வென்னும்
ஒரு சொல்லெச்சமும் வருவித்துக் கொள்க. முதலில் நிலையாமை கூறினமையின், நோய் மூப்புச் சாக்காடு என்பன அவற்றால் வருந் துன்பங்களை
உணர்த்தி நின்றன. தவம் உயிர்க்குரிய முயற்சியாதலின், தம் கருமம் எனப்பட்டது. "தவஞ் செய்வார் தங்கருமஞ்
செய்வார்" என்னும்
பெருநாவலர் திருமொழியும் இங்கு நினைவு கூரற்குரியது. நல்வினை செய்யாமல் தீவினை
செய்வார் கடையானவரும், மறுபிறவியின்
நற்பயன் கருதி நல்வினை செய்வார் இடையானவரு மாகலின், பிறவியையே அஞ்சிப் பயன் கருதாது, தம் கடமையென்று கடைப்பிடித்துத் தவஞ்செய்வார்
தலையானவரானார். கற்கக் கற்கத் துணிவு பெறாமல் பல்வேறு ஐயங்களுடன் முடிவின்றிச்
செல்லுதலின், ‘தொலைவில்லாச் சத்தமும்
சோதிடமும்'
என்றார். ‘கலகல
கூஉந் துணைல்லால்' என்றலின், இலக்கணம் இங்கே ‘சத்தம்' என்னுஞ்
சொல்லாற் குறிக்கப்பட்டது; இலக்கண
நூல் உணர்ச்சியே நல்ல கல்வித் திறமாதலாலும் அக்கருவிக் கல்வியைத் தக்கவாறு கற்றுக்
கொண்டு உடனே மெய்யுணர்விற் செல்லுதல் வேண்டுமாதலானும் ‘சத்தம்' என்பதையும், நடப்பன நடக்குமென்று துணிந்து தவமுயலாமல் வாழ்நாள்
நலங்களையே மேலும் மேலும் விரும்பிக் கோள் நூலையே அலசிக் கொண்டிருத்தல்
நன்றாகாதாதலால் ‘சோதிடம்' என்பதையுங் குறித்தார். என்றாங்கு இவை யென்பதற்கு ‘என்று இவை போல்வன' என்றுரைத்துக் கொள்க. பிதற்றல் - அறிவின்றி இடைவிடாமற்
கூறிக் கொண்டிருத்தல். கற்றும் மெய்யுணர்விற் செல்லாமையின் கல்லாதாரினும் இவர்
பேதையார் என்றற்கு, ‘இவை
பிதற்றும் பித்தரின் பேதையார் இல்' எனப்பட்டது.
53. இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன்
றிவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார்
துறப்பர்
தலையாயார் தாம் உய்யக்
கொண்டு.
(பொ-ள்.) இல்லம் இளமை எழில் வனப்பு மீக்கூற்றம் செல்வம் வலி என்று
இவையெல்லாம் - இல்வாழ்வு, இளமை, எழுச்சி, அழகு, உயர்சொல், பொருள், வலிமை என்று இப்பேறுகளெல்லாம், மெல்ல நிலையாமை கண்டு - மெல்ல மெல்ல நிலையாமற் போதலை
அறிந்து,
தலையாயார் - பெரியோர்கள், தாம் உய்யக்கொண்டு - தாம் உய்யுங் கருத்துக்கொண்டு, நெடியார் துறப்பர் - காலம் நீட்டியாதவராய் உடனே இருவகைப்
பற்றுந் துறப்பர்.
(க-து.) நிலையாமை உணர்ந்து துறவுள்ளங் கொள்வோரே துன்பங்களினின்றும்
பிழைப்பவர்.
(வி-ம்.) எழில் இளமையின் கொழுந்து ; அஃதாவது அதன் வளர்ச்சி நிலையாகிய தோற்றப்பொலிவு ; வனப்பு - உறுப்புக்களின் திருந்திய அமைப்பு ;
"சீயமன்னான் இளமையும் வனப்பும்
ஏரும்" என்றார்
பிறரும். மீக்கூற்றம் - மேம்பாடான சொல் ; என்றது, தன்
சொல் உலகத்திற் செல்லுதலை. இல்லம் என்பதிற்போலக் கூற்றம் என்பதிலும் அம் சாரியை.
வலி - துணைவலி முதலியன. ஒவ்வொன்றாக நிலையாமற் போதலின் ‘மெல்ல நிலையாமை' யென்றார். தலையாயார் நிலையாமைக் கண்டு தாம் உய்யக் கொண்டு
நெடியாராய்த் துறப்பர் என்க.
54. துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் -
இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி
மனையா
றடைவொழிந்தார் ஆன்றமைந்
தார்.
(பொ-ள்.) ஏழையார் - அறிவிலார், துன்பம் பல நாள் உழந்தும் - பல நாட்கள் துன்பத்தால்
வருந்தியும், ஒரு நாளை இன்பமே -
சிறிதுபோழ்து நுகரும் ஒரு நாளைய இன்பத்தையே, காமுறுவர் - விரும்புவார் ; ஆன்று - கல்வி கேள்விகளால் நிறைந்து, அமைந்தார் - அதற்குத் தக்கபடி அடங்கி யொழுகும் பெரியோர், இன்பம் இடை தெரிந்து -இன்பம் அங்ஙனம் இடையே சிறிது உளதாதல்
தெரிந்து - இன்னாமை நோக்கி - துன்பத்தின் மிகுதியை அறிந்து மனை ஆறு - இல்
வாழ்க்கையின் வழியில், அடைவு -
சார்ந்து நிற்பதை, ஒழிந்தார்
- நீங்கினார்.
(க-து.) உலகத்திற் பல துன்பங்களினிடையிற் சிறிது இன்பமுண்டாதலின், அந் நிலை தெரிந்து தவம் முயலுதல் வேண்டும்.
(வி-ம்.) ‘நுண்ணுணர்வின்மை
வறுமை அஃதுடைமை செல்வம்,'1 ஆதலின்
இங்கே ஏழையார் என்றது அறிவில் வறுமையுடையாரை. மனையாறு அடைவொழிந்தார் என்றது, மேன்மேலும் இளமை துய்த்தலிற் பற்றுள்ளம் நீங்கினாரென்றற்கு.
55. கொன்னே கழிந்தன் றிளமையும் இன்னே
பிணியொடு மூப்பும் வருமால்
- துணிவொன்றி
பிணியொடு மூப்பும் வருமால்
- துணிவொன்றி
என்னொடு சூழா தெழுநெஞ்சே
போதியோ
நன்னெறி சேர நமக்கு.
(பொ-ள்.) கொன்னே கழிந்தன்று இளமையும் - இளமைப் பருவமும் வீணே
கழிந்தது,
இன்னே பிணியொடு மூப்பும் வரும் - உடனே நோயோடு கிழத்தனமும்
வரும்,
ஆல் - ஆதலால், துணிவு ஒன்றி என்னொடு சூழாது எழு நெஞ்சே - துணிதல் பொருந்தி
என்னோடு ஆராயாமல் புலன்களின் வழியிற் செல்கின்ற நெஞ்சமே, போதியோ நல் நெறி சேர நமக்கு நல்வழி உண்டாக நீ என்னுடன்
வருகின்றனையா ?
(க-து.) புலன்வழிச் செல்லுதலைத் தவிர்த்து மனத்தைஅறவழியிற்
செலுத்துதல் வேண்டும்.
(வி-ம்.) கழிந்தன்று - கழிந்தது ; அன் : சாரியை இன்னே - உடனே என்னும் பொருட்டு ; இது நெஞ்சத்தின் இயல்பு கூறித் திருத்திபடியாம்.
56. மாண்ட குணத்தொடு மக்கட்பே றில்லெனினும்
பூண்டான் கழித்தற்
கருமையால் - பூண்ட
மிடியென்னும் காரணத்தின்
மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார்.
(பொ-ள்.) மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல் எனினும் - திருமணம் ஆனபின்
மனைவிக்கு மாட்சிமைப்பட்ட குணத்தோடு குழந்தைப்பேறும் இல்லை யென்றாலும், பூண்டான் கழித்தற்கு அருமையால் - கொண்ட கணவன் அவளை
விட்டுவிடுவதற்கு அருமையாகுமாதலால், பூண்ட மிடி என்னும் காரணத்தின் - மேலும் தனக்கு உண்டாகும்
வறுமை யென்னும் காரணமுங்கொண்டு, மேன்முறைக்
கண்ணே - மேலான ஒழுக்க நெறியிலே, கடி
என்றார் கற்றறிந்தார் - பற்றினை நீக்கு என்றனர் கற்றறிந்தோர்.
(க-து.) இளமையிலேயே தவம் முயலுதல் நல்லது.
(வி-ம்.) காரணத்தின்
என்பதற்கு காரணத்தினாலும் என இறந்தது தழீஇய எச்சவும்மை கொள்க. மேலான ஒழுக்கநெறி
யென்றது,
இங்கே தவநெறி, அந்நெறிக்கண் நிற்கும் ஆற்றலாலேயே பற்றினைக் கடியும் உள்ளம்
தோன்றுதலின், ‘மேன்முறைக் கண்ணே கடி' யென்றார் எனப்பட்டது. "அப்பற்றைப் பற்றுக, பற்று விடற்கு," என்பதனானும் இம்முறைமை பெறப்படும்.
57. ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள்
தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே
நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.
(பொ-ள்.) ஊக்கித் தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய - முயன்று தாம்
மேற்கொண்ட நோன்புகள் உள்ளத்தில் தளர்வடையும்படி, தாக்க அருந் துன்பங்கள் தாம் தலைவந்தக்கால் -
போக்குதற்குரிய துன்பங்கள் தம்மிடம் வந்தடைந்தால், நீக்கி நிறூஉம் உரவோரே - எப்படியானும் அத் துன்பங்களைப்
போக்கித் தம் நோன்புகளை நிலை நிறுத்திக் கொள்ளும் வலியுடையோரே, நல்லொழுக்கம் காக்கும் திருவத்தவர். துறவொழுக்கத்தினைக்
காத்துக் கொள்ளும் பேறுடையவராவர்.
(க-து.) இன்னல்களை எதிர்த்துத் தவம் முயலுதல் வேண்டும்.
(வி-ம்.) ‘தாங்கரு' என்பது ‘தாக்கரு' என வலித்ததெனினும் ஒக்கும். ‘துன்பங்கள் தாம்' என்பதில் தாம் சாரியை, நிறூஉம் - நிறுத்தும் ; உள்ள உரம் உடையோரே இடைவரும் இன்னல்களை நீக்கித் தம்
நோன்புகளை நிலை நிறுத்திக் கொள்ளுதல் கூடுமாகலின், ‘உரவோரே ' என்றார்.
ஏகாரம் பிரிநிலை. நல்லொழுக்க மென்றது இங்கே துறவொழுக்கத்தை. திருவத்தவர் என்பதில் ‘அத்து' ‘அ' சாரியைகள். முற்றுகர ஈறு, வேற்றுமையில் அத்துச் சாரியையுடன் வகர உடம்படுமெய் பெற்றுப்
புணர்ந்தமை, ‘கிளந்தவல்ல' என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்ளப்படும்.
58. தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை யிகழ்ந்த
வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து
வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.
(பொ-ள்.) தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி - காரணமின்றித்
தம்மைப் பிறர் இகழ்ந்தமையைத் தாம் பொறுத்துக் கொள்வதல்லாமல், எம்மை இகழ்ந்த வினைப் பயத்தால் - எம் போல்வாரை இங்ஙனம்
இகழ்ந்த தீவினையின் பயனால் , உம்மை -
மறுமையில்,
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று - ஒரு கால் அழலிடமான
நரகத்தில் அவர் வீழ்வரோ என்று, பரிவதும்
சான்றோர் கடன் - இரங்குவதும் தவம் நிறைந்தவரது கடமையாகும்.
(க-து.) தவமுயற்சியில் நிற்பவர், தம்மை இகழ்பவர் பால் பொறுமையும் இரக்கமுங் கொள்ளவேண்டும்.
(வி-ம்.) மற்று ; வினைமாற்றுப்
பொருளது. எம்மை தன்மைப் பன்மை; தனித்துத்
தம்மை நினையாராகலின் பிறரையும் உட்கொண்டே ‘எம்மை' யெனக்
கூறுவரெனக் கொள்க. நல்லோர்பாற் பிழை செய்தமையின் அவரிரக்கத்தால் ஒருகால் உய்தலும்
கூடுமாதலின், ‘வீழ்வர்கொல் ' என்பதிற் ‘கொல்' என்பதை ஐயப்பொருட்டாகவே கொள்ளுதலில் இழுக்கில்லை. சான்றோர்
பரிவையும் அது மிகுதிப்படுத்தும், சான்றோர்
அவர்பாற் பரிவு கொள்ளா விட்டால், அவருள்ளம்
ஒருகால் அப்பிழை செய்தோர்க்குக் கேடு நினைந்து தன்னையே மாசுபடுத்திக் கொள்ளவும்
கூடுமாதலாலும், தவத்தோர் நல்லது
நினைத்தால், அவர்
ஆற்றலுடையோராதலின், பிழை
செய்தவர் திருத்தவுங் கூடுமாதலாலும் அங்ஙனம் பரிவதனைக் ‘கடன்' என்றார்.
59. மெய்வாய்கண் மூக்குச் செவியெனப்
பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் -
கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும்
ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும
(பொ-ள்.) மெய் வாய் கண் மூக்கு செவி எனப் பேர் பெற்ற - , ஐ வாய வேட்கை அவாவினை - ஐந்து வழிகளாகச்
செல்லுதலையுடைய பற்றுள்ளத்தால் உண்டாகும் அவாவை , கலங்காமல்
காத்து - தீயவழிகளில் நிலைமாறிச் செல்லாமல் பாதுகாத்து, கைவாய்
உய்க்கும் ஆற்றலுடையான் - ஒழுக்கநெறியிற் செலுத்தும் வல்லமையுடையவனே, விலங்காது வீடு பெறும் - தவறாமல் வீடுபே றடைவான்.
(க-து.) ஐம்புல விருப்பங்களை ஒழுக்கநெறியிற் செலுத்தி உய்தல்
வேண்டும்.
(வி-ம்.) பேர், பெயர்
என்பதன் மரூஉ. வேட்கை - பற்றுள்ளம் அவா - அதனாலுண்டாகும் விருப்பம்.
நச்சினார்க்கினியர் கருத்தும் இது. கை - ஒழுக்கம் ; கைவாய்
உய்க்கும் எனக் கூட்டிக் கொள்க. ‘கலங்காமற் காத்து' என்பது இடைப் பிறவரலாதலின் ‘கைவாய் கலங்காம' லென ஒற்று மிகாது இயல்பாயிற்று. விடுதலை, பற்றுக்களினின்றும்
விடுதலை. புலனடக்கம் என்பது, அதனை நல்வழியிற் செலுத்தலே
என்று இதன்கண் அறிவுறுக்கப்பட்டமை கருத்திருத்துதற்குரியது; "ஐந்தும் அடக்கா அறிவறிந்தேனே," என்றார்
பிறரும்.
60. துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் -
இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை
நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல்.
(பொ-ள்.) துன்பமே மீதூரக் கண்டும் - வாழ்க்கையில் துன்பமே மேலும்
மேலும் மிகுந்து வருதல் உணர்ந்தும் ; துறவு உள்ளார் - பற்றில்லாமலிருத்தலை நினையாராய், இன்பமே காமுறுவர் ஏழையார் - இடையே தினையளவாக உண்டாகும்
இன்பமே விரும்பி நிற்பார் மனவலிமையில்லாதார், இன்பம் இசைதொறும் - ஆனால் அச் சிற்றின்பம்
கிடைக்கும்போதெல்லாம், அதன்
இன்னாமை நோக்கி - அதனால் உண்டாகும் பெருந்துன்பங் கருதி, பசைதல் பரியாதாம் மேல் - அதனை விரும்புதலை மேற்கொள்ளார்
மேலோர்.
(க-து.) வாழ்க்கையிற் சிறிய இன்பத்துக்காகப் பெருந்துன்பம்
உண்டாதலின், அச் சிற்றின்பத்திற்
பற்று வைக்கலாகாது,
(வி-ம்.) ஏகாரங்கள் பிரிநிலை. உள்ளவலியில்லாதவராதலின், இரக்கந் தோன்ற ‘ஏழையார்' என்றார்.
இசைதல் வந்து பொருந்துதல் ; கிடைத்தல்
. மற்று ;
அசை பரிதல், "காய்பரீஇ" என்புழிப்போலக் கொள்ளுதற் பொருளில் வந்தது.
0 Comments