அஃதாவது, தூயதல்லாமை; உடம்பின் அழுக்குடைமையை உணர்த்திற்று. மகளிருடம்பு அழகியதெனக் கருதப்படுதலின் அதன் தூய்தல்லாமையைப் பெரும்பாலும் இவ்வதிகாரம் விளக்கிற்று.

41. மாக்கேழ் மடநல்லாய் என்றரற்று சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.

(பொ-ள்.) மா கேழ் மட நல்லாய் என்று அரற்றும் சான்றவர் - மாந்தளிர் போன்ற இளநங்கையே என்று மாதரை நோக்கிப் பலகாலுங் கூறி உருகும் பெரியோர்கள், நோக்கார்கொல் நொய்யது ஓர் புக்கிலை - அம் மாதராரது தாழ்ந்த சிற்றுடம்பின் இயல்பை எண்ணிப் பாரார்களோ , யாக்கைக்கு ஓர் ஈச்சிறகு அன்னது ஓர் தோல் அறினும் - அவ்வுடம்புக்கு ஓர் ஈயின் சிறகைப் போன்றதொரு தோல் அறுபட்டாலும், வேண்டுமே காக்கை கடிவதோர் கோல் - காக்கையைத் துரத்துவதொரு கோல் வேண்டியிருக்கும்.

(க-து.) உடம்பு அழுக்குடையதென்று உணர்ந்ததொழுக வேண்டும்.

(வி-ம்.) மா - மாந்தளிர் ; கேழ் : உவமப்பொருளது. இச்செய்யுள் உடம்பை நோக்கியதாகலின், நல்லாய் எனப்தற்குப் பொதுவில் பெண்' என்று உரைத்துக் கொள்ளவேண்டும். தாங் காமுற்றும் மாதரார்பால் இங்ஙனம் பல முறையுங் கூறி உள்ளங்கரைந்து குறையிரப்பது தோன்ற அரற்றும்' என்றார். சான்றவர் என்றது, இகழ்ச்சி . உயிர் புகுந்திருக்கும் இல்லமாதலின், உடம்பு புக்கில் ' எனப்பட்டது. "புக்கில் அமைந்தின்று கொல்லோ " என்றார் வள்ளுவரும். ஓர் - சிறிய என்னும் பொருட்டு. பின் இரண்டடிகளில் யாக்கையின் தூய்தல்லாமை காட்டப்படுதலாலும் உடம்பின் தாழ்ந்த தன்மை தோன்ற இங்கும் நொய்யது' என்றொரு சொல் வந்தமையாலும் மீண்டும் இழிவு தோன்றும்படி துச்சில்' எனப்பாடங் கொள்ளுதல் சிறப்பன்று ; புக்கில் என்னும் பாடம் பொருட் போக்குக்கும் பொருந்தும். மிகச்சிறிய அளவுக்கும் மீந்தோல்நிலைமைக்கு ஈச்சிறகு' கூறினார். காகத்தைக் கூறினமையின், புண் மிகுதி தோன்றிற்று.

42. தோல்போர்வை மேலும் தொளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித் துடம்பானால் - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.

(பொ-ள்.) தோல் போர்வை மேலும் தொளை பல வாய் - தோலாலான போர்வையின் மேலும் தொளைகள் பலவாகி, பொய் மறைக்கும் மீ போர்வை மாட்சித்து உடம்பானால் - அவற்றின் உள் அழுக்குகளை மறைக்கும் மேற்போர்வையாகிய ஆடையின் பெருமையையுடையது இவ்வுடம்பென்றால், காமம் புகலாது -அவ்வுடம்பைக் காமத்தால் மகிழாமல், மீப்போர்வை பொய் மறையா - அம்மேற் போர்வையாகிய ஆடையை அழுக்கு மறைக்குந் திரையாகவும், மற்றதனை - மற்றொரு போர்வையாகிய தோற் போர்வையை, பை மறியா - ஒரு பையின் திருப்பமாகவும், பார்க்கப்படும் - நினைத்துப் பார்த்து விருப்பத்தை நீக்கிக் கொள்ள வேண்டும்.

(க-து.) உடம்பின் அழுக்குடைமையை எண்ணிப் பார்த்து அதன்மேல் உண்டாகும் அவாவை நீக்கிக்கொள்ள வேண்டும்.

(வி-ம்.) பலவாய் என்னும் வினையெச்சம் காரணப்பொருட்டு ; தொளை பலவானமையால் மேலே ஆடை போர்க்க வேண்டியதாயிற்று என வருதலின். மாட்சித்து என்றது, இகழ்ச்சி. மறையா மறியா : இரண்டிடத்தும் ஈறு கெட்டது ; எண்ணும்மை விரித்துக் கொள்க. மற்று : பிறிதென்னும் பொருட்டு. பையின் உட்புறத்தை மேற்புறமாகத் திருப்பிப் பார்ப்பதுபோல என்றற்குப் பைம்மறியா' எனப்பட்டது. இங்கே தோலின் உட்புறத்தை நினைத்துப் பார்க்க வேண்டுமென்பது கருத்து. பார்க்கப்படுமென்பது ஒரு வியங்கோள் ஈறு ; பார்த்து நீக்கப்படும் என்னுங் கருத்தும் அடங்கி நின்றது. "மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்" என்றார் பிறரும்.

43.  தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடி
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும்
உண்டு வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.

(பொ-ள்.) தக்கோலம் தின்று - தக்கோலம் முதலிய மணப்பொருள்களை வாயில் மென்று, தலை நிறையப் பூ சூடி - தலை நிரம்ப மணமலர் சூடி, பொய் கோலம் செய்ய - செயற்கை அழகுகளைச் செய்து கொள்வதனால், ஒழியுமே - நீங்கிவிடுமோ?, எக்காலும் உண்டி வினை உள் உறைக்கும் எனப் பெரியோர் கண்டு கைவிட்ட மயல் - எப்பொழுதும் உணவுத் தொழில் உள்ளே அழுக்கை மிதக்கும் என்று பெரியோர் தெரிந்து விருப்பத்தை ஒழித்த இவ்வுடம்பின் அழுக்கு.

(க-து.) செயற்கையாக எவ்வளவு மணப்பண்டங்கள் ஊட்டினாலும் உண்ணுந்தொழில் அழுக்கை மிகுத்துக் கொண்டேயிருக்குமாதலால், இவ்வுடம்பின் மேல் விருப்பங் கொள்ளுதலிற் பயனில்லை.

(வி-ம்.) இயல்பல்லாத கோலம் பொய்க்கோலம் எனப்பட்டது. ஏகாரம், வினா. உறைத்தல் - தனது நிலையை மிகுவித்தல். மயல், அழுக்கென்னும் பொருட்டு. மயல் ஒழியுமே' என்று கூட்டிக்கொள்க. ஒழியாது என்றபடி.

44. தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.

(பொ-ள்.) தெள் நீர் குவளை - தெளிவான நீரில் உள்ள குவளைமலர், பொரு கயல் - புரள்கின்ற கயல்மீன், வேல் - வேற்படை, என்று - என்று சொல்லி, கண்இல் புன் மாக்கள் - மெய்யறிவில்லாத தாழ்ந்த மக்கள், கவற்ற விடுவெனோ - எனதுள்ளத்தைக் கவலைப்படுத்த இடம் விடுவேனோ, உள்நீர் களைந்தக்கால் - உள்ளுள்ள நீர் நீக்கப்பட்டால், நுங்கு சூன்றிட்டு அன்ன - நுங்கு தோண்டி விட்டாற்போன்ற, கண் நீர்மை கண்டு ஒழுகுவேன் - கண்ணின் இயல்பை அறிந்து பற்றற் றொழுகுவேனான நான்.

(க-து.) உடம்பின் அழுக்கியல்பு தெரிந்து அதன் கண் பற்றற் றொழுகுதல் வேண்டும்.

(வி-ம்.) கண்களைக் குவளைமலர் என்றும் கயல்மீன் என்றும் ஒப்புமையாற் கூறும் மரபுபற்றி அவற்றைக் குறிப்பிட்டார். மாதரை அவர்க்குரிய பெண்மைப் பண்பு அறிந்து போற்றாமல் காமங் காரணமாக அவருடம்பை நச்சித் திரிவாரை உட்கொண்டு, ‘கண்ணில் புன்' என்றதன் மேலும் மக்கட்பண்பில்லாதவர் என்னுங் கருத்தால் மாக்கள் எனவுங் கூறினார். மாக்கள் என்பது மக்கட் பிறவியின் முன்நிலை. உள்நீர் - கண்ணின் உள்ளுள்ள நீர். கண்டொழுகுவேன் கவற்றவிடுவெனோ என்று கொள்க. ஓகாரம், எதிர்மறை. மேல்வருஞ் செய்யுட்கும் இவ்விளக்கத்திற் சில கொள்க.

45. முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ
எல்லாரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்.

(பொ-ள்.) முறுவல் முல்லை முகை முத்து என்று - மாதர் பற்கள் முல்லையரும்புகள் முத்துக்கள் என்று, இவை பிதற்றும் - இப் புனைவுகளை அறிவின்றிச் சொல்லிக்கொண்டிருக்கின்ற, கல்லாப் புன்மாக்கள் - மெய்ப்பொருள் கல்லாத தாழ்ந்த மக்கள், கவற்றவிடுவெனோ - எனதுள்ளத்தைக் கவலைப்படுத்த விடுவேனோ!, எல்லாரும் காணப்புறங்காட்டு உதிர்ந்து உக்க பல் என்பு - எல்லாரும் பார்க்கும் படி சுடலையில் பலவாய் வீழ்ந்து சிந்திய அவர்போன்றாருடைய பல்லெலும்புகளை, கண்டு ஒழுகுவேன் - பார்த்து அதனாற் பற்றற் றொழுகுவேனான நான்.

(க-து.) முன் செய்யுட்குக் கூறியதே கொள்க.

(வி-ம்.) பிதற்றுதல் - அறிவு மயங்கிச் சொல்லுதல். ஊருக்கும் புறம்பேயுள்ள காடாதலின், புறங்காடெனப்பட்டது.

46. குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.

(பொ-ள்.) குடரும் கொழுவும் குருதியும் என்பும் தொடரும் நரம்பொடு தோலும் இடையிடையே வைத்த தடியும் வழும்பும் ஆம் இவற்றுள் - குடலும் கொழுமையும் குருதியும் எலும்பும் தசைநாரும் நரம்பும் தோலும் இவற்றின் இடையிடையே வைத்த தசையும் கொழுப்பும் ஆகின்ற இவ்வுடற் பொருள்களுள், எத்திறத்தாள் ஈர் கோதையாள் - எப்பகுதியைச் சேர்ந்தவள் இனிய மாலையையணிந்த மாது.

(க-து.) பெண்மை யென்பது பெண்ணின் உடம்பில் இல்லை.

(வி-ம்.) பெண்ணுடம்பில், வெறுங் குடர் கொழு நரம்பு தோல் முதலியனவே உள ; ஆதலின் அவ்வுடம்பிற் பற்றுவைத்து அறத்தைக் கைவிடுதல் ஒவ்வாது என்றபடி . மேல் வழும்பு என வருதலின் கொழுவென்றது, இங்கே இளமைச் செழுமை, தொடர் வேறாகவும் நரம்பு வேறாகவும் கொள்க. மகளிரின் அழகிய பண்பை அவரது உயிரறிவில் வைத்துக் காணின் அவருடம்பிற் பற்று நீங்குமாகலின், இவ் வுடற்பொருள்களுள் மாது எப்பகுதியினள் என்றார்.

ஈர்-இனிமை: "ஈர்ங்கொடிக்கே" என்னுந் திருக்கோவை யார்க்குப் பேராசிரியரும் இவ்வாறு பொருளுரைத்தமை காண்க.

47. ஊறி உவர்த்தக்க ஒன்பதுவாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை
பெருந்தோளி பெய்வளாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.

(பொ-ள்.) ஊறி உவர்த்தக்க - அழுக்குகள் ஊறி அருவருக்குத் தக்க, ஒன்பது வாய்ப்புலனும் - ஒன்பது சந்திடங்களும், கோதிக் குழம்பு அலைக்கும் கும்பத்தை - சீய்த்து அவ் வழுக்குக் குழம்பை அசைத் தொதுக்கும் உடலாகிய ஒரு குடத்தை, பேதை - அறிவிலான ஒருவன், மீ போர்த்த கருந்தோலால் கண் விளக்கப்பட்டு - அவ்வுடம்பின் மேலே போர்த்த பசுந்தோலினால் அவன் கண்கள் ஒளி செய்யப்பட்டு அதனால், பெருந்தோளி பெய்வளாய் என்னும் - பெரிய தோளையுடையாளே இட்ட வளையலுடையாளே என்று சொல்லி அழைப்பான். (என்னே பேதைமை! )

(க-து.) உடம்பின் அழுக்கு நிலையை உணர்ந்து அதன்மேல் பற்று நீங்கி அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

(வி-ம்.) ஒன்பது இடங்களும் அழுக்கை ஒதுக்கும் படியான மலக்குடத்தைப், பேதையான், பெருந்தோளி பெய்வளாய் என்று அழைப்பான் , ‘என்பது தொடர் . மேல் போர்த்த தோல் உள் அழுக்கை மறைத்துத் தனது மேல் நிறத்தால் அவன் கண்களுக்கு அழகொளி தந்தன ; அதனால் அவன் கண்கள், உள் அழுக்கு உணர்ந்து இருளாமல் மேல் அழகு தெரிந்து விளக்கப்படுதலால், இங்ஙனம் அழைக்க விரும்பினன் என்பது. உண்மை இதுவாகலின், உடம்பின்மேற் பற்றறுகவென்பது கருத்தாயிற்று. தோளி :இயல்பு விளி. வளாய் : ஈறு திரிந்த விளி.  கண் விளக்கப்பட்டு : காரணப் பொருளது. கருமை, பசுமைப் பொருளில் வருதல், "கார்க் கரும்பின்," என்னுமிடத்துப் "பசிய கரும்பின்" என நச்சினார்க்கினியர் எழுதிய உரையினால் அறிக.

48. பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும்
முடைச்சாகா டச்சிற் றுழி.

(பொ-ள்.) பண்டம் அறியார் - உடம்பாகிய பண்டத்தின் இயல்பை அறியாதவராய், படுசாந்தும் கோதையும் கொண்டு - அவ்வுடம்பின்மேல் அணியப்படும் சந்தனமும் மாலையுங் கருதி, பாராட்டுவார் - அவ்வுடம்பினமேற் பற்றுவைத் தொழுகுகின்றவர், கண்டிலர்கொல் - அறிந்திலர் போலும் ! மண்டி - நெருங்கி, பெடைச் சேவல் வன்கழுகு - பெண்ணும் ஆணுமான வலிய கழுகுகள், பேர்த்திட்டுக்குத்தும் முடைச் சாகாடு - உறுப்புக்களைப் புரட்டிக் குத்துகின்ற முடைநாற்றமுடைய இவ்வுடம்பாகிய வண்டியை, அச்சு இற்ற உழி - அவ் வண்டிக்கு அச்சுப்போன்றதான உயிர் முறிந்துவிட்டபோது.

(க-து.) செயற்கை யழகுகளால் இவ்வுடம்பைத் தூயதாகக் கருதிக்கொள்ளாலாகாது.

(வி-ம்.) பண்டம் என்றார், இழிவு கருதி, படுசாந்து - அணிந்த சாந்து. முடைச் சாகாட்டை அதன் அச்சு இற்றபோது கண்டிலர் கொல் ' என்று கொள்க. அப்போது அதனைக் கண்டால் கழுகுகள் அதனைப் புரட்டிக் குத்தும் இயல்பு தெரியும் என்பது கருத்து. சாகாடு - வண்டி. உடம்பை வண்டி யென்றமையின் அதன் இயக்கத்துக்குக் காரணமான அச்சு உயிராயிற்று. மண்டிப் பேர்த்திட்டுக் குத்தும் முடைச் சாகாடு,' என்று கூட்டுக. குத்தல், என்னும் பாடம் கட்டுரைச் சுவைஉடையதன்று.

49. கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து.

(பொ-ள்.) கழிந்தார் இடுதலை - இறந்துபோன வரது எரிக்கப்பட்ட தலை ஓடு, கண்டார் நெஞ்சு உட்கக் குழிந்து ஆழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - பார்த்தவர் மனம் அஞ்சும்படி உட்குழிந்து ஆழ்ந்த கண்ணிடங்களையுடையனவாய் இடுகாட்டில் தோன்றி, ஒழிந்தாரை - இறவாதிருக்கும் மற்றவரை, சிரித்து - ஏளனமாக நகைத்து, இற்று இதன் பண்பு - இவ்வுடலின் இயல்பு இப்படிப்பட்டது, போற்றி நெறி நில்மின் - அறத்தைக் கடைப்பிடித்து அவ்வழியில் நில்லுங்கள், என்று சாற்றுங்கொல் - என்று சொல்லும் போலும் !

(க-து.) அறம் கடைப்பிடித்து அந்நெறியில் நிற்க வேண்டும்.

(வி-ம்.) இடுதலை என்பதில், இடுதல் நெருப்பிலிடுதல் என்னுங் கருத்துடையது ; இடுகாடு எனப்பட்டதும் இப்பொருட்டு. ஒழிந்தாரைச் சிரித்துச் சாற்றுங்கொல்' என்று கொள்க. கழிந்தார் என முன் வந்தமையின் ஒழிந்தார் இனி இறக்கவிருப்பார் மேல் நின்றது. இயல்பு கூறுதலின் இற்று' எனப்பட்டது.

50. உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ண மென்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர்.

(பொ-ள்.) உயிர் போயார் வெண்தலை - உயிர் போனவரது தசை நீங்கிய வெண்ணிறமான எலும்புத் தலை, உட்கச் சிரித்து - கண்டார் அஞ்சும்படி நகைத்து, செம்மாப்பவரைச் செயிர் தீர்க்கும் - இவ்வுடம்பின் காரணமாக இன்புறுகின்றவரை அக் குற்றத்தினின்றும் விடுவிக்கக் கூடும், செயிர் தீர்ந்தார் - இதற்குமுன் இயல்பாகவே அப்பிழை நீங்கினவர், கண்டு இற்று இதன் வண்ணம் என்பதனால் - தாமே அறிந்து இத்தகையது இவ்வுடம்பின் தன்மை என்னுங் கருத்தினால், தம்மை ஓர் பண்டத்துள் வைப்பது இலர் - தமதுடம்பை ஒரு பொருளில் வைத்து மதிப்பதிலர்.

(க-து.) உடம்பின் தூயதல்லாத தன்மையை நினைத்தால், அதனை இன்புறும் பற்றுள்ளம் நீங்கும்.

(வி-ம்.) வெண்டலை - இடுகாட்டில் உருளுந் தசை நீங்கிய தலை. செம்மாத்தல் - இன்பத்தால் இறுமாந்திருத்தல். "மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்," என்றார் நாயனார் . தம்மையென்பது, இங்கே அவரதுடம்பை. (உலகத்தின் நிலையாமை உணர்ந்து யான் எனது என்னும் இருவகைப் பற்றும் விட்டு மெய்யுணர்வில் ஒழுகுதல், உடம்பின்மேல் உள்ள பற்று, யான் என்னும் அகப்பற்று. செல்வம் முதலியவற்றின்மேல் உள்ள பற்று, எனது என்னும் புறப்பற்று. துறத்தல் - இவ் விருவகைப் பற்றுகளையும் விடுதல்.)