செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது
1. அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும்
- வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக்
கூழ்எனின்,
செல்வம்ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.
(பொ-ள்.) அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட
செல்வரும்,
வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில்
வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக்
கூடியதன்று.
(க-து.) செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று.
(வி-ம்.) ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும்
சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் -
மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என
வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை
மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று
- வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு
உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
2. துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ
டுண்க ;
அகடுற யார்மாட்டும்
நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
(பொ-ள்.) துகள்தீர் பெரு செல்வம் - குற்றமற்ற சிறந்த செல்வம், தோன்றியக்கால் - உண்டானால், தொட்டு - அது தொடங்கி, பகடு நடந்த கூழ் - ஏர் நடந்ததனால் உண்டான உணவை, பல்லாரோடு உண்க - விருந்தினர் முதலிய பலரோடுங் கூடி உண்ணுக, ஏனென்றால் ; செல்வம்
- பொருள்,
அகடு உற யார்மாட்டும் நில்லாது - உறுதி பொருந்த
யாரிடத்திலும் நிலைத்திராமல் , சகடக்கால்
போலவரும் - வண்டியுருளைபோல மாறிப் புரளும்.
(க-து.) செல்வம் யாரிடத்திலும் நிலைத்திராமையால், அது தோன்றினால் உடனே பலர்க்கும் அளித்துப்
பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
(வி-ம்.) பொருள் நல்ல வழியில் வரவேண்டும் என்பது தோன்றத் ‘துகள் தீர்' என்றும், செல்வம் தோன்றுவது உறுதியன்று என்பது தோன்றத் ‘தோன்றியக்கால்' என்றுங் கூறினார். பெருஞ்செல்வம் என்பது இங்கே மேன்மையான
செல்வம் ;
வேளாண்மையால் வருகின்ற செல்வமே பெருஞ்செல்வம் என்பது
குறிப்பு. தோன்றியக்கால் ஒற்று மிகுந்தமையால் வினையெச்சமாகப் பொருள் கொள்ளப்படும்.
பகடு - கடா ; இங்கே அது பூட்டிய
ஏர். நடந்த என்னும் பெயரெச்சம் காரணப்பொருளில் வந்தது ; ஆகவே, ‘நடந்ததனால்
உண்டான'
என்று உரைத்துக் கொள்ள வேண்டும். பல்லார், பல பிரிவினர் என்பது காட்டும் ; அவர் விருந்தினர், சுற்றத்தார், நண்பர் முதலியோர், அகடு - உறுதி. யார்மாட்டும் என்றது. எவ்வளவு
விழிப்புடையவரிடத்தும் என்பது. நில்லாது - நில்லாமல், வரும் - கை மாறி மாறி வரும்.
3. யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச்
சென்றோரும் - ஏனை
வினைஉலப்ப வேறாகி
வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
(பொ-ள்.) யானை எருத்தம் பொலிய - யானையின் கழுத்து விளங்கும்படி, குடை நிழல் கீழ் - குடை நிழலில சேனைத் தலைவராய் - பல சேனைகட்குத்
தலைவராக,
சென்றோரும் - ஆரவாரமாய் உலாச்சென்ற அரசர்களும், ஏனைவினை உலப்ப - மற்றத் தீவினை கெடுக்க அதனால், தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள - தாம் திருமணஞ்
செய்துகொண்ட மனைவியையும் பகைவர்கள் கவர்ந்து கொள்ளும்படி, வேறு ஆகி வீழ்வர் - முன் நிலைக்கு வேறான வறுமையாளராகி
நிலைகுலைவர்.
(க-து.) அரசரும் வறியராவர்.
(வி-ம்.) இவர் ஏறியதனால் யானையின் கழுத்துக்கு அழகு உண்டாயிற்று
என்று குறிப்பதனால் இவரது பெருமை சிறப்பிக்கப்பட்டது. ‘நிழற் கீழ்' என்பதிற்
‘கீழ்' ஏழாவதன்
உருபு. ஏனை வினை - மற்றை வினை ; அது
தீவினை என்னுங் குறிப்பில் வந்தது. ‘உலப்ப' என்னும்
வினையெச்சம் காரணப் பொருளுள்ளது. மனையாளையும் என்று உம்மை விரித்துக் கொள்வது
சிறப்பு. யானை யெருத்தத்திற் சென்றோரும் இங்ஙனம் நிலைகுலைவர் என்றமையால் ஏனையோர்
நிலைகுலைதல் சொல்லாமலே பெறப்படும். தம் மனையாளைப் பிறர் கவர்ந்து கொள்ளுதலைவிட
இழிவானதொன்று வேறின்மையின், அடியோடு
ஆற்றலைக் கெடுத்துவிட்ட வறுமையின் பெருங் கொடுமைக்கு அதனை எடுத்துக்காட்டினர்.
4. நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்
தொன்றின ஒன்றின வல்லே
செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள்
செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
(பொ-ள்.) வாழ்நாள் - உடம்போடு கூடிவாழுமாறு ஏற்பட்ட நாட்கள், சென்றன சென்றன - செல்கின்றன செல்கின்றன; கூற்று - நமன், செறுத்து உடன் வந்தது வந்தது - சினந்து விரைந்து
வருகின்றான் வருகின்றான் ; ஆதலால் ; நின்றன நின்றன - நிலைபெற்றன நிலைபெற்றனவென்று
நினைத்துக்கொள்ளப்பட்ட செல்வப் பொருள்கள், நில்லா என - நிலைபெறா என்று, உணர்ந்து - தெரிந்து, ஒன்றின ஒன்றின - இசைந்தன இசைந்தனவாகிய அறங்கைள, செயின் - செய்யக் கருதுவீர்களானால், வல்லே செய்க - விரைந்து செய்வீர்களாக.
(க-து.) வாழ்நாள் கழிந்துகொண்டே யிருத்தலால் நிலையில்லாத செல்வப்
பொருள்கள் கொண்டு உடனே அறம் செய்யவேண்டும்.
(வி-ம்.) ஒல்லும் அளவு அறஞ் செய்க என்றற்கு, ‘ஒன்றின ஒன்றின செய்க' எனவும், செய்தலின்
அருமை தோன்றச் ‘செயின்' எனவுங் கூறினார். ‘செல்கின்றன' என்னுங்
கருத்து விரைவு பற்றிச் 'சென்றன' என்றும், ‘வரும்', என்னுங் கருத்துத் துணிவு பற்றி ‘வந்தது' என்றுஞ்
சொல்லப்பட்டன. முதல் இரண்டு அடுக்குகள் பன்மையும், பின் இரண்டு அடுக்குகள் அவலமும் உணர்த்தும்,
"கூற்று - வாழ்நாள் இடையறாது செல்லுங்
காலத்தினைப் பொருள் வகையாற் கூறுபடுத்தும் கடவுள் " என்னும்
நச்சினார்க்கினியருரை1 இங்கே
நினைவு கூரற்பாலது.
5. என்னாலும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா
- முன்னே
கொடுத்தார் உயப்போவர்
கோடில்தீக் கூற்றம்
தொடுத்தாறு செல்லும் சுரம்.
(பொ-ள்.) என் ஆனும் ஒன்று - யாதாயினும் ஒரு பொருளை, தம் கை உற பெற்றக்கால் - தமது கையில் கிடைக்கும்படி பெறுவராயின், பின் ஆவது என்று - மூப்புக் காலத்தில் பயன்படுவதென்று, பிடித்து இரா - இறுகப் பிடித்துக்கொண்டு சும்மா இராமல், முன்னே கொடுத்தார் - இளமையிலேயே அறஞ்செய்தவர், கோடு இல் தீக் கூற்றம் - நடுவுநிலைமையுள்ள அருளில்லாத
கூற்றுவன்,
தொடுத்து செல்லும் சுரம் ஆறு - கயிற்றாற் கட்டிக்
கொண்டுபோகின்ற காட்டு வழியை, உய்ய
போவர் - தப்பிப் புண்ணிய உலகம் புகுவார்.
(க-து.) இளமையிலேயே அறஞ் செய்தவர் புண்ணிய உலகம் புகுவர்.
(வி-ம்.) சிறிது கிடைத்தாலும் அறஞ் செய்க என்பதற்கு ‘என்னாலும்' என்றார்.
பொருள் கிடைப்பதன் அருமை நோக்கிப் ‘பெற்றக்கால்' என்றார். கிடைப்பது அங்ஙனம் அருமையாயிருத்தலின், கிடைத்த உடனே அறத்திற் செலவிடுக என்பது கருத்து.
பிடித்திருத்தல், தாமும் உண்ணாது
இறுக்கஞ் செய்து கொண்டிருத்தல். ‘முன்னே
'
என்பது முதற்காலத்திலேயே என்னுங் கருத்தில் வந்தது ; அஃதாவது, பெற்ற
உடனே என்பது ; கோடு இல் - கோணுதல்
இல்லாத,
நடுவு நிலைமையுள்ள அறஞ்செய்வார் கூற்றுவனுலகுக்குச்
செல்லும் வழி தப்பிப் புண்ணியவுலகுக்குப் போவர் என்பது பின் இரண்டடிகளின் பொருள்.
6. இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார்
ஈங்கில்லை;
ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர்
வழங்குமின் ; நாளைத்
தழீஇம் தழீஇம் தண்ணம்
படும்.
(பொ-ள்.) இழைத்த நாள் எல்லை இகவா - உடலோடு கூடிவாழ அளவு செய்துள்ள
நாள்கள் தம் அளவைக் கடவா ; பிழைத்து
ஒரீஇ - அந்த அளவில் தவறி நீங்கி ; கூற்றம்
குதித்து உய்ந்தார் - கூற்றுவனிடத்தினின்றும் அப்புறப்பட்டு உயிர்பிழைத்திருப்பவர்
;
ஈங்கு இல்லை - இவ்வுலகத்தில் இல்லை ; நாளை - நாளையொருகால், தண்ணம் தழீஇம் தழீஇம் படும் - சாவுப்றை தழீஇம் தழீஇம் என்று
ஒலிக்கும் ; ஆதலால், பெரும் பொருள் ஆற்ற வைத்தீர் - பெருமையைத் தருவதாகிய பொருளை
மிகுதியாக வைத்துள்ள செல்வர்களே ! வழங்குமின் - உடனே அப்பொருளைப் பிறர்க்கு
உதவுங்கள்.
(க-து.) குறித்த ஆயுளுக்குமேல் யாரும் உயிர் வாழ்தல் கூடாமையின் , உடனே அறஞ்செய்து நலம்பெறுதல் வேண்டும்.
(வி-ம்.) இழைத்த - உண்டாக்கிய ; வைத்தீர், இங்கே
பெயர். தழீஇம் தழீஇம் என்பது ஒலிக்குறிப்பு. படும் - ஒலிக்கும் ; இறப்பு நேரும் என்றற்குத் ‘தண்ணம் படும்' என்றார். தமக்கு வேண்டிய அளவுக்குமேற் பொருள்
படைத்திருப்பவர், அங்ஙனம் மேற்பட்ட
பொருளைப் பிறர்க்கு வழங்குங் கட்டாயமுடைய ராதலின், இச்செய்யுள் அவரை நோக்கிற்று.
7. தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும்
நாளுண்ணும் ; ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர்
ஆகுமின் ;
யாரும்
பிறந்தும் பிறவாதா ரில்.
(பொ-ள்.) கூற்றம் - யமன், தோற்றம் சால்ஞாயிறு, காலையில் தோன்றுதல் பொருந்திய பகலவனை, நாழி ஆக - நாழி என்னும் அளவுகருவியாகக்கொண்டு, நும் நாள் வைகலும் அளந்து உண்ணும் - உம் வாழ்நாளாகிய
தானியத்தை நாள்தோறும் அளவு செய்து உண்ணுவான் ; ஆதலால் ; ஆற்ற
அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் - மிகுதியாகப் பிறர்க்கு உதவி செய்து
உயிர்களிடத்தில் அருளுடையீராகுக, யாரும்
- அங்ஙனம் ஆகாதவர் யாரும், பிறந்தும்
பிறவாதாரில் - பிறவியெடுத்தும் பிறவாதவரிற் சேர்ந்தவரே யாவர்.
(க-து.) அருளுடையராதலே பிறவியின் பயனாதலால், அறஞ்செய்து அருளுடையராகுக.
(வி-ம்.) ஞாயிறு தோன்றுதலும் மறைதலுமே ஒரு நாளுக்கு அடையாளமாதலால், அது ‘தோற்றம்
சால்'
என்னும் அடைமொழி கொடுத்து, அளவு கருவியாக உருவகஞ் செய்யப்பட்டது. பகலவனை நாழியாகக்
கொண்டமையால் , கூற்றுவன் உண்ணுவதற்கு, நாள் தானியமாகக் கொள்ளப்பட்டது. ‘ஒறுக்குங்' குறிப்புத்
தோன்ற,
‘உண்ணும்' என்றார், ‘பிறவாதாரில் ' என்பதன் பின் ஒரு சொல் வருவித்துக் கொள்க. உயிர்
அருள்வடிவாகுமளவும் அறஞ்செய்து கொண்டேயிருக்க என்றற்கு ‘ஆற்ற அறஞ்செய்து' எனப்பட்டது.1 "அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாஞ் செயல்" என்பதனாலும்
இக்கருத்து அறிந்துகொள்ளப்படும்.
8. செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர்
பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த
மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.
(பொ-ள்.) செல்வர் யாம் என்று - நாம் செல்வமுடையோம் என்று களித்து, தாம் செல் உழி எண்ணாத - தாம் இனிச் செல்லவிருக்கும்
மறுமையுலகத்தை நினையாத, புல்
அறிவாளர் பெரு செல்வம் - சிறிய அறிவுடையவரது மிக்க செல்வம், எல்லில் - இரவில், கரு கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி - கரியமேகம்
வாய் திறந்ததனாலுண்டான மின்னலைப்போலச் சிறிதுகாலந் தோன்றி நின்று, மருங்கு அற கெட்டுவிடும் - இருந்த இடமும் தோன்றாமல்
அழிந்துபோம்.
(க-து.) மறுமையுலகத்தை எண்ணி வாழாதவர்களுடைய செல்வம், மின்னலைப்போல தோன்றி அழியும்.
(வி-ம்.) செல்உழி - செல்லும் இடம் ; இங்கே மறுமை குறித்து நின்றது. செல்லுழி என்பது ‘செல்வுழி ' என
மருவி முடிந்தது ; "எல்லா
மொழிக்கும்"1 என்னுந்
தொல்காப்பிய நூற்பாவின் நச்சினார்க்கினியருரை கருதுக. அறியாமையில் மிளிருஞ்
செல்வமாதலின், இருளில் ஒளிரும் மின்
உவமையாயிற்று. கொண்மூ நீரைக்கொள்வது என்னுங காரணப் பெயர். மின்னு ; மின்னுதல் என்னுந் தொழிற் பெயரில் வந்தமையின் அப்பொருள்
தோன்ற உகரச்சாரியை பெற்று, அதுவே
பின் தொழிலாகு பெயராயிற்று. மருங்கும் என எச்சவும்மை கொள்க. செல்வம் இயல்பாகவே
நிலையாமை யுடையதாயினும் அது மின்னலைப்போல் அத்தனை விரைவில் அழிந்து போதற்குக்
காரணம்,
‘செல்வர் யாம் ' என்னுஞ் செருக்கும் , அச்செருக்கினால் மறுமையைப் பொருள் செய்து வாழாத தாறுமாறான
வாழ்க்கைநிலையும் முதலாயின வென்பது இச் செய்யுட் குறிப்பு .
9. உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர்
துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத்
திரும்பானேல், அ ஆ
இழந்தானஎன் றெண்ணப் படும்.
(பொ-ள்.) உண்ணான் - இன்றியமையாத உணவுகளை உண்ணாமலும், ஒளி நிறான் - மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், ஓங்கு புகழ் செய்யான் - பெருகுகின்ற உரையும் பாட்டுமாகிய
புகழைச் செய்துகொள்ளாமலும், துன்
அருகேளிர் துயர் களையான் - நெருங்கிய பெறுதலரிய உறவினரின் துன்பங்களை நீக்காமலும், வழங்கான் - இரப்பவர்க்கு உதவாமலும், கொன்னே பொருள் காத்திருப்பானேல் - ஒருவன் வீணாகச் செல்வப்
பொருளைக் காத்துக்கொண்டிருப்பானாயின், அ ஆ இழந்தான் என்று - ஐயோ அவன் அப்பொருளை இழந்தவனேயென்று, எண்ணப்படும் - கருதப்படுவான்.
(க-து.) ஒரு செல்வன், தனது செல்வத்தை அறவழிகளிற் செலவு செய்யாதிருந்தால் அவன்
அதனை இழந்தவனாகவே கருதப்படுவான்.
(வி-ம்.) ஒளி - மதிப்பு ; "ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை"1 என்னுமிடத்து, ‘ஒளி - மிக்குத் தோன்றுதலுடைமை' என்பர் பரிமேலழகர் . உண்ணான் முதலியன முற்றெச்சம். ‘கொன்னே காத்திருப்பானேல்' என்று சேர்த்துக்கொள்க. அ ஆ: இரக்கக் குறிப்பு .
செல்வம்தான் இறக்குமளவும் அழியாமலிந்தாலும் அதனாற்கொண்ட பயன் யாதொன்று மில்லாமையின், அவன் உடையவனா யினும் இழந்தவனே என்றார். செல்வத்தைச் செலவு
செய்தற்குரிய துறைகள் பலவும் இச்செய்யுள் எடுத்துக் காட்டினமை
நினைவிருத்துதற்குரியது.
10. உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார்
- கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட !
உய்த்தீட்டும் தேனீக் கரி.
(பொ-ள்.) வான் தோய் - வானத்தைப் பொருந்துகின்ற, மலைநாட - மலைநாட்டுத் தலைவனே ! உடாதும் - நல்ல ஆடைகள்
உடுக்காமலும், உண்ணாதும் - உணவுகள்
உண்ணாமலும், தம் உடம்பு செற்றும் -
தம் உடம்பை வருத்தியும் ; கெடாத நல்
அறமும் செய்யார் - அழியாத சிறந்த புண்ணியமுஞ் செய்யாமலும், கொடாது - வறிய வர்க்குக் கொடாமலும், ஈட்டி வைத்தார் - பொருளைத் தொகுத்து வைத்தவர்கள், இழப்பர் - அதனை இழந்து விடுவர், உய்த்து ஈட்டும் தேன் ஈ- பல பூக்களிலிருந்து கொண்டுபோய்த்
தொகுத்து வைக்கும் தேனீக்கள், கரி
- அதற்குச் சான்று.
(க-து.) அறவழியிற் பொருளைச் செலவு செய்யாதவர், ஒரு காலத்தில் தேனீயைப்போல அப்பொருளை இழந்துவிடுவர்.
(வி-ம்.) கள்ளர் பகைவர் முதலியோராற் கட்டாயம் இழந்து விடுவர் என்பது
கருத்து;
அதன் பொருட்டே, கட்டாயம் ஒரு காலத்தில் தான் தொகுக்குந் தேனை இழந்துவிடுந்
தேனீ உவமையாயிற்று. உடாமையும் உண்ணாமையுங் காரணமாக நோய் முதலியவற்றை உண்டாக்கித்
தம் உடம்பை வருத்திக்கோடலின், ‘தம்
உடம்பு செற்றும்' என்றார். துறவோரைப்
போல அங்ஙனம் வருத்திக் கொண்டாலும் அவர்போல் அறச்செயலேனுஞ் செய்கின்றனரோவெனின்
அதுவுமின்றென்றற்குக். ‘கெடாதநல்
அறமுஞ்செய்யார்' என்று அதன்பிற்
கூறினார். மலைநாட என்று ஓர் ஆண்மகனை முன்னிலைப் படுத்திக் கூறும் முறைமையில் இச் செய்யுள்
அமைந்தது.
இறுக்க நினைவினாற், பகை முதலியன உண்டாதல் பொருளைக் காக்கும் அறிவு மடம் படுதல்
முதலாயின உண்டாதலின் அவை பொருளை இழத்தற்குக் காரணங்களாகும்.
0 Comments