31. அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.

(பொ-ள்.) மேலைத் தவத்தால் - முன் பிறப்பில் செய்த தவத்தின் பயனான செல்வ நிலைமையால், தவம் செய்யாதார் - மறுபிறப்பிற்கு வேண்டுந் தவத்தைச் செய்யாமல் இறந்து பிறந்தவர், அம் மறுபிறப்பில் ; அகத்து ஆரே வாழ்வார் - இம்மாளிகையில் வாழ்வார் எத்தகையவரோ, என்று எண்ணி அண்ணாந்து நோக்கி - என்று மதிப்பாகக் கருதித் தலை நிமிர்ந்து மாளிகையின் மேனிகையைப் பார்த்து, தாம் புகப்பெறார் - தாமாக உள்நுழையப் பெறாராய், புறங்கடை பற்றி - தலைவாயிலைப் பிடித்துக் கொண்டு, தாம் மிக வருந்தி இருப்பார் - தாம் மிகவும் வாடி ஒரு பயனுமின்றி நின்றுகொண்டிருப்பர்.

(க-து.) இப் பிறப்பில் அறஞ்செய்யாதவர் வருபிறப்பில் இரந்து நிற்பர்.

(வி-ம்.) அறஞ் செய்தல் உயிரோடு கூடவே அது நிலையாயிருந்து வருபிறப்பிலும் உதவும் என்று அதன் வலியுரைத்து வற்புறுத்தியவாறு. அகத்து ஆரே' என்று பிரிப்பது பொருட் சிறப்புடையது. ஏ : வினா. தவமும் தவமுடையார்க்கு ஆகு 1மாதலின், ‘தவத்தால் தவஞ் செய்யாதார், ' என்றார்.

32. ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறமறந்து
போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே - ஓவாது
தின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாள்கள்
சென்றன செய் துரை.

(பொ-ள்.) ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம் மறந்து - அறத்தை மறந்து பொருளை விரும்பி முயன்று நாம் மேலும்மேலும் பெருஞ் செல்வராவோம் ; போவாம் நாம் - நாம் இவ்வளவு விரைவில் இறந்துபோக மாட்டோம் ; என்னா - என்று எண்ணி, புலைநெஞ்சே - தாழ்ந்த தன்மையையுடைய நெஞ்சமே, ஓவாது நின்று உஞற்றி வாழ்தி எனினும் - இடைவிடாமல் தொழிலில் நிலையாயிருந்து முயன்று நீ நினைத்தபடியே வாழ்கின்றா யென்றாலும், நின் வாழ்நாட்கள் சென்றன - நின் ஆயுள் நாட்கள் இதோ கழிந்துவிட்டன, செய்வது உரை - மறுமைக்காக இனி என்ன செய்குவை சொல்.

(க-து.) பொருள்வாழ்வு முதன்மையன்று ; அறவாழ்வே முதன்மையானது.

(வி-ம்.) ஆவாம் போவாம் என்பன முறையே உடன் பாட்டிலும் எதிர்மறையிலும் வந்தன. போவாம் என்பது செய்யாம் என்புழிப் போலக் கொள்ளப்படும். நாம் இரு

33. வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்தனைத்
தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத்
தெல்லை இகந்தொருவு வார்.

(பொ-ள்.) பேதை - அறிவில்லாதவன், வினைப்பயன் வந்தக்கால் - முன் தீவினையின் பயனாக இடர்கள் இப்போது வந்து தாக்கினால், வெய்ய உயிரா - உடனே கடுமையாகப் பெருமூச்சு விட்டு, மனத்தின் அழியும் - மனத்தின் வருந்தி ஊக்கங் கெடும் ; நினைத்து அதனைத் தொல்லையது என்று உணர்வாரே - ஆராய்ந்து அவ்விடரைப் பழைய வினையினால் வந்ததென்று தெரிந்து அதற்கேற்ப ஒழுகுவோரே, தடுமாற்றத்து எல்லை இகந்து ஒருவுவார் - கலக்கத்தின் எல்லையைக் கடந்து அப்பால் நீங்குவர்.

(க-து.) துன்பம் வந்தால் அதற்கு மனமழியாமல் அது நீங்க முயலவேண்டும்.

(வி-ம்.) பயன் என்றது இடர் ; வந்தக்கால் : வினையெச்சம், ‘அழியும்' என்பதற்கு அழிந்து ஊக்கங் கெடும் எனவும், ‘உணர்வார்' என்பதற்கு உணர்ந்து அதற்கேற்ப ஒழுகுவார் எனவும் உரைத்துக்கொள்க. ஏகாரம் : பிரிநிலை. நற்செயல்களினிடையே இடர் வந்தால், அந்நற்செயல்களால் அது வந்ததெனக் கருதி அவை செய்தலில் ஊக்கங் கெடாமல், தொல்லை வினையால் வந்ததெனத் தெளிந்து, அந்நல்வற்றைத் திருந்தச் செய்து நலம் பெற வேண்டும் என்பது பொருள்.

34. அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க ; - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.

(பொ-ள்.) அரும்பெறல் யாக்கையை -அடைதற்கரிய உடம்பை, பெற்ற பயத்தால் - அடைந்த ஆக்கங்கொண்டு, பெரும்பயனும் - பெரும்பயன் என்னப்படும் புண்ணியச் செயல்களும், ஆற்றவே கொள்க - இயன்றவளவும் செய்துகொள்க ; கரும்பு ஊர்ந்த சாறுபோல் சாலவும் பின் உதவி - கரும்பு ஆட்டியெடுத்த சாறுபோல மிகவும் மறுமைக்கு அறப்பயன் உதவி, மற்று - பின்பு, அதன் கோதுபோல் போகும் உடம்பு - அக் கரும்பின் சக்கை போல இவ்வுடம்பு கழிந்துபோகும் இயல்பையுடையது.

(க-து.) உடம்பைத் தக்கவழியிற் புண்ணியச் செயல் கட்குப் பயன்படுத்திக் கொள்க.

(வி-ம்.) அரும்பெறல் யாக்கை' யென்றமையால் மக்கள் யாக்கை என்பது பெறப்படும். "மக்களுடம்பு பெறற்கரிது,"1 என்றார் பிறரும். யாக்கை கிடைத்தது ஓர் ஆக்கம் ; உலகத்தில் வாழவும் காரியங்கள் செய்யவும் முடிந்தது ; அந்த ஆக்கத்தைக் குறித்தற்கு யாக்கைபெற்ற பயம்' என்றார். அப்பயன் கொண்டு அறமும் செய்து கொள்க என்றற்குப் பெரும் பயனும்' எனவும் இயன்ற அளவும் என்றற்கு ஆற்றவே' எனவுங் கூறினார். ஏகாரம் இசை நிறை. ஊர்ந்த சாறு ஊர்ந்ததனால் உண்டான சாறு. ஆலைக்காரனுக்குக் கரும்பு அவன் பின் உதவிக்காக மிகவும் சாறு உதவித் தான் சக்கையாய்க் கழிந்தது ; அப்படியே அறவொழுக்முடையானுக்கு உடம்பு அவன் மறுமையுதவிக்காக மிகவும் புண்ணியம் உதவித் தான் கோது போலக் கழியும் தன்மையது என்று உவமையை விரித்துக் கொள்க ; நற்செயல்களில் உடம்பைச் சாறுபோலப் பிழிய வேண்டும் என்பது இது ; "வருந்தி உடம்பின் பயன் கொண்டார்,"2 என்பர் மேலும். அறவழிகளில் நல்ல உழைப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கருத்து.

35. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் ;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்.

(பொ-ள்.) சிறு காலை - மிக்க காலைநேரத்தில், கரும்பு ஆட்டி - கரும்பை ஆலையில் ஆட்டி, கட்டி கொண்டார் - சருக்கரைக் கட்டியைச் செய்துகொண்டவர், துரும்பு எழுந்து - அக் கரும்பு பின் துரும்பாகித் தோன்றி, வேம் கால் - தீயில் வேகும்போது, துயர் ஆண்டு உழவார் - அது கண்டவிடத்தில் துன்பத்தினால் வருந்தார், அதுபோல் வருந்தி உடம்பின் பயன் கொண்டார் - நற்செயல்களில் உழைத்து உடம்பாலான அறப்பயனைப் பெற்றவர், கூற்றம் வருங்கால் - நமன் வருகின்ற காலத்தில், பரிவது இலர் - தம் உடம்பின் கேடு குறித்து இரங்குதல் இலராவர்.

(க-து.) மிக்க இளமையிலிருந்தே அறச்செயல்களில் உழைத்து வந்தால், இறந்துபோகும்போது துன்பமுண்டாகாது.

(வி-ம்.) கரும்பை மிக்க கலைநேரத்தில் ஆலையில் இட்டுச் சாறு பிழிந்தால் அது பதங்கெடாததுபோல அறப்பயன் கோடலும் வாழ்நாளின் காலை நேரமான இளமைப் பருவத்திலேயே நிகழ்தல் வேண்டுமென்பதும் அறிவுறுத்தப்பட்டது. சிறுகாலை - இளங்காலைநேரம். வேம் - வேகும் ; ‘வேங் கால்' என்பதிற் காலம் பெறப்பட்டமையால், ‘ஆண்டு' என்பதற்கு இடப்பொருள் உரைக்கப்பட்டது. சாறு அற்ற கோது எரிதலில் தவக்கமில்லாததுபோல உழைத்து அறம் பயந்த உடம்பும் இறத்தலில் வேதனையின்றிக் கழலும்.

36. இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.

(பொ-ள்.) இன்றுகொல் அன்றுகொல் என்று கொல் என்னாது பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி - இன்றோ அன்றோ என்றோ என்று இகழ்ந்திராமல் பின்னாலேயே இருக்கின்றான் நமன் என்று மதித்து, ஒருவுமின் தீயவை - தீய செயல்களை நீக்குங்கள் ; ஒல்லும் வகையால் மருவுமின் மாண்டார் அறம் - மாட்சிமைப்பட்ட நல்லோர் கூறும் அறச் செயல்களை இயன்ற வகையினால் தழுவிச் செய்யுங்கள் .

(க-து.) கூற்றுவன் எந்த நேரத்திலும் வருவான் என்று கருதி உடனே நல்லன செய்யவேண்டும்.

(வி-ம்.) நமன் வருவது இன்றோ அன்றோ என்றோ என்றற்கு, இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்றார். கொல் : ஐயப்பொருட்டு. இன்று அன்றும் இளமை முதுமைகளைச் சுட்டின. என்று என்றது வருங்காலம் உணராமையைச் சுட்டியது. அறஞ்செய்து மாட்சிமைப்பட்டவ ராதலின், ‘மாண்டார் அறம்' என்றார்.

37. மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.

(பொ-ள்.) மக்களால் ஆய பெரும்பயனும் - மக்கட் பிறவியினால் செய்யதக்க பெரும்பயனான நற்செயல்களும், ஆயுங்கால் - எண்ணிப் பார்க்கும்போது, எத்துணையும் ஆற்றப் பல ஆனால் - எவ்வளவும் மிகப் பலவாகு£தலால், தொக்க உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாது - பல கருவிகளோடு கூடிய இவ்வுடம்புக்கே உதவிகள் செய்து கொண்டிராமல், உம்பர்க் கிடந்து உண்ணப் பண்ணப்படும் - மேலுலகத்தில் எளிதாக இருந்துகொண்டு இன்பம் நுகரும் பொருட்டு உயிருக்கான அறவினைகளே மிகவும் செய்து கொள்ளப்படுதல் வேண்டும்.

(க-து.) கருவியாக வந்த உடம்புக்கே காரியங்கள் செய்து கொண்டிராமல், உயிருக்கான காரியங்களையே மிகவும் செய்து கொள்ளல் வேண்டும்.

(வி-ம்.) உயிர்க்குரிய அறச்செயல்கள் பெரும்பயன்' எனப்பட்டன. எச்சவும்மை, உடம்பிற்குரிய சிறுபயனைத் தழீஇயிற்று. உடம்பிற்குரிய சிறு செயல்களைச் செய்தற்கிடையே உயிர்க்குரிய எவ்வளவோ மிகப் பலவான பெருஞ்செயல்களையுஞ்செய்து கொள்ளலாமென்றற்கு, ‘எத்துணையும் ஆற்றப் பல' என்றார். ஆற்ற - மிக ; ஆனால் - ஆதலாலென்னும் பொருட்டு. உடம்பு, தன் காரியங்களைச் செய்துகொள்ளுதற்கு, இதயப் பை, மூச்சுப்பை, இரைப்பை, முதலிய அகக் கருவிகளும்; நா, பல் , கை, கால், கண், காது முதலிய புறக்கருவிகளும் பெற்றிருக்கின்றது ; இங்ஙனங் கருவிகள் தொக்க உடம்பாயிருத்தலால் அவ்வுடம்பு தானே தன் காரியங்களைச் செய்துகொள்ளும் என்றற்குத் தொக்க உடம்பு ' என்று நினைவு கூட்டினார்; சிறப்பாகத் தாமே இயலுகின்ற அகக் கருவிகளை நினைந்தே அங்ஙனங் கூறப்பட்டது. ஆதலால், உடம்புக்கே உதவிசெய்து கொண்டிருக்க வேண்டிய கட்டாயமில்லை; செய்யவேண்டுவது உயிருக்கே என்று அறிவுறுத்தப்பட்டது. உடம்பு அதனியற்கையில் இயங்குமாறு விழிப்பாக நடந்துகொண்டால், அதன்பொருட்டுச் செயற்கையாக முயற்சிகள் எடுக்க வேண்டுங் கட்டாயமில்லாமற் போம் என்னுங் கருத்தும் இதுகொண்டு உணர்ந்துகொள்ளப்படும். இடையறாமல் இங்ஙனம் செய்கை முயற்சிகளைச் செய்துகொண்டு வருந்தற்க,' என்றற்கு ஒழுகாது,' என்றார். கிடந்து என்றது, எளிமை தெரியும் பொருட்டு.

38.  உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.

(பொ-ள்.) உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து - சிறிய அளவினதான ஓர் ஆலம் விதை, ஈண்டி - தழைத்து, இறப்ப நிழல் பயந்தாங்கு - மிகவும் நிழல் கொடுத்தாற் போல, அறப்பயனும் - அறச்செயல்களின் பயனான புண்ணியத்தைத் தரும் பொருளும், தான் சிறிதாயினும் - தான் அளவில் சிறியதேயானாலும், தக்கார் கைப்பட்டால் - தகுதியுடைய பெரியோர் கையிற் சேர்ந்தால், வான் சிறிதாப் போர்த்துவிடும் - வானமும் சிறிதென்னும்படி அவ்வளவு பெரிய புண்ணியத்தைச் சூழ வைத்துவிடும்.

(க-து.) சான்றோர்க்குச் செய்யும் உதவி மிகச்சிறியதாயினும், அது பெரும்பயன் தரும்.

(வி-ம்.) உறக்குதல் - சுருங்குதல் ; சிறிதாதல் . ஈண்டி - அடர்ந்து ; இங்குத் தழைத்து எனப்பட்டது. 'பயந்து ஆங்கு' எனப் பிரிக்க. அறத்தின் பயனைத் தரும் பொருள், ‘அறப்பயன் ' எனப்பட்டது. தக்கார் - ஞானவொழுக்கங்களால் உண்டாகும் தகுதியை உடையவர். தக்கார் கைப்பட்டக்கால் என்பதன் கருத்தைத் , தக்க இடத்தில் விதை முளைக்குமானால் என்று உவமத்துக்குங் கொள்க. புண்ணியத்தைச் சூழ வைத்துவிடும் என்றற்குப், ‘போர்த்து விடும்' என்றார்.

39. வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.

(பொ-ள்.) வைகலும் - நாடேறும், வைகல் வரக்கண்டும் - நாட்காலம் தோன்றிவரக் கண்டும், அஃது உணரார் - அறத்தைக் கருதாதவராய், வைகலும் - என்றும், வைகலை வைகும் என்று இன்புறுவர் - நாட்பொழுதை அது நிலைத்திருக்கும் என்று கருதித் துய்த்து மகிழ்வர் ; அவர் யாரெனின், வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல் - ஒவ்வொரு நாளும் அந் நாட்பொழுது தம் ஆயுள் கழிதலின்மேல் நிற்றலாக, வைகலை வைத்து உணராதார் - அந் நாட்காலத்தைக் கருத்திருத்தி அறியாதவர்.

(க-து.) நாடோறும் வாழ்நாட்கள் ஒவ்வொரு நாளாகக் கழிந்து போதலின், அந் நாட்களைத் துய்த்து இன்புற்றுக்கொண்டிராமல் உடனே அறஞ்செய்து கொள்ளவேண்டும் என்பது.

(வி-ம்.) வைகலை வைத்து உணராதார் அஃது உணராராய் இன்புறுவர் என்று கொள்க, வாழ்நாட்கள் ஒவ்வொரு நாளாகக் கழிந்து போவதற்கு நாட்கள் அடையாளமாய் நிற்றலின் வைகல் வரக்கண்டும்' எனப்பட்டது. வைகலை உணராதார் என்று ஈற்றடியில் வருதலால் அஃதுணரார் என்றது அறத்தைக் கருதாதவராய் என்பது உணர்த்தும். அதிகாரம் அறன்வலியுறுத்தலாதலாலும், வைகலை இன்புறுதலுக்கு வேறானது அறஞ்செய்தலாதலாலும், அறத்தை அஃதெனச் சுட்டினார். "அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று," என்றார்போல.

40. மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.

(பொ-ள்.) ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் - இழி தொழில்களால் உண்பித்த இடத்தேனும், உறுதி சேர்ந்து இவ்வுடம்பு நீட்டித்து நிற்கும் எனின் - உறுதி பொருந்தி இந்த உடம்பு காலம் நீண்டு நிலைபெறுமென்றால், மான அருங்கலம் நீக்கி - மானமாகிய பெறற்கரிய அணிகலனை விடுத்து, இரவு என்னும் ஈன இளிவினால் வாழ்வேன் மன் - இரத்தல் என்னும் ஏளமான இழிதொழிலினால் உயிர் வாழ்வேன் ; ஆனால் அவ்வுடம்புதான் நிலைக்கப்போவதில்லையே.

(க-து.) என்றும் நிலையாயிருக்கும் உயிர்க்குணங்களுக்குரிய அறச்செயல்களே செய்யத்தக்கவை.

(வி-ம்.) இழந்தால் மீண்டும் பெறற்கரியதாகலின், ‘அருங்கலம்' என்றார் ; உடம்பு நிலையாது என்னும் ஒழிந்த பொருளைக் காட்டுதலின், மன ஒழியிசை. உறுதி - கட்டுத் தளராத நிலை. நீட்டித்து : தன்வினைப் பொருளாது.