காமக் கணிச்சி உடைக்கும்
நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு
நாணுத்தாழ் வீழ்த்த கதவு
மு.வ உரை:
நாணம் என்னும் தாழ்ப்பாள்
பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.
சாலமன் பாப்பையா உரை:
நாணம் என்னும் தாழ்பாளைக்
கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!
கலைஞர் உரை:
காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு
கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம்
என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது
குறள் 1252:
காமம் எனவொன்றோ
கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்
யாமத்தும் ஆளும் தொழில்
மு.வ உரை:
காமம் என்று
சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல்
கொண்டு ஆள்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
எல்லாரும் வேலையின்றி
உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல்
என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.
கலைஞர் உரை:
காதல் வேட்கை எனப்படும்
ஒன்று இரக்கமே இல்லாதது;
ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி
அலைக்கழிக்கிறது
குறள் 1253:
மறைப்பேன்மன் காமத்தை யானோ
குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்
தும்மல்போல் தோன்றி விடும்
மு.வ உரை:
யான் காமத்தை என்னுள்ளே
மறைக்க முயல்வேன்;
ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே
வெளிப்பட்டு விடுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
என் காதல் ஆசையை நான்
மறைக்கவே எண்ணுவேன்;
ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல்
வெளிப்பட்டு விடுகிறது.
கலைஞர் உரை:
எவ்வளவுதான் அடக்க
முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப்
போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும்
காட்டிக் கொடுத்துவிடும்
குறள் 1254:
நிறையுடையேன் என்பேன்மன்
யானோவென் காமம்
மறையிறந்து மன்று படும்
மறையிறந்து மன்று படும்
மு.வ உரை:
யான் இதுவரையில்
நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள்
மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
இன்றுவரை நான் என்னை மன
அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக்
கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.
கலைஞர் உரை:
மன உறுதிகொண்டவள் நான்
என்பதே என் நம்பிக்கை;
ஆனால் என் காதல், நான் மறைப்பதையும்
மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே
குறள் 1255:
செற்றார்பின் செல்லாப்
பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று
உற்றார் அறிவதொன் றன்று
மு.வ உரை:
தம்மை வெறுத்து
நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய்
உற்றவர் அறியும் தன்மையது அனறு.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைப் பிரிந்து சென்றவர்
பின்னே செல்லாது,
தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை
அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது.
கலைஞர் உரை:
தம்மைப் பிரிந்து சென்ற
காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல்
நோயுற்றவர்க்கு இருப்பதில்லை
குறள் 1256:
செற்றவர் பின்சேறல் வேண்டி
அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்
எற்றென்னை உற்ற துயர்
மு.வ உரை:
வெறுத்து நீங்கிய காதலரின்
பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய்
எத்தன்மையானது?
அந்தோ!
சாலமன் பாப்பையா உரை:
என்னைப் பிரிந்து சென்றவர்
பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய்
தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.
கலைஞர் உரை:
வெறுத்துப் பிரிந்ததையும்
பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல்
நோயின் தன்மைதான் என்னே
குறள் 1257:
நாணென ஒன்றோ அறியலம்
காமத்தால்
பேணியார் பெட்ப செயின்
பேணியார் பெட்ப செயின்
மு.வ உரை:
நாம் விரும்பிய காதலர்
காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு
பண்பையும் அறியாமல் இருப்போம்.
சாலமன் பாப்பையா உரை:
என்னால் விரும்பப்பட்டவர்
காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும்
ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.
கலைஞர் உரை:
நமது அன்புக்குரியவர்
நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம்
எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை
குறள் 1258:
பன்மாயக் கள்வன் பணிமொழி
அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை
பெண்மை உடைக்கும் படை
மு.வ உரை:
நம்முடைய பெண்மையாகிய அரணை
அழிக்கும் படையாக இருப்பது,
பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய
பணிவுடைய மொழி அன்றோ?
சாலமன் பாப்பையா உரை:
என் மன அடக்கமாகிய
கோட்டையை அழிக்கும் ஆயுதம்,
பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!
கலைஞர் உரை:
நம்முடைய பெண்மை எனும்
உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம்
காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?
குறள் 1259:
புலப்பல் எனச்சென்றேன்
புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு
கலத்தல் உறுவது கண்டு
மு.வ உரை:
ஊடுவேன் என்று எண்ணிக்
கொண்டு சென்றேன்;
ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.
சாலமன் பாப்பையா உரை:
அவர் வந்தபோது ஊடல்
கொள்ளலாம் என்று எண்ணி,
அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன
போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத்
தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.
கலைஞர் உரை:
ஊடல் கொண்டு பிணங்குவோம்
என நினைத்துதான் சென்றேன்;
ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என்
பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்
குறள் 1260:
நிணந்தீயில் இட்டன்ன
நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்
புணர்ந்தூடி நிற்பேம் எனல்
மு.வ உரை:
கொழுப்பைத் தீயில்
இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து
ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?
சாலமன் பாப்பையா உரை:
கொழுப்பைத் தீயிலே
போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும்
நெஞ்சினையுடைய பெண்களுக்கு,
அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும்
தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?
கலைஞர் உரை:
நெருப்பிலிட்ட கொழுப்பைப்
போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல்
கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?
0 Comments