அறங்கூறா னல்ல செயினும்
ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது
புறங்கூறா னென்றல் இனிது
மு.வ உரை:
ஒருவன் அறத்தைப் போற்றிக்
கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப்
புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் அறத்தைச் சொல்லாமல்
பாவமே செய்தாலும்,
அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு
நல்லது
கலைஞர் உரை:
அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில்
நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால்,
அது அவர்களுக்கு நல்லது
குறள் 182:
அறனழீஇ யல்லவை செய்தலின்
தீதே
புறனழீஇப் பொய்த்து நகை
புறனழீஇப் பொய்த்து நகை
மு.வ உரை:
அறத்தை அழித்துப் பேசி
அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப்
பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறம் என்பதே இல்லை என
அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக்
காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.
கலைஞர் உரை:
ஒருவரை நேரில் பார்க்கும்
பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப்
பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு
மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது
குறள் 183:
புறங்கூறிப் பொய்த்துயிர்
வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்
அறங்கூறும் ஆக்கந் தரும்
மு.வ உரை:
புறங்கூறிப் பொய்யாக
நடந்து உயிர் வாழ்தலை விட,
அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
காணாதபோது ஒருவனைப்
பற்றிப் புறம்பேசிக்,
காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது
அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
கலைஞர் உரை:
கண்ட இடத்தில் ஒன்றும், காணாத
இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது
நன்று
குறள் 184:
கண்ணின்று கண்ணறச்
சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்
முன்னின்று பின்னோக்காச் சொல்
மு.வ உரை:
எதிரே நின்று கண்ணோட்டம்
இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின்
விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் முகத்திற்கு எதிரே
முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல்
இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.
கலைஞர் உரை:
நேருக்கு நேராக ஒருவரது
குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை
எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு
குறள் 185:
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான்
அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்
புன்மையாற் காணப் படும்
மு.வ உரை:
அறத்தை நல்லதென்று
போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற
சிறுமையால் காணப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
அறத்தைப் பெரிதாகப் பேசும்
ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு
கண்டுகொள்ளலாம்.
கலைஞர் உரை:
ஒருவன் பிறரைப்பற்றிப்
புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில்
தெரிந்து கொள்ளலாம்
குறள் 186:
பிறன்பழி கூறுவான் தன்பழி
யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்
திறன்தெரிந்து கூறப் படும்
மு.வ உரை:
மற்றவனைப் பற்றிப்
புறங்கூறுகின்றவன்,
அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால்
பழிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் குறையை அவன்
இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால்
கூறப்படும்.
கலைஞர் உரை:
பிறர்மீது ஒருவன்
புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில்
கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்
குறள் 187:
பகச்சொல்லிக் கேளிர்ப்
பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்
நட்பாடல் தேற்றா தவர்
மு.வ உரை:
மகிழும்படியாகப் பேசி
நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம்
கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
சாலமன் பாப்பையா உரை:
கூடி மகிழுமாறு இனியன பேசி
நட்பை வளர்க்கத் தெரியாதவர்,
புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.
கலைஞர் உரை:
இனிமையாகப் பழகி
நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி
நண்பர்களை இழந்து விடுவார்கள்
குறள் 188:
துன்னியார் குற்றமுந்
தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு
என்னைகொல் ஏதிலார் மாட்டு
மு.வ உரை:
நெருங்கிப் பழகியவரின்
குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன
செய்வாரோ?
சாலமன் பாப்பையா உரை:
தன்னோடு
நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார்
காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!
கலைஞர் உரை:
நெருங்கிப் பழகியவரின்
குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப்
பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?
குறள் 189:
அறனோக்கி யாற்றுங்கொல்
வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை
புன்சொ லுரைப்பான் பொறை
மு.வ உரை:
ஒருவர் நேரில் இல்லாதது
கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு
அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?
சாலமன் பாப்பையா உரை:
பிறர் இல்லாதபோது அவரைப்
பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம்
என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!
கலைஞர் உரை:
ஒருவர் நேரில் இல்லாதபோது
பழிச்சொல் கூறுவோனுடைய உடலை `இவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது
குறள் 190:
ஏதிலார் குற்றம்போல்
தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு
தீதுண்டோ மன்னு முயிர்க்கு
மு.வ உரை:
அயலாருடைய குற்றத்தைக்
காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர்
வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?
சாலமன் பாப்பையா உரை:
புறம்பேச அடுத்தவர்
குற்றத்தைப் பார்ப்பவர்,
பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து
இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?
கலைஞர் உரை:
பிறர் குற்றத்தைக்
காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும்
பழக்கமும் போகும்;
வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்
0 Comments